Skip to main content

சிலியை விட்டுத் தப்பித் தலைமறைவான நெருடா...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி - #3

 

n

 

1943 ஆம் ஆண்டு சிலிக்கு திரும்பினார் நெருடா, பெரு நாட்டுக்கு சுற்றுலா சென்றார். அந்த நாட்டின் உலக அதிசயமாக கருதப்படும் பூர்வ குடிகளின் குடியிருப்பு அமைந்துள்ள மச்சு பிக்கு மலைக்கு சென்றார். அங்கு சென்ற அனுபவம்தான் அவரை “தி ஹைட்ஸ் ஆஃப் மச்சு பிக்கு” அல்லது “மச்சு பிக்கு மலையின் உயரம்” என்ற தலைப்பில் மிக நீண்ட கவிதை இலக்கியத்தை எழுதத் தூண்டியது. இரண்டு ஆண்டுகள் எழுதி, பூமிக் கோளத்தின் மேற்கு பகுதியை அல்லது அமெரிக்கக் கண்டத்தின் வரலாறை எழுதி முடித்தார். அந்தக் கவிதை நூல் 12 பகுதிகளாக இருக்கிறது. 

 

nn
மச்சு பிக்கு மலை

 

மரணித்துப்போன பல நூற்றாண்டுகள் தனது வழியாக பேசுவதாக எழுதியிருந்தார் பாப்லோ. புகழ்பெற்ற லத்தின் அமெரிக்க கவிஞரான மார்ட்டின் எஸ்படா இந்த கவிதை நூலைக் காட்டிலும் மிகப்பெரிய அரசியல் கவிதை வேறு எதுவும் இருக்க முடியாது என்று புகழ்ந்திருக்கிறார். பாப்லோ நெருடாவின் மாஸ்டர் பீஸ் இதுதான் என்பது அவருடைய கருத்து.

 


ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டுப் போரில் நேரடியாக பங்கேற்ற அனுபவமும், அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த இடதுசாரி அறிவுஜீவிகளின் தோழமையும், மனிதநேயமும் பாப்லோ நெருடாவின் சிந்தனையை செதுக்கியிருந்தன. அவர் இயல்பாகவே சோவியத் யூனியன் மீதும் ஸ்டாலின் மீதும் பற்றுக்கொண்டவராக மாறினார். இரண்டாம் உலக யுத்தத்தில் ஹிட்லரை முறியடித்ததில் சோவியத் யூனியனின் பங்கு அவரை பிரமிக்க வைத்திருந்தது. 1942-ல் சோவியத்தை முற்றுகையிட்ட ஜெர்மன் படையை விரட்டியடித்த ஸ்டாலின் கிராட் போர் குறித்து இரண்டு கவிதைகளை அவர் எழுதினார். ஸ்டாலின் மறைந்தபோது அவருக்காகவும் ஒரு கவிதை எழுதினார். 1953 ஆம் ஆண்டு அவருக்கு சோவியத் யூனியனின் ஸ்டாலின் அமைதி விருது வழங்கப்பட்டது. பாப்லோ நெருடாவின் இடதுசாரி மனப்பான்மையை அவருடைய சமகால கவிஞர்கள் சிலர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஆனால், வார்த்தைகள் வெடிகுண்டுகளாகும் என்ற நெருடா, புரட்சிகரமான உலகத்துக்காக  நெருப்புக் கவிதைகளை தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். 

 

nn

 

1945 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி பிரேசில் நாட்டின் மிகப்பெரிய பகாம்பு அரங்கத்தில் ஒரு லட்சம் பேர் முன்னிலையில் கம்யூனிஸ்ட் தலைவர் லூயிஸ் கார்லோஸ் பிரெஸ்டெஸை கவுரவிக்கும் வகையில் கவிதை வாசித்தார் நெருடா. எத்தனையோ கவிஞர்கள் இருந்தாலும் மக்கள் கவிஞராக, மக்களைப் பாடும் கவிஞராக பாப்லோ இருந்தார்.

 

சோவியத் புரட்சி நாயகன் மாமேதை லெனினை இந்த நூற்றாண்டின் பேரறிஞர் என்றார் பாப்லோ நெருடா. லெனின் மற்றும் ஸ்டாலினின் தோழராக வளர்ந்து மறைந்த மிகைல் காலினினை உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்த தலைவர் என்றும், எதிர்காலத்தை கட்டமைத்த மிகச்சிறந்த நபர் என்றும் புகழ்ந்தார். பின்னாளில், ஸ்டாலின் மற்றும் மாவோ உருவாக்கிய தனிமனித முன்னிறுத்தலுக்கு எதிரான கருத்தைக் கொண்டார். ஆனாலும், கம்யூனிஸ்ட் கட்சி மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். 

 

சோவியத் யூனியனில் சில எழுத்தாளர்கள் தடை செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதைக்கூட கட்சி எடுத்த முடிவு என்று விமர்சிக்க மறுத்தார். ஹிட்லரின் அக்கிரமத்துக்கு முடிவுகட்டியவர் ஸ்டாலின் என்ற மதிப்பை கடைசிவரை கொண்டிருந்தார். இதைவைத்து அவரை விமர்சித்த சக எழுத்தாளர்களைப் பற்றி அவர் என்றுமே கவலைப்பட்டதில்லை. தனது கொள்கைக்கு எதிரானவர்களுக்கு எப்போதுமே அவர் இடம்கொடுத்தது இல்லை. 

 

சிலியில் 1945 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது, அடகாமா பாலைவனப் பகுதியைச் சேர்ந்த அன்டோஃபகஸ்டா, டரபாகா ஆகிய மாகாணங்களின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றிபெற்ற 4 மாதங்களுக்குப் பிறகே அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். சிலி ஜனாதிபதியாக போட்டியிட்ட கேப்ரியெல் கோன்ஸலெஸ் விடெலாவுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஆனால், அவர் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக திரும்பியபோது கடுமையாக கண்டித்தார். 

 

1947 ஆம் ஆண்டு லோடா என்ற இடத்தில் சுரங்கத் தொழிலாளர் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை கேப்ரியேல் அரசு கொடூரமாக ஒடுக்கியது. பிசாகுவா என்ற இடத்தில் சித்திரவதை முகாமை ஏற்படுத்தி தொழிலாளர்களை கொடுமைப்படுத்தியது. ராணுவச் சிறைகளில் போராட்டக்காரர்கள் அடைக்கப்பட்டனர். இதுகுறித்தெல்லாம் பாப்லோ நெருடா சிலி நாடாளுமன்றத்தில் பேசினார். அவருடைய உருக்கமான, நெருப்பைக் கக்கும் பேச்சு “நான் குற்றம்சாட்டுகிறேன்” என்ற தலைப்பில் புத்தகமாகவே வந்தது.

 

1959 ஆம் ஆண்டு கியூபா புரட்சி வெற்றிபெற்று பிடல் காஸ்ட்ரோ அந்த நாட்டின் தலைவரானார். அந்தச் சமயத்தில் வெனிசூலா பல்கலைக்கழகத்தில் பாப்லோ நெருடாவை கவுரவப்படுத்தும் வகையில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பேசிய நெருடா காஸ்ட்ரோவை புரட்சிவீரர் பொலிவாருக்கு நிகராக பாராட்டிப் பேசினார். வலியோடு வாழ்ந்த மக்களின் விடுதலைக்காக போராடிய மனிதனின் நம்பி்க்கையும், உணர்ச்சி வேகமும் மக்கள் சரித்திரத்தில் இடம்பெறும் என்றார் நெருடா. 

 

nn

 

1948 ஆம் ஆண்டு சிலி அரசு பாப்லோ நெருடாவை கைதுசெய்ய முடிவெடுத்தது. இதையடுத்து அவர் தலைமறைவானார். அவருடைய ஆதரவாளர்கள் அடுத்த 13 மாதங்கள் வீடுமாற்றி வீடாக பாதுகாத்தனர். நெருடாவும் அவருடைய மனைவியும் இந்த தலைமறைவு வாழ்க்கையை சிலி கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் பாதுகாப்பில் வாழ்ந்தார்கள். தலைமறைவாக இருக்கும்போதே நெருடாவின் பதவியை சிலி அரசு பறித்தது. 1948 செப்டம்பரில் சிலி கம்யூனிஸ்ட் கட்சியை அந்த நாட்டு அரசு தடை செய்தது. வாக்காளர் பட்டியலில் இருந்து 26 ஆயிரம் பேரை நீக்கியது. அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கை அதிகரித்த நிலையில் சிலியின் தெற்கு பகுதியில் உள்ள வால்டிவியா நகருக்குச் சென்றார். அங்கிருந்து ஹுய்ஷுயூ ஏரியின் அருகே உள்ள வனப்பகுதி எஸ்டேட்டில் அவரை மறைத்து வைத்தார்கள். 1949 ஆண்டு மார்ச் மாதம் ஆண்டிஸ் மலைத் தொடர்களில் லில்பெலா கணவாய் வழியாக அர்ஜெண்டினாவுக்கு குதிரை மீதேறி தப்பினார் நெருடா. எப்படித் தப்பினார் என்பதை நோபல் பரிசு பெற்ற நிகழ்ச்சியின்போது நெருடா விரிவாக பேசியபோதுதான் தெரியவந்தது.

 

pp
பாப்லோ பிகாஸோ

 

சிலியை விட்டு வெளியேறி அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸ் வந்தார். குவாதமாலாவைச் சேர்ந்த மைக்கேல் ஏஞ்சல் ஆஸ்ட்டுரியாஸ் என்ற எழுத்தாளர் பாப்லோ நெருடாவின் நண்பராக இருந்தார். இருவருக்கும் உருவ ஒற்றுமை இருந்தது. அவருடைய பெயரிலான பாஸ்போர்ட்டை பயன்படுத்தி, பியூனஸ் ஏர்ஸிலிருந்து ஐரோப்பாவுக்கு சென்றார் நெருடா. புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாஸோ, பாரீஸுக்குள் நெருடா நுழைய ஏற்பாடு செய்தார். பாரீஸில் நடைபெற்ற உலக அமைதிக்கான மாநாட்டில் திடீரென்று பாப்லோ கலந்துகொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், பாப்லோ நெருடா சிலியை விட்டு தப்பவில்லை என்று அந்த நாட்டு அரசு மறுப்பு தெரிவித்தது. 

 

 

முந்தைய பகுதி:

அரசுப் பொறுப்புகளும் இடசாரி அரசியலும்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா - #2

 

 

அடுத்த பகுதி:

நோபல் விருதும் மர்மமான மரணமும்...! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி # 4

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்