கரோனா தொற்று காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க போலீசார் முகக் கவசம் அணிந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை பணியாளர்கள், தூய்மை பணியாளர்களும் முகத்தில் மாஸ்க் அணிந்து தங்கள் சேவையைத் திறன்பட செய்து வருகின்றனர். இவர்களுக்குச் சமீபத்தில் விஜய் ரசிகர்கள் சார்பில் 200 முகக் கவசங்களும், யோகிபாபு ரசிகர்கள் சார்பில் 2000 முகக் கவசங்களும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களும், இவர்களுக்கு முகக் கவசங்கள், கையுறைகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்....
''அன்புள்ள ஊடக நண்பர்களே
வணக்கம்.
உலகெங்கிலும் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் அசாதாரண நெருக்கடியையும் பொருட்படுத்தாது, இந்தக் கொடிய நோயின் பரவலைத் திறம்பட கட்டுப்படுத்த நமது தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது. நன்றியுணர்வின் ஒரு சிறிய அடையாளமாகக் காவல்துறையினர், கார்ப்பரேஷன் ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு முகக் கவசங்கள், கையுறைகள் மற்றும் கை சுத்திகரிப்பான்களை வழங்கியுள்ளேன்.
நன்றி,
பாரதிராஜா'' எனக் குறிப்பிட்டுள்ளார்.