Skip to main content

மிக்ஜாம் புயல் பாதிப்பு - அமீர் நிதியுதவி

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
ameer funded michaung storm damage

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பேரிடர் ஏற்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி ஒரு மாத சம்பளத்தை வழங்கியதோடு, தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரணத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் திரையுலகத்தைச் சார்ந்த சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், சூரி ஆகியோர் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார்கள். பின்பு வடிவேலு, ரூ.6 லட்சம் வழங்கினார். இதற்கு முன்னதாக சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் முதற்கட்டமாக  ரூ.10 லட்சம் வழங்கினார்கள். 

இந்த நிலையில், இயக்குநர் அமீர் தற்போது வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சம் வழங்கியுள்ளார். அதற்கான காசோலையை முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வழங்கினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

ஷங்கர் வீட்டு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
shankar daughter aishwarya marriage cm mk stalin wished

முன்னணி இயக்குநராக வலம் வரும் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா, பணியாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தொழிலதிபர் மற்றும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ரோஹித் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரோகித்தை ஐஸ்வர்யா விவாகரத்து செய்தார். பின்பு ஷங்கர் வீட்டிலே வசித்து வந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் தருண் கார்த்திகேயன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து திருமண விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின், மற்றும் திரைப்பிரபலங்கள் பலருக்கும் ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார்.  

இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.