ADVERTISEMENT

கவிஞர்களும் மக்கள் போராட்டங்களும்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி - 9

06:00 PM Mar 19, 2019 | Anonymous (not verified)

அசாதாரணமான நீளமும் குறுகலுமாக கிடக்கிற எனது தேசத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நான் அடிக்கடி பயணம் செய்து வருகிறேன். பைத்தியம் கொள்ள வைக்கும் புவியியலைக் கொண்ட எனது நாட்டில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடையே எனது கவிதையைப் பாடச் சென்றுவருகிறேன். சில நகரங்கள் மற்றும் மிகச்சில கிராமங்களில் எனது கவிதைகளை வாசிக்க முடியவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நான் தாமிரச் சுரங்கங்களில், நிலக்கரி சுரங்கங்களில், பொது கடற்கரைகளில், பள்ளிகளில், திரையரங்குகளில், சிறைக்கூடங்களில் மக்கள் முன் தோன்றியிருக்கிறேன்.

எனது கவிதைகளை குடிசைகளிலும், தெருவோரங்களிலும், குதிரைலாயங்களுக்கு பின்னாலும், சரக்கு வண்டிகளுக்குப் பின்னாலும் மக்களைக் கூட்டி பாடியிருக்கிறேன்.

எனது கவிதைகளை, எனது நெற்றிக்கு நேராக குறிபார்த்துக் கொண்டிருந்த இயந்திர துப்பாக்கிகள் முன்பும் பாடியிருக்கிறேன், இது ஒரேஒருமுறை நடந்தது. சிலி நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சால்ட்பீட்டர் சுரங்கங்களில் மிகப்பெரும் வேலைநிறுத்தம் வளர்ந்த காலத்தில் அது நடந்தது.

ஒருமுறைதான் என்றாலும் எனது வாழ்நாள் முழுவதும் அதை நினைத்துப் பார்க்கிறேன். எனது நாட்டில் கவிஞர்கள் மிக முக்கியமான பங்கினை ஆற்றுகிறார்கள். அவர்கள் வெகுஜனங்களோடு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிரந்தரமான தொடர்புகளை வைத்திருக்கிறார்கள். எங்களது கவிஞர்கள் ஒருபோதும் தங்களை அவரவர் வேலைகளோடு சுருக்கிக் கொண்டதில்லை. மேற்கத்திய ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் சில நேரங்களில் கவிஞர்கள் அவர்களுடயை வேலையோடு சுருக்கிக் கொள்வார்கள்.

எங்களில் பலர், அரசியல் தலைவரும்கூட அவர்கள் தங்களது அனுபவங்களை மக்களோடும் பகிர்ந்து கொள்கிறார்கள். மக்களுக்காக எழுதுகிறார்கள். கியூபா மக்களின் மகத்தான தலைவர் ஜோஸ்மார்ட்டி ஒரு கவிஞரும் கூட. எமது காலத்தின் மிகச்சிறந்த கவிஞர் அவர். பல்வேறு பிரச்சனைகளைப் பற்றிப் பேச, சிலி தேசத்தின் மிகச்சிறந்த கவிஞர், நோபல் பரிசை வென்ற முதல் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் கப்ரீயேல்லா மிஸ்ட்ராலை பார்க்கச் செல்கிறார்கள்.(1889-1957). அவர், சிற்பங்களைப் பற்றி எழுதினார், விவசாய சீர்திருத்தத்தைப் பற்றி எழுதினார். சில நாடுகளில் செவ்விந்தியர்களுக்கு எதிரான வன்முறையைப் பற்றி எழுதினார்.

கப்ரீயேல்லா மிஸ்ட்ரால்

அமைதியைப் பற்றி மறக்கமுடியாத பல கட்டுரைகளை எழுதிய எழுத்தாளர் அவர். அவர் எழுதிய அமைதி என்ற வார்த்தை ஏகாதிபத்தியவாதிகளின் காதுகளில் பெரும் சத்தமாக ஒலித்தது. பெரும் நிறுவனங்களின் காதுகளில் அது இரைச்சலாக கேட்டது. கப்ரீயேலா மிஸ்ட்ரால் ஏகாதிபத்தியத்தையும் பெரும் நிறுவன சுரண்டலையும் ஒருசேர சாடினார்.

இளம் கவிஞர்கள் எங்களது போராட்டத்தில் இணைந்து கொள்ளும் பொருட்டு தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த கவித்துவமாக முயல்கிறார்கள்.

பெரும் எண்ணிக்கையிலான எமது இளம் கவிஞர்கள் கடந்த காலத்தின் மிகச்சிறந்த மனிதநேய மற்றும் புரட்சிகர பாரம்பரியங்களை உள்வாங்கிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவர்கள், பழமையை வெறுத்தவர்கள். பலரும் தங்களது வாழ்வின் முதல்பகுதியில் மக்கள் போராட்டங்களுக்காக இணைந்து கொண்டார்கள். சிலர் தங்கள் இன்னுயிரையும் ஈந்தார்கள்.

லத்தீன் அமெரிக்காவின் இத்தகைய பரந்துவிரிந்த கவிதைப் பெருவெளி, அனைத்து தரப்பிலும் மதிக்கப்படக்கூடிய, உற்சாகமூட்டக்கூடியதாகும். அது தொடர்ச்சியாக மாற்றம் பெற்று வருகிறது. பல கவிஞர்களுக்கு தங்களது கருத்துக்களையும் கவித்துவ கண்ணோட்டங்களையும் மறுபரிசீலனை செய்து கொள்ள உதவுகிறது. அப்படிப்பட்ட சில மாற்றங்கள் உணர்வுப்பூர்வமானவை.

உதாரணமாக சிறிது காலத்திற்கு முன்பு, சிலி பல்கலைக்கழகத்தின் தத்துவம் மற்றும் இலக்கிய ஆய்வுத்துறை என்னை ஒரு கல்வியாளனாக மாற்றியது. கவிஞர் நிகனோர் பாரா என்னுடன் பேசினார். சுத்தமான கலைகளுக்கான இயக்கத்தைச் சேர்ந்தவராக அவர் கருதப்படுகிறார். அவரது கவிதைகள் சில நேரங்களில் அதீதமானதாக இருக்கும். ஆனால், அறிவுப்பூர்வமானதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட கவிஞர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகளும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் கூடியிருந்த கூட்டத்தில் என்னைப் பற்றிப் பேசினார். இவர் இலக்கியத்திலிருந்து உடைத்துக்கொண்டு போனவர். இலக்கியத்தின் வாழ்வுக்காக ஒரு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டாக மாறியவர் என்று அறிவித்தார். அவர் அரசியல் கவிதையின் செயலூக்கத்தை அங்கீகரித்தார்.

இப்படிப்பட்ட மிகப்பெரும் ஈர்ப்புகளை நமது நூற்றாண்டின் மாபெரும் முற்போக்குச் சிந்தனைகள் சாதித்திருக்கின்றன.

பிராவ்தா, ஆகஸ்ட் 25, 1962

முந்தைய பகுதி:

ஒரு உண்மையான கூட்டுச் சாதனை...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி-8

அடுத்த பகுதி:


ரோஜாக்களும் நிலாவும் நமக்கு அந்நியம் அல்ல! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி - 10

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT