Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #07

Published on 10/02/2022 | Edited on 14/02/2022

 

maayapura part 7

 

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"சோ"வென்று பெய்த மழை வெள்ளத்தில், பறவைகளும்  தவளைகளும் போக்கிடம் இன்றித் தவிக்கும். மழை ஓய்ந்த  சிறிது நேரத்தில் அதே தவளைகள் மழைநீர்த் தேங்கிய குட்டைகளில் தாவிக் குதித்துக் கும்மாளமிட, பறவைகள்  நீர்த் திவலைகளை உடல் சிலிர்த்து உதறிவிட்டு, மரக்கிளைகளில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும்.

 

கடந்த நிமிட வலிகளை மறந்து, நிகழ்கால நிகழ்வுகளில் ஐந்தறிவுள்ள உயிரினங்களே தம்மை மாற்றிக் கொள்ளும் போது சூழ்நிலைகளை உருவாக்கத் தெரிந்த  மனிதர்களுக்கு, துயரங்களைக் கடப்பது என்ன கஷ்டமா? 

 

சங்கவியும் அப்படித்தான். இதயத்தின் இடர்களை எளிதாகக் கடக்க முயல்கிறவள் தான். சிறிது நேரத்திற்கு முன், அசோக்கின் கோபத்தால் வலித்த சங்கவியின் மனம், மாடுகளின் "ஜல் ..ஜல்" சலங்கை ஓசையில் தன்னிலை மறந்தது.

 

வில்லு வண்டியை புவனாவின் முழு உருவமும் குத்தகை எடுத்துக் கொண்டதால், சங்கவியும், குழந்தைகளான கதிரும், நந்தினியும்  கால்களைத் தொங்கவிட்டுக் கொண்டு சாலையைப் பார்த்து அமர்ந்து கொண்டு வந்தனர். அவர்கள்  விழாமல் இருக்க வண்டியில் இருக்கும் குறுக்குக் கம்பியை பிடித்துக்கொண்டு  மாடுகளின்  சலங்கை ஓசைக்கு ஏற்றார் போல் கால்களை ஆட்டிக் கொண்டும், முகத்தில்  மோதும்  மெல்லிய பூங்காற்றுடன் கதை பேசிக்கொண்டும் அழகான இயற்கையை ரசித்துக்கொண்டு சென்றனர்.

 

வயல்களுக்கு இடையில் அமைந்திருந்தது அந்தக் கோயில்.  மண் சாலையில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடந்து போக வேண்டும். அசோக்  நடந்து செல்லும் போது "சங்கவியுடன் ஏதாவது பேசமுடியுமா? " என்ற ஏக்கத்துடன் நடந்தான். சங்கவியோ பசங்களுடன் விளையாடிக்கொண்டு  நடந்தாள். இவனிடம் தொன தொனத்துக் கொண்டு வந்தது  புவனாதான்.

"என்னதான்  கோழி கொக்கரக்கோன்னு கூவி எகத்தாளம் போட்டாலும், மஞ்சள் தடவி உறிக்கும் போது, அது  மயங்கித் தான் கெடக்கணும்" அது மாதிரி அசோக் மனசு சங்கவியோட பேசவேண்டும் என்று துடித்தாலும்  அதை வெளியில்  காட்டாமல்  ஒப்புக்கு  புவனாவுடன் பேசிக்கொண்டு நடந்தான்.

 

வயல் வரப்புகளில் "ஹை ஜம்ப், லாங் ஜம்ப்" எல்லாம் பண்ணி  நடந்து  வந்து கொண்டிருந்தனர். வாழைத்தண்டு போல வழவழன்னு  இருக்கும் சங்கவியின் கைகளைப் பிடித்து  வரப்புகளைத் தாண்டுவதற்கு  உதவி செய்யலாம் என்று அசோக்  கைகளை நீட்டும் போதெல்லாம், யானை தும்பிக்கையால் அடித்தது போல, புவனாவின் கைகள்தான் பொத்பொத்தென்று அசோக்கின் கைகளில் அம்மி அரைத்தது. வயல் வரப்புகளில் சிறிது தூரம் நடந்திருப்பார்கள் . திடீரென்று "ஐயோ" என்று நந்தினி அலறும் குரல் கேட்டது. முன் பின்னாகப் போய்க்கொண்டு இருந்த போது எப்படியோ  நந்தினி பின் தங்கிவிட்டாள். நந்தினியின் குரல் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.  அவள் எதையோ பார்த்து, மிரண்டு போய் நிற்பது தெரிந்தது.

 

முதலில் அசோக்கும், அவன் பின்னால்  புவனாவும், இருந்தனர். அதிலும் புவனா, "பாப்பாரப் புள்ள நண்டு பிடிக்கறா மாதிரி,  புடவையை தூக்கிப் பிடித்துக்கொண்டு சேறு படாமல் கால்களில் செருப்புடன்  நின்று கொண்டிருந்தாள். சோறு போடும்  சேற்று வயலில் செருப்பு படக்கூடாது என்று எவ்வளவோ சொல்லியும்  புவனாவின்  பணக் கொலஸ்ட்ரால் கேட்கவில்லை.

 

புவனாவை அடுத்து நடந்த சங்கவியோ, நந்தினியின் அலறல் கேட்டதும் அப்படியே  சேடை ஒட்டிய சேற்றில் இறங்கித் தாவித் தாவி ஓடினாள். அசோக்கும் சங்கவியே முந்தும் விதமாக ஓடினான். அங்கே மரண தூதுவன் படம் எடுத்து நின்றுகொண்டிருந்தான்.

 

ஆம். மிகப்பெரிய நல்ல  பாம்பு, நந்தினியின்  காலுக்கு அருகே படம் எடுத்துக்கொண்டிருந்தது. நந்தினி என்ன செய்வது என்று புரியாமல், காலை அங்கிருந்து  எடுக்கத் தெரியாமல் பயத்தில் அப்படியே  பிரிஜ்ஜில்  வைத்த பீஸா மாதிரி உறைந்து போயிருந்தாள். 

 

ஒரு நொடியில் நிலைமையைப் புரிந்துகொண்ட சங்கவி, சடாரென மின்னல் வேகத்தில் பாம்புக்குக்  குறுக்கே பாய்ந்து நந்தினியைத் தள்ளிவிட்டாள். அந்த வேலையை செய்யலாமென ஓடிவந்த அசோக்,  தள்ளிவிட்ட நந்தினியைத் தாங்கிப் பிடித்துத்  தூக்கிக் கொண்டான். 

 

யாரைத் தன் விஷப் பல்லால் முத்தமிடலாம் என குழம்பிப் போன பாம்பு, வேறு வழியில்லாமல் சரசரவென அங்கிருந்து ஓடியது.

 

இதையெல்லாம்  எந்தவிதப் பதற்றமும்  இல்லாமல் வரப்பில் இருந்தே பார்த்துக்கொண்டிருந்தாள் புவனா. குழந்தையைப் பாம்பு கடித்திருந்தால் என்ன ஆகும் என்ற பதற்றம் நீங்காமல், படபடத்துக் கொண்டிருந்தது. அசோக்கின் மனம். கோயில் வரை நந்தினியைத் தரையில் நடக்க விடாமல் தூக்கிக் கொண்டே வந்தான் அவன்.

 

நந்தினி இன்னும் அந்த திகிலில் இருந்து மீளாமல் "மாமா.. எவ்வளவு பெரிய பாம்பு.  அது கடிச்சிருந்தா, நான் செத்துபோயிருப்பேன் ..மாமா" என்று பயந்துகொண்டே சொன்னாள்.

"அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. மாமா அந்தப் பாம்பை அடித்துக் கொன்று போட்டிருப்பேன்" என்று வீரமாக பேசினான் அசோக்.

"மாமா .. அந்த பாம்பைப் பிடிச்சி அடிச்சிக் கொன்னு கொளுத்திடுங்க மாமா" என்று கோபமாகப் பேசினான் கதிர்.

"இங்கே எங்கே தீப்பெட்டி இருக்கு? கொளுத்தறதுக்கு" என்று கிண்டலாகப் பேசினாள் நந்தினி

"பாம்பை அடித்தால் கொளுத்தாம போடக்கூடாது. பாம்பு கண்ணுல நம்ம உருவம் பதிந்து இருக்கும். அப்புறம் அதோட  சோடிப்  பாம்பு  நம்மள தேடி வந்து, கடிச்சு சாகடிசிடும்" என்று பயந்து கொண்டே சொன்னான் கதிர்.

இதைக்கேட்டு சிரித்த சங்கவி "கதிர், பாம்பு கண்ணு என்ன யாஷிகா கேமராவா? படம் பதிய. அதுக்காக கொளுத்த மாட்டாங்க .பாம்பின் உடம்பில் இருந்து ஒருவித வாசனை வரும். அந்த வாசனைக்கு மற்ற பாம்புகளும் அங்கு வரும். அதனால்தான் பாம்பை அடித்துக் கொன்றால் அதை எரிக்கறாங்க" என்று புத்திசாலித்தனமாகப் பேசினாள். 

 

அசோக்கின் மனதில், கொஞ்சம் அதிகமாகவே இடம் பிடித்த சங்கவி, இப்போது பால் அபிஷேகம் பண்ணி, நவரத்தினம் அணிந்த அம்மன் மாதிரி சிம்மாசனமிட்டு உட்கார்ந்து விட்டாள்  சங்கவி. கோயிலுக்கு போய் அம்மனை கும்பிட்டுவிட்டு கோயிலைச் சுற்றி வந்தார்கள். கோயில் பழமை வாய்ந்தது. சிதிலமடைந்து இருந்தது அங்கு குருக்கல் எல்லாம் இருக்க மாட்டார்கள். ஐந்து பைசா கற்பூரம் எடுத்துப்போய்க் கொளுத்திவிட்டு, கையெடுத்துக் கும்பிட்டு வரவேண்டியதுதான். 

 

கோவிலைச் சுற்றும் போது ’அசோக் மாமா என்னிடம் நல்லா பேசிட்டு வந்தார். இந்த குட்டிச் சாத்தான்... பாம்பு அது இது என்று குட்டையை குழப்பி விட்டது" என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டு இருந்தாள் புவனா.

 

கோயிலில் உள்ள அரச மரக் கிளையில் ஊஞ்சல் ஆடிக் கொண்டே  நந்தினி, சங்கவியைப்  பார்த்து, "சங்கவி அக்கா, நீங்க எங்க அசோக் மாமாவைக் கல்யாணம் பண்ணிக்கோங்க. அப்பத்தான் நாங்க உங்க கூட விளையாடிக்கிட்டே இருக்க முடியும். கல்யாணம் செய்துக்கறீங்களா?" என்று அப்பாவியாக ஒரு அணு குண்டைத் தூக்கிப்  போட்டாள். 

 

அது புவனாவின் மனதில் வெடித்தது. அசோக்கோ  பயங்கர பரவசத்தில் வானத்தில் பறந்தான். தண்ணீர் மேலும் ஆகாயத்திலும் நடந்தான். நெருப்பில் குளித்தான். சங்கவி சொல்லப்போகும் பதிலுக்காக காதுகளை மட்டும் அவள்   குரலுக்காகத் தூது அனுப்பினான்.
அப்போது...

 

(சிறகுகள் படபடக்கும்)