கதிர் பிலிம்ஸ் சார்பில் ‘பால் டிப்போ ’கதிரேசன் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘வாழ்க விவசாயி’. தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, நடிகை வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பி. எல் .பொன்னி மோகன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துகொண்ட நடிகை வசுந்தரா பேசுகையில்.... "இந்தப் படத்தின் இயக்குநர், நாயகன், தயாரிப்பாளர் ஆகியோர் விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்டவர்கள். அவர்கள் விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும், நேர்மையாகவும் ஒரு படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் படைப்பிற்கு என்னால் முடிந்த வரை ஒத்துழைப்பு அளித்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு விவசாயிகளைப் பற்றியும், அவர்களின் தற்போதைய நிலையைப்பற்றியும் உணந்திடவேண்டும். அவர்களை உணர வைத்துவிடமுடியும் என்று நம்பி படக்குழுவினர் பணியாற்றியிருக்கிறார்கள். சிறிய பட்ஜெட் படங்களை ஊடகங்கள் தான் சிறந்த முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். அப்புக்குட்டிக்கு ஜோடியாக இதில் நடித்திருக்கிறேன் என்பதை விட ஒரு விவசாயிக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். நகரத்து பெண்ணான என்னிடம் கிராமத்து பெண்ணாக எப்படி நடிக்கவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்து இயக்குநர் என்னிடமிருந்து நடிப்பை வாங்கியிருக்கிறார். அதற்காக இயக்குநருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் விருது பெறுவதைக் கடந்து அனைவருக்கும் பிடித்த கமர்சியல் அம்சம் ஒன்றும் இதில் இடம்பெற்றிருக்கிறது" என்றார்.