ADVERTISEMENT

ஒருநாளா ? ஒரு நாளா ? ஒருமுறையா ? ஒரு முறையா ? கவிஞர். மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 28 

12:37 AM Dec 12, 2018 | poetmagudeswaran

ADVERTISEMENT

“ஒரு” என்ன சொல்லை நாம் நன்கு அறிவோம். எண்ணின் முதல். ஒன்று என்பதன் திரிபு. அன்றாடப் பேச்சில் தவறாமல் இடம்பெற்றுவிடக்கூடிய சொல். ஒரு என்று சொல்லாமல் ஒருநாளும் கழிவதில்லை.

ADVERTISEMENT

ஒரு என்பதற்கு அழிஞ்சில் என்ற பொருளும் இருக்கிறது. அழிஞ்சில் என்பது செம்மரத்தைக் குறிக்கும். மரங்களில் ஒன்றேயொன்றைக் குறிக்க வேண்டுமென்றால் செம்மரத்தைச் சொல்லலாம். அவ்வளவு மதிப்புடைய மரம். ஒரு என்பதற்கு ‘ஆடு’ என்ற பொருளும் உண்டு. ஒரு என்னும் சொல்லைத் தொனிப்பொருளுக்கேற்பச் சிறப்பித்து வரும் தன்மையிலும் பொருள் காண வேண்டும். “இது ஒரு நாள்… மறக்கவே முடியாது…” என்று சொன்னால் அங்கே ஒரு என்பது இன்றியமையாதது, சிறப்புடையது என்று பொருளில் வந்துவிட்டதை அறிகிறோம்.

ஒரு என்பது வருமொழியோடு சேர்ந்து தொடராகவே மாறிவிட்ட சொற்றொடர்களைத்தாம் சேர்த்தே எழுத வேண்டும். ஒருவழிப் பாதை என்ற சொற்றொடரை எடுத்துக்கொள்வோம். “ஒரு வழிப் பாதை” என்று பிரித்தெழுதினால் ‘வழிப்பாதை என்பது ஒன்று’ என்ற பொருள் வருகிறது. இங்கே ஒரு என்பது பிரிந்து நின்று எண்ணை உணர்த்துகிறது. ஒருவழி, இருவழி என்பவை முன்னமே தொடராக ஆகிவிட்டவை. அத்தொடரோடு பாதை என்ற சொல் சேர்கிறது. இங்கே ஒருவழி என்பதைச் சேர்த்து எழுதினால்தான் உரிய பொருள் கிடைக்கும். ஒருவழிப் பாதை, இருவழிப் பாதை என்று சேர்த்தே எழுத வேண்டும்.

“என்னை ஒரு வழி பண்ணிட்டான்…” என்று பிரித்து எழுதுவதா ?

“என்னை ஒருவழி பண்ணிட்டான்…” என்று சேர்த்து எழுதவதா ?

வழிபண்ணுதல் அங்கே வினையா ? ஒருவழியாதல் என்பதுதான் அங்கே வினை. ஒருவழிக்குள் நிற்கும்படி பண்ணுவது. திரும்ப முடியாது. நகர முடியாது. பல வாய்ப்புகளோடு, வழிகளோடு இருந்த நிலையில் அதனைச் சுருக்கி ஒற்றையாக்குவது. எதற்கும் விடாமல் நெருக்குவது. ஒருவழி ஆக்குவது. அங்கே “ஒருவழி பண்ணிட்டான்” என்று எழுதுவதே சரியாக இருக்கும். “என் காலத்திற்குள் உனக்கு ஒரு வழி பண்ணாமல் போகமாட்டேன்” என்னும்போது பிரித்து எழுதலாம். அங்கே ஒரு என்பது ஒன்றேனும் என்னும் இன்றியமையாப் பொருளில் வந்தது. வழிசெய்வதுதான், வழிகாட்டுதல்தான் அங்கே வினை. அதனால் ஒரு என்பது தனித்து நிற்கும். “உனக்கு ஒரு வழி பண்ணித் தரமால் என் கட்டை வேகாது…” என்று எழுதலாம்.

ஒருநாள் என்னும் தொடர் அடிக்கடி ஏமாற்றக் கூடியது. மரபுத் தொடராக, வழக்குத் தொடராக இருக்குமிடத்தில் சேர்த்தே எழுதவேண்டும். ‘ஒருநாள் திருநாள் வாராதோ’ என்று சேர்த்து எழுதலாம். அரிதாக எண்ணுப் பொருள் உணர்த்தும் நிலைமைகளில் பிரித்து எழுத வேண்டும்.

“ஒரு முறை வேண்டும்” என்று பிரித்தெழுதுவதற்கும் “ஒருமுறை வேண்டும்” என்று சேர்த்து எழுதுவதற்குமிடையே உள்ள பொருள் வேறுபாட்டைப் பாருங்கள். ”ஒருதலை” என்பது ஒரு சார்பான தன்மையைச் சொல்கிறது. “ஒரு தலை” என்பது ஒற்றைத் தலையைக் குறிக்கிறது.

ஒருநாள், ஒருவேளை, ஒருமுறை, ஒருவிதம், ஒருவகை, ஒருதலை போன்றவை பிரியாமல் பொருளுணர்த்தும் தொடர்கள் ஆகிவிட்டன. அவற்றைச் சேர்த்தே எழுத வேண்டும். அரிதாக எங்கேனும் எண்ணுப் பொருளில், இன்றியமையாமையை உணர்த்தும் பொருளில் வந்தால் மட்டும் பிரித்தெழுத வேண்டும்.

முந்தைய பகுதி:

நேசித்தான் என்று எழுதலாமா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 27

அடுத்த பகுதி:

கர்ருபுர்ரு, திடீர், படார், கிண்கிணீர் - இவையெல்லாம் சொற்களா ? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 29

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT