ADVERTISEMENT

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #11

11:33 AM Nov 01, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுவற்றில் அடித்த பந்தாகத் திரும்பி வந்த வாத்சல்யன் அமைதியாக வந்து அமர்ந்ததும், என்ன நடந்திருக்கும் என்று ஒருவாறு ஊகித்தாள் ரதி. தன்னை கடுமையாகப் பேசி நிராகரித்த விசாலத்திற்கு இந்தப் படிப்பினை காலத்திற்கும் மறக்காது. பிள்ளையைப் பெற்ற கர்வத்தில் என்னென்ன பேசினாள்... ? என்னை எப்படியெல்லாம் அழ வைத்தாள்...? அம்மாவை எப்படியெல்லாம் ஏசினாள். பக்குவமாகப் பேசிப் புரிய வைத்திருந்தால் விட்டுக் கொடுத்திருப்பேன். மனதை ரணமாக்கி அதில் கொதிக்கும் எண்ணெய் விட்டதுபோல் ஆங்காரமான பேச்சு! இப்போது அழட்டும்! இதோடு முடியாது! என் மனம் ஆறும்வரை பழிவாங்குவேன். மாலாவை நினைத்துப் பரிதாபப்பட்டாலும் அவளுக்கும் இந்தப் பிரிவு தேவைதான்! நடையிலும், பார்வையிலும் என்ன ஒரு அலட்சியம்...?! அத்தை மகன்! தன்னைப் பிரிந்து செல்ல மாட்டான் என்ற தைரியம்தானே... என்று தனக்குள் பேசிக்கொண்டாள். ஆனால்... முகத்தில் வருத்தத்தைத் தேக்கியபடி வாத்சல்யனின் அருகில் அமர்ந்தாள். மடியில் படுக்க வைத்து தலையைக் கோதினாள்.

"நீர் அடித்து நீர் விலகுமா... ஏன் வருத்தப்படுறே.. நீ எந்த தவறும் செய்யலை. அம்மாவிற்காகத்தான் மாலாவை மணந்தாய். என் பிறந்தநாளில் உன் கண்களில் காதலைப் பார்த்தேன். அனைவரும் சென்ற பிறகு, போதையில் அருகில் வந்தாய். பின் சுதாரித்து தோளைக் குலுக்கியபடி ஓடிவிட்டாய். அடக்கப்பட்ட உணர்வுகள் ஆர்ப்பரித்து நீ வேண்டும் என்று அடம்பிடித்தது. அன்றுதான் தீர்மானித்தேன். எப்படியும் உன்னை விடக் கூடாதென்று! ஆனால் நீ நழுவிக்கொண்டே போனாய்.

"So... பிளான் பண்ணித்தான் பிடிச்சிருக்கே அப்படித்தானே..." என்றான் வாத்சல்யன்.

"அப்படித்தான் வச்சுக்கோ. நான் ஏன் தனிமையில் சாகணும்...? மாலா எனக்கு விட்டுக்கொடுத்தே ஆகணும்!"

"இனி மாலா என்னை ஏற்க மாட்டாள். உனக்குத் திருப்திதானே.. ?"

"ஆ... இது பயமுறுத்தல்! பத்துநாட்கள் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்காதே! அவளே வருவாள். உன் மனைவி தேவதை போலவும், என்னை சராசரிப் பெண்ணாகவும் பார்க்கிறாய். கட்டிய மனைவி உனக்கு முக்கியம் என்றுதான் சோகமாய் இருக்கிறாயா...? நானும் உன் மனைவியாகி ஏழு மணி நேரமாச்சு மறந்துடாதே."

"உன் பேச்சும் போக்கும் எனக்குப் பயத்தைத் தருகிறது ரதி!"

"குமாரை மணந்துகொள்ளப் போகிறேன் என்றதும் உன் கண்ணில் தெரிந்ததே அதுதான் பயம்! உன் காதலி யாரையும் மணக்கக் கூடாது என்ற பதற்றத்தில், நான் முக்கியமா... அவன் முக்கியமா... என்று கோபத்தில் கத்தினாயே அது பயம்! அருகில் வந்து அணைத்ததும் எந்த தயக்கமும் இன்றி அணைத்துக்கொண்டாயே அது காதல். காதலற்றக் காமம் என்னைப் பொறுத்தவரை அசிங்கம்! உண்மையைச் சொல்! மாலாவோடு நெருக்கமாய் இருந்தபோது, நேற்றைய சந்தோசம் கண்டிப்பாய் கிடைத்திருக்காது. அது சாதாரண உடல் தேவை! "

"நிறுத்து ரதி! மாலா என் மாமன் மகள். அவள்மேல் எனக்கும் என்மேல் அவளுக்கும் அன்புண்டு. பரஸ்பரம் அன்பைத்தான் பரிமாறிக்கொண்டோம். உடல் தேவை என்று கொச்சைப்படுத்தாதே."

"வத்சு... ஏதேதோ சொல்லி உன்னைக் கட்டுப்படுத்துறதா நினைக்காதே... அப்படியான எண்ணம் எனக்கில்லை. நீ எப்போது வேண்டுமானாலும் போகலாம்... வரலாம்!" என்றபடி குனிந்து முத்தமிட முயன்றபோது...

"ரதி... ப்ளீஸ், இப்ப எதுவும் வேண்டாம். மனசு சரியில்லை!"

"ஏன்... ஏன்... என்னை விட்டுட்டு மாலாவை மணந்தபோது மனசு நல்லா இருந்ததா... உன்னை நினைத்து நினைத்து தினம்தினம் அழுதிருக்கிறேன். ஆறுதலாக ஒரு வார்த்தையாவது உன் வாயிலிருந்து வந்ததா...? இத்தனை சுயநலக்காரனா நீ...?!"

"ரதி... என்னைப் புரிந்துகொள்ள முயற்சி பண்ணு ப்ளீஸ்" என்றபடி எழுந்தவன் வாசலை நோக்கி நடக்க... ரதியின் மனது கொந்தளித்தது.

***

மனக்குழப்பத்துடன் எங்கெல்லாம் அலைந்து திரிந்து வீடு வந்து சேர்ந்தான். நீளமாக அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தான். கதவைத் திறந்த விசாலம், மகனின் முகத்தைப் பார்த்ததும் கலங்கினாள். "கை, கால் அலம்பிட்டு சாப்பிட வா." அதட்டலாய் கூறிவிட்டுச் செல்ல... அமைதியாகச் சென்று மாலாவின் அருகில் அமர்ந்தான்.

"என்னை மன்னிச்சுடு மாலா..." சன்னமாகப் பேசினான். தூங்குவதாக பாவனை செய்த மாலா, அமைதியாக இருந்தாள். மனைவியின் கால்களில் முகம் புதைத்து கண்ணீர் சிந்தினான். வாத்சல்யனைத் தேடிவந்த விசாலம் இதைக் கண்டதும் கலங்கினாள். எழுந்து வாடா சாப்பிட... பெத்த வயிறு எரியுது!" என்றதும், படாரென்று எழுந்தாள் மாலா...

"ஏன் எரியுது... உங்க ஆணவத்தால் மூன்றே மாசத்தில் என் வாழ்க்கை போச்சு! அவளைக் கட்டி வச்சு தொலைச்சுருக்கலாமே..."

"நடந்தது நடந்து போச்சு! என்னடி பண்ண சொல்ற.. காலில் விழுந்து கதறுறான். அசையாமல் படுத்திருக்க. உங்கம்மாவோட கொழுப்பு அப்படியே இருக்கு! செய்த தவறுக்கு எவன்டி காலில் விழுவான்...? மன்னிச்சுட்டேனு ஒரு வார்த்தை சொன்னால் முத்து உதிர்ந்திடுமா...?

"ஒரு மன்னிப்போட முடிஞ்சு போகிற விசயமில்லை இது! உன் பிள்ளையை இனி அவளோடயே வாழச் சொல்லு. எனக்குப் பிடிக்கலை. என் பக்கமே வரக் கூடாது."

"மாலா... நீ பேசுறது சரியில்லை. தப்பை உணர்ந்து திரும்பி வந்திருக்கான். பிடிவாதம் பிடிக்காதே."

"இந்த தப்பை நான் செய்திருந்தால்... மன்னிப்பு கிடைக்குமா...?! அப்படி என்ன மயக்கம் அவள்மேல்... பொண்டாட்டி நினைப்பு வரலையா...? வரலைனா... இனியும் வரக் கூடாது! எழுந்து போகச் சொல்லு.!"

"வாத்சல்யா... எழுந்து வந்து சாப்பிடு. இவளோட வீம்பு எத்தனை நாளைக்குனு நானும் பார்க்கிறேன்" என்ற விசாலம் மகனை அழைத்துக்கொண்டு போனதும், கதவை சாத்தி தாழ் போட்டாள் மாலா. தாத்தாவை நினைத்தாள். எனக்குத் துணையா இருப்பேன்னு சொன்னியே தாத்தா.... கைவிட்டுட்டியே... என்று மனதிற்குள் புலம்பி அழுதபடி தூங்கிய பின்... கனவில் தாத்தா... கையில் ஒரு பெண் குழந்தை! 'இதை வளர்த்துவிடும்மா பாவம்!' என்று கொடுக்க, இரு கை நீட்டி வாங்கிக்கொள்ள, சட்டென முழிப்பு தட்டியது! "என்ன கனவு இது...? அத்தையிடம் சொல்லலாமா.... வேண்டாமா என்று யோசித்து, வேண்டாம் என்று முடிவு செய்தாள். பின் தாமதமாக உறங்கி, தாமதமாகவே எழுந்தாள். குளித்துவிட்டு வெளியே வந்தபோது வாத்சல்யன் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அலைபேசி அடித்தவாறே இருக்க, எட்டிப் பார்த்தவள் ரதி என்று தெரிய... மெளனமாகக் கடந்து சென்றாள்.

இரண்டு நாட்கள் ஆஸ்பிட்டலை மறந்து அம்மாவின் மடியே தஞ்சம் என்றிருந்தவன், மூன்றாவது நாள் வெள்ளைக் கோட்டுடன் வெளியேறினான். வேலை முடிந்து ரதியைத் தேடிச் சென்றான்.

"வாங்க சார். மனைவியோடு ராசிதானே..."

"அதை விடு! ஒருவாரம் விடுமுறை எடுத்தது மட்டும்தான் தெரியும். டிரான்ஸ்பர் கேட்டு லெட்டர் கொடுத்தியாமே... அதற்கென்ன அவசியம்...?"

"ஏன்... உன் மனைவியோடு சக்களத்தி சண்டை போட்டுக்கொண்டு இங்கேயே இருக்கச் சொல்றியா.... அது முடியாது!. ஆஸ்பிட்டல் வரை என் மானம் போகணுமா...? உங்கம்மா என்ன வேண்டுமானாலும் செய்வாங்க. சொந்த ஊருக்குப் போய்விட்டால்.. வாடகையாவது மிச்சமாகும். அம்மா இறந்த பிறகு வீடு பாழாகிவிட்டது. இரண்டு நாளில் கிளம்புறேன். போய் சரி செய்யணும்."

"என்னைக் கேட்காமல் நீயே முடிவெடுத்தால் எப்படி ரதி..."

"என்னை கேட்டா கல்யாணம் செய்துகொண்டாய்..? என்னிடம் மட்டும் எப்படி உரிமையை எதிர்பார்க்கிறாய்"...?

"ரதி... என்னை பழி வாங்குகிறாயா...?" உன் காதல் இவ்வளவுதானா...?"

" என்னைக் கொடுத்து என் காதலை நிரூபித்துவிட்டேன் வத்சு. உன் காதல் உண்மையென்றால் என்னோடு வா."

"அதெப்படி முடியும்...? நான் தனி மனுசனில்லை!"

"பரவாயில்லையே... இரண்டே நாளில் மனைவி சொக்குப் பொடிப் போட்டுட்டாளா..." என்று சிரித்த ரதியை முறைத்தான்.

"வாயை மூடு. அவள் என்னோடு பேசவே இல்லை. என்னோடு வாழ விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாள்."

"அப்பறம் என்ன தயக்கம் வர வேண்டியதுதானே... புது இடம், புது வாழ்க்கை!" என்ற ரதி வாத்சல்யணை அணைத்துக் கொள்ள...

"என்ன வாசனை இது! என்ன சோப் உபயோகிக்கிறாய் என்று ரதியின் முகம் முழுவதும் முகர்ந்து பார்த்தவன், இதழ்களில் முத்தமிட... ரதி சிணுங்க, காதலும் காமமும் ஒன்று சேர்ந்து இருவரின் மனங்களும் மலர்ந்து மணம் வீசத் துவங்கியதில் ஒருமாத விடுப்பில் ரதியுடன் கேரளா செல்ல ஒப்புக்கொண்டான். இரண்டு நாட்களாக தான் செய்த வசியம் சித்தியானதில் மகிழ்ந்தாள் ரதி. இனி வாத்சல்யன் தன் பிடிக்குள் வந்துவிடுவான் என்று கணக்குப் போட்டாள். அம்மா கற்றுக்கொடுத்த வசிய மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லச் சொல்ல, மாலாவின் நினைப்பு வராது என்று தவறாகக் கணக்குப் போட்டாள். விதிகள்படி இயங்கும் பிரபஞ்சத்திற்கு எதிராக மனிதன் வாழ முடியுமா என்ன...?!

"கெடுவான் கேடு நினைப்பான்" என்ற பால பாடத்தை மறந்த வாத்சல்யன் ரதியுடன் பயணத்திற்குத் தயாரானான். கேரளா போவதாகவும் வாரம் ஒருமுறை வருவதாகவும் சொன்னதோடு, புறப்படுவதற்கு முதல் நாள் மாலாவிடம்...

"நீ உன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்! இல்லையென்றால் ரதியோடு நிரந்தரமாய் தங்க நேரிடும்" என்று மிரட்ட...

" எனக்கு ஆட்சேபனை இல்லை. தாராளமாய் தங்கிக்கொள்ளலாம். உங்கள் விதி உங்களை இழுத்துச் செல்கிறது. தடுக்கக் கூடியதைத் தடுக்கலாம். தடுக்க முடியாத ஒன்றை அப்படியே விட்டுடணும்னு தாத்தா சொன்னார். நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள்தானே சொன்னீர்கள். ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டேன்."

"ஞானி போல் பேசாதே. உன்னை ஒரு நொடியில் பலவந்தப்படுத்திப் பணிய வைக்க முடியும்! கணவன் என்ற உரிமை இருக்கிறது! அதை நான் விரும்பவில்லை!"

"ஓ.... முயற்சி செய்துதான் பாருங்களேன்" என்ற மாலாவை மூர்க்கமாய் அணைக்க முயன்றபோது... தனது குலதெய்வம் ரேணுகாதேவி போல் தெரிய ... மிரண்டு பின்வாங்கினான்.!

-இளமதி பத்மா

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #10

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT