Skip to main content

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #8

 

 

sootchuma ulagam part 8

 

அத்தியாயம் - 8

 

உடலை விட்டுப் பிரிந்த உயிர் 24 மணி நேரத்திற்குள் அதன் வினைக்கேற்றவாறும், விருப்பத்திற்கேற்றவாறும் மறுஜென்மத்திற்குத்  தயாராக காத்திருக்கும்! என்ற வரிகளை மீண்டும் மீண்டும் படித்தாள் மாலா. தாத்தாவின் கையெழுத்தில் ஒரு டைரி முழுவதும் அடிக்கோடிட்ட வாக்கியங்கள் அவளைப் பிரமிக்க வைத்தன. தாத்தா தனக்குக் கொடுத்த பார்சலில் இந்த டைரிதான் அதிகம் கவர்ந்தது. நீளத்திலும், அகலத்திலும் A4  ஷீட் அளவிற்கு இருக்கும்  இந்த டைரியை பொக்கிஷமாக நினைத்துப் பாதுகாப்பாய் வைத்தாள்.

 

பாட்டியின் உள்ளங்கழுத்து அட்டிகையை எடுத்து அழகு பார்த்தாள். கெம்பு கற்கள் மிகவும் நேர்த்தியாகப் பதிக்கப்பட்டிருந்தது. கூடவே ஒரு குறிப்பும் இருந்தது. "இதை உனக்குத்தான் தர வேண்டும் என்று தனியாக எடுத்து வைத்தேன். வெள்ளி மற்றும்  செவ்வாய்க்கிழமைகளில் தவறாமல் போட்டுக்கொள்! யாருக்கும் தராதே" என்றும் குறிப்பிட்டிருந்த தாத்தா கண்முன் வந்து போனார். 

 

அத்தை சங்கரி வீட்டிற்குப் போனது கூட நல்லதுதான்! திரும்பி வருவதற்குள் இந்த டைரியைப் படித்து முடிக்க முடியுமா என்று யோசித்தாள். முடியாதுதான்! ஆனால்... அத்தை மதியம் ஒரு தூக்கம் போடுவாள் அந்த நேரத்தில் படிக்கலாம். "தாத்தா கொடுத்தனுப்பிய பார்சலில்  என்ன இருந்தது” என்று கேட்ட வாத்சல்யனிடம்... "இன்னும் பார்க்கலை. பார்க்கணும்!" என்று சொல்லிச் சமாளித்தாள். சும்மாவே அப்நார்மல் என்று நினைப்பவன், அதைத் தீவிரமாக நம்புவதற்கான வாய்ப்பை உருவாக்கக் கூடாது. ஒரு வாரம் பிரச்சனையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

சமையலை ரசித்துச் சாப்பிடுகிறான். சிலாகித்துப் பேசுகிறான். கூட மாட உதவிகளையும் கேட்காமல் செய்கிறான். முக்கியமாய்,  டின்னர் முடிந்ததும் தடித்த புத்தகங்களோடு உட்காருவதில்லை. மடியில் படுத்துக்கொண்டு  அன்றைய நிகழ்ச்சிகளை ஒன்றுவிடாமல் சொல்கிறான். அத்தை இல்லாமல் போரடிக்கிறது என்றபோது... அம்மா மெதுவாக வரட்டும்! அம்மா இருந்தால்... நீ இத்தனை அக்கறையாய் கவனிக்க மாட்டாய் என்று கண்சிமிட்டிச் சிரிப்பான். மாலாவின் முகம் கணவனை நினைத்தபோதே வெம்மையானது!

 

"காலாகாலத்தில் குழந்தையைப் பெத்துக்கோ..." யாரோ தன் காதில் கிசுகிசுப்பாய் கூறியதுபோல் இருக்க... மிரட்சியாக சுற்றும் முற்றும் பார்த்தாள். கனவா... நனவா... பிரமையா... பல கேள்விகள் மனதில் எழுந்தது, கூடவே தவிப்பும்! ஹாலில் சம்மணமிட்டு அமர்ந்தாள் கண்களை மூடி, ‘அம்மா... அம்மா... நீயா வந்தாய்... உன் குரல் போல் இல்லையே.. வேறு யார்...’ மனது அலைந்து அலைந்து குவிந்தபோது... வயதான சுமங்கலிப் பெண்ணின் தெளிவில்லாதத் தோற்றம்! ‘யார் நீங்க... உருவம் தெளிவாகத் தெரியவில்லையே’ என்றபோது... அழைப்பு மணி அழைத்தது. காட்சி மறைந்து மூடிய கண்களுக்குள் இருட்டு! நிதானமாய் எழுந்து போய் கதவைத் திறந்தாள். அத்தை விசாலம்தான்!

"கதவைத் திறக்க இவ்வளவு நேரமா... தூங்கிட்டியா..."

"ம்ம்ம்" என்ற மாலாவை ஏற இறங்கப் பார்த்தாள். "இந்த நேரத்தில் என்னடி தூக்கம்...? ராத்திரி ஒழுங்காத் தூங்கலையா...”

"ம்ம்ம்" என்ற மாலா... “உன் பிள்ளை தூங்கவிட்டால்தானே.. தடிதடியா  புத்தகத்தை விரிச்சு வச்சுக்கிட்டு, லைட்டை எரியவிட்டால் தூக்கம் வருமா...?” 

"உனக்கு சாமர்த்தியம் இல்லை. ஒரு அதட்டல் போட்டு புத்தகத்தை வைக்கச் சொல்லணும்! அது முடியலைனா, மோகினி பிசாசு மாதிரி நீயாவது அவனைப் பிடிச்சுக்கனும்!" என்ற விசாலம், அதது கல்யாணம் முடிஞ்ச மறுநாளே புருசனைக் கண்ணாலேயே அடக்குறாளுங்க. நீ... எதுக்கும் லாயக்கில்லை. கல்யாணமாகி மூனு மாசமாச்சு. அதில் 48 நாள் விரதத்தில் போச்சு. மிச்சம் பாதி நாட்களுக்கு மேல் அவனுக்கு நைட் டியூட்டி. மிச்சம் இருக்கும் நாளெல்லாம் முறைப்பு!” என்றதும், விசாலத்தைப் பார்த்துச் சிரித்தாள்.

"என்னடி சிரிப்பு!  காலகாலத்தில் குழந்தையைப் பெத்து என் கையில் கொடுத்துடு. இல்லை... கெட்டக் கோபம் வரும்!"

"இப்ப வருதே, இது நல்ல கோபமா...?” 

"மாலா... சங்கரிக்கு நாள் தள்ளிப் போயிருக்குனு டாக்டரைப் பார்க்கப் போனதில் குழந்தைதான்னு கன்ஃபார்ம் ஆச்சு. ஒன்னு போதும்னு கலச்சுட்டு வந்து நிக்கிறா... கோவத்தில் புறப்பட்டு வந்துட்டேன். நீ அப்படி எதுவும் செய்துடாதே. உங்க மாமா சின்ன வயசுலேயே போய்ட்டாரு. இருந்திருந்தால் குறைஞ்சது நாலஞ்சாவது பெத்திருப்பேன்."

"அத்தை.... நான் அப்படிச் செய்ய மாட்டேன்.! " என்றவள் அத்தையின் தோள்களில் சாய்ந்தபடி முதுகைத் தடவிக் கொடுத்தாள். கண்களைத் துடைத்தபடி, ஏதாவது சாப்பிடக் கொடு. பசிக்குது! அந்தக் கடங்காரி வந்தாள்னா... நான் பேச மாட்டேன். நீயும் பேசக்கூடாது! புரிஞ்சுதா...?" என்ற விசாலம் கைகால்களை அலம்பிக் கொண்டு வந்து உட்கார, மாலா  உணவு பரிமாறினாள்

 

அன்றிரவு  கணவனிடம் சங்கரியைப் பற்றி கூறியதோடு, விசாலம் மன அழுத்தத்தில் இருப்பதைச் சொல்லி, “ஒரு வாரம் லீவெடுக்க முடியுமா... அத்தையை எங்காவது வெளியில் அழைச்சுட்டுப் போலாமே...” என்று மாலா கணவனைக் கெஞ்ச...

"எங்க போகனுமோ நீங்க இரண்டு பேரும் போய்ட்டு வாங்க. எனக்கு லீவ் கிடைக்காது!" என்றான்.

"க்க்க்கும்! அப்படியானால் வேண்டாம். நாலு சுவத்துக்குள்ளேயே கிடந்துட்டுப் போறோம்."

"ஒன்னு செய்யலாம் மாலா... அம்மாவையும் சித்தியையும் அனுப்பி வைப்போம்” என்றவன், ஃபோன் செய்து பேச... உடனே சம்மதித்த சித்திக்கு நன்றி சொல்லிவிட்டு, "உன்னையும் பிரிந்திருக்க வேண்டியதில்லை பார்" என்ற கணவனின் கை விரல்களைச் செல்லமாய் கடித்தாள்.

"வத்சு... அத்தைக்குக்  குழந்தை வேணுமாம்"

"உனக்கு வேண்டாமா."..?

"வேணும்தான்! ஆனால்... அது என் அம்மாவா இருக்கணும்னு ஆசைப்படுறேன்."

"முட்டாள் பெண்ணே... சாமி, பூதம், மறுஜென்மம் இதெல்லாம் சுத்தப் பொய். விஞ்ஞானம் அதி வேகமாக வளருது. கூடிய விரைவில் ‘ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ்’ வரப்போகுது. மனிதனை மிஞ்சும் அளவிற்கு அதன் செயல்கள் இருக்கும். இதெல்லாம் தெரிஞ்சுக்காமல், தாத்தாவோட டைரியைப் படிச்சுட்டு பைத்தியம் ஆயிடாதே. நீ காலையில் டைரியை ஒளிச்சு வைக்கும்போதே பார்த்துட்டேன். இரண்டு மூணு பக்கம் படிச்சேன். இதெல்லாம் மிதமிஞ்சிய கற்பனை!  வானத்தில் மேகக் கூட்டத்தில் நாம் உருவங்களைக் கற்பனை செய்வது போல்தான் இதுவும்! உன்னை அத்தை கண்டிச்சு வளர்க்கலை!"

"சின்ன வயசில் பேய் பார்த்திருக்கேன் தெரியுமா...? சாமியைக் கூடப் பார்த்திருக்கேன்."

" வாரே வா.... அப்புறம்..?”

"ஒருநாள் நானும் பக்கத்து வீட்டுப்பாட்டியும் சிவன் கோவிலுக்குப் போனோமா..."

“போதும் போதும் நிறுத்து! எல்லா சாமிக்கும் இரண்டு மனைவிகள். ஒருத்தி வரலைனா இன்னொருத்தி வருவா. எனக்கு ஒரே மனைவிதான்! வந்துடுடி பட்டு..."

"தப்பா பேசாதீங்க ப்ளீஸ்"

"சரி வா... இனி பேசலை. ஆனால்... நீயும் சாமி பூதம்னு பேசக் கூடாது. முதலில் அந்த டைரியை எரிக்கணும். மனுசன் சாகும்போது கூட உன்னைத் தூண்டி விட்டுட்டுத்தான் சாகனுமா...?” என்றதும், கணவனை எழ விடாமல் மார்பில் சாய்ந்தாள். தலையை உயர்த்தி சிருங்கார சிரிப்பு உதிர்த்தாள். மனசுக்குள் ‘டைரி யார் கண்ணிலும் படாமல் பார்த்துகங்க தாத்தா’ என்று வேண்டினாள்.மாலாவை கூர்ந்து பார்த்த வாத்சல்யன்...

"உன் இதயம் ஏன் வேகமாக துடிக்குது...? பயமா... பரிதவிப்பா... கண்டிப்பா இது காதல் துடிப்பல்ல” என்றவாறு மனைவியைத் தள்ளிவிட்டு எழுந்தான். "மாலா... சாகசம் எனக்குப் பிடிக்காது. என்னை விட, நம் வாழ்க்கையை விட, அந்த டைரி முக்கியமாக...???”

 

“அந்தக் கிழம் ராணுவத்தில் இருந்தபோது கற்பனை செய்வதையெல்லாம் பொழுதுபோக்காக ஏதாவது கிறுக்கியிருக்கும். அதைப் போய் பொக்கிஷம் மாதிரி பத்திரப்படுத்தணுமா...?” என்றவாறு அலமாரி முழுவதும் ஆராய்ந்தான். எத்தனை முறை தேடினாலும் காணோமே...

"எங்க வச்சுருக்க..?”

"அடித்தட்டில்தான் வைத்தேன். காணோம்னா... நான் என்ன செய்வேன்...? அவரே ஆவியா வந்து எடுத்துட்டுப் போய்ட்டாரோ என்னவோ...?” என்ற மாலாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான்.  “ச்சீ.... போடி. என் கண்முன்னால் நிற்காதே” என்றதும் டைரியைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

"எரிக்கணுமா.... எரிங்க. ஆனால்... தாத்தா சொன்னதெல்லாம் நிஜம்! எனக்கு தாத்தா துணையிருப்பார்." என்று அழுத்தமாய் உச்சரித்த மாலாவை முறைத்தபடி, டைரியுடன் கிச்சனுக்குள் போனான். காஸைப் பற்ற வைத்து டைரியை மிச்சமில்லாமல் எரித்ததைக் கண்ணீர் வழியப் பார்த்துக்கொண்டே இருந்தாள் மாலா.

 

(திகில் தொடரும்)

 

- இளமதி பத்மா

 

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #7