ADVERTISEMENT

துப்பில்லாதவன் என்றால் என்ன தெரியுமா ? - சொல்லேர் உழவு பகுதி 38

04:02 PM May 22, 2019 | santhoshkumar

சொல் என்பது எழுத்துகளால் ஆவது. ஓர் எழுத்து என்பது ஓர் ஓசையைக் குறிக்கும் வரி வடிவம். பல்வேறு ஒலிக்குறிப்புகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவமே சொல்லாகிறது. அதனை எழுத்துருவில் எழுதி வைக்கிறோம். அதுவே சொற்களின் எழுத்து வடிவம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

எல்லாவற்றையும் எழுத்து வடிவிலேயே பார்த்தும் படித்தும் பழகிவிட்டமையால் எழுத்துகளை அடிப்படையாகக்கொண்டே ஒரு சொல்லைக் கற்பிப்பதும் உணர்த்துவதும் நடைமுறைக்கு வந்துவிட்டது. எண்ணிப் பாருங்கள், தமிழ்ச் செய்யுள்கள் யாவும் பாடுவதற்கென்றே இயற்றப்பட்டன. பக்தி இலக்கியத்தில் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு படித்தபடி அமர்வதற்கும் பாடிப் பார்ப்பதற்கும் இடையே மலையளவு வேறுபாடுண்டு. ஆனால், நாம் படிப்பதோடு சரி. எந்தப் பாடலையும் பாட முயல்வதில்லை. தாய்மொழி இலக்கியத்தை நாவில் இருத்த வேண்டும். அதனை விடுத்து வெறுமனே செய்தித்தாள் படிப்பதைப்போன்று செந்தமிழ்ப் பாக்களைப் படித்துச் செல்கிறோம். நிகழ்காலம் திணித்த முரண்களில் இஃதும் ஒன்று. நிற்க.

எழுத்துகளால் ஆவதுதான் சொல் என்று பார்த்தோம். ஒரு சொல்லுக்கு ஒற்றை எழுத்தே போதும். ஓர் எழுத்தே ஒரு சொல்லாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளாலும் ஒரு சொல் அமையும். பூ என்ற எழுத்தை எடுத்துக்கொள்வோம். பூ என்பது தனியாய் ஓர் எழுத்து. பூ என்னும் எழுத்தே ஒரு சொல்லாகவும் பயில்கிறது. இவ்வாறு ஓர் எழுத்தே ஒரு சொல்லாகவும் பயில்வதனை ஓரெழுத்து ஒருமொழி என்பார்கள். மொழி என்பதற்கு இங்கே சொல் என்று பொருள். ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளால் ஆகிய சொல்லுக்குத் தொடரெழுத்து ஒருமொழி என்று பெயர். பூ என்பது ஓரெழுத்து ஒருமொழி. பூங்கா என்பது தொடரெழுத்து ஒருமொழி.

ஓரெழுத்து ஒருமொழியாகப் பயில்வனவற்றில் நாற்பத்திரண்டு எழுத்துகளைச் சிறப்பித்துக் கூறுகிறது நன்னூல். அவற்றில் நாற்பது நெடில் எழுத்துகள். இரண்டு குறில் எழுத்துகள். நொ, து ஆகிய இரண்டு குறில் எழுத்துகளும் தனிச்சொற்களாகவும் பயிலும். நொ என்றால் துன்பப்படு என்று பொருள். நொந்தான் என்று சொல்கிறோமே அச்சொல்லின் வினைவேர் நொ. து என்பதற்கு உண், சாப்பிடு என்னும் பொருள்கள். துப்பார்க்கு என்றால் உண்பவர்க்கு என்று பொருள். துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை – என்னும் குறள் நினைவுக்கு வருகிறதா ? து என்பதற்குப் பொருள் தெரிந்திருந்தால் இக்குறளை நாம் நகைப்புக்குப் பயன்படுத்தியிருக்கமாட்டோம். “உண்போர்க்கு உண்ணுமாறு உணவாக்கித் தந்து உண்போர்க்கு உண்ணத் தகுந்த உணவும் ஆகும் மழை” என்பது அக்குறளின் பொருள். துப்பில்லாதவன் என்றால் உண்பதற்கு இல்லாதவன்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ ஆகிய ஆறும் உயிர் நெடிலெழுத்துகளில் தனிச்சொல்லாகப் பயில்பவை. ஆ என்பது பசு. ஈ என்பது பறக்கும் சிற்றுயிர். ஊ என்பது இறைச்சி. ஏ என்பதற்கு மிகுதி என்ற பொருளுண்டு. ஐ என்பவன் தலைவன். அதிலிருந்தே ஐயன் என்ற சொல் பிறக்கிறது. மதகு நீரைத் தாங்கும் பலகைக்கு ஓ என்று பெயர். ஔ என்பதும் சுட்டுப்பொருளைத் தரும். அதனை நன்னூல் சிறப்பாகக் கொள்ளவில்லை.

மா (பழம்), மீ (வானம்), மூ (முதுமையுறு), மே (அன்பு), மை (நீர், கறுப்பு), மோ (குடத்தில் தண்ணீர் மோப்பது) ஆகிய ஆறும் மகர வருக்கத்தில் அமைந்த ஓரெழுத்து ஒருமொழிகள். மூத்தான் என்று முதிர்ந்ததைக் குறித்து வரும் வினைமுற்றில் மூ என்பதே வினைவேர்.

தா (கொடு), தீ (நெருப்பு), தூ (பறவையின் இறகு), தே (கடவுள்), தை (திங்கள், தைப்பாயாக என்று ஏவுதல்) ஆகியன தகர வருக்கத்தில் அமைந்த ஓரெழுத்து ஒருமொழிகள். தே கடவுள் என்ற பொருளில் பயில்கையில் தேவர் என்ற சொல்லினை வடசொல்லென யாரேனும் கூறினால் நாம் ஏற்பதற்கில்லை.

பா (பாடல்), பூ (மலர்), பே (அச்சம்), பை (பசுமை), போ (செல்) ஆகியன பகர வருக்க ஓரெழுத்து ஒருமொழிகள். பே என்பது அச்சத்தைக் குறிப்பதால்தான் பேய் என்ற சொல் ஆகியிருக்க வேண்டும். பேய் என்பது தமிழ்ச்சொல். பிசாசு என்பது வடசொல்.

நா (நாக்கு), நீ (முன்னிலை), நே (அன்பு), நை (நைதல்), நோ (நோதல்) என்பன நகர வருக்கத்தில் சொல்லாய் அமைந்து பொருள் தருகின்றன. நே என்பதிலிருந்து நேயம் வந்து நேசம் ஆயிற்று.

கா (சோலை), கூ (பூமி), கை (ஓர் உறுப்பு), கோ (அரசன்) ஆகியன ககரத்தில் அமைந்த ஓரெழுத்து ஒருமொழிகள். கீ, கே ஆகிய இரண்டு எழுத்துகளுக்கும் ககரத்தில் சிறப்பான பொருள் வழக்கில் இல்லை என்பது வியப்பே.

வா (வருதல்), வீ (வீழ்நிலையிலுள்ள பூ), வை (வைத்தல்), வௌ (கவர்தலுக்கான ஏவல்) ஆகிய நான்கும் வகர ஓரெழுத்து ஒருமொழிகள். வௌவுதல் என்பதுதான் பலப்பல அகராதிகளில் கடைசிச் சொல்லாக இருக்கும். அதற்குப் பிறகு உள்ள எழுத்துகள் ஒரு சொல்லுக்கு முதலெழுத்தாவதில்லை.

சா (இற), சீ (ஒளி), சே (சிவப்பு), சோ (அரண்) ஆகியன சகரத்தில் அமைந்த ஓரெழுத்து ஒருமொழிகள். சாவு எனப்படுவது சா என்னும் வினைவேரின்வழி வந்தது. சாவு, பூவு, கூவு என்று உகர ஈற்றோடு நீட்டல் நம் பேச்சு வழக்கு.

பகாப்பதம் என்று கூறப்படுவனவற்றில் ஓரெழுத்து ஒருமொழிகட்குத் தலையாய இடமுண்டு. ஏனெனில் அவை ஒற்றை எழுத்தாகவே இருப்பதால் அவற்றைப் பகுத்தல் இயற்கையாகவே இயலாது. இங்கே அடைப்புக்குள் பொருளாகக் கொடுத்திருப்பது அச்சொற்களுக்கு வழங்கப்படும் பல பொருள்களில் ஒன்றைத்தான். அவற்றுக்கு மேலும் பற்பல பொருள்களும் வழங்கப்படுகின்றன. பை என்ற ஒரு சொல்லுக்கு மட்டும் ”அழகு, குடர், சாக்கு, நிறம், பசுமை, பச்சை, பாம்பின் படம், பை என்று ஏவுதல், பொக்கணம், மந்தம், இளமை, உடல்வலி, கொள்கலம், உடல், உள்ளுறுப்பு” ஆகிய பல பொருள்கள் காணப்படுகின்றன.

முந்தைய பகுதி

பெண்ணின் கூந்தலை அள்ளி முடிக்க ஐந்து வகைகள் உள்ளன - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 37

அடுத்த பகுதி:

புதிதாய் ஒரு சொல்லை ஆக்குவது எப்படி ? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி39

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT