Skip to main content

"ஆஸ்திரேலியாவிற்கு வடக்கே கடலுக்குள் புதைந்து கிடைக்கும் முதல் மதுரை..." செந்தில்குமரன் பகிரும் தமிழ் வரலாறு!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

Actor Senthilkumaran

 

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் 360 யூடியூப் சேனலில் 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், குமரிக்கண்டம் துண்டு துண்டுகளாகப் பிரிந்தது குறித்தும் ஊர் என்ற சொல்லின் தொன்மை குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

குமரிக்கண்டத்தின் நிலவியல் அமைப்பு குறித்தும் அங்கு வாழ்ந்த மக்களின் உருவத்தோற்றங்கள் குறித்தும் முந்தைய பகுதிகளில் விரிவாகப் பார்த்தோம். குமரி நதி, பஃறுளி நதி, 49 நாடுகள், பன்மலை அடுக்ககங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பகுதியாக குமரிக்கண்டம் இருந்துள்ளது. பூமிக்கடியில் உள்ள தட்டுகள் விலகுவது மற்றும் இணைவது, மேலே கீழே செல்வது ஆகியவற்றின் காரணமாக நிலநடுக்கம் ஏற்படுகிறது என அறிவியல் கூறுகிறது. இன்றைக்கும் கடலுக்கு அடியில் இதுபோன்ற பூமி அதிர்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.நிலத்தில் நடக்கும் அதிர்ச்சிகள் மட்டும்தான் நமக்குத் தெரியவருகின்றன. இது மாதிரியான தட்டுக்கள் பிரிதல், பூகம்பங்கள், ஆழிப்பேரலைகள் காரணமாக குமரிக்கண்டம் எனும் நிலப்பரப்பு பேரழிவிற்கு உள்ளானது. அந்த அழிவின்போது சில பகுதிகள் பூமிக்குள் அமிழ்ந்துபோயின; சில பகுதிகள் தனித்தனியே விலகிச் சென்றன. இன்றைய ஆஸ்திரேலியா குமரிக்கண்டத்திலிருந்து உடைந்து தெற்கு நோக்கிச் சென்ற நிலப்பகுதி என்றும் இன்றைய ஆப்ரிக்கா குமரிக்கண்டத்திலிருந்து உடைந்து மேற்கு நோக்கிச் சென்ற நிலப்பகுதி என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்களின் நெற்றியில் சிறிய புடைப்பு இருந்தது குறித்தும் அதை சிவனின் நெற்றிக்கண்ணோடு தொடர்புபடுத்தி முன்னரே பேசியிருக்கிறேன். தமிழர்களின் ஆன்மீகத்தைப் பொருத்தமட்டில் சிவனை வழிபடும் சைவமும் திருமாலை வழிபடும் மாலியமும் முதன்மையானவையாக இருக்கின்றன. குமரிக்கண்ட அழிவு என்பது ஒரே கட்டத்தில் நிகழ்ந்தது அல்ல. பல்வேறு காலங்களில் பல கட்டங்களாக பல்வேறு காரணங்களால் நிகழ்ந்ததுதான் குமரிக்கண்ட அழிவு. 

 

முதல்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் என்று பள்ளிக் காலங்களில் படித்திருப்போம். இப்படிச் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடங்களுக்கு மதுரை என்று பெயர். குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் நிலவரலாறு தொடர்பான விஷயங்களை வைத்துப் பார்த்தால், முதல் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த முதல் மதுரை ஆஸ்திரேலியாவிற்கு வடக்கே கடலுக்குள் மூழ்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த மதுரை அழிந்தவுடன் இங்கு இரண்டாம் மதுரை உருவாகிறது. காலப்போக்கில் ஏற்பட்ட நிலவியல் மாற்றம் காரணமாக அதுவும் அழிவுக்கு உள்ளானவுடன் மூன்றாவது மதுரை உருவாகிறது. அப்படி என்றால் மதுரை என்ற சொல்லுக்கு எவ்வளவு நீண்ட வரலாறு இருக்கிறது என்று பாருங்கள். 

 

ஹாம்முராபி என்பவர்தான் முதல்முதலாக மக்கள் ஒன்றாக கூடி வாழ்வதற்கான வழியைச் செய்துகொடுத்தார் என இன்றைய மேற்கத்திய வரலாறு கூறுகிறது. அவர் மக்களைக் கூடி வாழவைத்த இடத்திற்கு ஊரி என்று பெயர். ஊரி என்றால் மக்கள் கூடி வாழும் இடம் எனப் பொருள். இந்த ஊரி என்ற சொல் ஊர் என்ற தமிழ் சொல்லில் இருந்துதான் உருவானது என அறிஞர்கள் கூறுகிறார்கள். தமிழிலிருந்து வந்த சில மொழிகளில் ஊர் என்ற வார்த்தை இருக்கலாம். ஆனால், அதற்கான வேர் தமிழ்தான். மனிதன் முதன்முதலில் சேர்ந்து வாழ்ந்தபோது அந்த இடத்திற்க்கு வைத்த பெயர் ஊர். அந்த ஊர் என்ற பெயரே நம்முடைய மொழியில்தான் உள்ளது என்றால் இந்த மொழி எவ்வளவு மூத்த மொழி என்பதை அதன் மூலம் நாம் அறியலாம்.

 

 

Next Story

'தமிழ்நாட்டையும் இலங்கையையும் பிரித்த தொன்மையான ஆறு...' செந்தில்குமரன் பகிரும் தமிழ் வரலாறு!

Published on 19/08/2021 | Edited on 21/09/2021

 

Senthilkumaran

 

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் 360 யூட்யூப் சேனலில் 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், குமரிக்கண்டம் பற்றி அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

குமரிக்கண்டம் பற்றிய பல்வேறு விஷயங்கள் குறித்து கடந்த பகுதிகளில் பார்த்தோம். குமரிக்கண்டம் குறித்த மேலைநாட்டினரின் பார்வை என்ன என்பது பற்றியும் பார்த்திருந்தோம். மேற்கத்திய அறிஞர்கள் அதை லெமூரியா கண்டம் என அழைக்கின்றனர். அந்த நிலப்பகுதியில் காலங்காலமாக வாழ்ந்த மக்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் அதைக் குமரிக்கண்டம் எனக் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக, ராமசாமி என்ற ஒருவர் காய்கறி வியாபாரம் செய்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரை ராமசாமி என்றும் குறிப்பிடலாம். காய்கறி வியாபாரி என்றும் குறிப்பிடலாம். காய்கறி வியாபாரி என்று அவரைக் குறிப்பிடுவதால் அவர் ராமசாமி இல்லை என்றாகிவிடாது. ஸ்காட் எலியட், ருடால்ஃப் டைசன், லாசன் கார்வே ஆகிய மேற்கத்திய அறிஞர்கள் லெமூரியா கண்டத்தின் காலம் என்பது 2 லட்சம் ஆண்டுகளில் இருந்து 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம்வரை எனக் கணித்துள்ளனர். இன்றைக்கு ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ள புதைப்பொருட்களை முறையான தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தினால் இதை உறுதிசெய்யலாம். குமரிக்கண்டம் இருந்ததற்கான ஆதாரங்கள் 10ஆம் நூற்றாண்டுவரை நம்மிடம் இருந்துள்ளன. 

 

மாயன்கள் பாணியில் தஞ்சை பெரிய கோவில் கட்டுமானம் அமைக்கப்பட்டிருப்பது, கல்லணை கட்டுமானம் ஆகியவற்றை உதாரணமாக வைத்து லெமூரியா கண்டம்தான் குமரிக்கண்டம் என கடந்த பகுதிகளில் ஏற்கனவே விரிவாகப் பேசியிருந்தேன். லெமூரியா கண்டம் பற்றிய விஷயங்களைத் தமிழ்ச் சங்கங்களோடு பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. முதல் தமிழ்ச் சங்கம் 4,400 ஆண்டுகள் இருந்திருக்கிறது. அதில், 60க்கும் மேற்பட்ட அரசர்கள் இருந்ததாகக் கூறுகிறார்கள். முதல் சங்கம் இருந்த இடம் முதல் மதுரை. அது தெற்குப் பகுதியில் இருந்தது. தெற்கை எமதிசை என்று கூறும் பழக்கம் ஆரிய மரபில் உள்ளது. அதை நம்முடைய பழக்கத்திலும் இன்று பயன்படுத்துகிறோம். தென்திசை மிகப்பெரிய அழிவை எதிர்கொண்ட திசை என்பதால் அதை எமதிசை என்று அழைக்கின்றனர். தென்திசையில் இருந்த முதல் மதுரை கடற்கோளால் அழிவுக்கு உள்ளான பிறகு, அதிலிருந்து தப்பிய பகுதியை நோக்கி மக்கள் இடம்பெயர ஆரம்பிக்கின்றனர். இடப்பெயர்வு அடைந்த அவர்கள் மீண்டும் வாழ்க்கையைத் தொடங்க ஆரம்பிக்கும்போது இரண்டாம் தமிழ்ச்சங்கம் கபாடபுரம் உருவாகிறது. காலப்போக்கில் அந்த நிலமும் அழிவுக்கு உள்ளாகிறது. அங்கிருந்து உயிர் பிழைத்த மக்கள், அடுத்த இடத்தை நோக்கி நகர ஆரம்பிக்கின்றனர். மணவூர் என்ற இடத்தில் மூன்றாம் தமிழ்ச்சங்கம் இருந்ததாக ஒரு குறிப்பு உள்ளது. குமரிக்கண்ட அழிவு என்பது ஒரே நாளில் நிகழ்ந்ததல்ல. படிப்படியாக காலப்போக்கில் நிகழ்ந்த அழிவுதான் குமரிக்கண்ட அழிவு. 

 

கபாடபுரம் பற்றிய குறிப்புகள் ராமாயணத்திலும் மணவூர் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் உள்ளன. கிரேக்க அறிஞர் மெகஸ்தனிஸ் இலங்கையை தாப்ராபரணே எனக் குறிப்பிட்டுள்ளார். இன்றைக்கு நெல்லையில் தாமிரபரணி என்று நதி உள்ளது. ஆதியில் தாமிரபரணி என்ற பெயரில் மிகப்பெரிய நதி வேறொரு இடத்தில் இருந்திருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டையும் இலங்கையையும் ஒரு நதிதான் பிரித்துள்ளது. அந்த நதி தாமிரபரணி என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. நிலம் இறங்க இறங்க அந்த நதிதான் கடலாக மாற்றம் கண்டிருக்க வேண்டும். இன்று கடலாக உள்ள பகுதிகள் அன்று நிலப்பரப்பாக இருந்தது பற்றியும் இன்று இமயமலையாக உள்ள பகுதிகள் ஒருகாலத்தில் கடலாக இருந்தது குறித்தும் முன்னரே நாம் பேசியிருக்கிறோம். 

 

சிலப்பதிகாரத்தில் மாடலன் என்ற கதாபாத்திரம் குமரி ஆற்றில் நீராடினான் என்று ஓரிடத்தில் உள்ளது. கோவலன் இறந்த பிறகு, அதே இடம் குமரிக்கடல் என அடையாளப்படுத்தப்படுகிறது. கால ஓட்டத்தில் நிலம் இவ்வாறு மாற்றமடைவதை இளங்கோவடிகள் கதையின் போக்கிலேயே அழகாகப் பதிவு செய்துள்ளார்.

 

 

Next Story

லட்சக்கணக்கில் பணம் இருந்த அறையில் உதவி இயக்குநரை நம்பி விட்டுச் சென்றது ஏன்? இயக்குநர் கே. பாக்யராஜ் கூறிய காரணம்!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021

 

Senthilkumaran

 

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் ‘சினிமா டைரீஸ்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் அறியாத பக்கங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இயக்குநர் கே. பாக்யராஜ் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

கடந்த தலைமுறையினருக்குத் திரைக்கதை என்றால் கே. பாக்யராஜின் பெயர்தான் நினைவுக்கு வரும். பாக்யராஜிற்கு முந்தைய காலகட்டத்தில் சிறந்த திரைக்கதை கொண்ட படங்கள் பல இருந்தாலும், அந்தத் திரைக்கதை ஆசிரியர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது இல்லை. காரணம், நடிகர்கள், கவிஞர்கள், பாடகர்கள் மட்டுமே கொண்டாடப்பட்ட காலம் அது. பாரதிராஜா வருகைக்குப் பின்னர்தான் இயக்குநரை வெகுஜன ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். அதற்கு முன்பு, பத்திரிகைகள், சினிமா விமர்சகர்கள் இயக்குநரைக் குறிப்பிட்டுப் பேசினாலும், ரசிகர்களால் இயக்குநர் கொண்டாடப்பட ஆரம்பித்தது பாரதிராஜா வருகைக்குப் பின்னரே. அதேபோல திரைக்கதை என்ற விஷயம் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியதற்கு முக்கிய காரணம், திரைக்கதை மன்னன் பாக்யராஜ்தான். ஒருமுறை தூர்தர்ஷன் பேட்டியில் பிரபல இந்தி இயக்குநர் மிர்னால் சென், திரைக்கதைப் பற்றி பேசும்போது பாக்யராஜ் பெயரைக் குறிப்பிட்டு வெகுவாகப் பாராட்டினார். வடக்கத்திய சினிமாக்காரர்களுக்குத் தமிழ் சினிமா பற்றி இரண்டாம் தர பார்வை இருந்த காலகட்டத்தில்கூட, அவர்கள் பாக்யராஜின் திரைக்கதையைக் கண்டு வியந்தனர்.

 

இயக்குநர் மணிவண்ணன் தன்னுடைய சிறு வயதில் பாரதிராஜாவின் படங்களைப் பார்த்துவிட்டு ‘கிணற்றுத்தவளை’ என்ற பெயரில் பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதி அனுப்புவாராம். அதைப் படித்துவிட்டு பாரதிராஜா மணிவண்ணனை உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்டார். நானும் இந்த முறையைப் பின்பற்றி பாக்யராஜிடம் உதவி இயக்குநராக சேரலாம் என நினைத்தேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ‘முந்தானை முடிச்சு’ படம் வெளியானது. அந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி என்னை வெகுவாக ஈர்த்தது. படத்தின் டைட்டில் தொடங்கி கடைசி காட்சிவரை படத்தில் என்னவெல்லாம் ரசிக்கும்படி இருந்தது என விரிவாக எழுதி அவருக்கு அனுப்பினேன். தொடர்ந்து அதுபோல ஒவ்வொரு படத்திற்கும் அனுப்ப ஆரம்பித்தேன். 

 

இதற்கு சில ஆண்டுகள் முன்பு, தேவி வார இதழில் கேட்கப்படும் கேள்விக்கு நாம் பதில் அனுப்ப வேண்டும். அதில் சிறந்த பதிலை பாக்யராஜ் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார். அதை, பத்திரிகையில் நம் பெயருடன் பிரசுரிப்பார்கள். ‘தாவணிக் கனவுகள்’ படம் ஓடாததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு நான் ஒரு பதில் எழுதி அனுப்பியிருந்தேன். நான் எழுதிய பதில் அவருக்குப் பிடித்திருந்ததால் என்னுடைய பதிலை சிறந்த பதிலாகத் தேர்ந்தெடுத்தார். மேலும், தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு கடிதமும் எழுதினார். அக்கடிதத்தில், என்னுடைய முகவரியைக் குறிப்பிட்டு இங்கு வசிக்கும் நீங்கள் இன்னும் சினிமா துறைக்கு வந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுடைய பார்வை சிறப்பாக இருக்கிறது" எனப் பாராட்டியிருந்தார். இது கொடுத்த உத்வேகம்தான் தொடர்ந்து கடிதம் எழுத என்னை ஊக்கப்படுத்தியது.

 

அப்படியே நாட்கள் சென்றன. ‘எங்க சின்ன ராசா’ திரைப்படம் 1987இல் வெளியானது. அப்படம் குறித்து நான் எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு எனக்கு ஒரு பதில் கடிதம் பாக்யராஜ் அனுப்பினார். காவிரி ராஜா என்ற புனைபெயரில்தான் பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன். பாக்யராஜ் கைப்பட எழுதிய கடிதத்தில் 'அன்பு காவிரி ராஜா, உங்கள் கடிதம் கண்டேன். உதவி இயக்குநராக ஆசை இருப்பது தெரிகிறது. நேரில் பேசி நிர்ணயிப்போம். இப்படிக்கு காவிரி குளிரில் சந்தோசமாக நனைந்து நடுங்கி உங்க ஆளு கே. பாக்யராஜ்' என எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. பின், பாக்யராஜை சந்திப்பதற்காகச் சென்னை கிளம்பி வந்தேன். நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர் வீட்டிற்கு வெளியே பெரிய கும்பல் நிற்கிறது. அந்த சமயத்தில் முன்னணி இயக்குநர் அந்தஸ்தில் பாக்யராஜ் இருந்ததால், அவரிடம் எப்படியாவது உதவி இயக்குநராகவிட வேண்டும், அவரிடம் எப்படியாவது தன்னிடம் உள்ள கதையைச் சொல்லிவிட வேண்டும் என்று நூற்றுக்கணக்கான நபர்கள் அவர் வீட்டிற்கு வெளியே எப்போதும் இருப்பார்கள். நான் பாக்யராஜ் கடிதம் மூலம் வரச் சொன்ன விஷயத்தைக் கூறியதும் என்னை உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்தனர். பின், பாக்யராஜுடன் சந்திப்பு நடந்தது. உதவி இயக்குநராக சேர்த்துக்கொள்வதாகக் கூறிய அவர், தொடர்ந்து தொடர்பிலேயே இருங்கள் என்றார். 

 

பிறகு, ஒரு ஓட்டலில் கதை விவாதத்தில் இருந்த பாக்யராஜை சந்தித்தேன். நான் மாமல்லபுரத்திலுள்ள என் நண்பனுடன் தங்கியிருந்தேன். அந்த விஷயம் தெரிந்ததும் அந்த ஓட்டலிலேயே தங்கச் சொல்லிவிட்டார். அவர்கள் அனைவரும் அன்று இரவு சென்றுவிட்டனர். நான் மட்டும் அந்த அறையில் இருந்தேன். பழைய டேப் ரெக்கார்டர் ஒன்று அங்கிருந்தது. பாடல் கேட்கும்போது அதிலுள்ள வரி மூலம் சில நேரங்களில் கதை கருக்கள் அவருக்கு கிடைக்கும். அதனால் அடிக்கடி பாடல் கேட்பார். அங்கு ஒரு பை இருந்தது. என் கால் தடுக்கி அந்தப் பையிலிருந்த பணம் கொட்டுகிறது. எனக்கு ஒரே ஆச்சர்யம். மறுநாள் அனைவரும் வருகின்றனர். முதலில் வந்த உதவியாளர், ‘நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க’ என்று என்னிடம் கேட்க, ‘பாக்யராஜ் சார்தான் என்னை இங்கேயே தங்கிக்கொள்ளச் சொன்னார்’ என்று அவரிடம் விவரத்தைக் கூறினேன். சிறிது நேரம் கழித்து பாக்யராஜ் வருகிறார். அவரிடம், ‘என்ன சார் கதவு திறந்து கிடக்கு... பணமெல்லாம் இங்க இருக்கு... அந்தப் பையனை வேற இங்க விட்டுட்டுப் போயிருக்கீங்க’ என உதவியாளர் கேட்கிறார். அதற்கு பாக்யராஜ், ‘அவன் உதவி இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் வந்திருக்கிறான். அந்த ஆசை வந்துவிட்டால் கண் முன்னால் கோடி ரூபாய் இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்று தோனாது’ என்றார். பாக்யராஜின் இந்த வார்த்தையை இன்றும் என்னால் மறக்க முடியாது.