Skip to main content

மலையாளத்தில் ஒரு 'சைக்கோ' படம்! இது எப்படி இருக்கு? பக்கத்து தியேட்டர் #9

2018ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் 'ராட்சசன்'. இது ஏற்படுத்திய தாக்கம், வேறு எந்த சைக்கலாஜிக்கல்/ சீரியல் கில்லர் ஜானர் வகையறாக்கள் படம் பார்த்தாலும் அதோடு ஒப்பிட வைக்கிறது. இதன் தாக்கமோ என்னவோ சமீபத்தில் வெளியான 'சைக்கோ' படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்தது. சைக்கோ வெளியான அதே வாரத்தில் மலையாளத்தில் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகை படமான ‘அஞ்சாம் பாதிரா’ வெளியாகியுள்ளது. மிதுன் மானுவேல் தாமஸ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சமூக வலைதளங்களில் கிடைத்த ஆதரவு, சரி இதை பார்க்கலாம் என்று தோன்றியது.

 

kunjako bobanதமிழக சினிமா ரசிகர்களுக்கு 'வைரஸ்' படத்தின் மூலம் அறிமுகமான குஞ்சாக்கோ போபன்தான் இதில் நாயகன். நாயகன் என்று சொல்வதை விட முக்கிய பாத்திரம் என்று சொல்வதுதான் மலையாளப் படங்களுக்கு சரியாக வரும். அந்த அளவுக்கு பல பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதுபவர்கள் அவர்கள். இப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரிகளின் விசாரணையில் உதவி செய்யும் கிரிமினாலஜிஸ்ட்டாக பணிபுரிந்திருக்கிறார். 'கும்பலாங்கி நைட்ஸ்' புகழ் ஸ்ரீநாத் பாஸியும் இந்தப்  படத்தில் சைபர் ஹேக்கராக நடித்திருக்கிறார். வழக்கம்போல அவருடைய வெகுளியான நகைச்சுவை நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார். டிசிபியாக நடித்திருக்கும் உன்னிமயா பிரசாத், ஏசிபியாக நடித்திருக்கும் ஜினு ஜோசப் என்று படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மலையாளத்தில் சமகாலத்தின் சிறந்த நடிகர்களாக பெயர் பெற்று வரும் பலரும் படத்தில் இருப்பது பெரும் பலம்.


'அஞ்சாம் பாதிரா' என்றால் ஐந்தாவது நள்ளிரவு என்று அர்த்தம். கொச்சியில் போலீஸ் அதிகாரி ஒருவர் கண்கள் மற்றும் இதயம் பிடுங்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரது உடலருகில் அருகில் கண்கள் கட்டப்படாத ஒரு நீதி தேவதை சிலை கிடைக்கிறது. இந்தக் கொலை குறித்த விசாரணை நடக்கும்போது விசாரணைக்குழுவுடன் இருக்கும் கிரிமினாலஜி  துறை பேராசிரியர் அன்வர், இது ஒரு சாதாரண கொலை அல்ல, ஒரு சைகோவினால் செய்யப்பட்டதாக இருக்கும், இது தொடர வாய்ப்புள்ளது என்று கருதுகிறார். அதுபோலவே இரண்டாவதாக ஒரு போலீஸ்காரரும் கடத்தப்பட்டு, அதே பாணியில் கொல்லப்படுகிறார். இந்தத் தொடர் கொலைகளின் நோக்கம் என்னவாக இருக்கும், ஏன் போலீஸ் அதிகாரிகளை குறி வைக்க வேண்டும் என்பதுதான் 'அஞ்சாம் பாதிரா'.

 

 

anjam padhiraஇதுவரை நாம் பார்த்த பெரும்பாலான சைக்கோ/சீரியல் கொலை வகை படங்களில் என்ன டெம்ப்லேட் இருந்ததோ அதில் எதுவும் மிஸ்ஸாகாமல் இந்தப் படத்தில் இருக்கிறது. அதே வரிசையில் காட்சிகள் வருகின்றன. ஆனால், அந்த டெம்ப்லேட்குள்ளேயே நம்மை பதற வைக்கும் கொலை காட்சிகளையும் அதிர வைக்கும் திருப்பங்களையும் உருக வைக்கும் ஃபிளாஷ்பேக்கையும் கொண்டு வந்ததுதான் படத்தின் வெற்றி. இந்த வகையறா படங்களில் திகிலை ஏற்படுத்த சவுண்ட் டிசைன் மற்றும் பின்னணி இசையை ஆயுதமாகக் கையாழுவார்கள். அதை 'ராட்சசன்' படம் பக்காவாகக் கையாண்டிருக்கும். அதைப்போல இதிலும் சரியாகக்  கையாண்டிருக்கிறார்கள். சில இடங்களில் 'ராட்சச'னை நினைவுபடுத்துகிறார்கள். இந்தப் படத்தில் வரும் சைக்கோ வெறும் சைக்கோ அல்ல. அந்தப் பாத்திரத்தின் புத்திக்கூர்மையும் பின்னணியும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.


முதல் பாதி விறுவிறுப்பாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் ஸ்லோவாகத்தான் நகர்கிறது. மலையாளப் படங்களில் நமக்கு புத்துணர்ச்சி அளிப்பவற்றில் முக்கியமாக இருப்பது அந்த நிலப்பரப்பும், கதையில் இருக்கும் யதார்த்தமும்தான். ஆனால், இந்தப் படம் பக்கா கமர்ஷியல் படமாக இருக்கிறது. அதிகமான மலையாள சினிமாக்களில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களாகப் பார்த்த நமக்கு கொச்சி நகரை முழுவதுமாக மையப்படுத்திக் காட்டிய ஏரியல் ஷாட் புதுமையாக இருந்தது. ஒளிப்பதிவாளர் படத்தை பிரம்மாண்டமாக உணர வைக்கிறார்.

 

 

anjam padhira2மிஷ்கினின் 'சைக்கோ'வுடன் ஒப்பிட்டு பலரும்இந்தப் படத்தை பாராட்டுகிறார்கள். தமிழ் சைக்கோவில் 'கொலை செய்தது யார்?' என்பது கேள்வியே அல்ல, 'எப்படி எதற்காக' என்பதுதான் முக்கிய புள்ளி. ஆனால் 'அஞ்சாம் பாதிரா'வில் கொலை செய்தது யார், எதற்கு என்ற இரண்டு கேள்விகளும் முதல் பாதி முழுவதும் மிக அழுத்தமாக நம் மனதில் எழ, இரண்டாம் பாதியில் அதற்கான விடைகளும் ஓரளவு திருப்திகரமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உலக சினிமாக்களை கண்டு களித்தவர்களுக்கு இது ஒரு ஓகே ரேஞ்ச் படமாகத்தான் இருக்கும். ஆனால், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என்கிற ஜானரை மோசம் செய்யாமல் எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் இது. படத்தை முழுவதுமாக பார்க்கும்போது 'இது ஒரு சைக்கோ படமா' என்ற கேள்வியும் எழுகிறது. நீங்களும் படத்தை பார்த்துவிட்டு சொல்லுங்கள் இது சைக்கோ படமா இல்லையா என்று. 

முந்தைய படம்: உலகப் போர்கள் செய்த ஒரே நன்மை என்ன தெரியுமா? பக்கத்து தியேட்டர் #8

அடுத்தப் படம்: மதம் ஒரு போதை பொருள்...? மலையாள சினிமாவின் தைரியம்!!! பக்கத்து தியேட்டர் #10

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்