
தன்னுடைய தனித்துவமான நடிப்பினால் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மேடை நாடக நடிகராக அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் இவர் செய்த சாதனைகள் அளப்பரியது. பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, செவாலியே விருது, தாதா சாகேப் பால்கே விருது என அவர் வென்ற விருதுகள் ஏராளம். சிவாஜி கணேசனுடனான தன்னுடைய அனுபவங்களை நடிகர் ராஜேஷ் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
"ஒரு பொருள் மனிதனுடைய அன்பை வெளிப்படுத்தும் என்பது அரிஸ்டாட்டிலின் கூற்று. நான் ஒரு முறை சிவாஜி கணேசனிடம் "அண்ணே உங்க நினைவாக ஒரு பொருள் கொடுங்கள்" என்றேன். எங்கிட்ட என்ன இருக்கு? இந்தப் பழைய வேட்டிதான் இருக்கு... வேண்டுமென்றால் வாங்கிவிட்டுப் போ என்றார். நான் எம்.ஜி.ஆரிடம் இதே போல் கேட்டு, அவர் உடற்பயிற்சி செய்யும் ஒரு கருவியைக் கொடுத்தார். அதை சிவாஜி அண்ணனிடம் சொன்னேன். "அவர் உடற்பயிற்சி பண்ணுவார், கொடுத்திருக்கிறார். எங்கிட்ட என்ன இருக்கு?" என்றார். நான் அடுத்து கேட்கவில்லை. ராம் என்ற பேராசிரியர் ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் உடனே "நீங்க தொடர்ந்து கேட்கிறீங்களானு அண்ணன் உங்களை சோதிக்கிறார்... நீங்க விடாமல் கேளுங்கள்" என்றார். "அண்ணே கொடுக்குறேன்னு சொன்னீங்க" என அவரை பார்க்கிற இடங்களில் எல்லாம் கேட்பேன். "நான் எப்போது சொன்னேன்?" என்பார். பின் ஒரு நாள் வீட்டிற்கு அழைத்தார். மறுநாள் வீட்டிற்கு போனேன். 1955ல் வாங்கியது என்று சொல்லி அவருடைய வாட்ச் ஒன்றைக் கொடுத்தார். அதுவொரு நெகிழ்வான தருணம்.

சிவாஜி அண்ணனுக்கு அசாத்தியமான நினைவாற்றல் உண்டு. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் நடிப்பதற்காக 65 பக்கமுள்ள வசனத்தை வெறும் இரண்டு மணிநேரங்களில் மனப்பாடம் செய்துவிட்டார். நம்முடைய நடையிலேயே எல்லாத்தையும் புரிந்து கொள்வார். படிப்பு குறைவாக இருந்தாலும் அவருடைய அனுபவம் மிகவும் அதிகம். என்னுடைய வெற்றி மற்றும் சமூகத்தில் எனக்கு இருக்கும் மரியாதை எல்லாம் சிவாஜி அண்ணனை நான் பின்பற்றியதால் கிடைத்த பரிசு என்றுதான் நினைக்கிறேன். ஏதாவது நாளிதழில் என்னுடைய பேச்சுக்கள் வந்திருந்தால் அடுத்த முறை பார்க்கும் போது அதை நினைவில் வைத்து சொல்லுவார். அதுவெல்லாம் ரொம்ப மகிழ்ச்சிகரமான ஒன்றாக இருக்கும்.
அவர் உடல்நிலை சரியில்லாத போது வீட்டிற்கு பார்க்கச் சென்றேன். அவர் அறைக்குள் நுழைந்தவுடன் 'அழக் கூடாது' என்று சைகையில் சொன்னார். 'நீயும் உன் பொண்டாட்டி பிள்ளைகளும் நன்றாக இருப்பீங்க' என்றார். எனக்கு கண்ணெல்லாம் கலங்கிவிட்டது. வாழ்வின் விளிம்பு நிலைக்கு வந்துவிட்டார் என்பதை புரிந்து கொண்டேன். அவருடைய விருந்தோம்பல் பண்பு அவ்வளவு சிறப்பானதாக இருக்கும். அவர் இறப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் சந்தித்தேன். அப்போது கூட முகமலர்ச்சியுடன் வரவேற்றார். அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு உயரத்தில் இருந்தபோதும் தன்னைத்தேடி ஒருவர் வருகிறார் என்றால் அவரை மதிக்கக்கூடிய சுபாவம் நிறைந்தவர் சிவாஜி கணேசன்."