ADVERTISEMENT

அறுபடை வீட்டை மனதில் வைத்து 'ஆறு மனமே ஆறு...' பாடலை எழுதிய கண்ணதாசன்!

01:41 PM Jun 08, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் ராஜேஷ், சினிமா, இலக்கியம், ஆன்மிகம், சினிமா பிரபலங்களுடனான அவருடைய நெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், கவிஞர் கண்ணதாசனின் 'ஆறு மனமே ஆறு...' என்ற பாடல் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

‘ஆண்டவன் கட்டளை’ என்ற படத்தில் இடம்பெற்ற 'ஆறு மனமே ஆறு...' என்ற பாடலைக் கவிஞர் கண்ணதாசன் மிக அற்புதமாக எழுதியிருப்பார். அந்தப் பாடலுக்கு சிந்து பைரவி ராகத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். இயக்குநர் கே. சங்கர் பாடலை மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். கிறிஸ்தவ மதத்தில் மோசஸ் எழுதிய கட்டளைகள் என பத்து கட்டளைகள் உண்டு. இதை முறையாகக் கடைப்பிடிப்பவரே உண்மையான கிறிஸ்தவர். அதேபோல கண்ணதாசன் ஆறு கட்டளைகளை உருவாக்கியிருந்தார். அந்த ஆறு கட்டளைகள்தான் ‘ஆறு மனமே ஆறு...’ என்ற பாடலில் இடம்பெற்றிருக்கும். அந்தப் பாடலை முடிக்கும்போதுகூட ‘ஆறு...’ என்று இழுப்பார்.

'ஆறு மனமே ஆறு ஆண்டவன் கட்டளை ஆறு. சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு...'. எல்லா மனிதர்களும் சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றால் கீழ்காணும் ஆறு கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும் என்கிறார் கண்ணதாசன். 'ஒன்றே சொல்வார், ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி'. தான் சொல்லியடி எவனொருவன் நடந்துகொள்கிறானோ அவனது மனதில் அமைதி குடிகொள்ளும். ஒன்றைக் கூறிவிட்டு அதற்கு மாறாக நடந்துகொண்டால் உலகின் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். அது நம் வாழ்க்கையையே சிக்கலானதாக மாற்றிவிடும். அடுத்த வரியில் 'இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...' என்கிறார். இன்பமாக இருக்கும் விஷயங்களிலும் துன்பம் இருக்கும். துன்பமாக இருக்கும் விஷயங்களிலும் இன்பம் இருக்கும். உதாரணமாக பிரசவ நேரத்தின்போது பிரசவவலி காரணமாக மிகுந்த துன்பத்தை பெண் எதிர்கொள்வார். அதுவே, பிறந்த குழந்தையின் முகத்தைப் பார்க்கும்போது அந்த துன்பமே தாய்க்கு இன்பமாக மாறிவிடும். இதுதான் இறைவன் வகுத்த நியதி. 'சொல்லுக்கு செய்கை பொன்னாகும், வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்... இந்த இரண்டு கட்டளைகள் அறிந்த மனதில் எல்லா நன்மையையும் உண்டாகும்...'. இந்த இரு கட்டளைகளையும் ஒருவர் பின்பற்ற ஆரம்பித்தால் அவர் மனதில் எப்போதும் நன்மை குடிகொள்ளும்.

'உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்... நிலை உயரும்போது பணிவுகொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்...' உண்மையான விஷயங்களை மட்டுமே பேசி பிறருக்கு நன்மை செய்தால் உலகம் நம்மை பாராட்டும். நம்முடைய நிலை உயரும்போது பிறரை மதிக்கக் கற்றுக்கொண்டால் பிறர் நம்மை கையெடுத்து வணங்குவார்கள். சிலர், வாழ்க்கையில் உயர்வான நிலையை அடைந்த பிறகு மற்றவர்களை மதிக்கமாட்டார்கள். 'உண்மை என்பது அன்பாகும், பெரும் பணிவு என்பது பண்பாகும்... இந்த நான்கு கட்டளைகளை அறிந்த மனதில் எல்லா நன்மையையும் உண்டாகும்...' தனிப்பட்ட முறையில் இந்த வரிகளை, என்னுடைய வாழ்க்கையை செதுக்கிய வரிகளாகத்தான் பார்க்கிறேன்.

'ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்... அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்...' ஆசை, கோபம் மற்றும் களவு எண்ணம்கொண்ட ஒருவனைப் பேசத் தெரிந்த மிருகம் என்கிறார் கண்ணதாசன். அவர், இவையெல்லாம் மனிதனுக்கே உண்டான குணங்கள் கிடையாது என்கிறார். அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் என்பது எவ்வளவு அழகான வரி பாருங்கள். 'இதில் மிருகம் என்பது கள்ளமனம், உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்...' குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்திலே என்பார்கள். நாம் குழந்தையை அழைக்கும்போது இதயத்தில் உண்மையான அன்போடுதான் அழைக்கிறார்களா என்பதை அந்தக் குழந்தை உணரும் என்பார்கள். உண்மையான அன்பின்றி, தெரிந்தவர் குழந்தை, முதலாளியின் வீட்டு குழந்தை என்ற காரணத்திற்காக வெறுமனே கொஞ்ச நினைத்து குழந்தையை அழைத்தால் குழந்தை அருகிலேயே வராது. தெய்வமும் அதுபோல்தான். கோவிலுக்குச் சென்றுவிட்டு எல்லா அயோக்கியத்தனமும் செய்தால், தெய்வம் நம்மிடத்தில் வராது. ஒன்றுக்கொன்று முரண்பாடான விஷயங்களைச் செய்யும்போது நமக்குள் எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாகிவிடும். நம்மைச் சுற்றி எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாகும்போது பிரபஞ்ச சக்தி நம்மை நெருங்காது. கடைசியாக, 'இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்...' என முடித்திருப்பார். வெள்ளை மனம் என்றால் போலித்தனமில்லாத மனம் என்று பொருள். இந்த ஆறு கட்டளைகளைப் பின்பற்றி ஒருவன் வாழ்ந்தால் அவன் முருகனைக் கண்டான் என்கிறார் கண்ணதாசன். முருகனின் அறுபடை வீடுகளை வைத்துதான் இந்த ஆறு கட்டளைகளைக் கண்ணதாசன் எழுதினார். முதல் நான்கு கட்டளைகளைப் பின்பற்றினால் நன்மை வந்து சேரும். அதுவே ஆறு கட்டளைகளையும் பின்பற்றினால் தெய்வம் வாழும் வீடாக நம் மனது இருக்கும் என்கிறார் கண்ணதாசன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT