Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #26

 

marana muhurtham part 26

 

அலைகடலில் சிக்கியவனுக்குத் துணிச்சலும் தன்னம்பிக்கையும் இருந்தால் சிறிய கட்டை கூடப் போதும் அவன் கரையேறுவதற்கு. துணிச்சலும் தன்னம்பிக்கையும் இல்லை என்றால், படகையே கொண்டு சென்றாலும் அவனைக் காப்பாற்றுவது கஷ்டம்.

 

இப்போது கவியும் அலைகடல் போன்ற பிரச்சனையில்தான் மாட்டிக்கொண்டுள்ளாள். அவள் கரைசேரக் கட்டையாக நினைப்பது ராமின் உதவியைத்தான்.

 

இப்போது இருக்கும் இளம் வயதினர் தண்ணீரிலேயே வெண்ணெய் எடுப்பார்கள். வெண்ணெய்யே கிடைத்தால் என்னென்ன செய்வார்கள்..? கவிக்கு இப்போது வெண்ணெய் கிடைத்தது போலத்தான் சரியான நேரத்தில் ராம் தொடர்புகொண்டு பேசியது. தியா குறித்த தனது தேடலுக்கு அவன் உதவுவான் என கவி நினைத்தாள்.

"சாரி..டி, வொர்க் அதிகம். அதான் அதில் பிஸியாயிட்டேன்" என்ற ராமின் குரல் அவள் நினைவைக் கலைத்தது.

"சரி..சரி.. இன்னும் 1 மணி நேரத்தில் நீ இங்க இருக்க. வரும்போது உன் லேப்டாப்பை எடுத்துட்டு வர்ற. சரியா?" என்று ஆர்டர் போட்டாள் கவி.

"ஒகே. மேடம் உத்தரவு போட்டா சரிதான்" என்று கிண்டலடித்துவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.

 

ராம் வருவதற்குள் குளித்து முடித்து ஃபிரஷ் ஆனாள் கவி. சமையலறை சென்று நேற்று கோபமாகப் பேசியதற்காக அம்மாவிடம் சாரி சொல்லிவிட்டு, சந்தடி சாக்கில் அம்மாவைக் கொஞ்சம் கொஞ்சிவிட்டு சகஜநிலைக்கு மாறினாள் கவி.

 

சொன்னது போல ராம் 1 மணி நேரத்தில் வந்துவிட்டான். 'எப்படி சித்தி இருக்கீங்க?' என்றபடி, அம்மா திலகாவிடம் பேச முற்பட்டவனை, அப்படியே மடக்கி நிறுத்தி, "ராம் வா. என் அறைக்குப் போகலாம்" என்று அவசரமாக அழைத்தாள்.

"இருடி. சித்தி கிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு வரேன்" என்று சொன்னவனை கையைப் பிடித்து தரதரவென்று அவள் அறைக்கு அழைத்துச் சென்றாள். அவள் பயம் அவளுக்குத்தானே தெரியும். ராம் வைத்திருக்கும் லேப்டாப்பைப் பார்த்தால் அப்பாவிற்கு சந்தேகம் வரும்.

அவர் கண்ணில் படாமல் எஸ் ஆகனும்னுதான் ராமை அவசரமாக அவள் ரூமுக்கு அழைத்து வந்தாள்.

"கவி, என்னாச்சு  டி  உனக்கு? ஏன் இப்படி அவசரப்படற. ஏதோ பதட்டமாவே இருக்கியே. என்ன பிரச்சனை உனக்கு?" என்று அக்கறையுடன் கேட்டான்.

"ஒன்னும் இல்லை டா. ஒரு 10 நிமிடம் வெயிட் பண்ணு. இந்த வொர்க்க முடிச்சிட்டு பேசறன்"னு சொல்லிட்டு ராமிடம் இருந்து லேப்டாப் வாங்கி, மறைத்து வைத்திருந்த பென்ட்ரைவ்வை சொருகி, ஏற்கனவே இவள் வைத்திருந்த டிவைஸ் கேபிளை லேப்டாப்பில் கனெக்ட் பண்ணி, லேப்டாப்பில் இருந்து இவள் செல்லுக்கு கனெக்ட் பண்ணி, பென்டிரைவில் இருந்த  மேட்டரை இவள் செல்லில் தியான்னு ஒரு ஃபோல்டர் ஓப்பன் பண்ணி அதில் சேவ் பண்ணிக்கொண்டாள் கவி.

 

இந்த வேலைக்கெல்லாம் அதிகபட்சம் 10 நிமிடம் ஆனது. அதுவரை அங்கிருந்த கவியின் நீட் புக்கை புரட்டிக்கொண்டிருந்தான் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு எம்.டி. நீட்டுக்கு தயாராகும் ராம்.

 

ராம், எஸ்.கே.எஸ் சின்  அண்ணன் மகன். சென்னை தி.நகரில்  அவர்கள் குடும்பம் இருக்கிறது. எஸ்.கே.எஸ் ஸுக்கு அவருடைய அண்ணன் நாகா, நாட்டாமை சரத்குமார் மாதிரி. "அண்ணன் சொன்னா சரிதாங்கோ" என்ற டயலாக் பேசறவர்தான் எஸ்.கே.எஸ்.

 

நிறைய தொழில்கள் அண்ணன் தம்பி பார்ட்னர்ஷிப்பில்தான் நடந்துகொண்டிருக்கிறது. நாகா அடிக்கடி கவிநிலா பள்ளிகளுக்குச் சென்று பார்வையிடுவது வழக்கம்.

"டேய்..ராம் வேலை முடிந்துவிட்டது. இந்தா உன் லேப்டாப்” என்று அவனிடம் கொடுத்தாள்.

இருவரும் ஒன்றாக வளர்ந்ததால் கவி அண்ணன் என்று அழைக்கமாட்டாள். நல்ல தோழனாகத்தான் நினைப்பாள். ராமுக்கும் கவி எல்லா ரகசியங்களையும் பகிரும் நல்ல தோழிதான்.

"கவி என்னடி ஆச்சு? உன் லேப்டாப் எங்கே.?” என்று ஜாங்கிரி மாதிரி கேள்வியைச் சுற்றினான்.

"ராம்.. பிளீஸ் இப்ப என்னிடம் எதையும் கேட்காதே. நேரம் வரும்போது நானே சொல்றேன்" என்று அவனின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

 

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே திலகா இருவருக்கும் காம்ப்ளான் போட்டு எடுத்து வந்தாள்.

"ராம் கை காலெல்லாம் வலிக்குது டா. ஏதாவது மாத்திரை எழுதிக் கொடுடா” என்று ராமிடம் கேட்டாள்.

 

என்னதான் அம்மா பல பட்டங்கள் வாங்கிப் பெரிய படிப்பு படித்திருந்தாலும், தனக்குச் சொல்லிக்கொடுக்கும் 1வது டீச்சர்தான் அம்மாவைவிடச் சிறந்த அறிவாளி என்று குழந்தைகள் நினைப்பார்கள்.

 

அதுமாதிரி ஊரெல்லாம் டாக்டர்கள் இருந்தாலும் திலகாவிற்கு ராமிடம் மருந்து வாங்கி சாப்பிட்டால்தான் நோய் குணமாகும் என்ற எண்ணம்.

"ஈவினிங்கா வந்து உங்களைப் பார்க்கிறேன். எனக்கு இப்ப அவசர வேலையிருக்கு" என்று சித்தி திலகாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான் ராம்.

 

வாசல் வரை வந்து வழியனுப்ப வந்த கவி, "டேய்..ராம் நீ எப்பவும் நியாயத்தின் பக்கம்தானே இருப்ப" என்று கொஞ்சம் தழுதழுத்த குரலில் கேட்டாள்.

"லூசாடி நீ ? ஏன்  இப்படிப் பேசற? நியாயத்தின் பக்கம் பேசுவேன். கூடவே அது யாருக்கான நியாயம் என்பதை யோசித்தும் பேசுவேன் கவி" என்று சொல்லிவிட்டு, பை என்று கையசைத்துவிட்டுக் கிளம்பினான் ராம். அவன் பதில், இவன் நமக்கு உதவுவானா? என்ற கேள்வியை கவி மனதில் பதிய வைத்தது.

 

தன் அறைக்குள் வந்த கவி, கதவை உள்பக்கம் தாழிட்டுவிட்டு, தன் செல் எடுத்து, தியாவின் சம்மரி ஃபோல்டரை ஓப்பன் பண்ணினாள். அதில் தியா டாக்டரிடம் சொன்ன செய்திகளைப் படிக்க ஆரம்பித்தாள்.

"நானும், கவியும், ஷாலுவும் மூவரும் உயிர்த்தோழிகள். அவர்களைப் பிரிந்து இந்தப் பள்ளிக்கு வந்ததும் என்னால் தனியாக இருக்க முடியவில்லை" - எனப் பேசத் தொடங்கிய தியாவின், சொற்கள் அவள் கண்களைக் குளமாக்கியது. மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவளாக... தியாவின் அந்தக் கடைசி வாக்கு மூலத்தை மேலும் வாசிக்கத் தொடங்கியபோது... படபடவென அவள் அறைக்கதவு தட்டப்பட.. அதிர்ச்சியானாள் கவி. அவசரமாக செல்போனை அணைத்துவிட்டு கதவைத் திறந்தாள்....

 

(திக்திக் தொடரும்)

 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #25