ADVERTISEMENT

நில் என்பதற்கு எது எதிர்ச்சொல் நட என்பதா, அமர் என்பதா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 22

11:25 AM Oct 05, 2018 | poetmagudeswaran


ADVERTISEMENT

ஒரு சொல்லினை நினைத்தால் அது சார்ந்த அனைத்துச் சொற்களையும் நினைவுபடுத்திப் பார்ப்பது சொற்களைப் பற்றிய திளைப்பில் இன்றியமையாத பகுதி. இறைத்தொண்டர் எனில் அவர் தமக்கு ஓய்ந்த நேரத்திலும் வாய்த்த நேரத்திலும் இறைப்பண் பாடுவதிலோ முணுமுணுப்பதிலோ ஈடுபட்டிருப்பார். சொற்களைத் தொடர்ந்து எண்ணிக்கொண்டிருப்பதும் அத்தகைய செயலே. நமக்கு ஓய்ந்த நேரத்தில் அச்சொல்லினை நடுவாக வைத்து எல்லாத் திக்குகளிலும் பார்வையைச் செலுத்த வேண்டும். ஒரு சொல்லுக்கு அதன் எதிர்ச்சொல்லைத் தேடுவதும் அவற்றில் ஒன்று.

ADVERTISEMENT

மேல் என்று ஒன்றிருப்பின் கீழ் என்றும் ஒன்றிருக்கும். தொடக்கம் என்று ஒன்றிருந்தால் முடிவு என்றும் ஒன்றிருக்கும். வடக்கு என்று ஒன்றிருந்தால் தெற்கும் இருக்கும். இவ்வாறு பொருளுணர்த்தும் எல்லாச் சொற்களும் அவற்றுக்குரிய எதிர்ச்சொற்களைப் பெற்றிருக்கும். நமக்கு எல்லாச் சொற்களுக்கும் எதிர்ச்சொற்கள் தெரியுமா ? எல்லாச் சொற்களுக்கும் எதிர்ச்சொற்களும் உண்டா ? சில சொற்கள் எதிர்ச்சொற்களைப்போல் தோன்றினாலும் அவை எதிர்ச்சொற்கள்தாமா ? இப்படிப் பல ஆய்வுகளில் மூழ்கலாம்.

எதிர்ச்சொல்லா, எதிர்சொல்லா ? இரண்டுமே சரிதான். எதிர்க்கட்சியா எதிர்கட்சியா ? இரண்டுமே சரிதான். எப்படி ? எதிர் என்பது பெயர்ச்சொல்லானால் எதிர்ச்சொல், எதிர்க்கட்சி என்று வல்லொற்று மிகும். ‘எதிரை உணர்த்தும் சொல், எதிரை நிறுவும் கட்சி’ என்று இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை என்று கொண்டால் அங்கே வலிமிகும். எதிர்த்த கட்சி, எதிர்க்கின்ற கட்சி, எதிர்க்கும் கட்சி என்று வினைத்தொகையாகக் கொண்டால் அங்கே வலிமிகுவதில்லை.

செய்யுளில் முரண்தொடை என்று ஒன்றுண்டு. ஒரு சொல்லுக்கு எதிர்ச்சொல் அமைத்துப் பாடுவது முரணழகைத் தோற்றுவிக்கும். ‘அடிக்கிற கைதான் அணைக்கும், அணைக்கிற கைதான் அடிக்கும், இனிக்கிற வாழ்வே கசக்கும், கசக்கிற வாழ்வே இனிக்கும்’ என்பதுதான் முரணழகு.

இன்று விளங்கும் புதுக்கவிதைகளுக்கு முன்வடிவான உரைக்கவிதைகளைப் பாரதியாரும் எழுதியிருக்கிறார். ஆனால், அவர் எழுதியவை பெரும்போக்கினை உருவாக்கவில்லை. ஐம்பதுகளின் இறுதியில் சி.சு. செல்லப்பாவினால் வெளியிடப்பட்ட எழுத்துச் சிற்றிதழும் அதனைப் பொதுப்போக்காக்கவில்லை. ஆனால், எழுபதுகளில் தோன்றிய வானம்பாடி இயக்கம் புதுக்கவிதைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது. கவியரங்குகளுக்குப் பெருந்திரளான மக்கள் வந்தனர்.

வானம்பாடி இயக்கம் புதுக்கவிதையை மக்கள் பரப்பில் கொண்டுபோய்ச் சேர்த்ததற்கு முதன்மைக் காரணம் அவர்கள் தம் கவிதைகளில் எளிய முரண் சொற்களைக் கையாண்டதுதான். இரவிலே வாங்கினோம் இன்னும் விடியவில்லை என்பார்கள். இரவும் விடிவும் முரண். அட்சயப் பாத்திரம், பிச்சைப் பாத்திரம் என்றார்கள். பட்டு வேட்டியைப் பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது என்றார்கள். பட்டு வேட்டியும் கோவணமும் முரண். வரம் சாபம், வசந்தம் இலையுதிர்காலம், கனவு நனவு, ஆண்டான் அடிமை என்று எதிர்ச்சொற்களுக்கிடையே முரண்கோட்டை கட்டினார்கள் வானம்பாடிகள். அந்த முரணீர்ப்பினால் பொதுப்போக்கு ஆகி முன்னிலைக்கு வந்தது புதுக்கவிதை. எதிர்ச்சொற்களின் பொருளுணர்த்தும் ஆற்றல் அத்தகையது என்பதை உணர்த்துவதற்காக இதனைச் சொன்னேன்.

பொய் என்பதற்குப் பொய்யின்மை என்பதும் எதிர்ச்சொல்தான். ஆனால், அது தனித்துயர்ந்து விளங்கும் சொல்லாகாது. பொய் என்பதற்கு மெய் என்பதுதான் நேர்நிகர்த்த எதிர்ச்சொல். ஆங்கிலத்தில் இப்படி ஏதேனும் ஒரு முன்னொட்டினைச் சேர்த்துவிட்டு எதிர்ச்சொல் என்பார்கள். Dependant என்பதோடு முன்னொட்டாக In சேர்த்துவிட்டால் Independent என்ற எதிர்ச்சொல் கிடைக்கும். இது குறுக்குவழி என்று நமக்கே தெரிகிறது. தமிழிலும் ஒன்றை எதிர்ச்சொல்லாக்க அல், இல், இன்மை என்று பலவற்றையும் சேர்க்கலாம். சொற்பொருளுக்காக அப்படிச் சேர்ப்போம். அல்வழி, பொறியில், அருளிலி, பொருளிலி என்று கூறுவோம். ஆனால், அவை சிற்றளவே.

சில எதிர்ச்சொற்கள் களிநயமானவை. இது எதிர்ச்சொல்தானா என்று நம்மையே குழப்பும். “ஆணுக்குப் பெண் எதிர்ச்சொல் போலவே இல்லையே... இணைச்சொல் என்றுதானே கூறவேண்டும்…? ஒரு தண்டவாளத்துக்கு இன்னொரு தண்டவாளம் எதிராகுமா…?” என்று எண்ணுவது இனிய மொழி விளையாட்டாகும். உயர்திணைப் பால் நிலையில் மாற்று நிலை என்ற வழியில் எதிர்ச்சொல் ஆகும். வா என்பதற்குப் போ எதிர்ச்சொல்லாகலாம். நில் என்பதற்கு எதிர்ச்சொல் நட என்பதா, அமர் என்பதா என்று திகைக்கலாம். இரண்டும் உரிய எதிர்ப்பொருள்களைப் தருபவைதாம்.

ஒரு சொல்லுக்கு உடனே எதிர்ச்சொல் சொல்லத் தெரிந்துவிட்டால் நாம் மொழியாளுமையில் சிறந்து விளங்குகிறோம் என்று பொருள்.

முந்தைய பகுதி:

வெசை என்பது என்ன சொல்? -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 21

அடுத்த பகுதி:

“இதற்குப் பெண்பால் என்ன ?’ கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 23

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT