ADVERTISEMENT

“துருவ் இந்த உண்மையை அவராகவே சொல்வாரென்றே நான் எதிர்பார்க்கிறேன்”- பிரபல இயக்குநர் உருக்கம்

03:17 PM Nov 28, 2019 | santhoshkumar

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் தற்போது ஆதித்ய வர்மா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பை அனைவரும் பாராட்ட செய்கிறார்கள். முதலில் துருவ் விக்ரம் பாலா இயக்கத்தில் வர்மா என்றொரு படத்தில் நடிப்பதாகதான் இருந்தது. படமும் முழுவதுமாக முடிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் அது ட்ராப் செய்யப்பட்டு, வேறு ஒரு இயக்குநரை வைத்து ஆதித்ய வர்மா படத்தை எடுத்து வெளியிட்டனர். இந்நிலையில் துருவ் விக்ரமின் நடிப்பு குறித்து இயக்குனர் தாமிரா தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதில், “ஆதித்திய வர்மா திரைப்படத்தில் துருவ் விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு இது முதல் படம் போல இல்லை.. சியான் விக்ரமின் மகன் என்பதை நிரூபித்து விட்டார்.. தமிழ் திரைக்கு ஒரு நல்ல நாயகன் கிடைத்துவிட்டார்.. இது தான் ஆதித்திய வர்மா திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய எல்லோரது கருத்தும். வெகு சிலர், ‘ஆம் இது இவருக்கு இரண்டாவது படம் தானே’ என கிண்டலாக, குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார்கள். துருவ் நன்றாக நடித்திருக்கிறார் என்கிற பாராட்டிற்குப் பின்னால் ஒரு பேருண்மையும் பெரும் வலியும், புதைந்து கிடப்பதாகத்தான் நான் உணர்கிறேன். அது குறித்து யாரும் பேசவில்லை என்கிற ஆதங்கமே இந்த பதிவின் காரணி...

ஒரு நடிகனாக “என் காதல் கண்மணி” திரைப்படத்தில் அறிமுகமாகி, இயக்குநர் ஸ்ரீதரால் “தந்து விட்டேன் என்னை” திரைப்படத்தில் காதல் நாயகனாக அறியப்பட்ட விக்ரம் பத்தாண்டுகள் போராட்டத்திற்கு பிறகு, சேதுவில் தான் அடையாளம் பெற்றார்.

சேது ஒரு நல்ல திரைப்படம் என்பதைத் தாண்டி இயக்குநர் பாலாவின் திரைப்படத்தில் நடிப்பவர்கள் நடிப்பில் ஒரு தனி முத்திரை பதிப்பார்கள் என்று பாலாவின் அடுத்தடுத்த படங்கள் நிரூபித்தன. சேதுவில் எப்படி ஒரு நல்ல நடிகராக அடையாளப் படுத்தப்பட்டு ஒரு முன்னணி நடிகராக விக்ரம் மாறினாரோ, அது போல நந்தாவில் சூர்யாவின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்தது.

நந்தா கதாபாத்திரத்தின் உடல் மொழியிலிருந்து சூர்யா விடுபடவே ஐந்து படங்களானது. அதன் பின் வந்த பிதாமகனில் விக்ரமிற்கு நடிப்பிற்காக தேசிய விருது கிடைத்தது. நான் கடவுள் திரைப்படத்தில் ஒரு நல்ல நடிகனாக உருவானார் ஆர்யா. அவன் இவனில் விசாலின் நடிப்பு குறிப்பிட்டு சொல்லப்பட்டது. அதர்வா, ஜி.வி பிரகாஷ் என நடிக்கும் நடிகர்கள் எல்லோரையும் நடிப்பின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல தவறியதில்லை இயக்குநர் பாலாவின் படங்கள்.

படம் வெற்றியோ தோல்வியோ. தேர்ந்த நடிகர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையாகவே இயக்குநர் பாலாவின் எல்லா படைப்புகளும் இருந்திருக்கின்றன. விக்ரம் துவங்கி ஜிவி பிரகாஷ் வரைக்கும் அனைத்து நடிகர்களுக்கும் இது பொருந்தும். இன்று துருவ் நல்ல நடிகராக உருவாகி இருப்பதற்கு அவர் பாலாவின் பயிற்சிப்பட்டறையில் தயாரானதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

துருவின் வெற்றிக்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாமல் இயக்குநர். பாலாவின் உழைப்பு இருக்கும் என்றே நான் நம்புகிறேன் என்றேனும் ஒரு நாள் ஒரு நேர்காணலில், துருவ் இந்த உண்மையை தன்னியல்பாக சொல்வாரென்றே நான் எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT