ADVERTISEMENT

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #23

04:51 PM May 03, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

மாற்றம் ஒன்றே மாறாதது. உலகம் தோன்றியபோது முதலில் உருவானது வைரஸ், பாக்டீரியா, அமீபா போன்ற ஒரு செல் உயிரினங்கள் தான். உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் முக்கியமானது மனித இனம். மனிதன் தோன்றிய பிறகு அனைத்தையும் தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தான். வேகமான விஞ்ஞான வளர்ச்சி, உலகின் திசையெங்கும் தொழிற்புரட்சி என இந்த 200 ஆண்டுகளில் இயற்கையைப் புரட்டிப் போட்டான். அனைத்தும் இயற்கையை மீறிய மனித செயல்களாக மாறியது. விண்ணையும் மண்ணையும் ஆராய்ந்தான் எப்பொழுது இடி இடிக்கும், எப்பொழுது மழை பெய்யும், எப்போது நிலநடுக்கம் வரும், எப்பொழுது சுனாமி வரும் என்று இயற்கையின் சீற்றங்கள் அத்தனைக்கும் அட்டவணை வைத்திருக்கிறான் மனிதன்.

இயற்கையை அறிய தெரிந்த மனிதனுக்கு தன்னை அறிய தெரியவில்லை. நம் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது விடை அறியா வினாவாக கேள்விக்குறியாகவே இருக்கிறது. உலகையே வென்று தன் ஒருவனின் ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்று உயிர்களை கொன்று குவித்த மாவீரன் அலெக்சாண்டருக்கு தன்னை ஒருவன் விஷம் வைத்து கொல்வான் என்பது தெரியவில்லை. கலிங்கப் போரில் வென்ற சாம்ராட் அசோகருக்கு தான் புத்த மத போதகராக மாறப் போகிறோம் என்பது தெரியவில்லை. எத்தனையோ மதங்கள், இனங்கள், கடவுள்கள் என்று மாறிமாறி வந்து போய்க் கொண்டிருக்கின்றன. எதனாலும் மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் அடுத்த செயலுக்கு அறிவிப்பு கூற இயலவில்லை. அப்படி கூற முடிந்திருந்தால் மகிழ்வோடு துள்ளி குதித்து வந்த மல்லிகாவிற்கு "விழப்போகிறாய்" என மனம் எச்சரிக்கை மணி அடித்திருக்கும்; கவனமாக நடந்து வந்திருப்பாள்.

தரை வழுக்கும் என காலை அழுத்தி வைத்து நடந்து வந்திருப்பாள். இப்படி வேரோடு சாய்ந்த மரம் என விழுந்து இருக்கமாட்டாள். விழுந்த சத்தம் கேட்டு முதலில் ஓடி வந்தது சங்கவி தான்.

"அக்கா.. என்னாச்சு" என்று பதறினாள்.

"ஐயோ எல்லாரும் ஓடி வாங்களேன், அக்கா விழுந்துட்டாங்க" என்று அடித்தொண்டைக் கிழிய கத்தினாள். சங்கவியின் கத்தலைக் கேட்டதும் அனைவரும் ஓடி வந்தனர். "மல்லிகா ..என்னாச்சு என்று பதற்றமான குரலில் கேட்டுக்கொண்டே அவள் அருகில் வந்தனர்.

" பாவி மக யார் கண்ணு பட்டதோ தெரியலை எங்க வீட்டு வாரிசை சுமந்த தேரு குடைசாய்ந்து நிக்குதே" என்று கதறினாள் தங்கம்.

"வேற யாரு கண்ணு இந்த மூதேவி கண்ணுதான். வெள்ளிக்கிழமை கழுவி மொழுகலைன்னா வீதில போற மகாலட்சுமி வீட்டுக்குள்ள வராதா?" என்று கத்தினான் மணி. இது எதையும் காதில் வாங்காத சங்கவி வேகமாக ஓடிப் போய் தண்ணீர் எடுத்து வந்து மல்லிகாவிற்கு குடிக்கக்கொடுத்தாள். மல்லிகா வயிறைப் பிடித்து கொண்டு "வலிக்குது" என்று அழுதுகொண்டே கூறினாள்.

நாகம்மாவும் ,புவனாவும் மல்லிகாவின் கைகளை பிடித்துக்கொண்டு "அழாதே" என்று ஆறுதல் கூறினார்கள் அதற்குள் தனம்மா பாட்டி மல்லிகாவின் நாடியைப் பிடித்துப் பார்த்து "சிறிய உசுரு பிழைக்குமான்னு தெரியல" என்று சொன்னதும்,

" அடிப்பாவி வேண்டுமென்றே தண்ணியை ஊத்தி என் வாரிசை அழிச்சிட்டியே. உன்னை சும்மா விடமாட்டேன்னு", சங்கவியை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு வந்தான் மணி. அதற்குள் செல்வம் மணியை மடக்கி "தம்பி பொண்டாட்டி மேல கையை வைக்கறது பெரிய தப்பு, எதுவாயிருந்தாலும் வாயாலேயே பேசு ஆத்திரம் தீர திட்டு அதுக்காக அடிக்க கூடாது"ன்னு சற்று தள்ளி அழைத்துச் சென்றார்.

" மணி மாமா, மல்லிகா விழனும்னு தான் வெள்ளிக்கிழமை கழுவுற மாதிரி தண்ணியை ஊத்தி விட்டு இருக்கா" என்று புவனா அவள் பங்குக்கு பெட்ரோல் ஊற்றினாள்

"ஆமாம் புவனா இந்த எமன் வேணும் தான் செய்து இருக்கு, என் புள்ளைக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா உன் சாவு என் கையில் தான்" என்று கறுவினான் மணி. அதற்குள் பனைவெல்லம் போட்டு சுக்கு கசாயம் எடுத்து வந்து தந்தாள் தங்கம் .

"என் மருமவ வயித்தில இருக்கிற என் பேரனுக்கு ஒன்னும் ஆக கூடாது ஐயனாரப்பா... உனக்கு ஆளும் குதிரை வாங்கி விடறேன்" என்று ஐயனார் அப்பனுக்கு லஞ்சம் கொடுத்துக் கொண்டிருந்தார் தங்கம்.

வெளியிலிருந்து வந்த அசோக்குக்கு வீட்டின் நிலையைப் பார்த்ததும் புரிந்து விட்டது "என்னம்மா அண்ணியை டவுனில் இருக்கிற டாக்டரிடம் கூட்டிகிட்டு போகாம வைத்தியம் பார்த்துகிட்டு இருக்கீங்க "என்று கத்திவிட்டு வில்லு வண்டியை கட்ட போனான்.

"மாமா வில்லு வண்டி வேணாம் மேடு பள்ளம் தூக்கிப்போடும் டவுனில் கார் இருந்தா எடுத்துட்டு வர்ரீங்களா" என்று கேட்டாள் சங்கவி.

" ஏதாவது நடக்கிற கதையைப் பேசு டவுனுக்கு போய் கார் எடுத்துட்டு வருவது எல்லாம் முடியாத வேலை" என்று முட்டுக் முட்டுக்கட்டை போட்டாள் புவனா.

"மாமா என் கூட வாங்க என்று அசோக்கின் கையை பிடித்துக்கொண்டு வாசலில் இறங்கி நடந்தாள்.
நடந்தாள் என்று சொல்வதைவிட ஓடினாள் என்றுதான் சொல்ல வேண்டும் அவ்வளவு வேகமான நடை.

"சங்கவி எங்கடி அழைச்சிட்டு போற" என்று கையை உதறிக் கொண்டே கேட்டான் அசோக்.

"மாமா ..3வது தெரு முனுசாமி டவுனில் வாடகை கார் ஓட்றாராம் அவர் காரில் அழைச்சுகிட்டு போகலாம்" என்று கூறினாள்.

"கண்டிப்பா அவன் வர மாட்டான் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி தான் வரப்பு தகராறில் அவனை புரட்டி எடுத்தேன். இப்ப அவன் கிட்ட கார் கேட்டா கொடுப்பானா?"என்று சந்தேகத்தை கிளப்பினான் அசோக்.

"கேட்டுத்தான் பார்ப்போமே உள்ளூர் ஜனங்களுக்கு உதவாமலா போவாங்க" என்று பேசிக்கொண்டே அந்த முனுசாமி வீட்டிற்கு வந்தனர். வாசலில் நின்று "அண்ணா... அண்ணா" என்று குரல் கொடுத்தாள் சங்கவி.

" யாரது" என்று கேட்டுக்கொண்டே வெளியில் வந்த முனுசாமி அசோக்கை பார்த்ததும் பயந்து உள்ளே திரும்பினார்.

"அண்ணா கொஞ்சம் கார் வேண்டும்" என்று கூறி திரும்பியவனை தடுத்து நிறுத்தினாள் சங்கவி."கார் எல்லாம் வராது"என்று கறாராக சொல்லிவிட்டான்.

"அங்க ஒருத்தர் உயிருக்கு போராடிகிட்டு இருக்காங்க தயவுசெய்து வாங்கண்ணா" என்று இரு கைகளையும் கூப்பி சொன்னாள் சங்கவி.

சங்கவி கெஞ்சுவதைப் பார்த்ததும் சற்று தயங்கினான். "மாப்பிள்ளை உன்னை அடிச்சது தப்புதான் என்னை மன்னிச்சிடு தயவுசெய்து வண்டி எடுத்துட்டு வா" என்று பணிவாக பேசினான் அசோக்.

அசோக் மன்னிப்பு கேட்டதும் முனுசாமி மனமிரங்கி காரை எடுத்துக்கொண்டு வந்தான். வீட்டில் அனைவரும் என்ன செய்யறதுன்னு தெரியாமல் மல்லிகாவைச் சுற்றி நின்றுகொண்டு மல்லிகாவுக்கு தைரியம் சொல்லிக்கிட்டு இருந்தார்கள். மல்லிகா வலியில் துடித்துக் கொண்டிருந்தாள்.

"ஆவாரங்காட்டுல அரவங்கொத்தி, அரளிப் பூ காட்டுல விஷம் வடிஞ்சுதாங்கற" கதையா தரையில் தண்ணிப்பட்ட குற்றம் புள்ளையை இந்த பாடு படுத்துதுன்னு" பாட்டி ஒருபக்கம் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

காரைப் பார்த்ததும் அப்படியே தூக்கிக்கொண்டு வந்து காரில் படுக்க வைத்தார்கள். தங்கம் மல்லிகாவின் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டார். தனக்குத் துணையாக நாகம்மாவை கூப்பிட்டார் தங்கம். எனக்கு ரத்தக்கொதிப்பு இருக்கு என்னால வர முடியாதுன்னு சொல்லிவிட்டார் நாகம்மா.

சங்கவி "நான் வரேன்னு" பின்னாடி சீட்டில் ஏறிக்கொண்டாள். முன்னாடி மணியும் அசோக்கும் டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல உட்கார்ந்து கொண்டார்கள். காரில் ஏறிய சங்கவி ஏதோ நினைவுக்கு வந்தவளாக காரிலிருந்து இறங்கி உள்ளே ஓடினாள். இந்த நேரத்தில் இவள் எங்கே போகிறாள்? என்று குழம்பினார்கள். டிரங்கு பெட்டியில் அடியில் வைத்திருந்த ஐந்து ரூபாய் பத்து ரூபாய் தாள்களை எடுத்துக்கொண்டு ஓடி வந்து அசோக் கையில் கொடுத்தாள். அப்போதுதான் அசோக்குக்கு புரிந்தது பாக்கெட்டில் காசில்லாமல் ஜம்பமாக காரில் உட்கார்ந்து கொண்டோம் என்று நினைத்தான்.

மல்லிகா வலியில் துடித்தாள். "கொஞ்சம் பொறுத்துக்கம்மா டவுன் ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்"னு ஆறுதல் சொன்னார் தங்கம், அந்த ஹாஸ்பிடல் ஓடு போட்ட பழங்காலத்து கட்டிடமாக இருந்தது. மல்லிகாவை இறக்கி நடக்கவிடாமல் அலேக்காக தூக்கி வருவது போல கைகளைப் பிடித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றனர்.

டாக்டர் மல்லிகாவை சோதித்துப் பார்த்துவிட்டு, "கருவைக் காப்பாற்ற முடியாது. நீங்க உடனே செங்கல்பட்டு ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போங்க" ன்னு சொல்லிட்டு வலி குறைவதற்கு ஊசி போட்டு அனுப்பினார்கள். செங்கல்பட்டுக்கு போறதுக்கு பணம் அதிகமாக செலவாகுமே என்ன பண்றது யாரிடம் கேட்பது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். மல்லிகாவோ காரில் வலியுடன் துடித்துக்கொண்டிருந்தாள். திடீரென்று ஏதோ நினைவு வந்தவனாக காசிச்செட்டி கடைக்கு ஓடினான் அசோக். செட்டியாரிடம் கெஞ்சி கூத்தாடி கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டு வந்தான்.

கார் வேகமாக செங்கல்பட்டு நோக்கி பாய்ந்தது. தங்கம் மனதிற்குள் "இரண்டு உயிர்களையும் காப்பாற்று தெய்வமே" என்று வேண்டிக்கொண்டாள். சங்கவியும் மனதிற்குள் "பெரியபாளையத்தம்மனுக்கு வேப்பஞ்சேலை உடுத்திக்கறேன்"னு வேண்டிக் கொண்டாள். கார் செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று நின்றது. அங்கு மக்கள் சிறு சிறு கூட்டமாக நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முகம் பட்டமரம் போல் கருத்திருந்தது. சிலர் வாய்விட்டு அழுது கொண்டிருந்தார்கள். கிழிந்த துணிகளை கட்டிக்கொண்டு தலையை சீவாமல் எண்ணையற்ற சிக்கு முடியுடன் சிலர் உட்கார்ந்திருந்தனர். அவர்களைப் பார்க்கும் போது பல வாரங்களாக இந்த மருத்துவமனையே கதி என்று இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. எமனிடம் போராடி தம் உறவுகளை மீட்கமாட்டோமா? என்ற சோகம் அவர்கள் முகத்தில் இருந்தது. ஆம்புலன்ஸ் வருவதும் போவதுமான சத்தம் காதைக் கிழிப்பதை விட மனதை என்னவோ செய்தது. நிறைய மருத்துவர்கள் மருத்துவமனை உள்ளே வருவதும் போவதுமாக இருந்தனர். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஓடிப்போய் என் சொந்தம் எப்படி இருக்குன்னு தெய்வ வாக்காக நினைத்து நலம் விசாரிப்பவர்களைப் பார்க்கும் போது அவர்களின் அன்பு நெருப்பாறு போல மனதைச் சுட்டது. நர்சுகளும் வெள்ளை உடையில் உலவிக் கொண்டிருந்தனர். இதை பார்ப்பதற்கு வயல்வெளியில் நாரைகள் கொக்குகள் இருக்குமே அதை போல இருந்தது. மருந்து நெடி மூக்கில் சென்று வயிற்றுக்குள் வாக்கிங் போய்விட்டு வாய் வழியாக வெளியே வந்தது.

காரில் இருந்து இறங்கிய மணியும் அசோக்கும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்றனர். அங்கு இருந்த மருத்துவரிடம் என்னவோ சொன்னார்கள். சொல்லிவிட்டு அங்கிருந்து கைகாட்டி காரை அருகில் வரச்சொன்னார்கள். கார் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அருகில் வந்தது. தயாராக இருந்த ஸ்டெக்சரில் மல்லிகாவைப் படுக்க வைத்து உள்ளே அழைத்துச்சென்றனர். சங்கவியும் தங்கமும் ஸ்டெக்சரின் பின்னாடியே ஓடினார்கள். அவர்களுக்குப் பின்னால் மணியும் அசோக்கும் வந்தனர். வளைந்து வளைந்து கொடைக்கானல் மலை ஏறுவது போல போய்க் கொண்டிருந்தது. ஒரு திருப்பத்தில் இருந்த கட்டிடத்திற்குள் நுழைந்து அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்றதும் இவர்களை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு மல்லிகாவை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றார்கள். வெளியில் நால்வரும் என்ன செய்வது என்று தெரியாமல் இதயம் துடிப்பது வாய் வழியே வெளியே கேட்கும் அளவிற்கு நாக்கு வறண்டு போய் வாயை பிளந்து கொண்டு பயத்தில் உறைந்து போய் நின்றிருந்தனர்.

(சிறகுகள் படபடக்கும்)

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT