ADVERTISEMENT

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #2

09:45 PM Aug 23, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அத்தியாயம் -2

ஒரு வார விடுமுறை சடுதியில் கரைய கங்காதரன், மறுநாள் புறப்படுவதற்காக உடைகளை சூட்கேஸில் அடுக்கிக் கொண்டிருந்தான். "ரொம்ப முடியலைனா.... யாரையாவது கூப்பிட்டு துணைக்கு வச்சுக்கோ கற்பகம். யாரை அழைப்பதாக உத்தேசம்... ? இந்நேரம் முடிவு பண்ணியிருப்பியே.."

"வைதேகி அக்காவைத்தான்" என்றவளை முறைத்துப் பார்த்து விட்டு, "ஏன்டி... பிள்ளையே பெத்துக்காதவள் உனக்கு எந்த வகையில் உதவ முடியும்னு நினைக்கிறே... புள்ளக்கு உரமருந்து உரசிக் கொடுக்கவாவது தெரியுமா அவளுக்கு....? தவிர அவளைதான் முதலில் பெண் பார்க்க போனேன். அக்கா அவளைக் கருப்பா இருக்கானு வேண்டாம்னு சொல்லிட்டாங்க.. என்னைவிட இரண்டு வயசு பெரியவளா இருந்ததால் நானும் மறுத்துட்டேன். அவளைப் போய் கூப்பிடனும்னு சொல்றே... நம்மக் கல்யாணத்துக்கு வந்த போதே அவள் கண்ணில் பொறாமை தெரிஞ்சுது.”

"வக்கைணையாகப் பேசுவீங்களே... எங்க அக்கா வேணாம்னா... உங்க அக்காவை வரச் சொல்லுங்க. நாலு பிள்ளையை பெத்தவதானே... மகராசி வந்தா இருந்த இடத்தை விட்டு நகர மாட்டாங்க. காபி முதற்கொண்டு ரூமுக்கு போய் கொடுக்கனும்! எனக்கு என்ன புரயோஜனம்...? போகும் போது குறைபட்டுதான் போவாங்க."

" சரி சரி ஆரம்பிக்காதே..."

" நாற்பது வயசில் இரண்டாவது பிள்ளையைப் பெத்துக்கனும்னு என் தலையில் எழுதியிருக்கு. எங்கம்மா இருக்கும் போதே இந்த சனியன் பிறந்து தொலைச்சுருக்கக் கூடாதா...?

" அதை ஏன்டி திட்றே... பாவம்! "

" ஆமாம்! உங்களுக்குப் பாவம் பார்த்ததுக்குத்தான் இந்த நிலைமை எனக்கு. வயதுக்கு வந்தப் பெண் வீட்டில் இருக்க விவஸ்தை இல்லாமல் ஆட்டம் போடுறது நீங்க. மாட்டிக்கிட்டு முழிக்கிறது நானு.."

" உஸ்ஸ்ஸ்.... கத்தாதேடி." என்று மனைவியை அடக்கி விட்டு, மகள் என்ன செய்கிறாள் என்று அறைக்குள் எட்டிப் பார்த்தான். புத்தகம் விரிந்த படி மேலே கிடக்க, ஈசி சேரில் சாய்ந்தவாறு உறங்கிக் கொண்டிருந்தாள். "நீ வெடுக்கு வெடுக்குனு பேசாதே கற்பகம். மாலாவுக்கு ஏதோ சக்தி இருக்கு. இல்லேனா அப்பா கனவில் வந்திருப்பாரா.. ஏதோ சொல்ல வந்தாள்! நீதான் ஏடாகூடமாய் பேசி அவளை தடுத்துட்ட. அது என்னனு கேட்டுத் தெரிஞ்சுக்கோ."

" உங்க வகையறா அமுக்குளித்தனம் அப்படியே வந்திருக்கு. வாயைத் திறக்க மாட்டேளே... அப்படியே உங்க அக்காதான்! "

"எங்க அக்காவை ஏன்டி கரிச்சுக் கொட்ற... நாளைக்கு சம்பந்தியாகப் போறவள். மரியாதையா பேசக் கத்துக்க."

" வீணா கனவு கணாமல் நடக்கிறதை பேசுங்க. இரண்டும் எலியும் பூனையுமா சண்டை போடுதுங்க."

"அதுதான்டி அட்ராக்‌ஷன்! இது கூடத் தெரியாத மக்கா இருக்கியே..."

"ஆ.... அது தெரிஞ்சிருந்தா நான் ஏன் இப்படி இருக்கேன்...?! குனிஞ்ச தலை நிமிராமல் காலேஜ் போவேன். நான் மட்டும் படிக்காதவளா இருந்திருந்தால்... உங்க குடும்பம் மொத்தமும் என்னை பேப்பர் மாதிரி கசக்கி மூலையில் உட்கார வச்சுருக்கும்!"

”ஹா... ஹா... ஹா...” என்று கங்காதரன் சிரிக்கும் சத்தம் கேட்டதும் விழித்துக் கொண்ட மாலா, டைனிங் ஹாலில் உள்ள சேரில் வந்து உட்கார்ந்தாள்.

" என்ன டா மா... நாளை அப்பா புறப்படுறேன். அம்மாவை பத்திரமா பார்த்துக்கனும்! "என்றான் கங்காதரன்.

" சரி பா. ஆனால்... வைதேகி பெரியம்மா இங்கு வரக் கூடாது. எனக்குப் பிடிக்கலை."

"வாய் மேலேயே போடுவேன். இந்த நாட்டாமை எல்லாம் என்கிட்ட நடக்காது" என்றாள் கற்பகம்.

"அம்மா....எனக்கு மனசுக்கு சரியாப் படலை."

"என்னடி சரியா படலை....? பெரிய இவளா நீ.....? எதையாவது உளறுவதே வேலையாப் பேச்சு."

"நான் ஒன்னும் உளறலை. என் மனசுக்குப் பட்டதை சொன்னேன். கேட்கலைனா போ. உனக்குதான் கஷ்டம்! ஞாபகம் வச்சுக்கோ..."

" அதை நான் பார்த்துக்கிறேன். நீ உன் வேலையை மட்டும் பாரு. வயசுக்கு மீறின போச்சு பேசினே... தொலைச்சுடுவேன் தொலைச்சு." என்று சீறினாள் கற்பகம். யார் பக்கம் பேசினாலும் தனக்குதான் சேதாரம் என்றுணர்ந்த கங்காதரன்...

"இரண்டு பேரும் அவங்க அவங்க வேலையைப் பாருங்க. அம்மாவும், பெண்ணும் மாமியார், மருமகள் மாதிரி வாக்குவாதம் செய்வது நல்லாவா இருக்கு... கற்பகம் நீ கொஞ்சம் அவளை திட்டாமல் இருக்கலாம்ல"...

"என்னைதானே அடக்குவீங்க. பெண்ணை அடக்கி வைங்க! பெரியவங்க விசயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாதுனு சொல்லிட்டுப் போங்க."

"நல்லது சொன்னா பிடிக்காது மா உனக்கு. இனிமேல் சொல்லலை. யார் தலையெழுத்தையும் யாரும் மாத்த முடியாதுனு இப்ப எனக்குத் தெளிவாப் புரிஞ்சு போச்சு." என்று சொல்லி முடிக்கும் முன் மகளை பட்டென்று அடித்தாள்.

" கற்பகம் திஸ் இஸ் டூ மச்" என்ற கங்காதரன், மகளின் கன்னத்தை வருடிக் கொடுத்தான்.

"அம்மான்னா இப்படித்தான் டா. கோபம் வந்தால்... அடிக்கதான் செய்வாங்க நீ இதையெல்லாம் சீரியசா எடுத்துக்கக் கூடாது."

" புரியுது பா. அம்மா பாவம் பா. டென்சனா இருக்கா."

" ஆமாடா... நீ அம்மா பேசும் போது, இடையில் பேசாதே. அவளும் யோசிப்பா, அவளுக்கேப் புரியும்!"

" ம்ம்ம்... சரி பா." என்ற மாலா அமைதியாக ஓரிடத்தில் போய் அமர்ந்து கொண்டாள்.

தன் சக்தியெல்லாம் இழந்தது போல் உணர்ந்தாள் கற்பகம். மாலைவை அடித்ததற்காக வருந்தினாள். அதே சமயம்... மகளின் வாய் வார்த்தைகள் நெருப்பை போல் சுட்டது. பத்து வயதில் இருந்த தெளிவும், அறிவும் பன்மடங்காகி 17 வயதில் மேலும் பரிமளித்தது. இது தன் மகளுக்கு பலத்தைத் தருவதை விட, பாதுகாப்பற்ற கனத்தைத் தருமோ.... என்று அச்சப்பட்டாள்! " காலம் சுழன்றோட....

நிறைமாதம் ஆவதற்குள் கற்பகத்தின் அக்கா வைதேகி வந்து சேர்ந்தாள். கற்பகத்தை கையில் வைத்து தாங்கினாள். எனக்குதான் கொடுப்பினை இல்லை. நீயாவது நல்லா இருக்கனும்டி. என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தாள். இது கற்பகத்திற்கு சங்கடமாக இருந்தது. ஆனால்... தனக்கு உதவியாக வந்தவளை என்ன சொல்ல முடியும் என்று பொறுத்துப் போனாள். சகல வேலைகளையும் நேர்த்தியாக செய்தாள். வீட்டை படு சுத்தமாக வைத்திருந்தாள். வித விதமாக சமைத்துக் கொடுத்தாள். வைதேகி சற்றுக் கூடுதலான கருப்புதான். ஆனால் தன்னை விட இளமையாக இருப்பதுதான் கொஞ்சம் உறுத்தியது. "நீ என்னை விட ஃபிட்டா அழகா இருக்கே கா" மனம் விட்டு ஒரு நாள் சொல்ல....

" என் மாமியார் ஒரு சதிகாரி. ஜாதகம் சரியால்லைனு ஆறுமாதம் பிரிச்சு வச்சிருந்தா. அப்புறமும் கண்ணுக் கொத்தி பாம்பு மாதிரி என்னை கண்காணிப்பா. பத்து நிமிஷம் புருஷனோடு தனியா இருந்துட்டால்... அவளுக்கு மூக்குல வேர்த்திடும். வேலை ஏவிக்கிட்டே இருப்பா. போதாக்குறைக்கு பாதி ராத்தி வரை அவளுக்கு கால் பிடிச்சு விடனும். அதிலேயே எனக்கு களைப்பாய்டும். அங்கேயே படுத்துத் தூங்கிடுவேன். அத்தி பூத்த மாதிரி என்றைக்காது ஒருநாள் உள்ளே போய் படுத்துக்கோடினு சொல்லுவாள். வரம் கிடைத்த மாதிரி பூரிச்சுப் போய்டுவேன். இரண்டு வருடம் இப்படிப் போச்சு. அப்புறம் குழந்தை உண்டாகலைனு கரிச்சுக் கொட்டினா. என் புருசன் வாயே திறக்க மாட்டான். ஐந்து வருசத்துக்கு பிறகு டாக்டரிடம் செக்அப் போனோம். குறை எனக்கில்லை. பிள்ளைக்குதானு தெரிஞ்சதும் , யாராவது கேட்டால்... எல்லாம் கர்மா.. பிறக்கும் போது பிறக்கட்டும்னு பேச்சை முடிச்சுக்குவா.

ஆனந்தமா தாம்பத்யத்தை அனுபவிச்சதே இல்லை. பசிக்கும் போது அவசரமா அள்ளிப் போட்டுக்கிற மாதிரிதான் சூழல் அமையும். நமக்கு விதிச்சது அவ்வளவுதானு நானும் மனசைத் தேத்திக்குவேன். அதிலேயும் மண் விழுந்தது. பத்தே நிமிசத்தில் ஹார்ட் அட்டாக்கில் போய்ட்டார். அந்த அதிர்ச்சியில் ஒரே மாசத்தில் மாமியாரும் போய்டாள். என்னை மாதிரிப் பெண்களுக்கு பிறந்த வீடுதானே கதி. ஏதோ வாழ்க்கை ஓடுது என்ற வைதேகி, என்னை விடு, வாழ்க்கை முடிஞ்சு போச்சு. நீ சந்தோசமா இருக்கல்ல. அது போதும்" என்றபோது, சந்தோசமா அல்லது பொறாமையா... என்ற நினைப்பு கற்பகத்தின் மனதில் ஓடத்தான் செய்தது.

மாலாவிற்குத் தேர்வு நெருங்கிக் கொண்டிருக்க, அவள் கவனமெல்லாம் படிப்பில் இருந்தது. கற்பகம் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் தலைக்குளித்து விட்டு, தலையை மெல்லிய நேரிலைத் துண்டால் துடைத்தபடி வந்த போது, இடுப்பில் சுளீரென்று ஒரு வலி வரவும் காலண்டரைப் பார்த்தாள். இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருக்கிறதே என்றெண்ணியபடி

சாப்பிட அமர்ந்த போது, உட்கார முடியாமல் எழுந்தாள்.

" அக்கா.... முடியலை கா" என்று குரல் கொடுத்தாள். வைதேகி ஓடி வந்தாள். கற்பகத்தில் நிலையறிந்து " மாலா... வண்டி புக் பண்ணு. என்று சத்தமாய் குரல் கொடுக்க, பதட்டமாய் ஓடி வந்த மாலா டாக்சி புக் செய்து விட்டு, அப்பாவிற்கும் போன் செய்தாள்.

உடனே புறப்பட்டு வருவதாக சொன்ன கங்காதரன், " நீ கவனமா படிடா பரீட்சைக்கு ஒரு வாரம்தான் இருக்கு என்றதோடு, நீ ஆஸ்பிட்டல் போக வேண்டாம். பெரியம்மா பார்த்துப்பாங்க " என்று சொல்ல... " சரி பா. நீங்க பதட்டமில்லாமல் வாங்க என்ற மாலா, நடக்கப் போகும் விபரீதங்களுக்கு நான் பொறுப்பல்ல. என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

- தொடரும்

’புதினப் புயல்’ இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #1

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT