Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !