Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #15

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

marana muhurtham part 15

 

அத்தியாயம்- 15

 

கவி மீது அசுர வேகத்தில் மோதிய கார், அவளை சில அடி தூரத்துக்கு பக்கவாட்டில் தூக்கி வீசிவிட்டு, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி,  நடைபாதை மேடையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நின்றது.

 

தனக்கு என்ன நடந்தது என்று உணரக்கூட முடியாமல், தூக்கி வீசப்பட்டிருந்த கவி, சட்டெனச் சுதாரித்துக்கொண்டு  எழுந்தாள்.  நல்லவேளை முழங்கை, முழங்கால்களில் மட்டும் எரிச்சல் இருந்தது. சின்ன சின்ன சிராய்ப்புக் காயங்கள்தான்... அதிசயமாய் தான் உயிர் பிழைத்ததாக அவள் நினைத்தாள்.

 

தன்னைக் குறிவைத்துதான் கார் மூர்க்கமாக வந்ததோ என்று திகைத்து... மிரண்டாள். கால்கள் தானாக நடுங்கிக்கொண்டே இருந்தது.

 

அதே நேரம்... கார்  சீறிவருவதை உணர்ந்து சிலர், விலகி ஓடியிருந்தனர். மின் கம்பத்தில் கார் ’டமார்’ என மோதியதைக் கண்டு அவர்கள் ரொம்பவே மிரண்டு போனார்கள். 

 

அவர்களில் சிலர், வெறிபிடித்து ஓடிவந்த காரிடமிருந்து  தப்பிக்க, திடீரென நடுச்சாலைக்கு ஓடி வந்திருந்தனர். அவர்களால்,  சாலையில் வந்த  வாகனங்கள் சில,  நிலை தடுமாறி, சடன் பிரேக் என்னும் பலவந்தத்துக்கு ஆளாயின. அப்போதும், "சர்..சர்..” என்று  இழுத்துக் கொண்டே சிறிது தூரம் ஓடி அவை நின்றன. இத்தனைக் களேபரமும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது.
கம்பத்தில் மோதியதில், காரின் முன்பக்கம்  அப்பளம் போல் நொறுங்கி இருந்தது..

 

ஈரமுள்ள சிலர் ”யாருக்கு என்னவோ?” என்று வேகமாக அந்த இடத்திற்கு ஓடிவந்தனர்.

 

’மிராக்கிள்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் அன்று தான்  கவிக்கு விளங்கியது.

 

பின் தொடர்ந்த அந்த மர்ம நபரால், மனக்குழப்பத்தில்  இருந்த கவி, மெயின்ரோட்டில் கால் வைக்கும் போது, பக்க வாட்டுப் பக்கங்களை, பதட்டத்தில் சரியாகக்  கவனிக்கவில்லை. அதனால்தான்  இந்த விபத்து என்று புரிந்துகொண்டாள். 

 

கவி விழுந்த வேகத்தில், அவள் கையில் இருந்த  ஹேன்ட் பேக்  தூரத்தில் விழுந்திருந்தது. கையிலிருந்த செல்போனும்  அவள்  அருகில் கிடந்தது.  அப்போது கூட்டத்திற்கு நடுவே திடீரென அந்த மர்ம நபர் தென்பட்டான். அதே நபர். அந்த தெருவில் அவளைப் பின் தொடர்ந்த அதே தாடிப்பேர்வழி. 

 

அவள் சுதாரித்துக் கூப்பாடு போடுவதற்குள், அவன், அவளின்  ஹேண்ட்  பேக்கை தூக்கிக்கொண்டு நிமிடத்தில் எஸ்கேப் ஆனான். இதைப் பறிப்பதற்காகத்தான் அவன் தன்னை   இத்தனை நேரமாக ஃபாலோ  செய்திருக்கிறான் என்பதை நொடியில் உணர்ந்தாள்.  ’ச்...சே.. இதற்கா இவ்வளவு பயந்தோம்?’ அந்த நிலையிலும் அவளுக்கு சிரிப்பு வந்தது. நிம்மதியானாள்.

 

நல்லவேளை ஹேண்ட் பேக்கில் இரண்டாயிரத்து சொச்சம் சில்லறையும், மேக் அப் ஐட்டங்களும் ஒரு கர்சிஃபும் மட்டும்தான் இருந்தது. அவனைத் துரத்திப் பிடிக்கக் கூட மனமின்றி விட்டுவிட்டாள். ’போய்த் தொலையட்டும் சனியன்’ 

 

சட்டெனச் சுதாரித்துக்கொண்ட கவி,  கம்பத்தில் மோதி  நசுங்கி நின்ற காரை  நோக்கிச் சென்றாள். டிரைவர் சீட்டில் 25 வயது மதிக்கத் தக்க ஒரு பெண் மயங்கிய நிலையில் இருந்தாள்.   அதற்குள் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர்  108 -க்கு  தகவல் கொடுத்துவிட்டார். அந்த பெண்ணுக்கு இன்னொருவர் தண்ணீர் பாட்டில் வாங்கிவந்தார். அங்கு ஆண்கள் கூட்டம் அதிகம் இருந்தது.  அந்த பாட்டிலை வாங்கி, அந்த பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்து... ”உங்களுக்கு ஒன்னும் இல்லை. முழிச்சிப் பாருங்க” என்று தைரியம் சொன்னாள்.

 

காரின் முன்பக்கக் கண்ணாடியின் உடைந்த சில்லுகள் அவள் நெற்றியிலும் முகத்திலும் தெறித்து ரத்தக் கசிவை ஏற்படுத்தியிருந்தன. அதே போல கையிலும் ரத்தக் கட்டு தெரிந்தது. காலும் இடிபாடுகளில் வசமாக சிக்கியிருந்தது. மெதுவாக அவளின் கையைப் பிடித்து அவளை வெளியே வரச்செய்தாள் கவி.

 

அதற்குள் ஹை வே போலீஸின் பாட்ரோல்  வாகனம் வந்துவிட்டது. 

 

கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் வந்த போலீஸ்காரர்கள்....  

"என்னம்மா ஆச்சு ? இப்ப ஆம்புலன்ஸ் வந்திடும். பக்கத்துல தாம்பரம் ஜி.எச். இருக்கு. அங்க போயிடலாம்" என்று  அக்கறையுடன் சொன்னார்கள். 

 

அந்தப் பெண் கொஞ்சம் தெளிவாவதைக் கண்டதும் அவர்களில் ஒருவர், "லைசென்ஸ் இருக்கா மா..?" என்றார்.

”எல்.எல்.ஆர் இருக்கு சார்”  என்று மெதுவாக அந்தப் பெண் சொன்னாள்.  கவி, அப்போதுதான் காரின் முன்பக்கம் "எல்" போர்டு இருப்பதை கவனித்தாள். கூடவே டி.ஆர்  என்ற ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டு இருந்தது. அந்தப் பெண், ஒரு டாக்டராக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள் கவி.

 

அந்தப் பெண், தன் ஹாண்ட் பேக்கிலிருந்து  ’எல்.எல்.ஆர். ரஸிப்ட்டை எடுத்து நீட்டும் போது "உங்க பேர் என்ன ..?” என்று அந்தப் போலீஸ்காரர் கேட்டார்.

"லேகா ஶ்ரீ " என்று பதில் சொல்லிவிட்டு, அவள் யாருக்கோ ஃபோன் பண்ணினாள். ஆனால் எதிர்முனை எடுக்கப்படவில்லை. 

 

லேகா அருகிலேயே  இருந்த கவியைப் பார்த்த போலீஸ்காரர் 

"நீங்க யாரு? இந்தம்மா கூட வந்தவங்களா?” என்று கேட்டார்.

”இல்லை. நான் இந்தவழியா போய்க்கிட்டு இருந்தப்பதான்... ஆக்ஸிடெண்ட். அடிபட்டிருந்த இவங்களுக்கு உதவி செய்ய வந்தேன்” என்று, தன் மீது கார் உராய்ந்ததை கட் பண்ணிச் சொன்னாள்.

 

ஆம்புலன்ஸ் சைரனுடன் வந்தது. 

"ஆம்புலன்ஸ்  வேண்டாம் சார். நானே டாக்டர்தான். நான் ஒர்க் பண்ற ஆஸ்பிட்டல்லயே ட்ரீட்மெண்ட் எடுத்துக்கறேன்" என்று லேகா சொல்ல

"மேம், இது ஆக்ஸிடெண்ட் கேஸ்.  கார் ரொம்ப டேமேஜ் ஆகியிருக்கு, நீங்க இன்ஸ்சூரன்ஸ் எடுக்கனும்ன்னா கூட   ஸ்டேஷன் கம்ப்ளைன்ட் வேணும். அதுக்கு ஜி.ஹெச்.லதான்  நீங்க ட்ரீட்மெண்ட் எடுத்துக்கனும்”என்றார் அந்த  போலீஸ்காரர்.

"நான்தான் யார் மீதும் மோதலையே. எதுக்கு கம்ப்ளைன்ட்?” என்று லேகா கேட்க....

”மேடம், அரசு மருத்துவமனையிலேயே, சாலை விபத்து போலீஸ் இருப்பாங்க அவங்க சி.எஸ்.ஆர் காப்பியை உங்களுக்குத் தருவாங்க.  அது இருந்தா தான் நீங்க  இன்ஸ்சூரன்ஸ் வாங்கமுடியும். இல்லைன்னா உங்க  காருக்கான இழப்பீடு கிடைக்காது"என்று மீண்டும் அவர் விளக்கினார்.

"சரி.. ஓகே.. " என்றபடி, லேகா ஆம்புலன்ஸில் ஏறினாள். அப்போது "மேடம் வண்டியை இங்கிருந்து கிளீயர் பண்ணனும்.. அது உங்க செலவுதான்” என்று எதற்கோ அடிபோட்டார் போலீஸ்காரர்.

"சார், என் அப்பாவிற்கு லொகேஷன் அனுப்பியிருக்கேன். அவர் வந்து பார்த்துப்பார். அவர் கொடுப்பார்" என்று லேகா சொன்னாள்.

 

லேகாவை அப்படியே ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்ப கவிக்கு மனமில்லை.  அதனால், ”நான் உங்களுக்குத் துணையா ஆஸ்பிட்டல் வரை வர்றேன்” என்று அவளும் ஆம்புலன்ஸில் ஏறிக்கொள்ள... லேகா “தாங்ஸ்”  என்று புன்னகைத்தாள்.

 

ஆம்புலன்சில் செல்லும் போதே லைனில் பதட்டமாக வந்த  லேகாவின் அம்மா அழ... லேகா தைரியம் சொன்னாள்.

 

தாம்பரம் ஜி.ஹெச்.சுக்கு லேகாவின் வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தனர். அந்தக் குடும்பமே பதறிப்போயிருந்தது.

 

இனி தனக்கு வேலை இல்லை என்று உணர்ந்த கவி, 

"மேம், நான் கிளம்பறேன்" என்று சொல்லிவிட்டு நகர எத்தனிக்க...

"சிஸ்டர் உங்க பேரைக் கூட நான் தெரிஞ்சிக்கலையே.? " என்றாள் லேகா.

"கவிநிலா " என்று பெயரை மட்டும் சொன்னாள்.

"நான் வேளச்சேரி ராகவ் ஆஸ்பிட்டல்ல ஒர்க் பண்றேன்.  அவசியம் ஒரு நாள் வாங்க. வராம இருந்திடாதீங்க. இது என் விசிட்டிங் கார்டு"என்று அட்டையை நீட்டினாள் லேகா.

”ஸ்யூர் “ என புன்னகையோடு வாங்கிக்கொண்டு விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள் கவி.

 

ஓலா பிடித்து ஷாலுவின் அத்தை வீட்டிற்கு வந்த  கவிக்கு, உடலும் மனமும் சோர்ந்திருந்தது.  
அத்தை, சூப்பராக  திடம், மணம், சுவை கலந்த டீ போட்டு கொடுத்தார். அதைக் குடித்ததும் அம்மாவின் நினைவு வந்தது கவிக்கு. கூடவே அழுகை பீறிட, அடக்கிக் கொண்டாள்.

 

கவியின் கைகளைப் பிடித்துக்கொண்டு "ஏம்மா, வீட்டு ஞாபகம் வந்திடுச்சா.. அத்தை இருக்கேன். எதற்கும்  கலங்காதே" என்று அவள் மனத்துடிப்பு அறிந்து சொன்னார் அவர். அப்போதைக்கு அது அவளுக்கு அசுர பலம் கொடுத்தது.

 

அப்போது, காலிங் பெல் அடிக்க, கதவைத் திறந்தார் அத்தை. ஷாலு பரபரப்பாக ஓடிவந்தாள். 

”ஏன் கவி? உனக்கு என்னாச்சு? எத்தனை முறை போன் பண்ணினேன். ஏண்டி எடுக்கலை? என்னவோ ஏதோன்னு பயந்து போய்ட்டேன்” என்று கோபத்தில் கவியின் முதுகில் அடிவைத்தாள். 
கவி அப்போது தான், போனைப் பார்த்தாள். அது சைலண்ட் மோடில் இருந்தது.

 

ஷாலுவிடம், தன்னைப் பின் தொடர்ந்த திருடன் பற்றியும், தான் சந்தித்த கார் விபத்து பற்றியும்  படம் ஓட்டினாள்.

" ஷாலு இந்த ராகவ் ஆஸ்பிட்டல் பேரை எங்கேயோ கேட்டிருக்கோம்" என்று யோசனையாக சொன்னாள் கவி. 

"ஆமாம்டி...” .என்றவள்... சட்டென்று நினைவு வந்தவளாக... “தியா மன அழுத்தமாக இருக்கும் போது, அந்த ஆஸ்பிட்டல்ல இருந்த சைக்கியாட்ரிஸ்ட்டிடம் தானே  காட்டினாங்க” என்றாள் ஷாலு.

 

ஷாலு சொன்னதும் கவியின் முகம் மாறியது.  பற்களைக்,கடித்துக் கொண்டே" விட மாட்டேன் அவர்களை" என்றாள். அவள் முகத்தில் திடீரென அனல் தகித்தது. அவள் குரலில் இறுக்கம் தெரிந்தது. உடல் விரைத்துப் போனது போல் மாறினாள். அவள் பார்வை எங்கோ வெறித்தது.

 

அவளிடம் தெரிந்த மாற்றத்தைப் பார்த்த ஷாலு வியர்த்துப்போனாள்.

”இவள்... கவியா? தியாவா..?”

 

(திக் திக் தொடரும்).

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #14