ADVERTISEMENT

"நீங்கதான் இந்தியாவிலேயே சிறந்த நடிகராமே..." பத்திரிகையாளர் கேள்விக்கு தன்னுடைய ஸ்டைலில் பதிலளித்த சிவாஜி கணேசன்! 

06:39 PM May 11, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-டியூப் சேனலில் சினிமா டைரீஸ் என்ற நிகழ்ச்சி வாயிலாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் அறியாத பக்கங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

"சாலைகள் பலவிதம். எப்படி போகவேண்டுமென்று யாருமே தெரியாமல் இருந்த காலகட்டத்தில் ஒருத்தர் நடக்க ஆரம்பித்து ஒத்தையடி பாதை உருவானது. பின், மக்கள் சேர்ந்து நடக்கையில் அந்தப்பாதை பெரியதாகி மாட்டுவண்டிப் பாதையானது. பின்பு, ஊர்ச்சாலை, மாவட்டச்சாலை, நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை என்றானது. ஒரு மனிதர் தான் நடக்க ஆரம்பித்து, அவர் வாழும் காலத்திலேயே அதை மண் சாலைகளாக்கி, மாவட்டச் சாலைகளாக்கி, நெடுஞ்சாலைகளாக்கி, தேசிய நெடுஞ்சாலைகளாக மாற்றுகிறார் என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை. இந்திய சினிமாவில்... ஏன் உலக சினிமாவிலேயே இதைச் செய்த ஒரு மனிதர் உண்டெனில் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான்.

அவரது முதல்படமான பராசக்தியில், தூங்கிக்கொண்டிருக்கும் சிவாஜி கணேசனை எழுப்புவது மாதிரி முதல் காட்சி இருக்கும். அவரைத் தட்டி எழுப்பும்போது போர்வையை விலக்கிக்கொண்டு எழுவார். அதை சிவாஜி கணேசன் என்ற தனிமனிதர் எழுந்ததாக நான் பார்க்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் நடிப்பும் அங்கிருந்துதான் எழுந்ததாகப் பார்க்கிறேன். சிவாஜிக்கு முன்புவரை தமிழ் சினிமாவில் நடிப்பு என்பது வசனம் பேசுவதுதான்; அதுவும் மெதுவாகப் பேசுவது. மொழி, உணர்ச்சி, முகபாவனைகளை ஒருசேர ஒத்திசைவோடு கொடுத்து இந்திய சினிமாவில் நடிப்பை துவங்கிவைத்தவர் சிவாஜி கணேசன்தான். மார்லன் பிராண்டோ மிகப்பெரிய நடிகர் என்பார்கள். அவருக்கெல்லாம் முன்னோடியாக பலர் இருந்தார்கள். அவர்களிடம் இருந்து பாடம் படித்து ஒருவகையான நடிப்பை மார்லன் பிராண்டோ வெளிப்படுத்தினார். ஆனால், சிவாஜிக்கு முன்னோடி சிவாஜிதான். தொடங்கியதும் அவரே... திருத்தியதும் அவரே... அதை விரிவு படுத்தியதும் அவரே... பின்னாட்களில் மிகப்பெரிய ஐகானாக உருவெடுத்து நின்றதும் அவரே.

சிவாஜி பற்றி அறிஞர் அண்ணா ஒருமுறை கூறுகையில், "சிவாஜியால் மார்லன் பிராண்டோ போல நடிக்கமுடியும். ஆனால், மார்லன் பிராண்டோவால் சிவாஜிபோல நடிக்கமுடியாது" என்றார். இது சத்தியமான உண்மை. "சிவாஜி தமிழகத்தில் பிறந்தது தமிழகத்திற்கு அதிர்ஷ்டம். சிவாஜி தமிழகத்தில் பிறந்தது சிவாஜிக்கு துரதிர்ஷ்டம்" என சிவாஜி பற்றி நான் அடிக்கடி கூறுவேன். சிவாஜி போன்ற ஒரு கலைஞன் வேறொரு நாட்டில் பிறந்திருந்தால் கொண்டாடித் தீர்த்திருப்பார்கள். அவர்கள் மட்டுமே கொண்டாடாமல் உலகத்தையே கொண்டாட வைத்திருப்பார்கள். சிவாஜியை நாம் மட்டுமே கொண்டாடியதுதான் நாம் செய்த மிகப்பெரிய தவறு.

ஒரு பத்திரிகைக்காக சிவாஜியை நேர்காணல் எடுக்கச் சென்றேன். தற்போது உள்ளது போல வீடியோ இண்டர்வியூவெல்லாம் அப்போது கிடையாது. "ஐயா உங்களை இந்தியாவிலேயே சிறந்த நடிகர் எனச் சொல்கிறார்களே... அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..." என்று என் கேள்வியைத் தொடங்கினேன். உடனே அவர், "என்ன பண்றது.. என்னைவிட சிறந்த நடிகர் உங்ககிட்ட இல்லை.. அதுனால சொல்றீங்க... இருந்தா சொல்வீங்களா" என்றார். அந்த இடத்தில் வேறு எந்த நடிகர் இருந்திருந்தாலும், நான் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கேன்... என்று தொடங்கி, ஆம்.. நான்தான் சிறந்த நடிகன் என முடித்திருப்பார்கள். சிலர், அப்படியெல்லாம் இல்லை... உங்க பாராட்டிற்கு நன்றி... எனப் பேசினாலும் உள்ளுக்குள் அதை ரசித்து, அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்திருப்பார்கள். ஆனால், அவ்வளவு பெரிய உயரத்தில் உள்ள சிவாஜி அதற்கு பதிலளித்த விதமே வேறு. இது நான் மட்டும் தனியாக எடுத்த நேர்காணல்; அதனால் யாரும் இல்லையென நினைத்து தன்னைத் தாழ்த்தி இப்படி வெளிப்படையாக பேசியிருப்பார் என நினைத்தேன். பின்னாட்களில் ஒரு தொலைக்காட்சியினர் பேட்டி காணும்போதும் இதேதான் கூறினார். தன்னைத் தாழ்த்திக்கொள்பவன் உயர்த்தப்படுவான் என்பார்கள்; அதற்கான ஆகச்சிறந்த உதாரணம் சிவாஜி கணேசன்.

சிவாஜி கணேசனின் மரணம் சாதாரணமாக கடந்து செல்லக்கூடியதாக அமைந்துவிடவில்லை. மரணச் செய்தி அறிந்து அவர் வீட்டிற்குச் சென்றோம். எத்தனை உடைகளில், எத்தனை கதாபாத்திரங்களில், எத்தனை முகபாவனைகளில் பார்த்த அந்த முகத்தை அந்தக் கோலத்தில் பார்க்கவே முடியவில்லை. மிகப்பெரிய ஒரு கலைஞன் இறந்து துக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என அனைவரும் உடைந்துபோய் அங்கே அமர்ந்திருந்தனர். துக்க வீட்டில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஒரு ஊடகத்தைச் சேர்ந்த கேமராமேன் சிவாஜி முகத்தை அருகே சென்று படம் எடுக்க முயன்றார். உடனே ரஜினி, "குளோஸப்பில் எல்லாம் எடுக்காதீங்க... எப்படியெல்லாமோ பார்த்து ரசித்த முகத்தை, இப்படி பார்க்க முடியவில்லை" எனக் கூறி அவரை தடுத்தார். இறுதி ஊர்வலம் நடக்கிறது... வழியெங்கும் அவ்வளவு மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. அங்கே நின்று கொண்டிருந்த ஒரு வெள்ளைக்கார பெண்மணி, யார் அவர்... அமைச்சரா... முக்கியமான அரசியல் தலைவரா என என்னிடம் ஆங்கிலத்தில் கேட்டார். எனக்கு அந்த அளவிற்கு ஆங்கில புலமை இல்லாவிட்டாலும் 'மோர் தன் தட்' என அவரிடம் கூறினேன். சிவாஜி கணேசன் பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். அனைவரையும் சமமாக மதிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக சிவாஜி இருந்ததற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன்.

பத்திரிகைக்காக நேர்காணல் செய்ய நடிகர் பிரபுவை அவர் இருந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திக்கச் சென்றேன். இடைவேளை நேரத்தில் எனக்கு பேட்டி கொடுத்தார். அங்கு ஒரேயொரு நாற்காலி மட்டும்தான் இருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டு பிரபு எனக்கு பேட்டி கொடுக்க, நான் அவர் பேசுவதை நின்று கொண்டே பதிவு செய்துகொண்டிருந்தேன். சற்றுநேரம் முன்புவரை பிரபு நடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் பஞ்சத்திற்காகவோ, வறுமைக்காகவோ நடிகர் பிரபு நடிக்க வரவில்லை. ராஜா வீட்டு கன்னுக்குட்டி மாதிரி அவர் சிவாஜி கணேசனின் மகன். அந்த வாரம் பத்திரிகையில் அந்த பேட்டி வெளியானது. அதை படித்துவிட்டு பிரபு ஃபோன் செய்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். நான் அந்த பேட்டியில் 'அறையில் இருந்த ஒரே சேரில் அமர்ந்து கொண்டு பிரபு பேட்டி கொடுத்தார்' எனக் குறிப்பிட்டிருந்தேன். அவர் எனக்கு சீட் கொடுக்கவில்லை என்பதற்காக நான் அதை எழுதவில்லை. சிவாஜி கணேசனின் மகனாக இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் அவர் அவ்வளவு சிரமப்பட்டு நடிப்பதை குறிப்பிட வேண்டும் என்பதற்காகத்தான் அவ்வாறு எழுதினேன். சிவாஜி கணேசன் அந்தப்பேட்டியை படித்துவிட்டு பத்திரிகைக்காரனை உட்கார சொல்லாமல் நீ என்ன பண்ணிக்கிட்டிருந்த எனத் தன்னைத் திட்டியதாகக் கூறி, மீண்டும் மன்னிப்பு கேட்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான்கூட அப்படி யோசிக்கவில்லை. ஆனால், அந்த மகாகலைஞன் அதை எந்த கோணத்தில் யோசித்திருக்கிறார் பாருங்கள். கிண்டலுக்காக சிவாஜி கணேசன் மீது நிறைய விஷயங்கள் இட்டுக்கட்டி சொல்லப்படுவது உண்டு. ஆனால், என்னுடைய அனுபவத்தில் அவர் மகாநடிகர் மட்டுமல்ல; மிகச்சிறந்த மனிதரும்கூட.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT