Skip to main content

மரக்குதிரை! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 14

எனது சொந்த நகரமான டெமுகோவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்றேன். சிலி நாட்டின் தெற்கே இருக்கிற அந்த நகரம் எனது குழந்தை பருவத்தின் பெரும்பகுதி நாட்களை சுமந்திருக்கிறது. அந்த காலங்களில் எதார்த்தமும், கற்பனையும் தோய்ந்திருந்தன. மழையும் குளிரும் நிறைந்த இந்த ராஜ்ஜியத்தில் நான் நீண்ட நாட்களை கழித்ததைப் போல உணர்கிறேன். 

 

pablo neruda

 

தெற்கு சிலியில் ஒரு மரம் வளர்வதற்கு பல நூற்றாண்டுகள் கடந்திருக்கும். ஆனால், டெமுகோ நகருக்கு நான் திரும்பவும் வந்தபோது அதன் சுற்றுச்சூழல் பெரிய அளவில் மாறியிருப்பதை அறியமுடிந்தது. நில உடமையாளர்கள் கருணையே இல்லாமல் அழகுநிறைந்த வனத்தை எரித்து அழித்திருந்தனர். பேராசைதான் அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. அவர்கள் வேகமாக வளரும் மரங்களை நடவுசெய்து வளர்த்தனர். விறகுக்காகவும், பலகைகளுக்காகவும் விற்பனை செய்வதற்காக அவர்கள் மரங்களை வளர்த்தனர்.
 

எனது குழந்தைப்பருவ நகரத்தில் நான் அறிந்தவை மிகச்சிறிய அளவிலேயே எஞ்சியிருந்தன. நான் அறிந்த முகம் ஒன்றைக்கூட காணமுடியவில்லை. குழந்தைகளும், பெரியவர்களும் என்னை அறியாதவனைப்போலவே பார்த்தனர்.
 

உண்மையில் சிறுவயதில் நான் அறிந்த நெருக்கமான ஒரு விஷயம் எனது பாதையில் வந்தது. அது என்னை நினைவில் வைத்திருக்கும் என்று நினைத்தேன். அது ஒரு பெரிய மரக்குதிரை. குதிரை வளர்ப்போர் மற்றும் குதிரை சவாரி செய்வோருக்குத் தேவைப்படும் சேணம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடையில் அது நிறுத்தப்பட்டிருந்தது. எத்தனையோ கவர்ச்சிகரமான பொருட்கள் அந்தக் கடையில் இருந்தாலும், அந்த மரக்குதிரையின் கண்ணாடிக் கண்கள்தான் என்னைக் கவர்ந்தன. எனது கற்பனையை விரிக்க அது உதவியது. அது வருத்தத்தோடு என்னை பார்த்து. குழந்தையாக இருந்து உலகத்தையே சுற்றிவிட்டு சொந்த ஊருக்கு வந்த முன்னாள் குழந்தை, தன்னிடம் ஹலோ சொல்வதற்காக வந்திருப்பதாக அது நினைத்தது. இருவரும் நன்றாக வளர்ந்திருக்கிறோம். ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ள நிறைய விஷயங்களையும் வைத்திருக்கிறோம்.
 

50 ஆண்டுகளுக்கு முன்னர் டெமுகோ நகரில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களுடைய வியாபாரப் பொருட்களை விளம்பரப் படுத்த பொருட்கள் சம்பந்தப்பட்ட ஒன்றை கடை வாசலில் நிறுத்தி வைத்திருப்பார்கள். படிக்காத அரவ்கா இந்தியர்கள் தங்களுடைய தொலைதூர, மர்மம் நிறைந்த கிராமங்களில் இருந்து நகருக்கு வரும்போது எந்தக் கடையில் என்ன பொருள் வாங்கலாம் என்று இந்த பொருட்கள் எளிதில் அடையாளப்படுத்தும். ஒரு பெரிய சுத்தியலை நிறுத்தியிருந்தால் அந்தக் கடையில் கருவிகள் கிடைக்கும். பூட்டுக்கடை முன் பெரிய பூட்டும், செருப்புக் கடை முன் பெரிய செருப்பும் செய்து நிறுத்தியிருப்பார்கள். மூன்று மீட்டர் நீளத்தில் கரண்டி செய்து அரிசிக் கடைமுன் வைத்திருப்பார்கள். 
 

சிறுவனாக இந்த அடையாள சின்னங்களை பார்த்துக்கொண்டே வீதியில் நடப்பேன். அவற்றின்மீது நான் மிகுந்த மரியாதை கொண்டிருந்தேன். வித்தியாசமான நான் பார்த்திராத அற்புதமான உலகின் ஒரு பகுதியாக அவை இருந்தன. நகரைச் சுற்றிலும் இருந்த பிரமாண்டமான மரங்களையும் மரங்களிலிருந்து தொங்கும் விழுதுகள் மற்றும் கொடிகளையும் பார்க்கும்போது இதே பிரமாண்டமான உணர்வே ஏற்படும். சூறாவளிகள் மர வீடுகளை அசைத்துச் செல்வதைப்போல, எரிமலைகள் திடீரென கொந்தளித்து வெப்பத்தை வெளிப்படுத்துவதைப் போல அந்த உணர்வுகள் இருந்தன.
 

குதிரை சேணம் விற்பவரின் கடைமுன் நின்ற மரக்குதிரை வேறுபட்ட விஷயம். ஒவ்வொரு நாள் காலையும் எனது பள்ளிக்குச் செல்லும் வழியில் இந்தக் கடைமுன் நின்று கண்ணாடி வழியாக பார்த்து, மரக்குதிரை உள்ளே இருக்கிறதா, வெளியே சென்றுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்வேன். அந்தக் குதிரை சுத்தமான தோல் போர்த்தி நிஜமான பிடரி மயிருடன், வாலும், குளம்புகளும் கூட நிஜம்போலவே இருக்கும். குதிரையை பார்க்கும்போது குளிர் கலந்த தென்றலைத் தீண்டுவதைப் போலவும், பனி மழை பெய்வதைப் போன்ற உணர்வும் ஏற்படும். கடைக்குள் அது பாதுகாப்பாகவும் சாந்தமாகவும் நிற்கும். தனது பளபளப்பான தோலையும் அற்புதமான சேணத்தையும் நினைத்து பெருமிதத்துடன் நிற்பதாக தோன்றும். இன்னும் அது கடைக்குள்தான் இருக்கிறது. நான்கு கால் பாய்ச்சலில் அது மலைப்பக்கம் ஓடிவிடவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு, கடைக்குள் நுழைந்து, எனது பிஞ்சுக் கைகளால் அதன் முகவாயை தடவிக் கொடுப்பேன். வெயிலானாலும் மழையானாலும் பனியானாலும் இந்தக் குட்டிப்பையன் தன்னை கவனிப்பதற்காக வருவான் என்று அந்த பெரிய மரக்குதிரை தெரிந்து வைத்திருந்தது. அந்தக் குதிரையின் கண்ணாடி கண்களில் இதை அடிக்கடி நான் வாசித்திருக்கிறேன்.
 

pablo neruda

 

இப்போது எல்லாம் மாறிவிட்டது. பழைய நகரம் வேறு எங்கோ நகர்ந்துவிட்டதுபோல தோன்றுகிறது. நகரத்தின் மரக்கட்டை வீடுகளுக்கு பதிலாக, உயரமான, ஒரேமாதிரி தோற்றமுள்ள சிமெண்ட் வீடுகள் நிறைந்திருக்கின்றன. தெருக்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. சில குதிரைகளும் வண்டிகளும் மட்டுமே கனரக சாமான்கள் விற்கும் கடைகள் முன் நிற்கின்றன.
 

சிலி நாட்டிலேயே இந்த நகரில் மட்டும்தான் அரவ்கா இந்தியரகளை பார்க்க முடியும். அரவ்கா பெண்கள் அடர்த்தியான லாவெண்டர் வண்ட தொப்பிகளுடனும், ஆண்கள் பளபளப்பான டிசைன் உள்ள மேலாடையை போர்த்தியும் வருவார்கள். முன்பெல்லாம் அவர்கள் தங்களுடைய எளிமையான துணி வகைகள், முட்டைகள், கோழிகளை நகரில் விற்றுவிட்டு, அதற்குப் பதிலாக தங்களுக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிச் செல்வதற்காகவே வருவார்கள். 
 

மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நகரம் முழுவதுமே எனது கவிதை வாசிப்பைக் கேட்பதற்காக உள்ளூர் திறந்தவெளி அரங்கிற்கு வந்திருக்கிறது. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை. அரங்கத்தில் குழந்தைகளின் சிரிப்பொலியும், அழுகையும், கீச்சிடலும் நிறைந்திருந்தது. பேச்சாளர்களை பெரிய அளவில் திசைதிருப்புவது குழந்தைகளே. ஒரு குழந்தை தன்னுடைய பசியை ஆற்றிக்கொள்வதற்காக அழுவதை நிறுத்துவது சாதாரண விஷயமில்லை. அந்தச் சத்தத்தை ஒரு கவிஞன் சிரமப்பட்டு தாங்கிக் கொள்ளவேண்டும். பார்வையாளர்களின் பலத்த கரவொலிக்கு இடையே நான் மேடையில் ஏறினேன். அப்போது நான் கிறிஸ்து பிறப்பின்போது 2 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளை கொன்று குவித்த ஹெராட் தி கிரேட் என்ற பைபிள் கதையில் வரும் மன்னனுக்காக அனுதாபப்பட்டேன். ஆம், நான் மேடையில் நடந்தபோது திடீரென அரங்கத்தில் அமைதி நிலவியது. அதைத்தொடர்ந்து உலகின் மிகப் பழமையான ஒரு இசை பரவியது. 


அது அரவ்கா இந்தியர்களின் இசை. என்னை கவுரவப்படுத்துவதற்காக அவர்கள் சோகம் கலந்த பாடலை கருவிகளை வாசித்துப் பாடினர். இது நான் எதிர்பாராதது. ஒரு கவிதை நிகழ்வில் ஒரு அரசியல் நிகழ்வில் சடங்குகள் சம்பந்தப்பட்ட பாடலை பாடுவது எதிர்பாராதது. கடந்த காலங்களில் இது சாத்தியமே இல்லை. உண்மையில், பூர்வ குடியினர் கம்யூனிஸ்ட் நிகழ்வில் பாடுவது என்னை உற்சாகப்படுத்தியது. 
 

பழைய தோல் வாத்தியங்கள், நீண்ட பெரிய புல்லாங்குழல்களின் இசையுடன் அந்தப் பாடலைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வழிந்தது. கூர்மையான, இதயத்தை கசக்கிப் பிழியும் அந்த இசை, மழையை விசிறி அடிக்கும் காற்றின் சத்தத்தைப் போல, அடர்ந்த குகைக்குள் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய ஒரு பூச்சி ரீங்காரமிடுவதைப் போல இருந்தது. அரவ்கா இந்தியர்கள் அல்லது அவர்களில் எஞ்சியிருந்த மக்கள் கூட்டம், தங்களது நூற்றாண்டு தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்து போராடத் துவங்கியது. மிக நீண்ட காலமாக தங்களுக்கு மிகவும் அன்னியமாக இருந்த உலக நடவடிக்கைகளில் பங்கேற்க ஆர்வம் கொண்டனர்.
 

நிலங்களின் தோற்றம் மாறியது. மலைகளில் காடுகள் வளர முடியாது. பூமியின் எலும்புகளைப் போல மலை உச்சிகள் வழவழப்பாக இருந்தன. நிலச்சரிவு எதையும் விட்டு வைக்கவில்லை. பல பழைய கட்டிடங்கள் நிலை நடுக்கத்தில் தகர்ந்து போயின. காலம் சுழன்றது, ஆனாலும் மறுசீரமைப்புக்கான வாய்ப்பு எதையும் காணவில்லை. நகரின் வர்த்தக மையங்கள், நிர்வாகப் பிரதேசங்கள், ஆளும் அதிகார மையங்களைத் தவிர வேறு எங்கும் சீரமைப்பு இல்லை.
 

சமீபத்தில் கட்டப்பட்ட சில புதிய நகரங்களில், கிராமங்களில் ஈர்ப்புமிக்க வண்ணங்கள் பூசப்பட்டிருந்தன. வெள்ளை சுவர்களில் கருப்பு நிற மையால் எழுதப்பட்டிருந்தது.
 

“இந்த கிராமம், அமெரிக்க மக்களின் பணத்தால் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.”
 

கடுமையான நிலநடுக்கத்திற்குப் பிறகு சிலிக்கு பல நாடுகள் நிதி உதவி அளித்தன; ஆனால், அமெரிக்கர்கள் மட்டும், தாங்கள்தான் கொடையாளர்கள் என்று தங்களை முன்னிறுத்திக் கொண்டனர். இயல்பாகவே, இங்கே இருக்கும் தாமிரச் சுரங்கங்களைச் சுரண்டி, கொள்ளை லாபம் அடித்து உண்மையை அவர்கள் கூறமாட்டார்கள். அந்தப் பணத்தில் இருந்து, அனைத்து நகரங்களையும், சாலைகள், ரயில்வே, பாலங்கள் மற்றும் தொழிற்சாலைகளையும் அவர்கள் மறு கட்டமைப்பு செய்யலாம். அதாவது, எனது நாட்டின் ஒட்டு மொத்த வரலாற்றில் மனிதன் உருவாக்கிய அனைத்தையும் செய்யமுடியும்!
 

நான் எனது பழைய நண்பனிடம் விடைபெற விரும்பினேன். மரத்தாலான அதன் பிடறியை மீண்டும் ஒருமுறை தடவிக் கொடுத்தேன். திடீரென்று, மரச்சிற்பத்தின் அடியில், தோல் பகுதி விலகி, மரக்கட்டை வெளிப்பட்டது. நான், பழைய குதிரையின் மனதைத் தொட்டதாக உணர்ந்தேன். குதிரையை அலங்கரிக்கத் தேவையான பொருட்களை விற்பனை செய்யும் அந்தக் கடையில் இந்த பழைய குதிரையை ஓட்டிச்செல்ல விரும்பிய ஒரே மாணவன் நான்தான் என்று எப்போதும் நினைத்தது உண்டு. ஆனால், ஒவ்வொருவரும் பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பும் போதும் வழியில் இப்படித்தான் நினைத்தார்கள் என்பதையும் கண்டுபிடித்தேன்.
 

அது வெறுமனே ஒரு மரக்குதிரைதான் என்பது எனக்குத் தெரிந்தாலும், இந்த மாபெரும் உலகின் கடைசிப் பகுதியில் களை இழந்துபோன இந்த சின்னஞ்சிறிய நகரில், தன்னைக் கடந்து சென்ற குழந்தைகளையும், வாலிப வயதை அடைந்துவிட்டவர்களின் பழைய அன்பையும், கவனிப்பையும் இன்னும் எதிர்நோக்கி காத்திருக்கிறது அந்தக் குதிரை.
 

அந்த பழைய மரக்குதிரையின் கண்களுக்குக் கீழே, தனது வாழ்வில் பல்வேறு மாற்றங்களைக் கண்ட அந்த குதிரையிடம், எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றி அவசியம் சொல்ல வேண்டும் என எண்ணினேன்.
 

எனது பழைய நண்பனே, நான் இந்த நகரைவிட்டு வெளியேறிய பின்னர், காதலைப்பற்றி, இரவைப்பற்றி உணர்ச்சிகரமான கவிதைகளை எழுதினேன். எனக்குள், தானியங்களைப் போல, மலைகளுக்குக் கீழே வளரும் செடிகளைப் போல கவிதை வளர்ந்தது. நான் உன்னிடம் சொல்வேன், எனது அன்பான குதிரையே, எனது கவிதை ஒருபோதும் ஓரிடத்தில் நின்றுவிடவில்லை, நிலையாக முன்னேறியது! மாநகரின் முற்றங்களில், கூடியிருந்த மக்களின் மொழியை எனது கவிதை பேசியது. தற்போது, அது, அவர்களது ஆயுதமாகவும், விளம்பர பதாகையாகவும் திகழ்கிறது! நான் உள்ளடக்கத்துடன் இருக்கிறேன்.. எனது அன்பான இளம்பருவ நண்பனே!

                    

இழ்வெஸ்தியா,    

மார்ச் 30, 1963.

 

 

முந்தைய பகுதி:
 

கியூபாவின் வெளிச்சம்! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 13

 

 

 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்