Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #22

 

maayapura part 22

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ஒருவரிடம் நாம்  நூறு சதம் அன்பு காட்டவும் முடியாது. ஒருவரை நாம் நூறு சதம் வெறுக்கவும் முடியாது. ஒருவருக்காக ஒருவர் உயிரையே தரக்கூடிய கணவன் மனைவி உறவில்  கூட, சில நேரங்களில் புரிதலில் குழப்பங்கள் வரக்கூடும். 

 

உறவுகளில் புனிதமானதும் ஆத்மார்த்தமானதுமான  கணவன்-மனைவி உறவுக்கே இப்படி புரிதலின்மை என்றால் பிற உறவுகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். எல்லா உறவுகளிடமும் கோபம், பொறாமை, ஆதிக்க மனப்பான்மை, தான் என்ற எண்ணம் இப்படி நிறைய உணர்வுக் கலவைகள் இருக்கும். சாம்பாரில் இருக்கும் முக்கியமான கலவைகள் போல.  சாம்பாரில் பருப்பு சேர்த்தால்தான் அந்த சாம்பார் மணக்கும். அதுபோலத்தான் ஆயிரம் உறவுகளுக்கிடையே பாசம் என்ற உணர்வும் இழையோடிக் கொண்டிருக்கும். பாசம் இருந்தால் தான் உறவுகளுக்கு உயிர் இருக்கும்.

 

மாமியார்-மருமகள் இருவருக்குள்ளும் வாய் கலப்பு, கைகலப்பு எல்லாம் சில இடங்களில் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் மூன்றாவது நபர் வந்து மாமியாரைத் திட்டினால் மருமகள் விடமாட்டாள். மாமியாருக்கு பரிந்து கொண்டு வரிந்து கட்டிக்கொண்டு வருவாள், மருமகளைத் திட்டினால் மாமியாரும் மருமகளுக்காகப் பரிந்து கொண்டு வருவார். இது உலக அளவில் நிகழும் மனதின் மாயா ஜாலம்.  அமெரிக்காவாக இருந்தாலும் சரி  அமிஞ்சிக்கரையாக இருந்தாலும் சரி, இந்த மாமியார் மருமகள்கள் சைக்காலஜி... புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கும்.

 

கூட்டுக் குடும்பமாக இருந்தால் குறை கூறுதல்கள் அதிகம் அரங்கேறும். பாரபட்சமின்றி அனைவரையும் பற்றி கற்பனையில் நினைக்க முடியாத அளவிற்கு ஒவ்வொருவரும் குறைகள் கூறுவார்கள். அடுத்த பத்து நிமிடத்தில் ஒருவர் மீது ஒருவர் பாசத்தைக் கொட்டிப் பேசுவார்கள். இது பெண்களால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒரு செயல். இரவெல்லாம் கணவரிடம் மாமியார், நாத்தனார், பற்றி அவர் காது அறுந்து ரத்தம் வருமளவிற்கு குற்றப்பத்திரிக்கை வாசித்திருப்பார்கள். மறுநாள் காலையில் நாத்தனாரை சாப்பிடச் சொல்லி, ஊட்டி விடுவார்கள். இதைப் பார்க்கும் கணவனுக்கு குழப்பத்தில் பைத்தியம்தான் பிடிக்கும்.

 

மேலோட்டமாக பார்த்தால் பெண்களில் இந்த குணத்தை அனைவரும் கிண்டலாகவும் கேலியாகவும் குறையாகவும் பட்டிமன்றங்களில் கூட பேசியிருப்பார்கள். உளவியல் ரீதியாக அணுகினோம் என்றால், அதன் யதார்த்தம் புரியும். மனிதர்கள் தங்களுக்குள் ஏற்படும்  கோபம், பொறாமை இப்படிப்பட்ட உணர்வுகளை வெளிக்காட்டாமல் குப்பை மாதிரி மனதிற்குள்ளேயே போட்டு அழுத்திக் கொண்டே இருந்தால் அதிலிருந்து மோசமான வாடைதான் வரும். அவ்வப்போது அந்த உணர்வுகளைக் கொட்டிவிட்டு மனதை எப்போதும் அன்பு என்னும் மல்லிகை பூவால் நிரப்பி வைத்து இருந்தோம் என்றால், நம்மை சுற்றி எப்போதும் நறுமணம் இருந்து கொண்டே இருக்கும். 

 

பெண்களுக்கு இதய நோய் அதிக அளவு வருவதில்லை. திடீரென்று வரும் கார்டியாலிக் அரெஸ்ட் வருவதில்லை. பெண்கள் இதய பலவீனமானவர்கள் அல்ல. உணர்வுகளாலும் அன்பாலும் மனதை ஆளத் தெரிந்தவர்கள்.

 

சங்கவியை அந்த வீட்டில் அனைவருக்கும் பிடிக்காது என்பதற்கான காரணங்கள், ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட முறையில் நிறைய இருக்கும். தங்கத்திற்கு தன் அண்ணன் மகள் இருக்க வேண்டிய இடத்தில் சங்கவி இருக்கிறாள் என்கிற கோபம் வெறுப்பாக மாறியுள்ளது.

 

ஆசையாக  நட்டு வளர்த்த ரோஜாச் செடியில் எப்போது பூக்கும் என்று, பார்த்துப் பார்த்து பராமரித்து பூப்பூக்கும் அந்த தருணத்திற்காக காத்திருந்த நொடியில், அதை வேறொருவர் தன் கண்முன்னே பறித்துச் சென்றால் மனநிலை எப்படி இருக்குமோ அந்த மனநிலையில் கொதித்துக் கொண்டிருந்தாள் புவனா. 

 

ரோஜாப் பூவிற்கே  கோபம் வருமென்றால்... புவனாவின் வாழ்க்கையைப் பறித்துக் கொண்டாளே சங்கவி. அதனால் புவனாவின் கோபத்தில் நியாயம் இருக்கிறது என்று அந்த கோபத்தையும் அன்பாக மாற்ற முயன்று கொண்டிருந்தாள் சங்கவி. மணியின் மனைவி மல்லிகாவிற்கு சங்கவி மீது பொறாமை. தன்னை விட அறிவு, படிப்பு, அழகு என அனைத்திலுமே சங்கவி மிகையாக இருப்பதால், அவற்றின் மீது மல்லிகாவிற்கு எல்லைமீறிய பொறாமை இருந்தது. இதுவும் சங்கவிக்குப் புரிந்தது.

 

தன்னை மாற்றிக் கொள்வதும் சுற்றியுள்ளவற்றை மாற வைப்பதும் காலத்தால் மட்டுமே முடியும். அந்த காலத்தின் மாற்றத்திற்காகத் தான்  காத்திருந்தாள் சங்கவி. இதற்கிடையிலும், யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் போட்டித் தேர்வுக்காக அவள் படித்துக் கொண்டிருந்தாள். நாம் ஒரு தவறு செய்கிறோம் என்றால் அதை மறைக்க பிறரின் கவனத்தை வேறு ஒரு பக்கமாகத் திசை திருப்புவோம். சங்கவியும் தங்கத்தின் மீது அதிக பாசமாக இருந்தாள். 

 

தங்கத்தை அத்தை என்று அழைத்தவள், அம்மா என்று அழைக்க ஆரம்பித்தாள். கண்ணுசாமியோ, தன் அம்மாவின் உடைந்த கைக்கு  சிகிச்சை கொடுப்பதை அருகில் இருந்து கவனிக்க வந்தவர், அம்மாவின் கை சரியான பிறகும்  கூட, அந்த வீட்டைவிட்டுப் போக மனமில்லாமல், தங்கத்தின் வீட்டிலேயே தங்கிவிட்டார். தங்கையின் வீட்டில் நல்ல சாப்பாடும் ஓய்வும் இருப்பதால் தனக்கு ஒரு வீடு இருப்பதையே மறந்து விட்டார். புவனா செல்லமாக வளர்ந்த பெண் என்பதால் சாப்பிடுவதும் உறங்குவதும்  என்ற வேலையை மட்டுமே அறிந்து வைத்திருந்தாள். 

 

புவனா குழந்தையாக இருக்கும்போது அவள் பிறந்த நாள் அன்று, பணத்தைப் படுக்கை போல விரித்து அதில் அவளைப் படுக்க வைத்துப் புரட்டி எடுத்து விளையாடி  இருக்கிறார் கண்ணுசாமி என்று, அவரின் பெருமைகளை ஒருமுறை தனம்மா பாட்டி பேசக் கேட்டிருக்கிறாள் சங்கவி. அதனால் புவனா அதிகமாக குரல் கொடுக்கும் போது சங்கவி அவளுக்கு சேவை செய்து கொண்டுதான் இருந்தாள்.

 

சங்கவிக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கும். ஒருநாள் மல்லிகா அக்கா, தங்கம், மணி எல்லாரும் என்னவோ கூடிக் கூடி, ஐ.நா.சபை மீட்டிங்கைப் போட்டுக்கொண்டு இருந்தார்கள். 

"த..சங்கவி, மல்லிகாவை எந்த வேலையும் செய்யவிடாமப் பார்த்துக்க. அவ உண்டாகி இருக்கா.. புரிந்ததா? பெத்தவங்க ஆசீர்வாதத்தோடு நடந்த கல்யாணம். அதனால வாழை மரம், குலை தள்ள ஆரம்பிச்சுடுச்சு, பெத்தவங்க வயிறு எரிய நடந்த கல்யாணம்... பூக்காம, காய்க்காம  பட்ட மரமாகப் போகுதுன்னு...’ தன் தாய்மையை மறந்து மருமகளிடம், வாயில் நெருப்பை கொப்பளித்து உழிழ்ந்தாள்  தங்கம். சங்கவிக்கு மல்லிகா கர்ப்பமாக இருக்கிறாள் என்பது மட்டும் தான் புரிந்தது. தங்கம் கொடுத்த சாபம் எதுவும் புரியவில்லை. புரியக்  கூடிய வயதும் இல்லை. இது  ஏனோ தங்கத்திற்குத்  தெரியவில்லை. 

"அக்கா ரொம்ப சந்தோஷங்கா" என்று மல்லிகா கையைப் பிடித்துக் கொண்டு வாழ்த்துச் சொன்னாள் சங்கவி. பெருமையாக தலையாட்டினாள் மல்லிகா.

 

சங்கவியை அம்மா திட்டுவதை கேட்டுக்கொண்டே படுத்திருந்தான் அசோக். சங்கவி போனதும் "அம்மா ..நீங்க சாபம்  தரும் அளவிற்கு கொலையா செய்துவிட்டேன்? பெற்ற மகனுக்குப் பிள்ளை பிறக்க கூடாது என சாபம் தரும் தாய் உலகத்திலேயே நீ மட்டும் தான் இருப்ப மா. பரவாயில்ல. எனக்கு குழந்தை பிறக்க வேண்டாம்.  என்னைக்கும் நான் மட்டும் உன் மகனாய் இருக்கேன் மா" என்று அசோக் கண்ணீருடன் சொன்னதும் தான், ’சங்கவியை மருமகளாக மட்டும் பார்த்து வெறுப்பைக் கொட்டுகிறோம். அசோக்கின் மனைவியாக நினைக்கலையே’ என்று லேசாக வருந்தினாள் தங்கம்.

"பூவுள்ளமங்கை பொன் கொடியாம், போன இடமெல்லாம் செருப்படியாங்கற, கதையா... ஏண்டி . தங்கம் பாவம் அந்த பொண்ணு. ஏண்டி அதுக் கிட்ட வம்பு பண்றே?’ என்று, சற்று அதட்டலாகவே கேட்டாள் தனம்மா பாட்டி.  அம்மாவை எதிர்த்துப் பேசாமல், தங்கம் அங்கிருந்து நகர்ந்தாள்.

 

அந்த வீட்டில் மல்லிகா செய்யும் மிகச் சிறந்த வேலையே காலை மாலை இருவேளையும் துடைப்பம் எடுத்து வீட்டைப் பெருக்குவது தான். இனிமே அந்த வேலையில் இருந்தும் விடுதலை அளிக்கப்பட்டது. காலையில் எழுந்திருக்க வேண்டியது, குளித்து முடித்து உளுந்துக் கொடி ஆயறத்துக்கு, புளி ஆயறத்துக்கு, உளுந்து உடைக்கறதுக்கு, அரிசி குத்தறத்துக்கு  வருகிற பண்ணை ஆட்களுடன் அரட்டை அடிக்க வேண்டியது, தாயம் விளையாட வேண்டியது, சொக்கட்டான் ஆட வேண்டியது, சாப்பிட வேண்டியது, தூங்க வேண்டியது என்று மல்லிகா, புவனா, நாகம்மா இவர்களின் பொழுது இன்பமாக கழிந்தது. 

 

இந்தக் குழுவின் தலைவர் மணியோ, தனக்கு ஒரு வாரிசு கொடுக்கப் போகிறாள் என்றவுடன் மல்லிகாவைத் தரையிலேயே நடக்க விடுவதில்லை. மணி குடும்பத்தில் உள்ள அனைவரும் தங்கத்தட்டில் வைத்து அவளைத் தாங்கினர்.

 

குடும்பத்தில் ஒருவர் மீது காட்டும் வெறுப்பு இன்னொருவர் மீது பாசமாக மாறும். அப்படித்தான் சங்கவி மீது காட்டிய வெறுப்பானது மல்லிகா மீது பாசமாக மாறியது. தனம்மா  பாட்டி மட்டும் சங்கவி மீது பாசத்தைக் காட்டினாள். சங்கவியும் பாட்டிக்கு வேண்டியதைப் பார்த்துப் பார்த்து செய்தாள்.

"கருத்தரிச்சு  இருந்தாலும் காடு கழனி எல்லாம் களை பறிச்சு,  கட்டு  தூக்கி, கருப்பஞ் சோலையில் புள்ள பெத்து, சோள தட்டில்  படுக்க வைத்து, சோளத்தை கிழிச்ச கூலியில் சோத்தை பொங்கிச் சாப்பிட்டு, சோதனையை சுமந்த பொம்பளை பொறப்பிது. இந்த வீட்டில் என்னடான்னா நடக்க பூவிரிச்சு, படுக்க பஞ்சு விரிச்சு. குளிக்க  பன்னீரு ஊத்தி,  எலிசபெத் ராணியாட்டம் தாங்கறாங்க” என்று தனம்மா பாட்டி மல்லிகாவைக்  கிண்டல் செய்தாள்.

 

ஒருநாள் காலையில் வாசலில் வில்லு வண்டி சத்தம் கேட்டது. வந்தது மல்லிகா குடும்பத்தினர். மல்லிகாவின் அண்ணன்கள் மூன்று பேரும் அக்காக்கள் இரண்டு பேரும் குடும்பத்துடன்  இங்கே குவிந்தனர். மல்லிகா மாசமாக இருப்பதைப் கேள்விப்பட்டு  அவளைப் பார்த்துவிட்டு  அப்படியே, மல்லிகாவின் அம்மா காசிக்கு போவதை சொல்லிவிட்டு போவதற்காகவும்  வந்தனர். தலைவாழை இலை போட்டு, இலை நிறைய விருந்து வைத்து வயிற்றுக்கும் வாய்க்கும் இடைவெளி இல்லாப்  பாலம் போட்டு, விருந்து வைத்தார்கள்.

 

சங்கவியின் மனதின் ஓரத்தில் சீர்செனத்தியோட  வந்த தன் வீட்டு மக்களை ஒரு வாய் காபி தண்ணியோட விரட்டி விட்ட நிகழ்வு ஏனோ நிழலாடியது.  

 

ஒரு  நாள்  வெள்ளிக்கிழமை என்று வீட்டை எல்லாம் கழுவி வைத்திருந்தாள் சங்கவி. எப்போதும்போல மல்லிகா கண்களை அந்தரத்தில் மேய விட்டு, கால்களை வானத்தில் பறக்க விட்டு வந்தவள், தரையில் வழுக்கி  டமால் என்று சத்தத்துடன் விழுந்தாள். அடுத்த  நொடியே அந்த வீடு அணுகுண்டு விழுந்த மாதிரி ஆனது.

 

( சிறகுகள் படபடக்கும் )