ADVERTISEMENT

எனக்கு ஹீரோயின் வசுந்தரா என்றார்கள்...அப்படியே தூக்கிவாரிப்போட்டது...ஏன் தெரியுமா..? - அப்புக்குட்டி  

05:00 PM Sep 03, 2019 | santhosh

தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி, வசுந்தரா இணைந்து நடித்துள்ள படம் 'வாழ்க விவசாயி'. அறிமுக இயக்குனர் பொன்னிமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விவசாயிகள் வாழ்ந்தால்தான் நாடு வாழும் என்கிற கருத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்து அப்புக்குட்டி பேசும்போது...

ADVERTISEMENT



''எனக்கு 'அழகர்சாமியின் குதிரை' படம் பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித்தந்தது. அதற்குப் பிறகு தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற தெளிவையும் கொடுத்தது. நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரு கதையாக 'வாழ்க விவசாயி 'கதை அமைந்திருக்கிறது. அந்த கதையைச் சொன்னபோதே இதில் நாம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த கதை .நான் ஆசைப்பட்டு விரும்பி நடித்த கதை. இயக்குநர் பொன்னிமோகன் சொன்ன கதை மட்டும் பிடித்து இருந்தால் போதுமா? இதை தயாரிக்க நல்ல தயாரிப்பாளர் வேண்டுமே. அப்படி ஒரு நல்ல தயாரிப்பாளராக பால் டிப்போ கதிரேசன் கிடைத்தார். படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரும்படி விரைவாகவே எனக்கு முன் பணம் கொடுத்தார். படம் தொடங்கப் பட்டது. இயக்குநர் மோகன் சொன்னபடியே கதையை அழகாகப் படமாக்கியிருக்கிறார். ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். நானும் ஒரு விவசாயின் மகன். எனக்கும் விவசாயம் தெரியும். நாற்று நடுவது, களை எடுப்பது, கதிர் அடிப்பது, அறுவடை செய்வது வரை எனக்கும் எல்லா வேலைகளும் தெரியும் .எனவே இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் சுலபமாகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ADVERTISEMENT

கதையைக் கேட்டவுடன் படமெடுப்பது என்று முடிவானது. உடன் எனக்குள் அடுத்த கேள்வி வந்தது. யார் கதாநாயகி? அவர் எப்படி இருப்பார்? என்பது தான் அது. ஏனென்றால் என் உயரத்துக்கு அவர்களும் சரியாக இருக்க வேண்டுமே என்கிற கவலை எனக்கு. பிறகு படத்தின் நாயகி வசுந்தரா என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. அவர் என்னை விட உயரமாக இருப்பாரே. என்னைவிட நிறமாக இருப்பாரே என்று மீண்டும் கவலை. அவர் 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் நடித்தது எனக்குப் பிடித்திருந்தது 'பேராண்மை'யிலும் நன்றாக நடித்திருந்தார். ஆனால் அவரைப் பற்றி நான் கவலைப்பட்டது பயந்தது எல்லாமே படப்பிடிப்பில் மாறிவிட்டது. அவர் உயரம் தெரியாதபடியும் நிறம் தெரியாத படியும் சரி செய்து மாற்றங்கள் செய்து மேக்கப்பில் நிறத்தைக் குறைத்து எனக்கு ஜோடியாக நடிக்க வைத்துவிட்டார்கள். வசுந்தரா ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகை. அவர் வழக்கமான கதாநாயகி கிடையாது. அவருக்கும் இந்தப் படம் நல்ல பெயரைத் தேடித் தரும். தன்னால் முடிந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டியிருக்கிறார். கதையின்படி எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நான் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. வினோத், சந்தியா என்ற அந்த இரண்டு குழந்தைகளும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

ஒரு நாள் ஒரு பரணில் கதாநாயகன் கதாநாயகி நாங்கள் இருவரும் ஏறி அமர்ந்து பேசிக்கொண்டு கொண்டிருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. ஆர்ட்டைரக்டர் அந்தப் பரணை நன்றாகத்தான் தயார் செய்து இருப்பதாக கூறினார். முதல் நாள் நல்ல மழை பெய்திருந்தது. பரண் நனைந்து ஈரம் சொட்டச் சொட்ட இருந்தது. முதலில் அதில் நான் ஏறினேன். அடுத்து வசுந்தரா ஏறிய போது அந்தப் பரண் சரிந்து விழுந்தது. நான் விழுந்து என் மேல் அவர் விழுந்தார். என் மேல் அவர் விழுந்ததைப் பார்த்து எனக்கு பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது. ஆபத்துக்கு பாவம் இல்லை என்று அவரை நான் பிடித்துக்கொண்டேன். என்னை தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று பயந்தேன். ஆனால் நீங்கள் "நல்ல வேளை என்னை காப்பாற்றி விட்டீர்கள். நான் உங்கள் மேல் விழுந்திருக்காவிட்டால் எனக்கு இந்நேரம் அதிகமாக அடிபட்டிருக்கும்" என்றார். எனக்கு அப்பாடா என்றிருந்தது. இந்தப் படம் விவசாயம் பற்றிய படம் தான். நம் அனைவருக்கும் பிடித்த கதையாக இருக்கும். 'வாழ்க விவசாயி 'படம் என்னை வாழ வைக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம். ஒரு விவசாயியாக நான் வாழ்ந்திருக்கும் இந்தப் படம் எனக்கு நல்ல பெயரைத் தேடித் தரும் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT