ADVERTISEMENT

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #49

04:40 PM Jan 12, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கன்னத்தில் விழுந்த அறை, ஆவேசம் கொண்ட புலி ஒன்றின் அறைபோல் இருந்தது கவிக்கு.

கவியின் அம்மா அப்படி ஒன்றும் பெரிய பலசாலி அல்ல. மென்மையானவர் தான். அவர்களிடம் எப்படி இப்படி ஒரு வலிமை? கோபம் அப்படி ஒரு வலிமையைக் கொடுத்ததா..?

சில நிமிடங்கள் அந்த இடத்தில் காற்றில்லா ஏதோ ஒரு கிரகத்திற்குச் சென்றது போன்ற உணர்வுடன் ஒருவித மௌனம் நிலவியது. கவி கன்னத்தைப் பிடித்துக் கொண்டு கண்கள் சிவக்க கண்ணீருடன் செய்வதறியாது தவித்த மனநிலையில் நிலைதடுமாறி நின்றுகொண்டிருந்தாள். மதுரையை எரித்தும், ஆவேசம் அடங்காத கண்ணகி மாதிரி காட்சி தந்தார் அம்மா திலகா.

ராம், கவியின் அருகில் சென்று அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டான். அவ்வளவுதான் திறந்துவிட்ட வீராணம் ஏரி போல, அழுகை வெள்ளமாய்ப் பொங்கியது. "விடு கவி, யார் அம்மா தானே அடிச்சாங்க" என்று ஆறுதலாகத் தலை கோதினான்.

"அளவுக்கு அதிகமான நம்பிக்கையாலும் அளவுக்கு அதிகமான நம்பிக்கையின்மையாலும், தான் சில தவறுகள் நடைபெறுகின்றன" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ராம்.

பொங்கி அடங்கிய பாலென திலகா மகளின் அருகில் சென்று அணைத்துக் கொண்டு "சாரிடா என் செல்லம்" என்று கொஞ்சினார். விடுபட்ட கம்பிச்சுருள் போல விருட்டென்று விலகினாள் கவி.

"அம்மா... உனக்கு வேண்டுமானால் அப்பா நல்லவராக இருக்கலாம். ஆனால் பள்ளி மாணவிகளிடம் கொடூரனாக நடந்து கொண்டிருக்கிறார்".

அவர் வாயிலிருந்து கூரிய அம்பாய் சொற்கள் வெளியேறின. " வாயை மூடு. என் புருசனைப் பற்றி எனக்குத் தெரியும். நிலவுக்குக் கூட வளர்பிறை தேய்பிறைன்னு இருக்கு. உங்க அப்பாவைப் பொறுத்தவரை அவர் கருணை மனதுக்கு கொஞ்சமும் தேய்மானம் இருக்காது. அவர் நம் குடும்பத்தின் மீது வைத்துள்ள அன்பை, திருமணம் ஆன முதல் நாள் எப்படி காட்டினாரோ, அப்படிதான் இந்த நிமிடம் வரை காட்டிக்கிட்டு இருக்கார். பெண் குழந்தைகளுக்கு நடக்குற கொடுமைகள் பத்திக் கேள்விப்படும் போதெல்லாம், அவர் தனிமையில் கவலைப்பட்டு கண்ணீர் சிந்துறது எனக்குத் தான் தெரியும். ஏன் தியாவுக்காக அவர் எத்தனை வேளை சாப்பிடாமல் இருந்தாருன்னு உனக்குத் தெரியுமா? " என்று கணவரின் அன்பில் உருகினார்.

"பெண்களின் மிகப் பெரிய பலவீனமே தன் கணவன் ராமன் என்று நம்புவதுதான்" என்று மனதிற்குள் ஆதங்கப்பட்டாள் கவி.

"அப்பா.. தவறானவர் என்ற உறுதியில் இருக்கிறாயா கவி?”. "அம்மா, அப்பா தவறு செய்யமாட்டார் என்ற உறுதியில் நீங்க இருக்கிறீர்கள் தானே...?"

"அப்பாவே வந்து நான் தவறானவன்" என்று சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்” என்று அழுத்தமாகச் சொன்னார் திலகா.

"அம்மா ஒரு பொண்ணு இந்த விசயத்தில் பொய் சொல்வாளா..?"

" சரி.. உன் வாதப்படி அப்பா தான் தவறு செய்தவர்ன்னா, அதற்கு என்ன ஆதாரம்?"


"தியா.. மனநல மருத்துவரிடம் பேசி இருக்காளே..மா. பள்ளியின் நிர்வாகியும் தவறாக நடக்கிறார்ன்னு தெளிவாகச் சொல்லி இருக்காளே... தியாவுக்கு அம்மா ஸ்தானத்தில் இருக்கிற நீ, கொஞ்சம் யோசித்துப் பாரும் மா. உன் கையால உணவு ஊட்டிய மகளான நான் பொய் சொல்வேனா.?” கவி பேசப் பேச அம்மா அமைதியானார்.

"அம்மா என்னிடம் ஒருவன் தவறாக நடந்து கொண்டால் சும்மா இருப்பியா..? மனசாட்சியுடன் பதில் சொல்லுங்க" என்று மகள் பாசத்தைக் கையில் எடுத்தாள் கவி.

"வெட்டி வகுந்திடுவேன். அவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை" என்றார் ஆவேசமாக திலகா.

“வாய்நிறைய உன்னை அம்மா என்றுதானே மா தியா கூப்பிடுவா. வாழ வேண்டிய அந்த ஜீவன் அஸ்தியா கரையும் போது உன் மனசு கரையலையா” என்று ஆலம் விழுதெனப் பெண்மையின் தாய்மையை பிடித்துக் உலுக்கிக்கொண்டாள் கவி.

"மனசு ரொம்ப வலிக்குதுதாம்மா. இருந்தாலும் அப்பாவை என்ன பண்றது?

"பெண்களின் இந்த குணம்தான் ஆண்களை தப்பு பண்ண வைக்கிது. எத்தனையோ பாலியல் வன்கொடுமைகளை மீடியாக்களில் பாக்கறோம். ஒரு இடத்தில் கூட அந்த தப்பான ஆண் மீது அவன் குடும்பத்தில் உள்ள பெண்கள் யாரும் கோபப்பட்டதாகவும், எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரியலையே.? ஒரு பெண் தெருவில் இறங்கி அந்த ஆணை தண்டித்திருந்தால் மற்ற ஆண்களுக்கும் பயம் இருக்கும் இல்லையா?" என்று ஆவேசமாகப் பேசினாள் கவி.

கவி சொன்னதும் திலகாவின் மனதிற்குள் இருந்த பெண்மையின் வீரம் விழித்தெழுந்தது.

“என்ன பண்ணலாம்னு சொல்லு கவி, நீ என்ன சொன்னாலும் செய்றேன்." பொறுப்பை கவியிடமே ஒப்படைத்தாள்.

"அம்மா.. தியா மரணத்தில் மற்ற இருவருக்கும் என்ன தண்டனை கிடைத்ததோ, அதே தண்டனை தான் அப்பாவிற்கும் கிடைக்கணும்" என்று கவி மனதைக் கல்லாக்கிக் கொண்டு சொன்னாள்.

இதைக் கேட்டதும் ஐயோ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார் திலகா.

" என்னால் இந்த கொடுமையெல்லாம் பார்க்க முடியலை. உங்களுக்கு இடையில் நடக்கும் இந்தப் போராட்டம் என் மனதில் சம்மட்டியால் அடிக்கிது. நான் கிளம்புறேன்" என்று சொன்னபடி, வேகமாக அங்கிருந்து வெளியேறினான் ராம்.

திலகாவும் கவியும் அழுது கொண்டே இருந்தனர். 'பெண்மை வரமா..? சாபமா..? கருவறையில் கடவுளாக வணங்கும் பெண்மைதான், கயவர்களால் சூறையாடப்பட்டு மரணம் வரை கொண்டுசெல்கிறது’ என்று மனதிற்குள் கலங்கினாள் கவி.

இந்த உணர்வுப் போராட்டங்களுக்கு இடையில், ரெண்டு நாளில் இது பற்றி முடிவெடுக்கலாம் என்ற தீர்மானத்துடன், படுக்கைக்குச் சென்றார்கள் கவியும் திலகாவும்.

இதையெல்லாம் அறியாத கவியின் அப்பா எஸ்.கே.எஸ்., ரெண்டு பெக் ஒயின் சாப்பிட்டுவிட்டு, இளையராஜாவின் ரிதத்தை மெலிதாக ஓடவிட்டுக்கொண்டு, படுக்கையில் சாய்ந்துகொண்டு, லெபனான் கவிஞன் கிப்ரானின் ‘கண்ணீரும் புன்னகையும்’ நூலை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தார்.
ஒரு பெரிய மரணச் செய்தியுடன் மறுநாள் விடியப்போகிறது என்பதை, மகள் அறையிலேயே உறங்கத் தொடங்கிய திலகா அப்போது அறிந்திருக்கவில்லை.

( அடுத்த பகுதியுடன் நிறைவுறும் )

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #48

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT