
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதனால் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமா துறையும் முடங்கியுள்ளது. இதனால் திரையுலகினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளதால் மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை சமூகவலைதளம் மூலமும், அறிக்கைகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தன் பிறந்தநாளான இன்று நடிகர் அப்புக்குட்டி கரோனா குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...
''இந்தக் காலம் ஒரு சோதனையான காலம் மட்டுமல்ல இக்கட்டான நெருக்கடியான காலம். இது மனிதாபிமானத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு சோதனையாகும். இதுவரை 45 நாட்கள் கடந்து விட்டன. இதில் பல பலதரப்பட்ட மனிதர்களை அடையாளம் காண முடிகிறது. மடி நிறைய பொருள் இருந்தும் மனம் நிறைய இருள் இருக்கும் மனிதர்களையும், இருப்பதைப் பிரித்துக் கொடுக்கும் மனிதர்களையும் காண முடிகிறது. இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார். அவர்கள் மத்தியில் இந்த நாட்டில் தன்னாலான உதவிகளை எத்தனையோ பேர் பெரிய மனதோடு செய்து கொண்டிருக்கிறார்கள். இருட்டாக இருக்கிறது என்று சொல்பவரை விட ஒரு சிறு மெழுகுவர்த்தி ஏற்றுபவர் உயர்வானவர்.
இந்தச் சோதனையான காலத்தில் ஏதாவது உதவி செய்யுங்கள், முடிந்ததை உதவி செய்யுங்கள், சகமனிதனை மதியுங்கள். சிரமப்படுவோருக்குத் தன்னளவில் ஏதாவது செய்யுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள். நானும் என்னளவில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறேன். எனக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றும் இல்லை. நிம்மதி திரும்பினால் போதும். போராட்டம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. எல்லாரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை. இறைவன் மீட்டுக் கொண்டு வருவான் நல்ல முடிவு விரைவில் வரும். மன தைரியத்துடன் எதிர்கொள்வோம். மக்கள் தைரியமா இருந்தால் சந்தோஷம் கிடைக்கும்'' என கூறியுள்ளார்.