ADVERTISEMENT

"அவர் ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா, கூகுள் போன்றவர்! - டி. இமான் நெகிழ்சி!

11:11 AM Sep 04, 2021 | santhosh

ADVERTISEMENT

விஜய்சேதுபதி புரொடக்சன்ஸ் மற்றும் 7சிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி, சுருதிஹாசன், ஜெகபதி பாபு, கலையரசன், நடிகை சம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 9ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வாக நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் ஆறுமுக குமார், பெப்சியின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட திரைப்பட இயக்குநர் சங்க நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் உதவியாளரான ஆலயமணி, விழாவிற்கு வருகை தந்தவர்களை நெகழ்ச்சியுடன் வரவேற்றார். முன்னதாக மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் அவர்களுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது விழாவில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் இமான் பேசியபோது....

ADVERTISEMENT

"'லாபம்' படத்தில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனுடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதவை. திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்னரே என்னுடைய இசை சார்ந்த முயற்சிகளுக்கு இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பெரிதும் ஊக்கமளித்தார். பிறகு படங்களுக்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமான பின், சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் போராடிக்கொண்டிருந்தேன் அந்த தருணத்தில், என்னையும் ஒரு இசையமைப்பாளராக அங்கீகரித்து, என்னுடைய வீட்டிற்கு இயக்குநர் ஜனநாதன் வருகை தந்தார். அந்தத் தருணத்தில் அவர் ‘இயற்கை’ படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அதன்பிறகு பல்வேறு காரணங்களால் அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பும் கிடைக்கவில்லை. இருப்பினும் என்னையும், என் திறமையையும் நம்பி வாய்ப்பளிப்பதற்காக வீடு தேடி வந்த முதல் இயக்குநர் ஜனநாதன் சார்தான் என்பதைப் பகிர்ந்துகொள்வதில் பெருமிதமடைகிறேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடன் ‘லாபம்’ படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பாடல், பாடலுக்கான சூழல், அதற்கான பின்னணி, பாடல் வரிகள், மெட்டு, அதற்கான இசை, இதைக் கடந்து உலக அரசியலைக் குறித்து ஆர்வமுடன் விவரிப்பார். அவர் ஒரு நடமாடும் என்சைக்ளோபீடியா, கூகுள் போன்றவர். இந்தப் படத்தில் ‘சேருவோம் சேருவோம்..’ எனத் தொடங்கும் ஒரு பாடல் உள்ளது. இந்தப் பாடலை சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் ஈழப் பெண் பாடகி கிளியோபாட்ரா என்பவர் பாடியிருக்கிறார். அது ஒரு ராப் இசை பாடல். இந்தப் பாடலில் எர்க்ஹு (Erhu) என்றொரு இசைக்கருவியின் இசை இடம்பெற்றிருக்கும். இது சீன நாட்டைச் சேர்ந்த வயலின் இசைக்கருவி போன்றது. இந்த இசைக்கருவியின் அமைப்பு எப்படி இருக்கும்? எத்தனை தந்திகள் அதில் இருக்கும்? அதனுடைய செயல்பாடு? பயன்பாடு? இதுகுறித்த விவரங்களையெல்லாம் கேட்டறிந்தார். ஏனெனில், இந்தப் படத்தில் நாயகி சுருதிஹாசன் கிளாரா என்ற இசைக் கலைஞராக நடித்திருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பாடல் என்பதால், ஒரு பாடலை தொடங்குவதற்கு முன் உள்ள சூழல், அதாவது எந்த சுருதியில் தொடங்கலாம்? எந்த ராகத்தில் அமையலாம்? எந்த மாதிரி டெம்போவில் அமைக்கலாம்? எந்த மாதிரியான இசைக்கருவிகளைப் பயன்படுத்தலாம்? குழு இசை எப்படி பயன்படுத்தலாம்? என்றொரு விவாதம் நடைபெறும். இதனை இயக்குநர் ஜனநாதன் திரையில் காட்சிப்படுத்த விரும்பினார்.

இந்தக் காட்சியைப் படமாக்கும்போது மிக நுட்பமாக எந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்...? நான் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறேன். இது சரியா..? என விளக்கமாக கேட்டறிந்துகொண்டு படமாக்கினார். இந்தப் பாடல் காட்சியின்போது எர்க்ஹு என்ற இசைக்கருவியை அதே தோற்றத்தில் பயன்படுத்தியிருந்தார். இந்த இசைக்கருவி எப்போது தோன்றியது? அந்தக் காலகட்டத்தில் அரசியல் மற்றும் சமூக சூழல்? இதனை யார் பயன்படுத்தினார்கள்? எதற்காக பயன்படுத்தினார்கள்? என்ற விவரங்களை எல்லாம், என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் அவரிடம் பகிர்ந்துகொண்டபோது, அவர் இதனை ஆழ்ந்து கவனமுடன் கேட்டறிந்தார். ஒரு படைப்பை நூறு சதவீதம் நேர்த்தியாக திரையில் உருவாக்கிய படைப்பாளி ஜனநாதன் சார் என சொல்லலாம். பாடல் உருவாக்கத்தின்போதும், மற்றைய தருணங்களிலும், எப்போதும் அவருடன் அவருடைய உதவியாளர் ஆலயமணி உடனிருப்பார். பாடல் வரிகள் உருவாக்கத்தின்போதும், இசைக்கருவிகள் பயன்படுத்தும்போதும் ஆலயமணி அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும்.

அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அனுமதிக்கப்பட்டிருந்த காட்சி எனக்கு உணர்வுரீதியாக இணைந்திருந்தது. அதே மருத்துவமனை, அதே தீவிர சிகிச்சை பிரிவில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தாயார் சிகிச்சைப் பெற்று, மறைந்ததை நினைவூட்டியது. இது எனக்கு மேலும் மன பாதிப்பை ஏற்படுத்தியது. ஆகச் சிறந்த மனிதர் அவர், இவ்வளவு விரைவாக நம்மிடமிருந்து பிரிந்து சென்றது சொல்ல முடியாத, தாங்க முடியாத இழப்பு. இதனால் மனம் கனக்கிறது. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றி. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அவர் ஒரு நடிப்பு அரக்கன் என்று குறிப்பிடலாம். எந்தக் கதாபாத்திரம் அவரிடம் வழங்கப்பட்டாலும், அதனை தன்னுடைய பாணியில் வழங்கி, ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பார். அவருடைய அபார நடிப்புத் திறமைக்கு நானும் ஒரு பரம ரசிகன். அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, சிறந்த தயாரிப்பாளரும் கூட. தயாரிப்பாளர் ஆறுமுக குமாருடன் இணைந்து இப்படத்தை நேர்த்தியாக தயாரித்திருக்கிறார். இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்" என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT