Skip to main content

பெண்ணின் கூந்தலை அள்ளி முடிக்க ஐந்து வகைகள் உள்ளன - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 37

எண்களோடு தொடர்புடைய சொற்கள் பல நம் மொழியில் இருக்கின்றன. ஒரு வழியில் போவதோ வருவதோ மட்டும்தான் முடியும் என்றால் அதனை ‘ஒருவழி’ என்போம். ஒருவழிப் பாதை. போகவும் முடியும் வரவும் முடியும் என்றால் அதனை ‘இருவழி’ என்போம்.
 

soller uzhavu


‘ஒருசுடர்’ என்றால் அது கதிரவனைக் குறிக்கும். ‘இருசுடர்’ என்றால் அது கதிரையும் நிலவையும் குறிக்கும். ‘இருபாலரும் வரலாம்’ என்றால் ஆண்பால், பெண்பால் என இருவரும் வரலாம் என்று பொருள். அவர் எழுதிய நூல்களைப் பிறவற்றோடு ஒப்பிடுகையில் ‘ஒருபடி’ மேலே இருக்கிறது என்கிறார்கள். உயர்வான இடத்தில் இருப்பது ‘ஒருபடி’ உயர்வாகக் கூறப்படுகிறது. ‘ஒருகை பார்த்துவிடுகிறேன்’ என்கிறோம்.

ஏதேனும் ‘ஒருகை’ ஓங்கி நிற்குமாறு மோதி நிலை நிறுத்துவேன் என்று கூறுவதாகக் கருதலாம். இவ்வாறு ஒவ்வோர் எண்ணோடும் தொடர்புடைய சொற்கள், சொற்றொடர்கள் பல இருக்கின்றன. ஒன்றினைத் தனியே கூறுவதற்கு மாற்றாக அவ்வெண்ணைப் பயன்படுத்தி ஒரே சொல்லில் தொகுத்துக் கூறிவிடலாம். எண்ணுப் பெயர்களால் ஒரு மொழிக்குக் கிடைக்கும் சொல்வளம் என்பது இதுதான்.

மூன்று என்ற எண்ணைச் சுற்றி அமைந்த சொற்களுக்கு அளவில்லை. இயல், இசை, நாடகத்தமிழ் என்று விரித்துச் சொல்லாமல் ‘முத்தமிழ்’ என்றால் போதும். அங்கே மூன்றின் குறிப்பு இயலும் இசையும் நாடகமுமாம். முக்கனி என்றால் மா, பலா, வாழை. சேரர் சோழர் பாண்டியர் என்று விரித்துக் கூற வேண்டியதில்லை. மூவேந்தர் என்றாலே போதும்.

மூன்று ஆறுகள் கூடும் ஊர்கள் முக்கூடல் என்றே அழைக்கப்படும். மூன்று தெருக்கள் ஒன்றோடொன்று கலக்குமிடம் முச்சந்தி. வயிற்றுத் தீ என்று பசியைச் சொல்கிறோம். முத்தீ என்று மூவகைத் தீயினைப் பற்றிக் கூறுகிறார்கள். வயிற்றுத் தீ, காமத் தீ, சினத் தீ ஆகியனவே அம்மூன்று. முப்பாட்டன் என்றால் பாட்டனின் தந்தை. தந்தை, பாட்டன், முப்பாட்டன் என்று பின்னோக்கிச் சென்றால் மூன்றாம் தலைமுறை. அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றினையும் முப்பால் என்கிறோம்.
 

soller uzhavu


‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ என்று ஒரு திரைப்படம்கூட வந்தது. அதில் இடம்பெற்ற முப்பொழுது என்பது என்ன? மூன்று பொழுதுகளைக் குறிப்பதுதான் முப்பொழுது. காலை, நண்பகல், மாலை என்னும் மூன்று பகல் பொழுதுகளே முப்பொழுது. ஒரு திங்களில் மூன்று மழை பெய்வது மும்மாரி. இப்படி மூன்றினைக் குறித்து ஆகிய சொற்றொடர்கள் அந்தந்தப் பொருளைச் சுட்டும்படி பரவியிருக்கின்றன.

நான்கு என்ற எண்ணில் உள்ள சொற்களை நினைவுபடுத்திப் பாருங்கள். கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்பதற்கு மாற்றாக ‘நாற்றிசை’ என்றாலே போதும். நான்மறைகள் என்று வடவர் வேதங்கள் அறியப்படுகின்றன. பாலை தவிர்த்த குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் நானிலம் எனப்படும். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகிய நான்கும் பெண்களுக்குக் கற்பிக்கப்பட்ட நாற்குணம். யானை, குதிரை, தேர், காலாட்படைகளைக் கொண்ட அரசன் நாற்படைகளைக் கொண்டவனாவான். நான்முகன் ஆவான் அருகன்.

ஐந்து என்ற எண்ணால் ஆகிய சொற்கள் பற்பல. ஐம்பொறி என்றால் கண் காது மூக்க நாக்கு தோல். ஐம்பேரியற்கை (பஞ்ச பூதங்கள்) என்பது நீர் நிலம் காற்று தீ விசும்பு. பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் கலந்தது ஐம்பொன். ஐம்பால் என்பது ஆண்பால் பெண்பால் பலர்பால் ஒன்றன்பால் பலவின்பால் ஆகிய ஐவகைப் பால்பகுப்புகளைக் குறிப்பதுதான். ஐம்பால் என்பதற்கு இன்னோர் அழகிய பொருளும் உள்ளது.   

பெண்கள் தங்கள் கூந்தலை ஐந்து வகைகளாக முடிப்பதற்கும் ஐம்பால் என்று பெயர். இது சங்க காலக் குறிப்பு. ஒரு பெண் தன் கூந்தலை ஐந்து வகைகளாக முடியிடுகிறாள். முடி, கொண்டை, குழல், சுருள், பனிச்சை என்பனவே அவ்வைந்து வகைகளாம்.

முடி என்பது என்ன ? மலையின் உச்சிப் பகுதியை முடி என்கிறோம். அதுபோல ஒரு பெண் தன் கூந்தலை மலையின் முடியைப்போலத் தன் தலையுச்சியில் வைத்து முடிவது முடி எனப்படும். கொண்டை என்பது நமக்குத் தெரியும். கூந்தலைச் சுருட்டி இடப்பக்கமோ வலப்பக்கமோ திரளாகத் தொகுத்துக்கொள்வது. கூந்தலை மலர்ச்சரங்களோடு வைத்துப் பின்னிச் செருகினால் அதற்குச் சுருள் என்று பெயர். கூந்தலை அள்ளி முடிந்தால் அதற்குக் குழல் என்று பெயர். கூந்தலைச் சடையாகப் பின்னிக்கொண்டால் அதற்குப் பெயர் பனிச்சை. இத்தகைய ஐவகைக் கூந்தல் முடிமுறைகளையும் ஐம்பால் என்கின்றனர். 

 

முந்தைய பகுதி:

எரி என்னும் சிறுசொல்லுக்குப் பற்பல பயன்பாடுகளா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 36
 

அடுத்த பகுதி:

துப்பில்லாதவன் என்றால் என்ன தெரியுமா ? - சொல்லேர் உழவு பகுதி 38

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்