ADVERTISEMENT

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்... ‘சூட்சும உலகம்’ #18

02:59 PM Dec 20, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சசிதரணியின் உடல் அச்சத்தால் நடுங்கியதை கவனித்த வாத்சல்யன், "சசி திரும்பி பார்க்காமல் ஓடு" என சத்தமிட்ட அடுத்த நிமிடம் சசியை கீழே தள்ளி தனது காலால் எட்டி உதைத்தாள். சப்த நாடியும் அடங்க, பேசவும் சக்தியற்ற நிலையில் கண்களில் நீர் வழிய கை கூப்பினாள் சசிதரணி.

"ஓடிப்போ..." என்றவாறு உள்ளே ஓடிய மாலாவை எதிர்கொண்டு அரவணைத்த வாத்சல்யன், "உனக்கு என்ன வேணும் ரதி? உன் செய்கை என்னை அச்சுறுத்துகிறது. மாலாவை விட்டுடு ப்ளீஸ்.”

"மாலாவை விட்டுவிட்டால் என் நிலைமை? நீ அவளோடு சந்தோசமாய் வாழ்வாய். நான் ஏக்கத்தோடு அலையணுமாடா? உன் மனைவியைப் பைத்தியமாக்கித் தெருவில் அலையவிட்டுடுவேன் ஜாக்கிரதை! மாலா என்ற வார்த்தையை நீ இனி உச்சரித்தால், உன் குழந்தையைக் கொன்றுவிடுவேன். உங்கம்மாவை ஊருக்கு அனுப்பப் போகிறாயா இல்லையா...?”

"உனக்குப் புண்ணியமாகப் போகட்டும் என்னைக் கொன்றுவிடு. மாலாவை விட்டுடு."

"மறுபடி மறுபடி அவள் பெயரைச் சொல்கிறாயா...?” என்று ஆவேசத்துடன் உள்ளே ஓடிச்சென்று அத்வத்தைத் தூக்கிக்கொண்டு பின்புறம் ஓடியவளைத் துரத்திப் பிடித்த வாத்சல்யன், அங்கேயே மண்டியிட்டான். “நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் ரதி. குழந்தையை ஒன்றும் செய்யாதே...”

"போ... போய் உங்கம்மாவிடம் பேசு. ஊருக்குப் போகச்சொல். என் குழந்தை இங்கேதான் இருக்கணும். சம்மதமா.?”

"சரி சொல்கிறேன். குழந்தையைக் கொடு" என்று கேட்ட வாத்சல்யனின் கைகளில் கொடுக்காமல் வேக வேகமாய் தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாட, அத்வைத் கலகலவென சிரித்தான். இடையிடையே, “ம்மா... ம்மா...” என்று சொல்ல, ரதி விலகி நிற்க, மாலா அத்வைத்தை அணைத்தபடி உள்ளே செல்ல... பின் தொடர்ந்த வாத்சல்யன், தன் அம்மாவிடம்...

"அம்மா, நீ நாளையே ஊருக்குப் புறப்படுமா. அத்வைத்தை அழைச்சுட்டுப் போய்டு. இவள் குழந்தையை என்ன வேண்டுமானாலும் செய்வாள்" என்று பதற்றப்பட, கணவனை முறைத்த மாலா, "அத்தை... நாளை அமாவாசை! ரதியின் ஆவியை இன்று விரட்டியே ஆகணும். நடு வீட்டில் நெருப்பை வளர்த்து உட்காருங்க. முதலில் மந்திரத்தால் அவள் ஆவியைக் கட்டுங்க. நான் குலதெய்வத்தின் கட்டுகளை அவிழ்க்கிறேன். கவனமா தவறில்லாமல் மந்திரத்தை உச்சரிக்கணும். அவளை வீட்டுக்கு வெளியே நிறுத்துங்க. அப்பதான் குலதெய்வம் உள்ளே வரும். உங்கப் பிள்ளையைக் குழந்தைகளைப் பார்த்துக்கச் சொல்லுங்க. என்ன சத்தம் கேட்டாலும் வெளியே வரக் கூடாதுனு சொல்லுங்க." என்றபடி விரைவாக இயங்கினாள். விசாலம் நெருப்பை வளர்க்க, மாலா குலதெய்வத்தின் கட்டுகளை ஒவ்வொரு மந்திரமாகச் சொல்லி அவிழ்க்க, அவிழ்க்க... குலதெய்வம் கண்விழித்து சிரித்தது! விசாலம் மந்திரத்தால் ரதியை கட்டி வெளியே நிற்க வைத்தாள். ரதியின் அலறலும், அழுகையும், கெஞ்சலும் வாத்சல்யனின் காதில் விழ, கலங்கினான்! ‘ரதி என்னை மன்னிச்சுடு.’ மானசீகமாய் வேண்டினான்.

விசாலம் மந்திரங்கள் உச்சரித்து முடிக்கும் நேரத்தில் சாம்பிராணி தூபத்துடன் வெண்கடுகு பொடியைத் தூவி வீட்டின் மூலை முடுக்கு அனைத்திலும் எடுத்துச் சென்றாள். வீடு முழுவதும் வெண்கடுகு பொடியின் நறுமணம் நாசியில் சுகமாய் ஏறியதில்... நிம்மதி பெருமூச்சை வெளியிட்டபடி வாசலுக்கு வந்தாள் மாலா. ரதியின் ஆத்மா சாந்தியடைய உதவுமாறு பிரபஞ்சத்திடம் வேண்டினாள். விசாலம் மருமகளை அணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்றாள்.

குழந்தைகள் இருவரும் வாத்சல்யனின் மடியில் தூங்கிக்கொண்டிருக்க, கண்மூடி கலக்கத்தோடு அமர்ந்திருந்த மகனின் தலையை வருடிக்கொடுத்த விசாலம், "நடந்தெல்லாம் கெட்டக் கனவா நினைச்சு மறந்துடுப்பா."

"முயற்சி செய்றேன் மா. முதலில் இங்கிருந்து கிளம்பணும்! அதற்கு முன் சசிதரணியை பார்க்கணும்! மூன்றுமாத விடுமுறைக்கும், மாற்றல் வேண்டியும் அப்ளை செய்யணும்!" என்றவன் மாலாவிடம்...

"என்னை மன்னிச்சுடு மாலா. என்னால் உனக்கு எத்தனை கஷ்டம்..? இப்படியெல்லாம் ஆகும்னு நான் எதிர்பார்க்கலை." குரலில் வருத்தம் இழையோடியது.

"அத்தை... உங்கப் பிள்ளையை மன்னிக்க நான் யாரு... குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கச் சொல்லுங்க அது போதும்! ரதியின் குழந்தைக்கும் நல்ல அம்மாவா இருப்பேன். அத்வைத்தும் இவளும் என்னிரு கண்கள் மாதிரிதான்! எனக்கும் அவருக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லைனு தெளிவான சொல்லி வைங்க".

"ஏன்டி, திமிரா உனக்கு? காலத்துக்கும் எனக்குக் கவலையைக் கொடுத்துகிட்டே இருப்பியா? என் பிள்ளை என்னடி தப்பு செய்தான். காதலிச்சவளோடு கொஞ்ச நாள் வாழ்ந்தான். அது தப்பா? ஆ... ஊன்னா முறுக்கிக்கிட்டு நிற்கிறே. அவள்தான் ஒரேயடியா போய்ட்டாளே, இன்னும் என்ன? ரொம்ப இடக்கு பண்ணாதே. அப்புறம் நடக்குறதே வேற.... ஆமா..."

"சும்மா கத்தாதீங்க. உங்கள் பிள்ளைக்கு வக்கலாத்து வாங்குறதை இன்னியோட நிறுத்திக்கங்க." என்றவள், “இவளுக்கு ஒரு நல்லப் பெயரா வைக்கணும். அதை யோசிங்க மிஸ்டர் வாத்சல்யன்” என்றபடி குழந்தையோடு அறையைவிட்டு வெளியேறினாள்.

வாத்சல்யனின் வாடிய முகம் விசாலத்தை உருக வைத்தது. "காலம் எல்லா மனப்புண்களையும் ஆற்றும் வாத்சல்யா... நீ கவலைப்படாதே..." என்றவள் மருமகளைத் தேடிப் போனாள்.

"மாலா... எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாதே. ஒட்டிக்கிட்டு வந்தவள் எப்படி போராடினாள்னு பார்த்தேல்ல. அதுதான்டி அன்பு. நீ செய்வது அநியாயம்! அவன் துக்கத்தில் இருக்கான். இப்போதுதான் நீ அவனுக்கு அணுசரனையா இருக்கணும்.! ரதி உன்னைப் பிடித்துக்கொண்டிருந்தபோது எப்படித் துடிச்சுப் போனான் தெரியுமா?”

"ஆ... தெரியும்! நல்லாவே தெரியும்" என்ற குரலில் உள்ள ஏளனம் விசாலத்திற்கு சினத்தை மூட்டியது.

"தெரிந்தும் தெரியாத செய்த தவறையெல்லாம் மன்னிக்கக் கற்றுக்கொள் மாலா. நூற்றுக்கு நூறு சரியாக யாராலும் இருக்க முடியாது."

"உங்க பிரசங்கத்தைத் தயவுசெய்து நிறுத்துங்க. மன்னிச்சதால்தான் இதோ இந்தப் பிள்ளை என் மார்பில் பால் குடிக்குது. மறக்கச் சொல்றீங்களே, அதுதான் கஷ்டமா இருக்கு".

இதற்கு மேல் பேசக் கூடாது என்ற தீர்மானத்துடன் குழந்தை அத்வைத்தை தூக்கித் தொட்டிலில் இட்டு படுக்கையில் சாய்ந்தால் விசாலம். ஒரு வாரத்திற்கு அலைச்சலும் வேலைப் பளுவும் உடலை சோர்வுற செய்ததில் ஒருநாள் முழுவதும் தூங்கிக் கழித்த வாத்சல்யன், சசிதரணியை பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லி புறப்பட....

"அத்தை உங்கப் பிள்ளையைப் போக வேண்டாம்னு சொல்லுங்க. எனக்கு மனசுக்கு சரியா படலை." என்ற மாலாவிடம்...

"எல்லாத்துக்கும் தடை சொன்னால் எப்படி மாலா. குழந்தையை ஒருவாரம் அவள்தான் காப்பாற்றி வச்சிருந்தாள். அதற்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கோம் என்பதை மறந்துடாதே."

"நாளை புறப்படப் போறோம் என்பதை ஃபோன் செய்து சொன்னால் போதாதா.? இந்த ஊரின் எல்லையைக் கடக்கும்வரை உங்கள் பிள்ளை ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.”

"அம்மா... நான் போகலைம்மா" என்ற வாத்சல்யன் குழந்தை அத்வைத் உடன் விளையாடத் துவங்கினான். ஒரு அடிக்கும் குறைவாக, குச்சிக்குச்சியாய் கால்களும், கைகளுமாய் கண்கள் மட்டும் பெரிதாக துறுவென்று இருந்த ரதியின் குழந்தையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மாலா. ரதியின் சாயல் துளியும் இல்லாமல் இருந்ததில், மனம் சற்று லேசானது. வாத்சல்யனின் முக அமைப்போடு அழகாக இருந்தாள். அப்பாவின் சாயலில் பெண் இருப்பது அதிர்ஷ்டம் என்பார்கள் என்று நினைத்தபோது, தன்னை ஒப்பிட்டுப் பார்த்தாள். ஒரு அதிர்ஷ்ட மண்ணுமில்லை. நான் பதினாறு வயதில் தாயை இழந்தேன். நீ பிறந்தவுடன் இழந்துவிட்டாய். வேறொன்றும் நமக்குள் வித்தியாசமில்லை. ஆனால், உன் அப்பாவை உனக்கேற்ற மாதிரி உன் மேல் பாசமுள்ளவராக மாற்றுவேன். உனக்கு எந்தக் குறையுமில்லாமல் வளர்ப்பேன். அத்வைத் போல் நீயும் என் குழந்தைதான் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள். மாலாவின் மன ஓட்டம் புரிந்த மாதிரி குழந்தை சிரிக்க, குனிந்து அதன் நெற்றியில் முத்தமிட்டாள்.

வழியனுப்ப வந்த சசிதரணியிடம், வீட்டை விற்பதற்கான ஏற்பாட்டை செய்ய சொல்லி சாவியைக் கொடுத்த வாத்சல்யனிடம், "அதற்கு என்ன அவசியம் வந்தது? அவ்வப்போது பராமரித்து வைக்கிறேன். நாளை இவள் வளர்ந்து வரும்போது தேவைப்படலாம். இந்தக் குட்டிக்குக் கல்யாணப் பரிசாகத் தரலாமே. யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் இவளே கூட இங்கு வந்து வசிக்கக் கூடும்” என்ற சசிதரணி குழந்தையின் தலையை வருடினாள். வாத்சல்யன் தன் அம்மாவைப் பார்க்க, விசாலம் மாலாவை பார்க்க, மாலா சசிதரணியிடம்... “ரதிக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்ததென்றால், தாராளமாய் செய்யலாம். அம்மாவின் ஆஸ்தி பெண்ணுக்குத்தானே” என்றாள்.

"மிகச்சரியாகச் சொன்னாய் மாலா. ரதியின் ஆசை அதுதான்! ஆனால், காலம் தீர்மானிப்பதை நாம் ஏற்றுக்கொள்வோம். அதுவரை நாமாக எந்த முடிவும் எடுக்க வேண்டாமே என்றுதான் சொன்னேன். ரதி என் மாமன் மகள். நான் ரதிக்கு அத்தை மகள்! நாங்கள் இருவருமே அந்த வீட்டில்தான் பிறந்தோம். என்னைவிட ரதி மூன்று வயது சிறியவள், புத்திசாலி! புத்திசாலிகள்தான் இப்படியான தவறை செய்வார்கள்" என்று வருத்தத்துடன் கூறினாள்.

இரயில் புறப்படுவதற்கான நேரம் வர, மெதுவாக நகர ஆரம்பித்து வேகம் எடுக்கும்வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.

( திகில் தொடரும் )

-இளமதி பத்மா

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்... ‘சூட்சும உலகம்’ #17

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT