ADVERTISEMENT

காணாமல் போன 40 ஆயிரம் டன் பொருட்கள்; கடத்தலின் சுவாரசிய பின்னணி - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 19

12:44 PM Dec 22, 2023 | dassA

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் காணாமல் போன 40 ஆயிரம் டன் பொருட்களுக்கான இன்சூரன்ஸ் கேட்டது குறித்து விவரிக்கிறார்.

ADVERTISEMENT

மலேசியா, சிங்கப்பூர், சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இரும்பு கடைகளெல்லாம் கிடையாது. பொருளின் தேவை முடிந்ததும் நசுக்கி போட்டு துண்டாக்கி போட்டு விடுவார்கள். நமது நாட்டிலிருந்து அங்கே சென்று காப்பர், அயர்ன், அலுமினியம் போன்றவற்றை வாங்கி வருவார்கள். சென்னை மாதவரம், மணலி போன்ற பகுதிகளில் இரும்பை உருக்கி பொருட்கள் செய்கிற நிறைய தொழிற்சாலைகள் உள்ளது. அங்கே சென்று கொண்டு வரப்படும் அயர்ன், காப்பர், அலுமினியம் வேறு பொருட்களாக மாற்றமாவதற்கு உதவும்.

ADVERTISEMENT

சட்டப்படி கொண்டுவரப்படும் எந்த பொருட்களுக்கும் துறைமுகத்தில் சுங்கவரி கட்ட வேண்டும். வரி கட்ட முடியாவிட்டாலோ, அல்லது தவறினாலோ அந்த பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி தங்களது அலுவலக குடோன்களில் பாதுகாத்து வைப்பார்கள், அல்லது தனியார் குடோன்களில் வாடகை செலுத்தி பாதுகாத்து வைத்திருப்பார்கள். கைப்பற்றிய பொருட்கள் வரி கட்டியதும் விடுவிக்கப்படும்.

அப்படி பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் மழை வெள்ளம் புயல் பாதிப்புகளால் சேதமடையாமல் இருக்க இன்சூரன்ஸ் செய்யலாம் என ஒரு இன்சூரன்ஸ் முகவர் சொல்ல, வெளிநாட்டிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டு வரி கட்டாமல் வைத்திருந்த இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு அதனை இறக்குமதி செய்தவர் இன்சூரன்ஸ் செய்து வைக்கிறார்.

ஒருநாள் இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு குடோனில் பாதுகாத்து வைத்திருந்த 40 ஆயிரம் டன் அயர்ன், காப்பர், அலுமினியப் பொருட்களை காணவில்லை என்றும் அதற்கு இன்சூரன்ஸ் செய்திருக்கிறேன், அதற்கான தொகையை தரவும் என்று வந்து நிற்கிறார். நாங்கள் செய்தியின் உண்மைத் தன்மையை அறிய இடத்திற்கு விரைந்தோம். பெரிய குடோனின் முன் பக்கம் பூட்டி இருக்கிறது, ஆனால் பின்பக்கம் உடைக்கப்பட்டு பொருட்கள் எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

கஸ்டம்ஸ் ஆபீசர்களை தொடர்புகொண்டு பொருட்களை கையகப்படுத்தி வைத்திருந்தீர்களே நீங்கள் இன்சூரன்ஸ் செய்தீர்களா என்றால் இல்லை என்கிறார்கள். ஆனால் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அதிகாரிகள் வசம் இருந்தும், அதற்கு சொந்தக்காரர் இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறார் என்பதும் எங்களுக்கு சின்ன சந்தேகம் வந்தது. அதன் அடிப்படையில் விசாரித்தோம்.

அந்த பகுதியில் இருந்த ஒரு மதுப்பிரியரோடு மூன்று நாட்களாக பழகியதில் அவர் ஒரு விசயத்தைச் சொன்னார், இந்த குடோனில் இருந்த பொருளை எல்லாம் யாரும் திருடல, பொருளுக்கு சொந்தக்காரனே 40 லாரிகளைக் கொண்டு வந்து இங்கிருந்து எடுத்துட்டு போயிட்டான் என்றார். சென்னையிலேயே விற்றால் சிக்கலாகும் என்பதற்காக ஆந்திரா, ஒரிஸ்ஸா போன்ற இடங்களுக்குச் சென்று விற்றிருக்கிறார் நம்மிடம் இன்சூரன்ஸ் போட்டவர்.

கஸ்டம்சில் மாட்டிய பொருட்களை வாங்குவதற்கு என்றே புரோக்கர்கள் இருப்பார்கள், அவர்களின் வாகனங்கள் நகரின் எல்லைப் பகுதியில் அவர்களுடைய டிரைவர்களோடு வந்து நிற்கும். லோக்கலில் இருக்கும் டிரைவர்கள் அந்த வண்டியை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு போய், அவர்களிடம் கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்வார்கள்.

அதற்கு பிறகு அந்த பொருட்கள் எந்த தொழிற்சாலைக்கு போகும். எந்த முதலாளி வாங்கியிருப்பார் என்ற எந்த தகவலும் தெரிய வராது. அதனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக சிபிஐ வசம் ஒரு புகார் கொடுத்து, இதனை கண்டறிந்து சம்பந்தப்பட்டவருக்கு இன்சூரன்ஸ் மறுக்கப்பட்டது. இன்சூரன்சிற்காக இது போன்ற திருட்டு வேலையெல்லாம் சர்வசாதாரணமாக நடக்கும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT