ADVERTISEMENT

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #28

11:45 AM May 27, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

ரமா கொடுத்த சாப்பாட்டை மல்லிகாவிற்கு கொடுத்தாள் சங்கவி. அந்த தட்டை கையில் வாங்கியதும் வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தாள் மல்லிகா. அதைப் பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. பசி என்ற உணர்வை உயிரினங்களுக்கு உருவாக்கிய இயற்கை தான் எத்தனை கொடியது என்று நினைத்தாள் சங்கவி. பசி என்ற உணர்வு மட்டும் இல்லை என்றால் பிரபஞ்சத்தின் செயல்களே தலைகீழாக இருக்கும். உயிரினங்களுக்கு உணவு என்ற ஒன்று தேவை இல்லை என்றால் காட்டில் சிங்கம் ராஜாவாக இருக்க முடியாது. அதுவும் மானும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்கும். மனிதன் உணவுக்காக அலைந்து திரிந்து இருக்க மாட்டான். சோம்பேறியாக காலம் கழித்தே காடுகளில் வாழ்ந்திருப்பான். மனித இனத்தின் இப்படி ஒரு அசுர வளர்ச்சி சாத்தியமற்றதாக இருந்திருக்கும். எது எதுக்கோ கருவிகள் கண்டுபிடித்த விஞ்ஞான வளர்ச்சியில் பசியைப் போக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா? பட்டினத்தார் அழகாக சொல்வார் "அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே"என்று ஒரு குழந்தைப் பிறக்கும் போதே பசி என்ற உணர்வுடன்தான் பிறக்கிறது. மல்லிகா சாப்பிடுவதை பார்த்துக் கொண்டே சங்கவி இதையெல்லாம் நினைத்து கொண்டிருந்தாள்.

பக்கத்து அறையிலிருந்து இரண்டு பெண்கள் மல்லிகாவை எட்டிப் பார்த்தனர். "உன் உடம்புக்கு என்ன"? என்று நேரடியாக மல்லிகாவிடம் விசாரணையைத் தொடங்கினார்கள். அவர்களுக்கும் பொழுது போகவேண்டும் அல்லவா?

"அக்கா, நான் சொல்றேன் வாங்க" என்று அவர்களை வெளியே வராண்டாவிற்கு அழைத்து வந்து, "எங்க அக்காவுக்கு உடம்பில் ரத்தம் இல்லையாம் அது தான் ஆஸ்பிடலில் தங்கி ரத்தம் ஏற்றுகிறோம் என்றாள் சங்கவி. "ஐயோ பாவம் இந்த சின்ன வயசிலேயே ரத்தம் இல்லை என்றால் இன்னும் குறை காலம் எப்படி தள்ளறது?ஆனால், ஆளைப்பார்த்தால் அப்படி தெரியலையே நல்லா மழமழன்னு தானே இருக்கா என்று பார்வையிலேயே நாடிபிடித்தாள் அந்தப் பெண்.

"அக்கா ஏற்கனவே இங்கு வந்து ரத்தம் ஏத்தி இருக்கு" என்று வந்த கோபத்தை பல்லுக்கிடையில் அடக்கிக்கொண்டு பதில் சொன்னாள் சங்கவி. இங்கிதமற்ற மனிதர்களின் சில தொல்லைகளை பொறுத்துக் கொண்டுதான் கடந்து செல்ல வேண்டும். இதற்குப் பெயர்தான் சமுதாய அமைப்பு. காரணமின்றி யாரையும் வெறுக்க கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தாள். ஒரு வழியாக வந்த பெண்களைப் பேசி அனுப்பிவிட்டு மல்லிகாவையும் சாப்பிட வைத்தாள் சங்கவி.

" நீ சாப்பிடு சங்கவி" என்று அன்புடன் சொன்னாள் மல்லிகா.

" நான் ரமா அம்மாவிடம் சென்று சாப்பிடுகிறேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே நர்ஸ் வந்து மல்லிகாவிற்கு ஊசி போட்டார்கள்.

" மல்லிகாவை தூங்க வைப்பது தான் சிகிச்சைனா நாங்க வீட்டிலேயே செய்து இருப்போமே"என்று ஆதங்கத்துடன் சொன்னாள் சங்கவி.

" சரி மல்லிகாவிற்கு ஓய்வு கொடுக்கறீங்க கருவிலிருக்கும் குழந்தை கலையாமல் இருப்பதற்கு மருந்து யாரு தருவாங்க" என்று கிண்டலாக கேட்டாள் நர்ஸ்.

சில நேரங்களில் நம் இயலாமை அறிவை மறைத்து விடுகிறது என்று நினைத்துக் கொண்டாள் சங்கவி.

ரமா அம்மா அறைக்கு வந்த சங்கவி அவர்கள் சாப்பிடாமல் கண்மூடி அமர்ந்து இருப்பதை பார்த்தாள்.

"அம்மா சாப்பிடலையா மா" என்றாள் கனிவான குரலில்.

"பிடிக்கலை மா விரக்தியா இருக்கு" என்று புலம்பினார். "அம்மா படிச்சவங்க நீங்களே இப்படி சொன்னா எப்படிம்மா?" என்றாள்.

" ஏன் சங்கவி படிச்சவங்களுக்கு உணர்வு இருக்காதா என்ன? படிப்பு அறிவை வளர்ப்பதற்காக தான்" என்று விவாதத்தை ஆரம்பித்தார் ரமா. "உண்மைதான்மா அந்த அறிவுதான் சில உணர்வுகளைக் கண்ட்ரோல் பண்ற சுவிட்ச் மாதிரி இருக்கும்" என்று தனக்கு தெரிந்ததை சொன்னாள் சங்கவி.

" நீ சொல்றது சரிதான் தொடக்கம்னு ஒன்று இருந்தால் முடிவு இருந்துதான் ஆகும். யாரும் முடிவை எழுதிவிட்டு பிறகு கதை எழுதுவது இல்லை.அப்படி எழுதினால் கதையில் ஆர்வம் இருக்காது.அது மாதிரிதான் இது. என் முடிவு தெரிந்ததால் வரும் விரக்தி" என்று தன் உணர்வை விளக்கினார் ரமா அம்மா.

ரமா அம்மா கேன்சரில் கீமோதெரபி ஸ்டேஜில் இருக்காங்க. இந்த சிகிச்சை வாழ்நாளை அதிகரிக்குமே தவிர நோயை நிரந்தரமாக குணமாக்கிடாது. அதுவும் ஒரு பெண்ணுக்கு வந்தால் வாழ்வில் அதைவிட நரகம் வேறு எதுவும் இல்லை. பெண் என்றாலே அழகு என்றுதான் அர்த்தம். அந்த அழகு தன் கண்முன்னே உருக்குலைந்து போவதை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். ரமா அம்மா மட்டும் விதிவிலக்கா என்ன அவர்களை எப்படியாவது உற்சாகப்படுத்த வேண்டும் என்று மனதினுள் நினைத்துக் கொண்டாள் சங்கவி.

எப்போதும் ஒருவரின் பெருமைகளைப் பேசும் போது அவர்களின் மனம் உற்சாகம் அடையும். சங்கவி தட்டில் சாப்பாடு போட்டுக் கொண்டே "அம்மா ..நீங்க எவ்வளவு அறிவாளியாக இருக்கீங்க. எவ்வளவு நூல்கள் படிச்சிருக்கீங்க. பெரியாரின் கருத்துக்களைப் புரிந்து கொள்வதற்கே சீரிய சிந்தனை வேணும்மா" என்று பேசிக்கொண்டே சாப்பாட்டை உருண்டை உருட்டி அவர்கள் கையில் தந்தாள். அவர் புத்தகம் படிப்பதற்கே இப்படி சொல்றே நான் அவருடன் நேரில் பேசி இருக்கேன் தெரியுமா? என் மேடைப் பேச்சை அவர் பாராட்டி இருக்கிறார்" என்று உற்சாகம் பொங்க தன்னைப் பற்றி பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தார். இப்போது ரமா அம்மாவின் முகத்தில் புதுப்பொலிவு வந்தது.

"அம்மா உங்களுக்கு எந்த விஷயம் ரொம்ப பிடிக்கும்மா எந்த வேலையை செய்தால் நீங்க உங்களையே மறந்து அதில் ஈடுபடுவீங்கம்மா" என்று ஆர்வமுடன் கேட்டாள் சங்கவி. "எனக்கு ஓவியம் வரைய ரொம்ப பிடிக்கும்மா நான் சோகமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை வெளிப்படுத்துவது ஓவியங்கள் மூலமாக தான்" என்று ஓவிய காதலுடன் சொன்னார் ரமா.

மல்லிகாவையும், ரமா அம்மாவையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு சங்கவியிடம் வந்துவிட்டது. மல்லிகா அதிக நேரம் உறக்கத்தில் இருந்ததால் சங்கவி ரமா அம்மாவுடன் நேரத்தை செலவழித்தாள். ஒருநாள் ரமா அம்மாவின் உணவை சாப்பிட்டாள். இப்படியே தொடர்ந்து சாப்பிட சங்கவிக்கு தன்மானம் இடம் தரவில்லை. என்ன செய்வது என்று யோசித்தாள். பூவிற்கும் முனியம்மாவை தேடி சென்றாள் சங்கவி.

" அக்கா எனக்கு பூ கட்டத் தெரியும் நான் உங்களுக்கு பூக்கட்டி தருகிறேன்" என்று கேட்டாள். முனியம்மாவும் சரி என்று ஒத்துக் கொண்டாள்.

மதியம் சாப்பிட்டதும் மல்லிகாவும், ரமா அம்மாவும் உறங்கும் நேரத்தில் முனியம்மா வீட்டிற்குச் சென்று பூ கட்டித் தந்தாள். முனியம்மா கொடுத்த காசில் இரவு உணவு இட்லி வாங்கிட்டு வந்தாள். ரமா அம்மாவிடம் அந்த இட்லியைக் கொடுத்து "அம்மா தினமும் வீட்டில் தானே சாப்பிடறீங்க இன்னைக்கு ஒரு நாள் இந்த இட்லியும் சட்னியும் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு பிடிக்கும்" என்று கெஞ்சினாள்.

" நான் இந்த மாதிரி இடத்தில் எல்லாம் வாங்க மாட்டேன். அந்த மக்கள் பேசுற பேச்சு, அந்த இடம் இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் உனக்காகச் சாப்பிடறேன்" என்று வாங்கி ஒரு வாய் சாப்பிட்டு,

"சங்கவி தேங்காய் சட்னி அருமையா இருக்கு" என்று பாராட்டினார்.

"அம்மா இதுல தேங்காவே இல்லைமா. வெறும் உடைத்த கடலை மட்டும்தான் தனியா இருக்கும்" என்று சங்கவி சொன்னாள்.

"சுவை அபாரம் இவ்வளவு நாள் எனக்கு தெரியாம போச்சு மா" என்று ஆதங்கப்பட்டார்.

"அம்மா எல்லாரும் அவங்க அவங்க இடத்துல இருந்து கிட்டு தான் அடுத்தவங்களை பார்க்கிறோம். மற்றவர்கள் இடத்திற்கு இறங்கி வரும்போது தாம்மா அன்பை உணர முடியும்" என சங்கவி சொன்னதும் ரமா புன்னகைத்தார். அதன் அர்த்தம் என்றாவது ஒருநாள் சங்கவிக்கு தெரியவரும் என்று நினைத்தார்.

வெற்றிகரமாக இரண்டு நாள் சென்று விட்டது. சங்கவியும் 18 வயது பெண் தான். அவளுக்குள்ளும் மற்றவர்கள் மத்தியில் நேர்த்தியாக உடை அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஊரில் இருந்து யார் இவர் துணியை எடுத்து வந்து தருவது. இங்கு இருக்கும் வரை ஒரே புடவையைத் துவைத்து தான் கட்ட வேண்டும் போல என நினைத்துக் கொண்டாள்.

அசோக்கைப் பார்த்து இரண்டு நாட்கள் சென்றுவிட்டது. வெளியில் எல்லாருடனும் பேசிக்கொண்டு இருந்தாலும் மனம் என்னவோ அசோக்கை சுற்றியே கும்மி அடித்துக் கொண்டிருந்தது. முனியம்மா வீட்டில் பூ கட்டி விட்டு மருத்துவமனை வந்த சங்கவிக்கு வாசலிலேயே இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அசோக்கைப் பார்த்ததும் சங்கவிக்கு 32 பல்லும் முழுமையாய் தெரிந்தது. என்னவோ பார்த்து பல யுகங்கள் ஆன உணர்வுடன் மொத்த அன்பையும் கண்களில் ஆண்டனா வைத்து அசோக்கின் நரம்புகளுக்கு கடத்திக் கொண்டிருந்தாள் சங்கவி.

"ஏய்...பொம்மி உனக்கு இங்கே யாரையும் தெரியாது. எங்க போயிட்டு வர்ரே என்று ஆச்சரியத்துடன் கேட்டான் அசோக்.

" இருங்க அக்கா என்ன பண்றாங்கன்னு பார்த்துட்டு வரேன்னு உள்ளே ஓடினாள்.

" ஏய் ..இந்தா உனக்கு புடவை ஜாக்கெட் எல்லாம் எடுத்து வந்து இருக்கேன், ஒரே புடவையோட எத்தனை நாளைக்கு இருப்ப. அதான் ஏதோ என் கண்களில் பட்டதை எடுத்துட்டு வந்தேன்" என்று அக்கறையுடன் கொடுத்தான். அந்தத் துணிப் பையை பிரித்து பார்த்தால் சங்கவி எந்த புடவைக்கு எந்த ஜாக்கெட் போடுவாளோ அதை அப்படியே எடுத்து வந்திருந்தான். அசோக் தன்னை எந்த அளவு ரசித்து இருக்கிறான் என்பதை உணரும்போது சங்கவிக்கு வெட்கத்துடன் பெருமிதம் வந்தது. கணவன் மனைவி அன்பானது மனதளவில் செம்மண்ணில் கலந்த நீர் போல இருந்தாலும் மற்றவர்கள் பார்வைக்கு தாமரை இலை நீர் போல நடந்து கொள்வார்கள். உள்ளே போய் மல்லிகாவிற்கு ஏதாவது தேவையா? என்று கேட்டுவிட்டு அசோக்கும் சங்கவியும் வெளியில் இருந்த மரத்தடியில் அமர்ந்தனர். சங்கவி குழந்தை மாதிரி மாயப்புறாவின் 26, 27ஆவது பகுதியை மீண்டும் ரீபிளே பண்ணி ஒவ்வொன்றாக அவளின் கொஞ்சும் குரலில் சொல்லி முடித்தாள்.

"மாமா ..உங்க கிட்ட காசு இருக்குமா? ஒரு கோடு போடாத நோட்டும் கலர் பென்சிலும் வாங்கணும்" என்று கேட்டதும் அசோக் வாங்கி வந்து தந்தான். அவனை அழைத்துச் சென்று ரமா அம்மாவிடம் அறிமுகப்படுத்தினாள் சங்கவி. நோட்டையும் கலர் பென்சிலையும் கொடுத்து "உங்க விருப்பம் போல படம் வரைந்து எனக்கு அன்பளிப்பாக தாங்கம்மா" என்று அன்புடன் கேட்டதால் சரி என்று ஒத்துக் கொண்டார். அசோக்கும் சங்கவியைப் பிரிய மனமில்லாமல் ஊருக்குச் சென்றான்.

ரமா அம்மாவிற்கு தனிமை கஷ்டமாக இருக்கிறது என்று மல்லிகா இருக்கும் அறைக்கு மெதுவாக நடந்து வந்து மல்லிகாவை நலம் விசாரித்தார்.

"ரமா அம்மா ஏன் உங்களைப் பார்க்க யாரும் வரலை? ஏன் உங்களுக்கு சொந்த பந்தம் யாரும் இல்லையா?" என்று நாகரீகம் தெரியாமல் தேவையில்லாத விஷயங்களைப் பேசினாள் மல்லிகா. சங்கவிக்கு எரிச்சலாக வந்தது. வெளிக்காட்ட முடியாமல் அமைதியானாள்.

"எனக்கு பையன் இருக்கான் அவனுக்கு வேலை அதிகம். அதான் வர முடியவில்லை" என்றார் ரமா. பெத்தவங்களைப் பார்த்துகறதைவிட என்ன பெரிய கலெக்டர் வேலை பார்க்கிறார்" என்று தண்ணீர் குடித்துக் கொண்டே கேட்டாள் சங்கவி.

"ரமா அம்மா மகனின் வேலையைச் சொன்னதும் சங்கவிக்கு அதிர்ச்சியில் தண்ணீர் நாசியில் ஏறி புரையேறியது.

( சிறகுகள் படபடக்கும்)

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT