ADVERTISEMENT

மோடியுடன் மீண்டும் மோதும் அனுராக் காஷ்யப்! சோக்ட் : பைசா போல்தா ஹை... பக்கத்து தியேட்டர் #11

04:45 PM Jun 11, 2020 | santhoshkumar


பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழியை கேட்டிருப்போம். அதுபோல ஒரு வீட்டையும், நாட்டையும் பணம் என்ன செய்கிறது என்பதைத்தான் 'சோக்ட் : பைசா போல்தா ஹை' படம் விளக்குகிறது. ரொமான்ஸ், ஃபேமிலி, மசாலா என்று சென்றுகொண்டிருந்த பாலிவுட்டை உண்மையான வட இந்தியா, சாதாரண மக்கள் என்று சராசரி மனிதர்களின் வாழ்வியலை சினிமாத்தனத்துடன் படமாக்கி சர்வதேச அளவில் பிரபலமான அனுராக் காஷ்யப்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். லாக்டவுன் சமயத்தில் எந்தத் திரையரங்கும் திறக்கப்படாத நிலையில் ரிலீஸுக்கு காத்திருந்த படங்கள் வேறுவழியின்றி ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், அனுராக் காஷ்யப் டிஜிட்டல்தான் அடுத்த தலைமுறையினருக்கானது என்பதை முன்பே நன்கு அறிந்தவர், நெட்ஃப்ளிக்ஸின் சொத்தாகவே மாறிவிட்டார். இதுவரை இரண்டு குறும்படங்கள், ஒரு தொடர், தற்போது இந்த முழு நீளப்படம் என அவருடைய நெட்ஃப்ளிக்ஸ் ஃபில்மோக்ராஃபி நீள்கிறது. மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தன்னுடைய நடிப்பால் அனுராக் காஷ்யப்பை கவர்ந்து பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார் நடிகர் ரோஷன் மேத்யூஸ். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தலா ஒரு படம் மட்டுமே நடித்த ஷயாமி கெர் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய நாள் நவம்பர் 8 2016... 'டிமானிடைசேஷன்' என்ற வார்த்தை யாராலும் மறக்க முடியாதது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த காலகட்டத்தை பின்னணியாக வைத்து, மும்பையில் வாழும் மிடில் கிளாஸ் குடும்பத்துடன் பின்னப்பட்ட பணமதிப்பிழப்பு கதைதான் 'சோக்ட்' (chocked). சரிதா, வங்கி வேலைக்குச் சென்று கணவன் சுஷாந்த் மற்றும் குழந்தை ஆகிய இருவரையும் கவனித்துக்கொள்ளும் பெண். சுஷாந்த், கடந்த ஐந்து வருடங்களில் ஒரு வேலையிலும் நிரந்தரமாக இல்லாத, குடும்ப கஷ்டத்தை உணராத அப்பா. சரிதாவுக்கு பெரிய பாடகியாக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. ஒரு முறை ஒரு பெரிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது கூடியிருந்த மக்களை பார்த்து வாயடைத்துப்போய் போட்டியை விட்டு வெளியேறுகிறாள். இது அவளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. தான் ஒரு தோல்வியடைந்தவள் என்கிற வருத்தம் ஒரு பக்கம், கணவனும் வீட்டின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படவில்லை என்கிற விரக்தி ஒரு பக்கம்... மொத்தமாக பணம்தான் இவர்களுக்குத் தேவையான ஒன்றாக இருந்தபோது கிச்சன் சிங்க்கிலிருந்து வெளியாகும் சாக்கடையில் சுருள் சுருளாகப் பணம் வருகிறது. இதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை!

ADVERTISEMENT


பெரும்பாலான மக்கள் 'இது நாட்டின் முன்னேற்றத்திற்காக' என்று நம்பி எவ்வளவு பெரிய சிரமம் என்றாலும் அதை ஏற்றுக்கொண்டு கியூவில் நின்றனர். ஆனால், கியூவில் நின்றவர்களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது, அந்த இரவில் இடப்பட்ட அந்த திடீர் உத்தரவு இந்திய பொருளாதாரத்தை சோதித்துப் பார்க்கும் என்று. டிமானைடைசேஷன் காலத்தில் நடைபெற்ற அவலத்தை விட அதற்கு ஆதரவாக வந்த வாட்சப் பார்வேர்ட் மெசேஜ்களை தற்போது நினைத்துப் பார்க்கும்போதுதான் பலரும் கடும் கோபத்திற்கு ஆளாவோம். அந்தக் கோபம், கால் கடுக்க கியூவில் நின்று கடைசியாக வங்கிக்குள் நுழைகையில் 'பணம் இல்லை நாளைக்கு வாருங்கள்' என்று சொன்னதை நினைத்துப் பார்த்தால் கூட வரவில்லை. அவ்வளவு நம்பிக்கை தந்து ஏமாற்றிய அந்த மெசேஜ்களை நினைத்தால் வலிக்கத்தானே செய்யும். அத்தனை வலியையும் சோகமாக சீரியசாக சொல்லும் படமாக அல்லாமல், வேறு சில கோணங்களையும் காட்டியிருக்கும் கற்பனை கதையுடன் களமிறங்கியிருக்கிறார் காஷ்யப்.

இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் 15 பேர்தான் இருப்பார்கள். அதில் நான்கு பேரின் நடிப்பு அட்டகாசம். மிடில் கிளாஸ் குடும்பமாகவே வாழ்ந்த சரிதா, சுஷாந்த், இவர்களின் மகன் மற்றும் 'தாய்' என்று அழைக்கப்படும் பக்கத்து வீட்டுக்காரப் பெண். இந்த பாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பு அப்படியே மும்பை மனிதர்களை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. அதுவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிமானிடைசேஷனை அறிவிப்பதை கேட்டவுடன் 'தாய்' கொடுக்கும் ரியாக்ஷனில் அவரது நடிப்பு புதுமையானது. கண்டிப்பாக பல மீம்களாக வலைத்தளத்தில் உலா வர வாய்ப்புள்ளது. நடிப்பிற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறதோ அதே போல த்ரில்லிங்கான திரைக்கதை எழுத்தும், விமர்சனமாகவும் பிரச்சாரமாகவும் இல்லாமல் சுவாரசியமான திரைப்படமாக உருவாக வழிவகுத்துள்ளது. அந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பேச்சை கேட்டு எழுதப்பட்டதுபோல வசனங்கள் இருக்கின்றன. நடந்ததை நடந்தபடியே, அதுவும் இந்த சினிமாவின் கதைக்கு என்ன தேவை இருந்ததோ அதை மட்டுமே படத்தில் வைத்திருக்கிறார் அனுராக். மசாலா படங்களில் மக்களை உணர்வுப்பூர்வமாகத் தூண்டுவதற்குப் பயன்படுத்தும் சோஷியல் மெசேஜ் யுக்திகள் இல்லாமல் ரியலிசத்தை நம்பிப் பயணித்திருக்கிறது படம். வழக்கம்போல தொழில்நுட்பங்களிலும், கலை, இசை ஆகியவற்றில் திறமையாக செயல்பட்டிருக்கிறது அனுராக்கின் படக்குழு.

பல இடங்களில் ஆளும் அரசை, மோடியை நகைச்சுவையாக விமர்சித்திருக்கிறார்கள். ஆனால் அது 'ரா'வான அரசியலாக இல்லாமல் சுவாரசியமாக இருக்கிறது. படம் திரையரங்குகளில் வெளியாவதாக இருந்திருந்தால் சென்சார் போர்ட் இதை லாக் செய்து வைத்திருக்கும் வாய்ப்பு அதிகம். பெண்ணை மையமாக வைத்து நகரும் கதையை இந்தியாவில் நடைபெற்ற பெரும் நிகழ்வின் பின்னணியில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக எடுத்ததன் மூலம் அனுராக் காஷ்யப், பேக் டு ஃபார்ம்...

ADVERTISEMENT

முந்தைய படம்: மதம் ஒரு போதை பொருள்...? மலையாள சினிமாவின் தைரியம்!!! பக்கத்து தியேட்டர் #10

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT