Skip to main content

"ரம்மி முக்கியமா... ஜல்லிக்கட்டு முக்கியமா..." - ஆளுநரை விமர்சித்த இயக்குநர் அமீர் 

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

director ameer spoke about jallikattu

 

இயக்குநர் அமீர், வெற்றிமாறன் மற்றும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட சினிமா அரசியல் ஆளுமைகள் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்பை கண்டித்து இந்த சந்திப்பில் பேசினர். 

 

இயக்குநர் அமீர் பேசுகையில், "உலக வரலாற்றில் ஒரு பாரம்பரிய விளையாட்டுக்கு ஒரு அரசு தடை விதித்து, அந்த தடையை எதிர்த்து ஒரு மாநிலத்தில் ஒட்டுமொத்த மக்களும் தன்னெழுச்சி பெற்று நடந்த போராட்டம் தான் 2017ல் நடந்த ஜல்லிக்கட்டு. இந்த போராட்டத்தால் தமிழக அரசே நேரடியாக முன் வந்து சட்டமேற்றி ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறச் செய்வதற்கான ஒரு வரலாற்று நிகழ்வு இந்த தமிழக மாநிலத்தில் நிகழ்ந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அதன் பிறகு தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருந்தாலும், இதனைத் தடை செய்ய விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். 

 

இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில்  ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுகிறது, வதை செய்யப்படுகிறது, இதனால் மனிதர்கள் இறக்கிறார்கள் உள்ளிட்ட காரணங்களை ஒரு ஆங்கில இந்து பத்திரிகைகள் குறிப்பிட்டதை ஆதாரமாக சொல்கிறார்கள். இந்த ஆதாரம் அடிப்படையிலான வாதங்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டன. இதனால் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை நோக்கி காத்திருக்கின்றோம். இந்த தீர்ப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை, அப்படி வந்தால் ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக வருமா என்பது இன்னும் ஒரு அய்யப்பாட்டில் தான் இருக்கிறது. 

 

இந்த சூழலில் அவர்கள் நீதிமன்றத்தில் வைத்த வாதங்கள் , ஜல்லிக்கட்டு ஒரு பாரம்பரிய விளையாட்டு கிடையாது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் சங்க இலக்கியங்களிலே ஏறுதழுவுதல் குறித்து இடம் பெற்றிருக்கிறது.  உலகத்திலே ஒரு பாரம்பரிய விளையாட்டு ஒன்று உள்ளது என்றால் அது ஜல்லிக்கட்டு தான். ஆனால் இன்றைக்கு என்ன கொடுமை நடக்குது என்று சொன்னால் , நம்மை ஆளுகின்ற அரசு, அதிகாரத்தில் உள்ள ஆளுநர் போன்றோர்கள் ஆன்லைன் ரம்மிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். தடை செய்ய வேண்டிய சூதாட்ட விளையாட்டுகளுக்கெல்லாம் அனுமதி கொடுத்துவிட்டு பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை, பாரம்பரிய விளையாட்டே கிடையாது என வாதங்களை முன்வைக்கின்றனர். 

 

இந்த நிலையில் நாங்கள் வைக்கின்ற கோரிக்கை என்னவென்றால், இந்த வருடம் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற வேண்டும். அது நடைபெறும். ஆனால் அடுத்த வருடம் நடைபெறுமா என ஒரு அச்சம் நிலவுகிறது. இதனால் இந்த இடைப்பட்ட காலத்திற்குள் மத்திய அரசு ஜல்லிக்கட்டை பாரம்பரிய விளையாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். அது தான் எங்களுடைய நோக்கம்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விராலிமலையில் ஜல்லிக்கட்டு; விஜயபாஸ்கர் தலைமையில் நடப்பட்ட முகூர்த்தக்கால்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Muhurthakaal planting program for jallikattu competition at Viralimalai

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் சித்திரை மாத திருவிழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். அதனையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியானது திருவிழாவிற்கு முன்பு நடைபெறும் பூச்சொரிதல் விழா அன்று வெகு விமர்சியாக நடைபெறும். ஆனால் இந்தமுறை தேர்தல் விதிமுறைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அதனால் ஜல்லிக்கட்டு போட்டியின்றி  பூச்சொரிதல் விழா மட்டும் நடைபெற்றது.

தற்போது தேர்தல் முடிவடைந்ததையடுத்து ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உத்தரவு கிடைத்ததையடுத்து  வருகின்ற 30-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதனையடுத்து அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியானது முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள முகூர்த்தக் காலுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்து நடப்பட்டது. இதில் விழா கமிட்டியினர், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகார்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை உடனடியாகப் பெற்றுத்தந்த விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கமிட்டி நிர்வாகிகள், சர்வகட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story

நள்ளிரவு வரை நடந்த ரெய்டு - சிக்கலில் அமீர்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
ameer about ed raid and ncb investigation regards jaffer sadiq

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திய புகாரில் டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கையும் அவரது கூட்டாளியையும் என்சிபி அதிகரிகள் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை செய்த என்சிபி அதிகாரிகள் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். ஜாபர் சாதிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஜாபர் சாதிக்கின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். அமீருடன் சேர்த்து அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகிய 3 பேருக்கு டெல்லி என்சிபி அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞர்களுடன் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி ஆஜரானார். அவரிடம் 11 மணி நேரம் விசாரணை நடத்திய என்சிபி அதிகாரிகள், வாக்குமூலங்கள் பதிவு செய்துகொண்டதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய வருவாயை சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்தது மற்றும் சட்டவிரோதமாக முதலீடு செய்தது போன்ற விவரங்களை பெற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தானாக முன்வந்து வழக்கு ஒன்று பதிவு செய்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து, ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான ஆவணங்களைக் கையிலெடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு புறம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.       

இந்த நிலையில், திடீரென கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி காலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜாபர் சாதிக் தொடர்புடைய சுமார் 35 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில், சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் இல்லத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த இயக்குநர் அமீர் வீடு மற்றும் தி நகர் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கும், இயக்குநர் அமீரும் நண்பர்கள் என்பதாலும், போதைப் பொருள் கடத்தலில் ஈட்டிய பணத்தை திரைப்படத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்தாரா என்ற கோணத்திலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியது. அதேபோல், ஜாபர் சாதிக்குடன் சினிமா தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்த கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் இல்லத்திலும், புரசைவாக்கம் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

காலையில் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணி வரை சென்றது. சோதனை முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியது. அமலாக்கத்துறை சோதனை முடிந்த அடுத்த நாளே மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் இயக்குநர் அமீர் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் அமீர், ரம்ஜான் வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அமீர், ''11 மணி நேரம் என்.சி.பி விசாரணை நடந்தது உண்மைதான். வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததும் உண்மை தான். சோதனை முடிவில் அமலாக்கத்துறை சில ஆவணங்களை எடுத்து சென்றுள்ளனர். அது என்ன ஆவணங்கள் என்று அவர்களே சொல்வார்கள். எந்த விசாரணைக்கும் நான் தயார் நிலையில் இருக்கிறேன். சமூக வலைத்தளங்களில் என் மீது சொல்லப்படுகிற குற்றச்சாட்டுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதை நிரூபிப்பேன். விசாரணை இப்போது நடந்து வருவதால் என்னால் மேற்கொண்டு எதுவும் பேச முடியாது. அமலாக்கத்துறை சோதனை இரவு 12 மணிக்குத்தான் முடிந்தது.

விசாரணை நேர்மையாக தான் நடக்கிறது. ஆனால் விசாரணைக்கு அழுத்தம் இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. எப்போதும் போல என்னிடம் இருந்து வருகின்ற ஒரே வார்த்தை இறைவன் மிகப்பெரியவன்..’ என்று இயக்குநர் அமீர் நடைபெறும் விசாரணை குறித்து தகவல் தெரிவித்தார். முன்னதாக என்சிபி இரண்டாவது முறையாக நேரில் ஆஜராக இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பியதாவும், அவர் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் இயக்குநர் அமீர், என்.சி.பி.யின் இரண்டாம் கட்ட விசாரணைக்கோ, என்னிடம் உள்ள சொத்து ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவோ நான் எந்தவொரு கால அவகாசமும் கேட்கவில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே, 2020 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் அமீர் பெயரிலும் அவரது குடும்பத்தினர் பெயரிலும் வாங்கப்பட்ட சொத்துக்கள் என்னென்ன, இந்த காலகட்டத்தில் வங்கி பரிவர்த்தனை என்னென்ன என்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டி விசாரணை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இரண்டாவது முறையாக என்சிபி அதிகாரிகளிடம் இயக்குநர் அமீர் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் வழக்கை என்சிபி அதிகாரிகள் தீவிரமாக கையில் எடுத்து இருப்பது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.