Skip to main content

'கை'விட்ட தந்தை... நம்பிக்'கை' வைத்த தாய்... ஓங்கியது யார் கை? திருப்பி அடி #2   

Published on 15/04/2019 | Edited on 22/04/2019

நடுராத்திரியில் அடியாட்களோடு வந்து எங்களைக் கடத்திச் செல்ல முயன்ற என் அப்பா, என்னை என்னவெல்லாம் பேசினார் என்று சொன்னேன் அல்லவா? அதற்கு என் தாய் என்ன பதிலளித்தார் தெரியுமா?

 

inspiring ilango with studentsஎன் தாய் தன்னம்பிக்கையில் சளைத்தவர் அல்ல. எனவே, “அப்படியொரு நிலைமை எங்களுக்கு வராது, என் மகன் எங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வான், அப்படி நாங்கள் நன்றாக இல்லையென்றாலும் உன்னிடம் வரமாட்டோம்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். இப்போது நான் இருக்கும் நிலையின் எந்த சின்ன அறிகுறியும் தெரியாத ஆளாகத்தான் அப்போது நான் இருந்தேன். ஆனாலும் என் தாய் என்னை நம்பினார், நம்பி அப்படி சொன்னார். அதற்குக் காரணம் இருந்தது.

மனைவி எப்பவும் தனக்கு ஏவலாளியாகவும், சேவையாளராகவும்தான் இருக்கவேண்டுமே தவிர சுயமாக சிந்தித்து இயங்கக் கூடாது என்ற மனுநீதி அடிப்படையால் ஆட்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான ஆண்களில் என் அப்பாவும் ஒருவர். இந்த இடத்தில் என் தாய் பற்றி மகிழ்ச்சியோடு சில தகவல்களைச் சொல்லவேண்டும். கல்விக்கூடங்களுக்குச் சென்று கற்கவில்லையென்றாலும் கூட என்னை வளர்க்கும் முறையில் அவர் காட்டிய அக்கறையும், ஈடுபாடும் அவர் அறியாமலே அவரது வாழ்க்கைமுறை மூலமாகவும், அறிந்து சொல்லிக்கொடுத்தவை மூலமாகவும் நான் ஒரு பார்வையற்ற சிறுவனாக இருந்தபோதும் சுயமாக வாழவேண்டும், அடுத்தவரின் பச்சாதாபத்தில் பரிதாபத்தில் வாழக்கூடாது என்பனவெல்லாம் வலியுறுத்தப்படும். என் அம்மா எளிதில் நட்பு பாராட்டி பழகிவிடக்கூடியவர். இண்டர்பர்ஸ்னல் ஸ்கில் அவரிடம் இயல்பாக இருந்தது. சவுதி அரேபியாவிலிருந்து என் தாய் மாமா வெங்கடேசன் தார்மீக அடிப்படையில் என் படிப்புக்கு உதவி செய்தனர். நானும் கல்லூரி படிக்கும்போதே ஆங்கிலம் சொல்லிக்கொடுத்து பணம் சம்பாதித்து என் தாயின் சுமையைக் குறைத்தேன். இப்படி காலங்கள் உருண்டோடின.

என்னுடைய வெளிநாட்டுப் பயணங்களுக்காகவும், கல்வியில் தொடர்ச்சியாக நான் பெற்றுவந்த முதலிடத்திற்காகவும், 3500 பாடல்களை மனப்பாடமாக பாடிய சாதனைக்காகவும், சென்னை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியில் அமர்ந்து துறைத் தலைவர் மற்றும் துணைவேந்தர் அறிவுறுத்தல்படி நானே எஃபெக்டிவ் கம்யூனிகேஷன் இன் இங்க்லீஷ் என்ற பாடத்தைத் தொடங்கியதற்காகவும், ஒரு வாழ்க்கைத் திறன் பயிற்சியாளனாக எனக்கு கிடைத்த வெற்றிகளுக்காகவும், அடிக்கடி தொலைக்காட்சிகளும், அச்சு ஊடகங்களும் என்னை கவனித்தார்கள். என்னைப் பற்றி எழுதினார்கள், என் நேர்காணலை  ஒளிபரப்பினார்கள். எனக்கு பல விருதுகளும் அந்தக் காலகட்டத்தில் வந்துகொண்டிருந்தது. இதையெல்லாம் கேள்விப்பட்ட என் தந்தை என்னைப் பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் அதைக் கத்தரித்து ஃப்ரேம் செய்து வைத்துக்கொள்கிற அளவுக்கு அவருக்கு பெருமையாக இருந்திருக்கிறது. பல உறவினர்கள் என் தந்தை எங்களுடன் சேர விரும்புகிறார் என்ற தூது செய்தியுடன் வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் நான் சொல்லுவேன் “அவர் திரும்ப வருவதும் வராததும் என் விருப்பம் இல்லை, அது என் தாயின் விருப்பம்” என்றேன். ஆனால், என் தாய் கடைசிவரையில் அதற்கு சம்மதிக்கவே இல்லை. காலங்கள் உருண்டோடின, அவரின் பல முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு அவர் இறந்துவிடுகிறார்.

 

inspiring ilango in seaஅவரின் இறுதி நிகழ்ச்சிக்கு செல்லவேண்டும் என தனிப்பட்ட விருப்பம் இருந்தாலும் என் தாய் அதை விரும்பவில்லை. அதற்கு உட்பட்டு நான் போகாமல் இருந்துவிட்டேன். 90களில் பார்த்த என் தந்தையை இறுதிவரை பார்க்காமலே அவர் இறந்துவிட்டார். 90களில் என்னைப் பார்த்த என் தந்தை அதன்பிறகு பார்க்காமலே இறந்துவிட்டார். ஒவ்வொருமுறையும் என் தந்தை எனது வெற்றியைக் குறித்து மகிழ்ச்சியடைகிறார், எங்களுடன் சேரவிரும்புகிறார் என்று சொல்லும்போதெல்லாம் அது என் தாயின் காதுகளில் வெற்றிச் செய்தியாகவே விழுந்துகொண்டிருந்தது. வாழும் காலத்திலேயே தன் கணவனை வெற்றிக்கொண்ட பெருமையில்தான் அவரும் மே 27, 2013 ஆம் ஆண்டு இறந்துபோனார். வாழ்க்கை நமக்கு பல்வேறுவிதங்களில் பாடங்களை கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறது. கணவன் மனைவி, அப்பா மகன், அக்காள் தம்பி, அண்ணன் தங்கை, நண்பர்கள் இப்படி எந்த நெருக்கமான உறவுகளாக இருப்பவரும் கூட பின்பு வேறுவிதமாக விரும்பத்தகாத வகையில் மாறலாம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், முன்னெடுத்த காலை பின் வைக்காமல் நடைபோட்டுக்கொண்டே இருந்தால் நாம் செல்லும் பாதையை காலமே அமைத்துக்கொடுக்கும், இயற்கை அதற்கு துணை நிற்கும்.

ஒரு செவ்வாய் கிழமை ஜூலை 13, 2010-ல் புனித தோம்னிக் பள்ளியில் நடந்த மாணவர்களுக்கான பதவியேற்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்றேன். சென்னை கிண்டியில் ஏறத்தாழ 3000 மாணவிகள் படிக்கக் கூடிய அந்த மேல்நிலைப் பள்ளியில் 'தலைவர்கள் பிறக்கிறார்களா அல்லது உருவாகிறார்களா?' என்ற தலைப்பில் பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கியதுதான் தாமதம், ஆயிரக்கணக்கான மாணவிகள் என்னிடம் கேள்விகள் கேட்பதற்கும், கை குலுக்கவும் என்னை சூழ்ந்து கொண்டனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தி அவர்களிடமிருந்து மீட்கும் தோரணையில் ஆசிரியர்கள் என்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். நான் ஓட்டமும் நடையுமாக எனக்காக காத்திருந்த ஆட்டோவில் ஏறினேன். ஓட்டுனர் ஆட்டோவை எடுக்கிற நேரத்தில் ஒரு கை என்னைத் தொட்டது.

அந்தக் கை என் முன் ஒரு பெரிய சவாலை எளிதாக வைத்துச் சென்ற கை...  

என்னுடன் பேச...  inspiringilango@gmail.com

முந்தைய பகுதி :

நடுராத்திரியில் வந்து மகனையும் மகளையும் கடத்த முயன்ற அப்பா! -  இன்ஸ்பையரிங் இளங்கோ எழுதும் திருப்பி அடி #1 

அடுத்த பகுதி :

என்னை உறங்கவிடாமல் ஒலித்துக்கொண்டே இருந்த ஒரு கேள்வி... திருப்பி அடி #3