Skip to main content

செய்யாததை செய்த பாலா... வர்மா விளைவு யாரை பாதிக்கும்!!!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020
bala vikram

 

 

பாலா இயக்கத்தில், த்ருவ் விக்ரம் நடிப்பில் உருவான வர்மா நேற்று ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு பக்கம், நல்லவேளை இந்த படத்தை த்ருவின் அறிமுக படமாக ரிலீஸ் செய்யப்படவில்லை என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம், ஆதித்ய வர்மாவுக்கு, வர்மா எவ்வளவோ மேல் என்று சொல்கின்றனர். ஆனால், 2கே கிட்ஸ் மத்தியில் மீம் டெம்பிளேட்டுக்கான படமாகதான் இது பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த வர்மா திரைப்படம் விக்ரமிற்காக அதுவரை செய்யாததை பாலா செய்ததால் உருவானது. ஆம், பாலா இதுவரை ரீமேக் படங்கள் எதுவும் இயக்கதில்லை. அவர் படப்புகள் அனைத்துமே மண் சார்ந்து, விளிம்பு நிலை மக்கள் சார்ந்து அமைந்த கதைகள். எனவே பாலா இந்த படத்தை இயக்கும் செய்தி வெளியானபோது ஆச்சரியத்துடனே பார்க்கப்பட்டது. 

 

தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய 'சேது' திரைப்படத்தை உருவாக்கிய இயக்குனர் பாலாவையே தன் மகனது முதல் படத்தையும் உருவாக்க கேட்டுக்கொண்டார் விக்ரம். பொதுவாக பாலா படங்கள் அதிக நாட்கள் தயாரிப்பில் இருக்கும். 'அவன் இவன்', 'பரதேசி', 'தாரை தப்பட்டை' படங்கள் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்த நிலையில், தன் நிலையை சரி செய்ய 'நாச்சியார்' திரைப்படத்தை குறுகிய காலத்தில், மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கி வெற்றியை பெற்றார் பாலா. 'நாச்சியார்' வெளியான பின்  திரைப்பட தயாரிப்பளர்களின் ஸ்ட்ரைக்கால் அடுத்து புதிய படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் ஒரு மாதத்திற்கும் மேல் வசூலை அள்ளியது நாச்சியார். 'கலகலப்பு 2' படமும் ஸ்ட்ரைக்கால் லாபம் பார்த்த இன்னொரு படம். 

 

'நாச்சியார்'க்கு பிறகு 'வர்மா' படத்தை இயக்கினார் பாலா. இதுவரை ரீமேக் படங்களை எடுக்காத பாலா, தன் நண்பர் விக்ரமுக்காக அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்தார். அறிவிப்பு வெளிவந்த பொழுது சினிமா ரசிகர்கள் இதுகுறித்து ஆச்சரியப்பட்டனர். பாலாவின் ஸ்டைலுக்கு சற்றும் சம்மந்தமில்லாத படத்தை எப்படி எடுப்பார் என்ற கேள்வியும் இருந்தது. அந்த கேள்வி நியாயமானதே என்பதை ஓடிடி வெளியாகியிருக்கும் வர்மா நிரூபித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனிமேல் பாலா எந்த உதவி செய்தாலும் அதில் என் பணம் இருக்கும்” - லாரன்ஸ்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
raghava lawrence about kpy bala

சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் பாலா. அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். கடந்த மாதம், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்தார். பின்பு தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோ சேவையை வழங்கினார். கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகேயுள்ள நெக்னாமலை என்ற கிராமத்தில் ஆம்புலன்ஸ், தனது சொந்த பணத்தில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் என வழங்கியுள்ளார். 

சமீபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவருக்கு பைக் வாங்கி கொடுத்து உதவினார். இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மற்றும் பலதரப்பட்ட மக்களுக்கு பாலா உதவி செய்து வருவது பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை இரும்பேடு மேனிலைப்பள்ளியில் கழிப்பறை இன்றி சிரமப்பட்ட மாணவர்களுக்கு ராகவா லாரன்சுடன் இனைந்து பாலா கழிப்பறை கட்டி கொடுத்துள்ளார். இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் லாரன்சோடு பாலாவும் கலந்து கொண்டார். அப்போது பேசிய பாலா, “கடந்த சில வருடங்களாகவே கழிவறை இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். புது கழிவறை கட்ட ரூ.15 லட்சம் ஆகும் என அப்பள்ளியின் முன்னாள் மாணவன் கொட்டேஷன் கொடுத்தான். என்னிடம் ரூ.5 லட்சம் தான் இருந்தது. உடனே என்னுடைய ரோல் மாடல் ராகவா லாரன்ஸ் அண்ணன் நியாபகம் வந்தது. சொன்னவுடன் இரண்டு செகண்ட் யோசித்தார். புது கழிவறையை ஷீட்டில் பண்ணலாமா காங்கிரீட்டில் பண்ணலாமா என யோசித்தார்” என்றார். பின்பு லாரன்ஸின் காலில் விழுந்து ஆசி பெற்றார். 

பின்பு ராகவா லாரன்ஸ் பேசுகையில், “பாலா சொன்னவுடன் எதுவுமே கேட்கவில்லை. ஏனென்றால், அவன் செய்வது கண்ணு முன்னாடி தெரிகிறது. இந்த வயதில் இது போல உள்ள பசங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அது நம்முடைய கடமை. அதனால் ஷீட் இல்லாமல் காங்கிரீட்டே கட்டுவோம் என முடிவெடுத்தேன். பாலா யார்கிட்டையும் எதுவும் வாங்குவது இல்லை. இனிமேல் பாலா சைக்கிள் கொடுத்தாலோ, பைக் கொடுத்தாலோ அதில் ராகவா லாரன்ஸ் பணம் உள்ளிருக்கும்” என்றார். இருவரும் ரூ.15 லட்சம் பள்ளிக்கு கழிவறை கட்ட நிதியுதவி வழங்கினார்கள். 

Next Story

“மைல் கல் என்பதில் சந்தேகமே இல்லை” - அடுத்த பட அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
mari selvaraj next movie update

விக்ரமின் மகனான துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில், விக்ரமுடன் இணைந்து 'மகான்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா. ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமானார். 2021 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியான நிலையில், மாரி செல்வராஜ் மாமன்னன், வாழை என அடுத்தடுத்த படங்களில் பணியாற்றியதால் படப்பிடிப்பு தாமதமானது. மாமன்னன் வெளியானதை தொடர்ந்து வாழை பட பணிகளும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் கதை, அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 80 நாட்கள் ஒரே மூச்சில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் படத்தில், மலையாள கதாநாயகிகள் அனுபமா பரமேஷ்வரன் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் ஆகிய இருவரும் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், இப்படத்தின் அனுபமா பரமேஷ்வரன் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இன்னும் பெயரிடாத இப்படத்தின் பணிகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியதாகவும் கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படம் குறித்து மாரி செல்வராஜ் பேசுகையில், “பரியேறும் பெருமாள், பா. ரஞ்சித் அண்ணாவுடன் நான் இணைந்த முதல் திரைப்படம். இப்படம் இவ்வளவு உயரம் எட்டியதற்கு பா. ரஞ்சித்தும் ஒரு முக்கிய காரணம். அவருடன் மீண்டும் ஒரு முறை இணைந்து பணியாற்றுவது உற்சாகத்தை அளிக்கிறது. இப்போது என்னுடைய ஐந்தாவது படத்திற்காக அவருடனும், மற்றொரு வலிமையான கூட்டாளியான அப்ளாஸ் என்டர்டெய்ன்மெண்ட்டுடனும் இணைந்திருக்கிறேன். இந்த திரைப்படம் கபடி என்னும் விளையாட்டின் வேர்களைத் தேடிச் செல்லும் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும். மேலும் துருவுடன் இணைந்து பணியாற்றுவது என்பதும் மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்தில் வலிமையாகவும். திறமையான இளைஞனாகவும் துருவ் விக்ரம் வித்தியாசமான கோணத்தில் திரையில் தோன்றுவார். இந்த திரைப்படம் நம் அனைவருக்கும் ஒரு முக்கியமான மைல் கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்றார்.