Skip to main content

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #9

 

 

sootchama ulagam part 9

 

மாலா தன்னுடன் பேசி பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டது. இதம் பதமாகச் சொல்லியிருக்கலாமோ... அவசரப்பட்டிருக்கக் கூடாதோ... கண்களை மூடியபடி யோசித்துக் கொண்டிருந்தான் வாத்சல்யன். வேலைகளை முடித்துவிட்டு அறைக்கு வந்த மாலா, கட்டிலின் ஓரத்தில் சுவரோரம் போய் ஒட்டிக் கொண்டாள்.

"நாளை ஒரு செமினார்க்கு டெல்லி போறேன். திரும்பி வர நாலைந்து நாட்களாகும். உனக்கு ஏதாவது வேண்டுமா."..? மிருதுவாக கேட்டான். பதில்  சொல்லாமல்  மாலா மெளனம் சாதிக்க... ஒரே தாவலில் மனைவியை ஒட்டியபடி படுத்தான்.

" சாரி.....அடித்தது என் தவறுதான்! உன் செயல்கள் என்னை கலவரப்படுத்துகின்றன மாலா."

”....................”

" வாயைத் திறந்து பேசு. வாக்குவாதம் செய்! ஆனால் பேசாமல் இருக்காதே..."

”....................”

" இப்படி அந்நியமாகி ஒதுங்கிப் போனால்.... நம் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் மாலா."

" இப்போது மட்டும் என்ன அர்த்தம் இருக்கிறது...?  சராசரி ஆணின் மனோபாவம்தான் உங்களுக்கும்!  பெண்ணை அடித்தால் அடங்கி விடுவாள் என்று நினைத்துத்தானே அடித்தீர்கள். அடங்கி விட்டேன். இன்னும் என்ன செய்யணும்."...?  

" ஓகே ரிலாக்‌ஸ். ஸாரி " என்ற வாத்சல்யன் மனைவியை நெருங்க,  இணக்கமின்றி ஜடமாய் கிடந்தாள். 

 

மறுநாள் வாத்சல்யன் புறப்படத் தயாராகும் போது... "நீ மட்டும் போகிறாயா.... அல்லது யாரேனும் உடன் வருகிறார்களா...? என்று விசாரித்த அம்மாவிடம்... " ரதி வருவாள் என்று நினைக்கிறேன்." என்றான்.

" அந்த லங்கிணியா... பத்திரமா இருந்துக்கோடா"

" நீ பயப்படாதே மா. அவளுக்கு கல்யாணம் நிச்சயமாய்டுச்சு" என்றபடி  மாலாவைப் பார்த்தான். அவள் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது. மனைவியின் அருகில் சென்று....

" ரொம்ப சந்தோசப்படாதே... ஒரே ஹோட்டல்!ஒரே ரூம்!" என்று ரகசியமாய் சொல்லித்  திகைக்க வைத்தான். 

" மாலாவை அழைச்சுட்டுப் போடா. வீடே கதினு கிடக்கா. ஹனிமூன் கூடப் போகலையே..."

" பூனையை மடியில் கட்டிக்கிட்டு சகுனம் பார்த்த கதையாகிடும். நான் போவது செமினார்க்கு. இவளை அழைச்சுட்டுப் போய் நான் என்ன பண்றதும்மா... கொண்டாட்டத்திற்கெல்லாம் நேரமே இருக்காது. தவிர... மாமாவைப் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்" என்றபடி மாலாவைப் பார்த்தான்.  

 

கணவன் பேசிய வார்த்தைகள் காதில் விழவில்லை. மாலா  ரதியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள். பிரமாதமான அழகி என்று சொல்ல முடியாது. ஆனால்... வாத்சல்யன் அவள் மேல் தனக்கு ஈர்ப்பு இருந்ததை ஒப்புக் கொண்டான். ஏதேனும் தவறாகி விடுமோ...? என்று நினைத்த போதே  மனம் சோர்ந்து உடல் நடுங்கியது. 

" நானும் வரேனே...".  என்ற மாலா கணவனின் அனுமதி கேட்டு நின்றாள்.... " எதுக்கு....?  வேண்டவே வேண்டாம்."  

" அத்தை... நீங்களாவது சொல்லுங்களேன்."

" எவடி இவ...!  அவன்தான் செமினார்க்குப் போறேனு சொல்றானே... புரியலையா உனக்கு...?"

" புரியுது! ரதியை ஏன் அழைச்சுட்டுப் போகணும்...?"

" ஏன்னா.... அவள் என் கொலிக், டாக்டர்!"  என்றவன், "உனக்கு அவள்மேல் பொறாமையா... சந்தேகமா...?" என்று சீண்டினான்.

" அவளென்ன என்னை விட அழகியா...? டாக்டர்னா... கொம்பா முளச்சிருக்கு....? உங்களைச் சுற்றி தடுப்பு போட்டிருக்கேன். யாரும் உங்களைத் தவறா நெருங்க முடியாது. "

" அம்மா.... கேட்டியா... கடவுள் ரேஞ்சுக்கு பேசுறா. இதுதான்மா எனக்கு வெறுப்பாகுது. எனக்குப் பிடிக்காததையெல்லாம் செய்றா... நீயும்  கேட்க மாட்டாய்...  இந்த அரை லூசை எனக்குக்  கட்டி வச்சுட்டு நீ சந்தோசமா இருக்கல்ல..."

" குழந்தைக்கு திருஷ்டி படக் கூடாதுன்னு திருஷ்டிப் பொட்டு வைக்கிறது மாதிரிதான் இதுவும்! என் மாமியார் எனக்கு சொல்லிக் கொடுத்ததை, நான் மாலாவுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அலட்டாமல் போய்ட்டு வா."

" கடவுளே... நீதான்  இதன் சூத்திரதாரியா.... வெளங்கிடும்! வரேன்" என்றவாறு  சூட்கேசுடன் கீழிறங்கினான்.

 

இரண்டு மூன்று நாட்கள் கடந்த பின், வாத்சல்யன் அம்மாவுக்கு ஃபோன் செய்தான். "நான் வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும் போல் தெரிகிறது மா. உன் மருமகளிடம் சொல்லிடு." என்று ஃபோனைத் துண்டித்தான்.  மகன் வரத் தாமதமாகும் என்பதை மாலாவிடம் சொன்ன விசாலம்,  "நீ ரதிக்கு ஃபோன் போடு,  என்னனு தெரிஞ்சுக்குவோம்" என்றாள்.

" ஹலோ... நான் மாலா... அவர் ஃபோன் சுவிட்ச் ஆஃப்னு வருது. பக்கத்தில் இருக்காரா..."

" மாலா....  நான் சென்னையில் இருக்கேன் மா."

" நீங்க செமினார்க்குப் போகலையா..."

" இல்லையே..."

" ஓ.... ஸாரி டாக்டர். ரதி"

" பரவாயில்லை மா. ஏதாவது முக்கியமான விசயமா."..?

" இல்லையில்லை. அத்தை தான் உங்களை விசாரிக்கச் சொன்னாங்க."

" ஓ....   உன்  அத்தையை பயப்படாமல் இருக்க சொல்லு. வந்துடுவான்!"  என்ற ரதி மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். கிழவி பொல்லாதவள். கல்லூரிக்கே வந்து மிரட்டியவள் ஆயிற்றே... இப்போது சும்மா இருப்பாளா... மகனிடமிருந்து ஃபோன் வரலைனா...நான்தான் காரணமா...? இன்று நேருக்கு நேர் பார்த்து பேசிடணும்! என்றெண்ணியவாறு... டியூட்டி நர்சிடம் சில குறிப்புகளைத் தந்துவிட்டு மருத்துவமனையிலிருந்து நேராக வாத்சல்யனின் வீட்டை  நோக்கி டூ வீலரில் பறந்தாள். வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு மாடியேறினாள். அழைப்பு மணியை அழுத்த, இரண்டு நிமிடங்களில் கதவைத் திறந்த விசாலத்தின் கால்களைத் தொட்டு எழுந்தாள்.

" அப்படியே மாறாமல் இருக்கீங்கம்மா" என்று புன்முறுவல் செய்த ரதியிடம்.... " வா... வா... எப்ப கல்யாணம்..".?

" உங்களுக்குச் சொல்லாமலா... எங்கே மாலா.... என்றபடி சோபாவில் அமர்ந்தாள்.  "உள்ளே இருக்கா.. வரச் சொல்லவா..".?

" வரச் சொல்லுங்க அவளைப் பார்க்கத்தானே வந்தேன். கல்யாணத்துக்கு வரமுடியலை." என்றவள் அறையைச் சுற்றி பார்வையைச் சுழற்றினாள். உள்ளே சென்ற விசாலம், " ரதி வந்திருக்கா. அதிக பேச்சு வார்த்தை வச்சுக்காதே. புரிஞ்சுதா..." என்று சொல்லி மருமகளை அனுப்பி விட்டு டைனிங்ஹாலில் அமர்ந்து கொண்டாள். சற்றுத் தொலைவிலேயே ரதியைப் பார்வையால் அளந்தபடி,  புன்முறுவலுடன்... "வாங்க. எப்படி இருக்கீங்க... ? சம்பிரதாயத்திற்காக விசாரித்தாள்.

" வா... வா... உட்கார். எப்படிப் போகுது  வாழ்க்கை...?"  என்ற ரதியை ஆழமாகப் பார்த்தாள்.  

"அத்தையின் பிள்ளை! சிறுவயதிலிருந்து தெரியும் என்பதால் சந்தோசமாகத்தான் போகுது!"  என்றாள் மாலா.

" ஓ.... மகிழ்ச்சி!  நாங்க இரண்டு பேரும்  எல்.கே.ஜி. வகுப்பிலிருந்து  மருத்துவப்படிப்பு வரை ஒன்றாகத்தான் படித்தோம்.  உனக்குத் தெரியுமோ.... தெரியாதோ... வாத்சல்யனும் நானும் நல்ல ஃபிரண்ட்ஸ்!   அதோடு காதலித்தோம். உங்க அத்தை வந்து மிரட்டிய மிரட்டலில்தான்  பயந்து விலகினேன். அதற்காக காதலிக்கலைனு நினைக்காதே. என் உயிர் போகும் வரை காதலிப்பேன்." என்ற ரதியை மிரட்சியுடன் பார்த்தாள் மாலா.

" பயப்படாதே! என்னால் உன் வாழ்க்கை பாதிக்கப்படாது."

" உங்களுக்குக் கல்யாணம்னு சொன்னாரே.." 

" யார் சொன்னது...?  அஞ்சு வருசக் காதல்! 25 வருச நட்பு! மொத்தமா உடைச்சுட்டோம்னு கர்வம் உன் அத்தைக்கு! ஆனால்.. அதை உடைக்க முடியாதுனு அவங்களிடம் சொல்லு! வரட்டுமா...?" என்றவள், "அத்தையம்மா.... பை பை" என்று கையசைத்துவிட்டு விரைவாக கீழிறங்கினாள். 

"அத்தை.... கேட்டீங்களா... என்ன சொல்லிட்டுப் போறாள்....? எனக்கு பயமா இருக்கு." 

" வாத்சல்யன் வரட்டும் அவளோடு இன்னும் சிநேகமா இருக்கானா என்று கேட்டுத் தெரிஞ்சுக்குவோம்.  என்மேல் இருக்கும் கோபத்தில், வாய்க்கு வந்ததை அள்ளி விட்டுட்டுப் போறாள். என் பிள்ளை தவறு செய்ய மாட்டான். 48 நாள் நீ விரதம் முடிக்கும் வரை அடக்கமாதானே இருந்தான். சந்தேகப்படாதே!  வாழ்க்கை வீணாய்டும்!" என்ற விசாலத்தின் மனதிலும் புயல் அடித்தது. 

 

வாத்சல்யனின் நண்பன் குமார்க்கு ஃபோன் செய்தாள் விசாலம். ரதியின் பிறந்த நாளில் நடந்ததை விசாரித்தாள். " எங்க வற்புறுத்தலால் கொஞ்சம் பீர் அடிச்சான் அதற்கே அவனுக்கு முடியலை. சுருண்டு படுத்துட்டான். நாங்க கிளம்பி வந்துட்டோம். ஒரு மணிக்கு எழுந்து வீட்டுக்குப் போய்ட்டானு ரதி சொன்னா."

" நல்லா இருங்கடா. கேட்கவே சந்தோசமா இருக்கு"  என்ற  விசாலம் மகனின் வருகைக்காகக் காத்திருந்தாள். மாலா அழுதழுது முகத்தை வீங்க  வைத்துக் கொண்டாள். கண்களில் ஜீவனில்லை.

 

டெல்லியிலிருந்து உற்சாகமாய் வந்த வாத்சல்யனுக்கு வீட்டின் அமைதியான சூழல் உறுத்தியது. " என்னாச்சு....? இரண்டு பேரும் முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போறீங்க..."

" ரதி வந்திருந்தா.".. நேரடியாக விசயத்தை உடைத்தாள்  விசாலம்.

" என்னவாம் அவளுக்கு... கல்யாணத்துக்கு வராதவளுக்கு இங்கென்ன வேலை.."..?

" அவளோடு பிறந்தநாளுக்குப் போய் நீ குடிச்சுட்டு, கூத்தடிச்சியாமே... என்ன நடந்துச்சு அங்க... எல்லோரும் சீக்கிரம் வீட்டுக்குப் போயிருக்காங்க. நீ ஏன் லேட்டா வந்தே..."

" அம்மா... குற்றவாளியை விசாரிக்கிற மாதிரி விசாரிக்காதே. எனக்குத் தெரியாமல் பீர் கலந்த கூல்டிரிங்க்ஸை கொடுத்துட்டாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வந்தேன். இது தப்பா...:

" தப்பா எதுவும் நடக்கலையே..."

" உன்மேல் சத்தியமா எதுவும் நடக்கலை மா."

"  உன்னை இன்னும் காதலிக்கிறதா சொல்லிட்டுப் போறா.  என்ன நெஞ்சழுத்தம் இருக்கணும்....? உன் பொண்டாட்டி இரண்டு நாள் சாப்பிடலை. போய் சமாதானப்படுத்து. அதோடு ரதியை கண்டிச்சு வை. ஒழுங்கு  மரியாதையா அவளைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லு."

" பேசுறேன். அவள் ஏதோ உளறிட்டுப் போனால் அதற்கு நான் எப்படி பொறுப்பாவேன்.."..?

" நீயும் அவளைக் காதலிப்பதா சொல்லிட்டுப் போறாளே..."

"பெத்தவள் நீயே என்னை நம்பலைனா... வந்தவள் எப்படி மா நம்புவாள்...? என் தலையெழுத்து! இதுக்குதான் யோசிச்சு முடிவெடுனு சொன்னேன்” என்றபடி மாலாவை சமாதானப்படுத்த முயன்றான். 

" உங்களை நினைச்சு ஒருத்தி தினம் கண்ணீர் விட்டால் நாம சந்தோசமா இருக்க முடியுமா."..?

"அதற்கு நாம என்ன பண்ண முடியும்..".?

" ரதி வீட்ல பேசி கல்யாணத்தை முடிக்கச் சொல்லுங்க"

"ஒரே உறவு அம்மாதான்! அவங்களும் இறந்துட்டாங்க மாலா"

" அப்ப நீங்க அவ மனசை மாத்துங்க.  குற்ற உணர்ச்சி என்னைக் கொல்லுது!"

" பேசலாம். நீ வா..". என்றழைத்த கணவனின் கைகளில் அடங்கினாள். மனசு மட்டும்  ரதியை நினைத்து  விசனப்பட்டது.!

 

( திக் திக் தொடரும்...)

 

- இளமதி பத்மா

 

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #8