ADVERTISEMENT

“ஜல்லிக்கட்டுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும்” - முதல்வருக்கு அமீர் கோரிக்கை

12:57 PM Jan 18, 2024 | kavidhasan@nak…

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக அளவில் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் வழக்கம் போல் கோலாகலமாக நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கக் காசு, கார், பைக், பிளாஸ்டிக் பொருட்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்குவது வழக்கம். இது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது, “வீரர்களுக்கு உழவுத் தொழில் தொடர்பான நடவு, களை, பூச்சிக்கொல்லிகள் தெளிப்பான்,அறுவடைக்கருவிகள், மாடுகள் தந்தால் அவைகளை பயன்படுத்தியும்,வாடகைகளுக்கு விட்டும் பயன் அடைவார்கள். அவ்வீரர்களின் வாழ்க்கை முன்னேற்றம் காணும் விதமான இது போன்ற பரிசினைத் தந்து தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும்” என தமிழக அரசை கேட்டு கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, அமீரும் முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி விளையாட்டோடு சேர்க்கவும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடவும் கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில், தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின ஏறு.. கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் புல்லாளே ஆய மகள்..’என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாச்சார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

மேலும், மதுரை அலங்காநல்லூரிலும், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிலும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவண செய்யக் கேட்டுக் கொள்கிறேன். ‘தமிழர் வீரம் வீணாகாது - தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!’ என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT