ADVERTISEMENT

"கார்த்திக் நரேன் சொன்ன அந்த வார்த்தை எல்லா தயக்கத்தையும் உடைத்தது" - இளம் நடிகர் பிரகாஷ் ராகவன் பேட்டி 

06:55 PM Aug 12, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

துருவங்கள் பதினாறு படத்தில் கௌதம் கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் பிரபலமடைந்த பிரகாஷ் ராகவன், அண்மையில் வெளியான குருதி ஆட்டம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நக்கீரன் ஸ்டூடியோவுடனான சந்திப்பில் தன்னுடைய திரையுலகப் பயணம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

”எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வருகிறோம் எனும் போது நிறைய கடின உழைப்பைக் கொடுக்க வேண்டியிருக்கும். யார் எப்போது கூகுள் செய்து பார்த்தாலும் அவர்களுக்கு தெரிந்த படமாக என்னுடைய முதல் படம் இருக்க வேண்டும் என்று கவனமாக இருந்தேன். சினிமாவில் வாய்ப்பு தேடிய காலங்களில் நான் நினைத்துக்கொண்டதும் அதுதான். அதேபோல நான் நடித்த முதல் படமான துருவங்கள் பதினாறு எனக்கு நல்ல அடையாளத்தையும் கொடுத்தது.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடுவது என்பது சாதாரண விஷயமில்லை. ஒரு படம் பற்றி கேள்விப்பட்டு அந்த இயக்குநரின் ஆபிஸ் தேடிச் சென்றால் அந்தப் படம் முடியும் நிலையில் இருக்கும், சில நேரங்களில் முடிந்தும் கூட இருக்கும். காஸ்டிங் டைரக்டர் என்ற விஷயம் இப்போது தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாக ஆரம்பித்துள்ளது. நான் 2013ஆம் ஆண்டிலிருந்தே வாய்ப்புத் தேட ஆரம்பித்துவிட்டதால் ஒவ்வொரு ஆபிஸாக தேடிப்போவேன். ஷாட் ஃபிலிம்களை தேடித்தேடி பார்த்து அதை இயக்கியவர்களுடன் ஃபேஸ்புக்கில் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வேன். அப்படித்தான் ஸ்ரீ கணேஷ், மடோன் அஸ்வின் தொடர்பு கிடைத்தது.

ஓகே கண்மனி படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக வருவேன். அப்போது மணிரத்னம் சாருடன் எடுத்த போட்டோவை பார்த்துதான் துருவங்கள் பதினாறு வாய்ப்பு கிடைத்தது. முதல் ஷூட்டிங்கில் ரொம்பவும் பதட்டமாக இருந்தது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, சொதப்பிடக்கூடாது என்று கவனமாக இருந்தேன். முதல்நாள் ஷூட் முடிந்தவுடன் நம்ம கௌதம் நமக்கு கிடைச்சிட்டாரு, நான் என்ன எதிர்பார்த்தேனோ அதை அவர் கரெக்டா பண்றாருனு கார்த்திக் நரேன் அவர் அஸிஸ்டண்ட்கிட்ட சொன்னாரு. அதை கேட்டதும் பதட்டம், தயக்கமெல்லாம் உடைந்து விட்டது.

இயக்குநர் ஸ்ரீ கணேஷும் அவருக்கு என்ன வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். ஒரு காட்சியில் புருவம் தூக்கியிருக்க கூடாது என்றால் தூக்கியிருக்க கூடாது என்பதில் கவனமாக இருப்பார். குருதி ஆட்டம் படத்தில் அறிவு கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது ரொம்பவும் மகிழ்ச்சியைத் தந்தது. அந்தக் கதாபாத்திரத்தை ஸ்ரீ கணேஷ் சொன்னபோதே ரொம்பவும் பிடித்திருந்தது. ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று நினைத்து ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்”.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT