ADVERTISEMENT

தனுஷுக்கு எதிரான புகார் - விசாரணைக்கு தடை விதித்தது நீதிமன்றம்

11:17 AM Mar 30, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2014-ஆம் ஆண்டு 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'வேலையில்லா பட்டதாரி'. இப்படத்தில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் தொடர்பாக சட்ட விதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி வரும்போது எச்சரிக்கை வாசகம் முறையாக இடம்பெறவில்லை எனவும் தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பின் சார்பாக கடந்த 2014-ஆம் ஆண்டு தயாரிப்பு நிறுவனம் மற்றும் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர், படத்தின் தயாரிப்பு நிறுவனமான 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் இயக்குநர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் மீது நடவடிக்கை வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகிய இருவரின் தரப்பும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் தனுஷ்க்கு எதிரான இந்த புகார் மனு நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்ட நீதிபதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT