ADVERTISEMENT

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #39

05:36 PM Nov 20, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

"எஸ்.கே.எஸ். சார் உங்க கூடவே இரண்டு ஆடுகள் இருக்கு. இதுல எது கருப்பு ஆடுன்னு கண்டுபிடிங்க" இஸ்ன்பெக்டரின் அந்த சொற்கள், வெடிகுண்டு வீசியது போன்ற அதிர்ச்சியை அங்கே ஏற்படுத்தியது.

வாழ்க்கையை வெல்வதற்கும், கொல்வதற்கும் ஒரு சொல் போதும். காந்தியடிகளின் 'அகிம்சை' என்ற சொல் அவர் உலகை வெல்ல காரணமாக இருந்தது.

இதைக்கேட்டதும் எஸ்.கே.எஸ். முகம் வெளிறிப் போனார்.

கவியும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்தாள். அசகாய சூரனான ராமிடமும் ஹைவோல்ட் அதிர்ச்சி தெரிந்தது.

’ராமும், கவியும் தான் என் கூடவே இருக்கிறவர்கள். இதுல யார் எனக்கு துரோகம் செய்கிற கருப்பு ஆடு?’ அவர் முகத்தில் குழப்பம் என்ற சொல்லுக்கான பொருள் அப்படியே ’காபி பேஸ்ட்’ ஆகியிருந்தது..

அங்கு வந்ததில் இருந்து அனைவரின் நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனித்த இன்ஸ்பெக்டருக்கு... ராம் மற்றும் கவியில் நடவடிக்கைகள்தான் எமர்ஜன்ஸி லைட்டை ஆன் பண்ணியிருந்தது. அவர்களை மைக்ரோ மில்லி மீட்டரில் வாட்ச் பண்ணியதில் இன்ஸ்பெக்டருக்கு அவர்கள் இருவர் மீதும் சந்தேகம் பெருவனமாய் மண்டியது. அதே நேரம் அவர்கள், ஏதோ ஒன்றிற்காகப் போராடுகிறார்கள் என்பதையும் அவரது மூளை அவருக்கு சைலண்ட் மோடில் உணர்த்தியது.

அந்த ஒன்று எஸ்.கே.எஸ்.சிடம் இருந்து கிடைக்கவேண்டிய நியாயமாகக் கூட இருக்கலாம். அதனால் தான் இன்ஸ்பெக்டர் எஸ்.கே.எஸ்.சின் கழுத்தில் ’கருப்பு ஆடு’ என்ற கொக்கியை மாட்டி, இழுத்தார். இதன் பிறகு எஸ்.கே.எஸ். .எப்படி நடந்துகொள்கிறார் என்று பார்க்கலாம் என நினைத்தார்.

இன்ஸ்பெக்டர் வீசிய வலையில் இருந்து தப்பிக்க, எஸ்.கே.எஸ், ராம், கவி மூவரும் மெளனம் என்னும் வளைக்குள் ஒளிந்து கொண்டனர்.

ஆனாலும் சுதாரித்துக்கொண்ட எஸ்.கே.எஸ். “என்ன சார் சொல்றீங்க?’ என்று திகைப்பாய்க் கேட்டார். அந்த நேரம் பார்த்து... இன்ஸ்பெக்டர் விசாரிக்க விரும்பிய ப்ளஸ் டூ மாணவி ஹரிணி, பிரின்ஸ்பல் அறையில் காத்திருப்பதாக, ஒரு ஆசிரியர் சொல்ல, அவர்கள் பிரின்சிபல் அறை நோக்கி நடந்தனர்.

இன்ஸ்பெக்டரை பார்த்ததும் அந்த மாணவி, கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள். அவளை பயம் குத்தகைக்கு எடுத்திருந்தது..

"உன் பேர் என்னம்மா?”என்று இன்ஸ்பெக்டர் கேட்டதும்,

"ஹரிணி" என்று ஏழு ஊருக்கு அப்பால் இருந்து பேசுவது போல், சொன்னாள்.

"காலைல சாப்டியா? இல்லையா? சாப்ட்டு நாளு நாள் ஆனா மாதிரி பேசறயே" என்று பிரின்சிபல் சத்தம் போட்டார்.

"நாங்க பேசிக்கறோம். நீங்க அமைதியாக இருங்க" என்று இன்ஸ்பெக்டர் கறார்க் குரலில் கூறினார்.

"இந்தப் பொண்ணு ஜெய்பீம் படம் பார்த்திருக்கு போல. எங்கே இன்ஸ்பெக்டர் தன்மேல பொய் கேஸ் போட்ற போறாரோன்னு பயப்படுதுன்னு நினைக்கிறேன்” என்று ராம் கிண்டலாகச் சொன்னான்.

இன்ஸ்பெக்டர் அதைக் கண்டுகொள்ளாதது போல் இருந்தாலும் பிரின்ஸிலபுக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டார்.

”லில்லி மேடத்தால உனக்கு ஏதாவது பிரச்சனையாம்மா?” என்று தேங்காயை அந்த பொண்ணு தலையில் நேரடியாகப் போட்டு உடைத்தார் இன்ஸ்பெக்டர்.

ஏற்கனவே குளிர் ஜூரத்தில் நடுங்கும் அந்த மாணவியின் தலையில் ஐஸ் வாட்டர் ஊற்றியது போல இந்தக் கேள்வி இருந்தது. மேலும் நடுங்கினாள்.

எல்லாரையும் பயத்துடன் பார்த்தாள்.தேர் நிலைக்கு வருவது போல் ஹரிணியின் கண்கள் பிரின்சிபலிடமே நிலைபெற்றது. புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர், அறையை விட்டு வெளியில் வந்து சுற்றிப் பார்த்தார். பிரின்சிபல் அறைக்கு பக்கத்து வகுப்பு அறை காலியாக இருப்பதைப் பார்த்து ஹரிணியை அந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

ஹரிணியை தனியே அழைத்துச் சென்றதும், பிரின்சிபல் அறையில் இருந்தவர்கள் விசா இல்லாமல் அண்டார்டிகா குளிர் பிரதேசத்துக்கு சென்றதைப் போல உறைந்து இருந்தனர்.

"ஹரிணி, நீ யாருக்கும் பயப்படாம என்ன நடந்ததுன்னு உண்மையை மட்டும் சொல்லுமா" என்று அன்புடன் கேட்டார்.

"சார் நான் +2 படிக்கிறேன்.அது மட்டும் இல்லாமல் நான் ஸ்போர்ட்ஸிலும் இருக்கேன், என் அப்பா ஆட்டோ ஓட்டுறாரு, எப்படியாவது கஷ்டப்பட்டு +2 வரைக்கும் பணம் கட்டிப் படிக்க வைக்கிறேன், அதுக்கு பிறகு என்னால முடியாதுன்னு சொல்லிட்டாரு. பி.டி டீச்சர் தான் ஸ்போர்ட்ஸில் நிறைய சர்ட்டிபிகேட் இருந்தால், அதற்கான காலேஜில் சேர்ந்து படிக்கலாம்ன்னு ஆர்வமூட்டினாங்க. ஸ்போர்ட்ஸ்ல நான் மாவட்ட லெவல்ல நிறையப் பதக்கங்கள் வாங்கியிருக்கேன். அடுத்து ஸ்டேட் லெவல்ல என் திறமையை நிரூபிக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். எனக்கு பி.டி.மேம் சாதனா, சப்போர்ட்டா இருந்தாங்க. ஆனால், லில்லி டீச்சர் கிரவுண்டுக்கே போகக் கூடாதுன்னு என்னை டார்ச்சர் பண்ணுவாங்க சார்.” கொஞ்சம் மூச்சு வாங்கிய ஹரிணியே தொடர்ந்தாள்...

”கெமிஸ்ட்ரியில 100 மார்க்கில் 75 மார்க் தான் தியரி.. மீதி 25 மார்க் பிராக்டிகல்ல வாங்கியாகணும். லில்லி டீச்சர் போட வேண்டிய 25 மார்க்கில் எனக்கு 15 மார்க் தான் போடுவாங்க. கேட்டதுக்கு நான் நல்லா பண்ணலை, என் ரெக்கார்டு நோட்டு நீட்டாக இல்லைன்னு ஏதேதோ காரணம் சொன்னாங்க. எனக்கு இந்த 10 மார்க் என் கட் ஆஃப்புக்கு ரொம்ப முக்கியம் சார். அப்ப அவங்க நான் சொன்னதை எல்லாம் செஞ்சா உனக்கு முழு மார்க் கொடுப்பேன். இல்லைன்னா, இன்னும் குறைப்பேன்னு சொன்னாங்க. சரிங்க டீச்சர்ன்னு சொன்னேன். என் ஃபோன் நம்பரை வாங்கிக்கிட்டாங்க...”

”ம்... சொல்லும்மா.. எதா இருந்தாலும் பயப்படாம சொல்லு”

”ஒருநாள் என் நம்பருக்கு புது நம்பரில் இருந்து கால் வந்ததுங்க சார், லில்லி மேடம் தான் இந்த நம்பர் தந்தாங்கன்னு அசிங்கமா பேச ஆரம்பிச்சார் ஒருத்தர்... நான் அழகா இருக்கேன்னு சொல்லி என்னைத் தப்புத் தப்பா பச்சையா வர்ணிச்சார் அந்த ஆள்.. அப்புறம் நான் பாத்ரூமில் இருந்து என் செல்பியை எடுத்து அனுப்பணும்ன்னும் அவர் மிரட்டினார் சார்.... ” என்று ஹரிணி அழத்தொடங்கினாள்.

“அப்புறம் என்ன சொன்னான் அந்த ஆள்? அது யாரோட குரல்ன்னு உனக்குத் தெரியுமா? இதுக்கு முன்னாடி அந்தக் குரலைக் கேட்ருக்கியா?” என்று இன்ஸ்பெக்டர் கேட்ட கேள்விக்கு, அழுகை மட்டுமே அவளிடமிருந்து பதிலாகப் பொங்கி வந்தது.

இதற்கு மேல் அந்த வில்லங்க நபர் என்ன பேசியிருப்பான் என்பதைப் புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர், பேச்சைத் திசை திருப்பினார்.

"வீட்டில் அப்பா, அம்மாவிடம் சொல்ல வேண்டியது தானே"என்று கேட்டார்.

"அவர்களிடம் சொன்னால் பிரச்சனை வேண்டாம். படிப்பை நிறுத்திடுன்னு சொல்றாங்க சார். அதைவிட உயிரை விட்டிடுவேன்" என்று குரலில் மிச்சமிருந்த கண்ணீருடன் சொன்னாள்.

"நான் அவங்க பேச்சை கேட்கலைன்னு என்னை அத்லெட்டிக் பிராக்டிஸ் பண்ண அனுப்பலைங்க சார். நான் ஸ்போர்ட்ஸ் காலேஜில் சேருவதற்கு எனக்கு அதலெடிக்கில் வாங்கும் புள்ளிகள் ரொம்ப முக்கியம், ஞாயிற்றுகிழமைகளில் போட்டிகளில் கலந்துகொள்ளலாம்னா வேணும்ன்னே அன்று தான் லில்லி மேம் டெஸ்ட் வைப்பாங்க,.

சார் . .நாங்க சாதிக்கணும்னு நினைச்சு இறக்கை விரிக்கிறோம், அதை பிய்த்துவிட்டு, பறக்க முடியாமல் தரையில் புரள்வதை ரசிக்கும் கூட்டம் சார் இவங்க" என்று கோபமும் அழுகையும் பொங்கக் கூறிவிட்டு, உட்கார்ந்திருந்த டெஸ்க்கில் தலையைக் கவிழ்ந்து தேம்பி..தேம்பி அழதாள் ஹரிணி.

அழுகை சத்தம் கேட்டு உள்ளே வந்த கவிநிலாவைப் பார்த்ததும் ஆதரவுடன் அவள் தோளில் சாய்த்துக்கொண்டாள் ஹரிணி. அந்த அறையில் இருந்து வெளியே வந்த இன்ஸ்பெக்டர் கோபமாக பிரின்சிபலிடம் பேசினார்.

"மேடம் நீங்க மாணவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியவர், ஆனால் சில ஆசிரியர்களுக்கு ஆதரவாக இருக்கீங்க ஸ்ட்ராங்கான எவிடென்ஸ் கிடைச்சா, உங்க மேலயும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்" என்று கோபமாகக் கூறினார் இன்ஸ்பெக்டர்.

"என்னாச்சுங்க சார்.?”- என்று கேட்ட எஸ்.கே.எஸ்.சிடம்... சார், கேஸ் வேற ரூட்ல போய்கிட்டு இருக்கு. நான் கிளம்பறேன். நாளைக்கு லேப் ரிசல்ட் வந்ததும், மீதி விசாரணையைத் தொடர்வேன். உங்க ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி” என்று சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறிக் கிளம்பினார்.

’அப்பாடா... இன்றைய பிரச்சினை இதோடு முடிந்ததே’ என்று அங்கிருந்த அத்தனை பேரும் நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரத்தில்...

கிளம்பிய ஜீப், கிரவுண்டிலேயே யூ டர்ன் போட்டு சீறியபடி திரும்பி வந்தது.

( திக் திக் தொடரும் )

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #38

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT