ADVERTISEMENT

என்னை உறங்கவிடாமல் ஒலித்துக்கொண்டே இருந்த ஒரு கேள்வி... திருப்பி அடி #3  

09:30 AM Apr 22, 2019 | vasanthbalakrishnan

நான்காம் வகுப்பு படிக்கும் யாழினி என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட அந்த மாணவி என்னிடம் ஒரு சிறிய புத்தகத்தை நீட்டி அதன் முதல் பக்கத்தை திருப்பி “சார், ஆட்டோகிராஃப் ப்ளீஸ்” என்றார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT



10ஆம் வகுப்பு வரை ப்ரைல் முறையிலேயே எழுதிப் பழகியிருந்த நான், அதன் பிறகு ஒலி நாடாவில் வகுப்புகளைப் பதிவு செய்து கேட்டுப் படிக்கும் முறைக்குத்தான் மாறினேனே தவிர, பெரும்பான்மையான மக்கள் எழுதக்கூடிய எழுத்து முறையை நான் கற்றுக்கொள்ளவே இல்லை. சில முறைகள் முயன்று, எனக்கு வராது என கைவிட்டுவிட்டேன். எனவே, அந்த சிறுமியிடம் “பரவாயில்லை, இட்ஸ் ஆல் ரைட்” என்று சொன்னேன். ஆனால் அந்த சிறுமி, “இல்லை சார், நீங்கள் வருவதை முன்பே எங்கள் பள்ளியில் அறிவித்துவிட்டதால் என் பெற்றோரிடம் சொல்லி ஒரு ஆட்டோகிராஃப் புத்தகத்தை உங்களுக்காக வாங்கியிருக்கிறேன். இதில் நீங்கள்தான் முதல் கையொப்பம் போட இருக்கிறீர்கள்” என்றான். மீண்டும் நான் “இல்லையம்மா, எனக்கு ஆட்டோகிராஃப் போட்டுப் பழக்கம் இல்லை" என்றேன். அதற்கு அவர் ஆங்கிலத்தில் கூறியதை நான் உங்களுக்குத் தமிழில் கூறுகிறேன்... “எவ்வளவோ சாதிக்கிறீர்கள், ஆட்டோகிராஃப் போடத் தெரியாதா?” என்று கேட்டார். உடனே அவரிடம் பேனாவை வாங்கி, எப்போதோ எழுத்துக்களை கற்கும் முயற்சியில் ஈடுபட்டபோது எனக்கிருந்த நினைவுகளை வைத்து மேலும் கீழும் கோடுகளைப் போட்டுவிட்டு அந்தப் பெண்ணையே என் பெயரையும், 'மகிழ் மகிழ்வி' என்ற எனது வாக்கியத்தையும் எழுதச் சொல்லி, "வைத்துக்கொள்ளம்மா, அடுத்தமுறை வரும்போது நிச்சயமாக, இன்னும் தெளிவான எனது ஆட்டோகிராஃப் உனக்குக் கிடைக்கும் என்று சொன்னேன்.

யூனிஃபார்மில் இருந்த அந்தச் சிறுமி அதை வாங்கிக்கொண்டு வகுப்பை நோக்கிப் பறந்ததைப் போலவே, ஆட்டோவும் என் வீட்டை நோக்கி மின்னலாகப் பறந்தது. வழியில் ஓட்டுனர் என்னிடம் எவ்வளவோ பேச முயற்சி செய்தார். அந்தப் பள்ளியில் மாணவர்களெல்லாம் எப்படி உற்சாகமாக இருந்தார்கள், அரங்கின் பின்னாலே இருந்து அவர் என்னவெல்லாம் பார்த்தார், இடைவிடாத கைத்தட்டல்கள் எப்படியெல்லாம் எனது கலந்துரையாடலின்போது வந்தது, மாணவிகள் எப்படிப்பட்ட கேள்விகளையெல்லாம் கேட்டார்கள் என்பதையெல்லாம் பேசிக்கொண்டே இருந்தார் அவர். ஆனால், என்னால் சரியாக அவரின் உற்சாகத்தை உள்வாங்க முடியவில்லை, என்னுடைய மகிழ்ச்சியையும் என்னால் பகிர முடியவில்லை. அதற்குக் காரணம், யாழினியின் “எவ்வளவோ சாதிக்குறீங்க, ஆட்டோ கிராஃப் போடத்தெரியாதா?” என்ற கேள்விதான். அதுவரை எனது காசோலைகளிலும், மற்ற ஆவணங்களிலும் இடது கை பெருவிரல் ரேகையைத் தான் என்னுடைய கையெழுத்தாக இட்டுக்கொண்டிருந்தேன். கையெழுத்தைக் கூட அசல் அச்சு மாறாமல் போலிக்கையெழுத்திட்டு ஏமாற்றிவிடலாம். ஆனால், கைரேகையை ஏமாற்ற முடியாது இல்லையா? இருக்கட்டும். அந்த பெண் கேட்ட கேள்வி “என்னவோ சாதனையெல்லாம் செய்யுறனு சொல்றாங்க, உன்னால ஒரு கையெழுத்துக்கூட போட முடியாதா?” என்பது போல் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.



வீட்டிற்கு வந்தவுடன் வேறு எதிலும் நாட்டம் இல்லாத நான், அப்போது நட்பு வட்டத்திலிருந்த சிலருக்கு தொலைபேசி செய்து எனது ஆற்றாமையை தெரிவித்தபோது, அவர்கள் “உங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை, நீங்க எவ்வளவோ செஞ்சுக்கிட்டு இருக்கீங்க... இதை செய்யணும்னு அவசியம் இல்லை” என்று சொன்னார்கள். என் மனம் சமாதானம் அடையவில்லை. அந்த சிறுமியின் குரலே அசரிரீயாகக் கேட்டுக்கொண்டே இருந்தது. பல எண்ணங்களை நான் அசைப்போட்டுக்கொண்டே இருந்தேன். மாலையில் எனது அண்டை வீட்டு நண்பரை அழைத்து கையெழுத்துப் போடக் கற்றுக்கொடுங்கள் என்று சொன்னேன். அவர் சிரித்தார், நான் சிரிக்கவில்லை. பேனாவையும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் அவர் கையில் கொடுத்து, எனது வலது கையைப் பிடித்து சொல்லிக்கொடுங்கள் என்று சொன்னேன். நிலைமையின் தீவிரத்தை எடுத்து விலக்கிய பிறகு அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். ஏறத்தாழ 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு நீங்கள் எழுதுகிற எழுத்துமுறை எனக்கு பிடிபட்டது. குறிப்பாக எனது பெயரை எழுதுவதற்கு தன்னம்பிக்கையை பெற்றேன் என்றே சொல்லலாம். ஆனால், என்னுடைய கையெழுத்து சீராகவும் ஒரே நேர்க்கோட்டிலும் இல்லை. கோனலாக இருந்தது. அதை சரி செய்வதற்காக அவர் சென்ற பிறகு நான் மீண்டும் மீண்டும் எழுதுகிறேனா, கிறுக்குகிறேனா என்று தெரியாமல் கிறுக்கிக்கொண்டே இருந்தேன்.

அடுத்தநாள் காலை 9 மணிக்கு அவரை வரச்சொல்லி எழுதிக்காட்டினேன். அவர் “இப்போது சரியாக இருக்கிறது, பெருவாரியான எங்களாலேயே எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி கையெழுத்து போட முடியாது. வங்கிகளில் அந்த சிக்கல் வருவதுண்டு. எனவே நீங்கள் கவலைப்படவேண்டாம்” என்றார். "அப்படியல்ல, நான் கையெழுத்து போடவேண்டும், ஆட்டோகிராஃப் கொடுக்கவேண்டும். இனிமேல் நான் பங்கேற்கிற ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வோருக்கு நான் ஆட்டோகிராஃப் கொடுக்கவேண்டும்" என்று சொன்னேன். எனவே, என் பெயரையும், என் பெயரின் சுருக்கத்தையும் இரண்டு எழுத்துகளாக எழுதப்பழகிக்கொண்டேன். நான் செல்லும் நிகழ்ச்சிகளில் அவர்களாக வந்து ஆட்டோகிராஃப் கேட்பார்கள், நானும் மகிழ்ச்சியோடு ஆட்டோகிராஃப் கொடுப்பேன். ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று ஆட்டோகிராஃப் வாங்கும்போது அந்த ஆட்டோகிராஃப் செக்‌ஷன் மட்டும் மணிக்கணக்கில் செல்வதுண்டு. எனவே, அதை இன்னும் எளிமைப்படுத்துவதற்காக 'மகிழ் மகிழ்வி' என்ற வாக்கியமும் அன்புடன் என்றும் அதற்கு கீழாக என் கையெழுத்தும் பதிந்த சீல் வைத்துக் கொடுக்கிறேன். ஆனால், இப்போது மிக தன்னம்பிக்கையுடன் என் பெயரை என்னால் நன்றாக எழுத முடியும் என்பது தான் நான் யாழினியிடமிருந்து கற்றுக்கொண்ட பாடத்தின் விளைவு.

நம் ஐம்புலன்களையும், குறிப்பாக கண்களையும், காதுகளையும், அறிவையும் திறந்து வைத்திருக்கும் போது பாடங்கள் நமக்கு பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு கோணங்களில் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்ற பாடத்தையே மீண்டும் மீண்டும் கற்பதுதான் பிழையே தவிர, பாடங்கள் கற்பது பிழையில்லை. எந்த வயதிலும், இறுதி மூச்சு இருக்கும் வரையிலும் பாடங்கள் கற்கலாம். பாடம் சொல்லிக்கொடுப்பவர் கூட நம்மைவிட வயதில் குறைந்தவராகவும் இருக்கலாம், ஒத்த அல்லது மூத்த வயதினராகவும் இருக்கலாம். இதனுடைய மொத்த விளைவு என்னவென்றால், என்னுடைய அந்த கிறுக்கல்கள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களிடம் ஆட்டோகிராஃபாக இருக்கிறது. அவர்கள் அதைப் பார்க்கும்போதெல்லாம் தனக்கு தன்னம்பிக்கைத் துளிர்கிறது என்றும் இழந்த சக்தி அறிவில் முளைக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

என்னுடன் பேச... inspiringilango@gmail.com

முந்தைய பகுதிகள் :

நடுராத்திரியில் வந்து மகனையும் மகளையும் கடத்த முயன்ற அப்பா! - இன்ஸ்பையரிங் இளங்கோ எழுதும் திருப்பி அடி #1

'கை'விட்ட தந்தை... நம்பிக்'கை' வைத்த தாய்... ஓங்கியது யார் கை? திருப்பி அடி #2


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT