ADVERTISEMENT

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #6

04:09 PM Sep 20, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அத்தியாயம் -- 6

திடுக்கிட்டு அறை வாசலிலேயே நின்ற வாத்சல்யனை புருவம் உயர்த்தி கண்களால் என்ன என்று ஜாடையில் கேட்டாள் மாலா.
ஒன்றுமில்லை என்பதாய் தோளைக் குலுக்கியபடி வந்து மாலாவின் அருகில் அமர்ந்தான்.

" அத்தையோடு ஏதோ பேசிய மாதிரி இருந்ததே... எனக்குத் தெரியாமல் என்ன ரகசியம்."..?

" ஏன்டி வம்பு பண்ற... அம்மாவோடு மகன் பேசக் கூடாதா..".?

" பேசக் கூடாதுனு சொன்னேனா....? கிசு கிசுப்பாய் பேசின மாதிரி இருந்தது. அதுதான் என்ன ரகசியம்னு கேட்டேன்."

"ஏய்ய்.... உண்மையைச் சொல்லு! எனக்காகத்தானே காத்திருந்தாய்."..? வாத்சல்யன் பேச்சை திசை திருப்பினான்.

கணவனின் கண்களில் தெரிந்த குறும்பையும் மீறி. சிறு கலவரம் தெரிய, " என்ன பேசினீங்க...? மாலா விடாமல் கேட்டாள்.

" மாலா... மூட்அவுட் பண்ணாதே. என்னவோ பேசினோம்! அவசியம் என்றால் சொல்ல மாட்டேனா"...?

" ஓ... அவசியம் என்றால்தான் சொல்வீர்களோ "...? இந்த வீட்டில் எனக்கு என்ன பொஷிசன்."..? இம்முறை வாத்சல்யனுக்கு சுறு சுறுவென கோபம் தலை வரை ஏறியதில்...கண்கள் சிவக்க, நீ என் பொண்டாட்டியா... இருக்கலாம். அதுக்காக தலைமேலே ஏறி உட்காரனும்னு நினைக்காதே. அம்மா- பிள்ளை ஆயிரம் பேசுவோம். அதையெல்லாம் உன்னிடம் சொல்லனும்னு அவசியமில்லை."

" ஆல்ரைட். நடக்கட்டும் எத்தனை நாட்கள் என்று நானும் பார்க்கிறேன் என்றவாறு திரும்பி படுத்துக் கொள்ள, வாத்சல்யன் மனைவியைத் தன்பக்கம் திருப்பினான். " ஏன் இப்படி ரகளை பண்றே... உனக்கு என்மேல் அன்பே இல்லையா....? எவ்வளவு காதலோடு வந்தேன்... வேண்டாததை பேசும் போது டென்சனாகுதுல்ல" என்றபடி மனைவியை அணைத்து சமாதானப்படுத்த, முயன்றான்.

மாலாவின் நினைவில் பளிச்சென்று அப்பா வந்து போனார். இரண்டும் - இரண்டும் நாலு என்பது தெளிவாகப் புரிந்தது. அத்தை டெல்லியில் அப்பாவை சந்தித்திருப்பாள். அதைப்பற்றிதான் இவரோடு பேசியிருக்கிறாள். அதைதான் மறைக்கிறார் என்று புரிய... கணவனைக் கூர்ந்து பார்த்தாள்.

" ம்ம்ம்.. மிஸ்டர். கங்காதரன் வீட்டிற்கு போனாளா உங்கம்மா...? வெட்கம் கெட்டவரோடு பேசி, சிரித்து, விருந்துண்டு, களித்து வந்திருக்காளா...? தம்பி மேல் அவ்வளவு பாசம்....! ச்சீ.... ச்சீ....எப்படி மனசு வந்தது...? எங்கம்மாவை நிராகரிச்சுட்டு இன்னொருத்தியோடு ஓடிப்போன மனுசனை தம்பினு கொஞ்சப் போய்ட்டாளா உங்கம்மா... அங்கேயே இருக்கிறதுதானே... ஏன் வந்தாள்...?”

" மாலா... கீப் கொய்ட்...! உனக்குப் பிடிக்கலைனா நீ போகாதே. அக்கா- தம்பி விசயத்தில் தலையிட நாம் யாரு.."..?

" பாதிக்கப்பட்டவள் நான்! செத்துப் போனது எங்கம்மா.... உங்களுக்கு அந்த வலி புரியாது."

" முடிஞ்சு போனதை அப்படியே விடேன் "

" நான் எப்பவோ விட்டாச்சு. உங்கம்மாதான் விடாமல் ஈசிட்டு வந்திருக்காள். அந்த வைதேகி எப்படிப் பட்டவள்னு தெரிஞ்சும் உறவு கொண்டாட எப்படி முடியுது.".? என்ற மாலாவின் உதடுகள் துடித்தன. கண்கள் நீர்தாரைகளை தடையில்லாமல் சொரிய...
வாத்சல்யன் மனைவியின் கண்ணீரை துடைத்தான்.

" மாலா... அழாதே ப்ளீஸ் அவரவர் செயல்கள் அவரவர்களுக்கு நியாயமாகத் தெரியும்! இத்தனை வயதிற்கு மேல் நான் அம்மாவை கண்டிக்க முடியுமா."..?

" வேண்டாம்! எதையும் பேச வேண்டாம். நியாயம் கற்பிப்பதில் நீங்கள் சமர்த்தர். நானொரு முட்டாள்! என் துலாக்கோல் மிகத் துல்லியமாக இருக்கும் என்று நம்பியதில் பெருத்த ஏமாற்றம்! பச்சோந்தியாய் மாறக் கூடிய மனிதர்கள் மத்தியில் சிறிதும் பொருந்தாமல் தனித்து நிற்கிறேன்! வலி தாங்குவதற்குத்தானே பெண் ஜென்மம்!"

" மாலா... தேவையில்லாமல் நமக்குள் வாதம் வேண்டாமே... அம்மாவின் குணம் உனக்குத் தெரியாதா...? உன் அத்தைதானே...மாமா ஏர்போரட்டில் அம்மாவைப் பார்த்ததும் காலில் விழுந்தவர் தூக்கி விடும் வரை எழுந்திருக்கவில்லையாம். அம்மாவுககு தர்மசங்கடமாகி விட்டதாம். கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய் விட்டாராம். என்ன செய்ய சொல்கிறாய்...? நீ முதலில் ஒன்னு புரிஞ்சுக்கோ... உடன் பிறப்புகளின் பாசம் அலாதியானது. பகையாகிப் பிரிந்தாலும் பல வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது... கோபங்கள் தீர்ந்து போகும்! அதுதான் அம்மா விசயத்தில் நடந்திருக்கிறது."

"நீங்க ஆயிரம் சமாதானம் சொன்னாலும் மனம் ஏற்க மறுக்கிறது."

" போடி... நீயும் உன் மனசும்! என்று முணுமுணுத்தபடி வாத்சல்யன், கண்களை மூடி படுத்துக் கொள்ள, மாலா எழுந்து பால்கனியில் வந்து நின்று கொண்டாள். மனம் கனத்துக் கிடந்தது. வானத்தை அண்ணாந்து பார்த்தாள். எல்லையற்று பரந்து விரிந்திருக்கும் இந்த வானம் எத்தனை அழகு....?! எண்ணங்களுக்கும், மனவோட்டத்திற்கும் , நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும் கோள்களுக்கும் சம்பந்தமுண்டு என்றும் அதை வைத்துதான் ஜோதிடம் கணிக்கப்படுகிறது என்றும் சொன்ன சிறிய தாத்தா நினைவில் வந்து போனார். உடனே சிறிய தாத்தாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்த்து. அறைக்குள் வந்து கணவனின் தோளில் தன் முகவாயைப் பதித்து, "தூங்கிட்டீங்களா.". சன்னமாய் குரல் கொடுத்தாள்.

" ஆமாம்! நாளை காலையில் ஒரு ஆப்ரேஷன் இருக்கு. தொல்லை தராதே மாலா. தூங்க விடும்மா ப்ளீஸ்.." கண்களைத் திறக்காமலே பதிலளித்த வாத்சல்யனின் மூக்கை செல்லமாய் கடித்தாள் மாலா.

" ஏய்ய்... பிசாசே... என்றபடி எழுந்து அமர்ந்தவன். உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலை மாலா. உன்னிடம் ஒரு உண்மையை சொல்லட்டுமா... கோபிக்கக் கூடாது. வருத்தப்படக் கூடாது. அழக் கூடாது” என்ற வாத்சல்யனை கூர்ந்து பார்த்த மாலா...

" ரதி என்னை காதலித்தாள். எனக்கும் அவள் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது. இதை புரிந்து கொண்ட அம்மா.... எனக்கு எத்தனைக் கட்டுப்பாடுகள் விதித்தாள் என்று உனக்குத் தெரியாது. உன்னைதான் மணந்து கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டாள். அதோடு நிற்காமல், ரதியை சந்தித்து கண்டிக்கவும் செய்தாள். பாவம் அவள்! என்னிடம் பேசவே பயப்படுவாள்."

" பிறகெப்படி அவள் பிறந்தநாள் விழாவிற்குப் போனீர்கள்... அவள் மேல் இருந்த ஈர்ப்பு குறையலையோ....?!

" இருக்கலாம். நீ என்னை பாதுகாத்து வச்சுக்கோ. அவ்வளவுதான் சொல்ல முடியும்! வா... வந்து கட்டிக்கோ..". என்று இரு கைநீட்டி அழைத்த கணவனின் மார்பில் சாய்ந்தபடி விசும்பத் துவங்கினாள்.

" ஏய்ய்... பைத்தியம்! இங்க பார்... இப்படி பூஞ்சையா இருந்தால் வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வாய்...? உன்னை மகா தைரியசாலி என்றல்லவா நினைத்தேன். மனிதர்களை அவர்களின் நிறை குறைகளோடு ஏற்கப் பழகிக்கோ. நீ கொஞ்சம் அப்நார்மல்னு தெரிஞ்சும் உன்னை நான் மணந்து கொண்ட மாதிரி...” என்றதும் கணவனை கோபத்துடன் தள்ளி விட்ட மாலா, எழுந்து விசாலத்தின் அறைக்குள் வந்து அத்தையை அணைத்தபடி படுத்துக் கொண்டு விசும்பினாள்.

" என்னத்துக்கு அழுகை.?" என்று கேட்டவாறு மருமகளின் தலையை வருடிக் கொடுத்தாள் விசாலம்.

" நான் அப்நார்மலாம்... உன் பிள்ளை சொல்றான். "

" அட டா.... அவன் வம்பிழுப்பது கூடப் புரியலையா உனக்கு...? போடி போ...”

"ரதி இவரை லவ் பண்றாளாமே... எதுக்கு என்னை கட்டி வச்சீங்க..".?

" தேவுடா...உளறிட்டானா....? அதெல்லாம் வயசுக் கோளாறுடி சரியாய்டும்!"

" எப்படி சரியாகும்... அவளோடப் பிறந்தநாளுக்குப் போய் கூத்தடிச்சுட்டு வந்தார் தெரியுமா...? எனக்கு பயமா இருக்கு.!

" பயமா... உனக்கா....?! நாங்கதான் உனக்கு பயப்படுறோம். நீ இந்த வீட்டிற்கு 17 வயசில் வந்தாய். நினைவிருக்கா...? இப்ப உனக்கு 23 வயசாச்சு. ஒரு நாள் நிம்மதியா தூங்க விட்டிருப்பியா...

ஆறுமாசத்துக்கு ஒரு முறை வீட்டை மாத்த சொல்லி எங்க உயிரை எடுத்தியேடி மகராசி. அங்க யாரோ இருக்காங்கனு சொல்றது. மோகினி நடமாட்டம் தெரியுதுனு சங்கரியை அலற வச்சியே... மறு மாசமே அவளுக்கு கல்யாணத்தை பண்ணி அனுப்பினேன். உனக்குப் பிடிச்ச மாதிரி, இந்த வீட்டை வாங்கிய பிறகுதான் நான் நிம்மதியா தூங்குறேன். என் பிள்ளையை தாஜா பண்ணி உன்னை கட்டி வச்சா.... நீ என்னமோ ராணி மாதிரியும், அவனை உன் அடிமை மாதிரியும் நடத்துறே... என்னை மட்டும் விட்டா வைக்கிறாய்...?

" ஆ.... உங்களை என்ன செய்தேன்....? சொல்லுங்க. இப்பவே தெரியனும்!"

" உன்னை தாய்க்குத் தாயா நின்னு காப்பற்றியதற்கு அவ இவனு பேசுறே... என் தம்பியைப் பார்த்தேன். அழுதான் கூடவே போனேன். அது என் விருப்பம். ஏன் உங்கம்மா திரும்பி வந்தாங்கனு என் பிள்ளையை கேட்கிறாய். உங்கப்பனுக்கு இளகின மனசுடி. உனக்கெல்லாம் புரியாது!"

" எனக்கு புரியவே வேண்டாம்! என்ற மாலா விருட்டென்று எழுந்து தன் அறைக்குள் போனாள். வாத்சல்யன் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருக்க.... இரண்டு முறை ரதியின் பெயரை உச்சரித்ததில் மாலாவின் மனதில் கனல் மூண்டது.

(திகில் தொடரும்)

-இளமதி பத்மா

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #5

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT