ADVERTISEMENT

"இளவயதில் பொறாமை என்பது இயலாமையின் சகோதரனைப் போல.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #15

12:31 PM Dec 14, 2019 | suthakar@nakkh…

காலையிலேயே இரண்டு தற்கொலை செய்திகளை குரல் நிறைய கவலைகளைச் சுமந்து கொண்டு வாசித்துக் கொண்டு இருந்தது வீட்டுத் தொலைக்காட்சி, அதுவும் குடும்பத்தோடு இந்த கொலைகளுக்கு காரணம் பணம் அதை பெற வாங்கிய கடன். இந்த கடன் சுமைகளின் அழுத்தம் சுமக்க முடியாமல் தன்னைப் பெற்றவர்களோடு சேர்த்து பிஞ்சுகளும், ஐந்து உயிர்கள் தண்டவாளத்தில் கனமான ரயில் சக்கரங்களுக்கு அடியில் நான்கு உயிர்கள் சயனைடை தொண்டைக்குள் ருசித்தபடி, தானும் உண்டு தன் பிள்ளைகளுக்கு தரும் சமயம் அந்தத் தந்தையின் நிலையை நினைத்தால் இன்னமும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. தான் பெற்ற பிள்ளைகளைக் குறித்து எத்தனை கனவுகளைக் கண்டிருப்பான். தன் எதிர்காலத்தின் விடிவெள்ளியை தானே அழித்துவிட்டோமே என்ற பெரும் வருத்தத்தோடுதான் அந்த உயிர் பிரிந்திருக்கும். காலம் காலனை அவன் உருவிலேயே வர வைத்துவிட்டதை என்னவென்று சொல்வது.

இந்த வார பதிப்பும் மற்றொரு தற்கொலைச் சம்பவம் தான்! சில செய்தித்தாள்களையும், தொலைகாட்சியினையும் எட்டுகிறது. சில இறப்புகள் காரணங்களை தங்கள் உடலிழப்பைப் போல தங்களுக்குள்ளேயே மறைத்துக் கொள்கிறது. இரண்டு குழந்தைகளின் அன்புத்தாய். இரண்டு தினங்களுக்கு முன்பு வரையில் உயிருள்ள பொக்கிஷம். இன்று நாக்கும் கண்களும் வெளியே தள்ளி அகோரமாய் வீட்டு உத்தரத்தில்! காரணம் என்ன? இங்கும் கடன்தான்! கணவன் மனைவியின் அன்பில் பரஸ்பரம் அன்பு இருக்க வேண்டும் என்பதைத் தாண்டியும் நம்பிக்கை இருக்க வேண்டும். அதுதான் அடித்தளம். காலங்காலமாக கணவனின் நினைவுகளைச் சுமந்து அவனின் விருப்பு வெறுப்புக்களுக்காகவே வாழ்ந்து மடிய வேண்டும் என்பதுதான் பெண்ணிற்கு எழுதப்பட்ட விதி. சூரியகாந்தி என்றொரு திரைப்படம் குடும்பச் சூழ்நிலைக்காக கணவனுக்கு பிடிக்காமல் போனாலும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். ஆனால் அதை அகம்பாவம் என்று புரிந்து கொண்ட கணவன் மனைவியிடம் இருந்து விலகுகிறார். மகளின் குடித்தனத்தை பார்க்கவரும் அம்மா புருஷன் பேச்சை தட்டாத வம்சத்தில் வந்தவ நான் எனக்கு இப்படியொரு பொண்ணா? என்று கேள்வியெழுப்புவார்.

ADVERTISEMENT



திருமணம் ஆனாலும் சரி திருமணம் ஆகாமல் போனாலும் சரி பெண்களின் மனதை சரிவர புரிந்து கொள்பவர்கள் யாரும் இல்லை. ஒன்று அளவுக்கதிகமாக அவளுக்கு தேவையில்லாததையும் அள்ளிக்கொடுத்து கெடுப்பார்கள். இல்லை அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிர்தாட்ஷண்யமாய் மறுப்பார்கள். தான் எதிர்பார்த்த வசதியான வாழ்க்கை கிடைத்தும் மேரியின் காதல் ஒரு முழம் கயிற்றிக்கும் உத்திரத்திற்கும்தான் வாய்த்திருக்கிறது. ஏழ்மையாய் பிறப்பது என்பது என் குற்றமா என்ற வாதம்தான் அவளின் மனதில் அடிக்கடி கேள்வி எழும்பும். எப்போதெல்லாம் தெரியுமா பள்ளியில் சத்துணவில் கொட்டையான அரிசிசாதத்தோடு அவுத்துக்கீரைச் சாம்பாரை க்யூவில் நின்று சுவைக்கும் போது, மலிவு விலையில் கிழிந்து போன சீருடையில் ஊக்குகளைக் குத்தி சமாளிக்கும் போது, வறுமை அவள் வளர வளர வரமாய் கூடவே வளர்ந்தது. பொறாமை என்பது கெட்ட வார்த்தையில்லை, யார் சொன்னார்கள் இளவயதில் பொறாமை என்பது இயலாமையின் சகோதரனைப் போல அத்தனை தோழமை உடையது தன் சக மாணவிகளின் தோற்றத்திலும், உடையிலும் அவர்கள் பழகும் விதத்திலும் அந்த பொறாமை தோன்றித்தோன்றி மறைந்தது கனவுகளும் ஏக்கங்களும் மட்டுமே ஆக்கிரமித்திருந்த மேரியின் பொறாமையில் மற்றவர்கள் கெட்டுப்போக வேண்டும் என்ற எண்ணமில்லை அவர்களைப் போல தானும் ஒருநாள் வாழ வேண்டும் என்ற நினைப்பே மேலோங்கியிருந்தது.

கைலாசம் நூத்துக்கு பத்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என்று கழுத்தை நெரித்தாலும் கவலைப்படாதே என்று கேட்ட நேரத்திற்கெல்லாம் பணம் தருபவன் , நேரில் வளைந்து குழைந்தாலும் பின்னால் கைலாசத்தை அர்ச்சனை செய்பவர்கள்தான் அதிகம். அப்படி வசூல் செய்ய வந்தவனின் கண்களில் விழுந்தவள்தான் மேரி. யோசிக்காமல் கேட்டே விட்டான். மேரியின் தந்தையிடம் எத்தனையோ வார்த்தை தடைகளைச் சொல்லிவிட்டு கடைசியில் உங்களுக்கும் பாப்பாக்கும் 15 வயசு வித்தியாசம் அதிலும் இது இரண்டாவது திருமணம் உங்க மொத பொண்டாட்டியை.... அதெல்லாம் எனக்கு ஆகாதவன் கட்டிவிட்ட கதை, அவளுக்கு நோய் அது தெரியாம நான் கட்டிகிட்டேன் 32 வயசெல்லாம் ஒரு வயசா? எங்கப்பச்சிக்கும் ஆத்தாக்கும் 30 வயசு வித்தியாசம் தெரியுமா?! இங்கன பாரு பொண்ணைக் கொடு கடனைக் கூட கட்ட வேண்டாம் மேற்கொண்டு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக்கோ, நான் வேணுன்னா ஒம்பொண்ணுகிட்டே பேசறேன். அதெல்லாம் வேண்டாம் அய்யா நானே பேசறேன். மேரியிடம் எப்படி பேசுவது பணத்திற்காக பெண்ணை விற்பதாய் எண்ணிக்கொள்வாளா என்ற பயம் நெஞ்சைக் கவ்வினாலும் மேரி ஒரு முழு நிமிடம் யோசித்து விட்டு சட்டென்று சரியென்று சொல்லிவிட்டாள்.

தன் கூட படித்த பிள்ளைகள் எல்லாம் இடுப்பில் ஒன்றும் தோளில் ஒன்றும் சுமந்து கொண்டிருக்க தான் மட்டும் இப்படியே நின்றுவிடுவோமோ என்ற பயம் அவளைக் கவ்விக் கொண்டது. இளமையின் இம்சைகள் அவளை அனுதினமும் கொன்று கொண்டிருப்பதை எப்படி பெற்றோரிடம் சொல்ல முடியும். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு கிடைத்த விடிவாத்தான் நான் நினைக்கிறேன். நல்ல சாப்பாடு, துணிமணி கூட எடுக்க முடியாத எனக்கு இந்த கல்யாணமும், இரண்டாந்தாரமோ வயசோ பெரிய வித்தியாசம் இல்லை என்னோட தராசு கைலாசத்தோட கல்யாணம் பக்கம் சரிஞ்சிடுச்சி, முதலில் தன்னால் நல்ல வாழ்க்கையை அமைத்து தர முடியாததால்தான் பெண்ணிற்கு இந்த கஷ்டம் என்று தோன்றிய சலனங்களைக் கூட கல்யாணத்திற்குப் பிறகு போக்கிவிட்டான் கைலாசம். லக்கிதானே மேரியின் சம்மதம் உடனே கிடைத்துவிட்டது அவனுக்கு கூட அதிசயம்தான். பட்டும் பகட்டுமாய் மேனியின் வறுமை பூசிய அங்கங்கள் எல்லாம் தங்கமும் வைரமும் இழைந்தது. மேரியின் குடும்பமும் வறுமையை மறந்தது, இரண்டு குழந்தைகள் பார்க்கும் இடங்களில் எல்லாம் பயம் கலந்த மரியாதை, ஊரில் முக்கியப் புள்ளி அவளா என்று கேட்ட நாக்குகள் எல்லாம் மேரியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு சந்தோஷப்பட்டன. எல்லாவற்றிகும் ஆயுசு சிலநாட்கள் தான் என்பதை நிரூபித்தது அவளின் வாழ்வின் முடிவு.

ADVERTISEMENT



காதல் கல்யாணம் இரண்டுக்குமே அடிப்படை நம்பிக்கைதான் ஆனால் தமிழ் குடும்பங்களில் பெண்களின் பங்கு என்பது அநேகமா அதிகரித்துதான் இருக்கும் எத்தனையோ ஆண்கள் தங்கள் குடும்பத்திற்காக மனதிற்குள் மகிழ்ச்சிகளை மறைத்து வாழ்கிறார்கள். நல்லது கெட்டது என எல்லாமே கடிதங்களில் மாறி தொலைபேசியில் மறந்து முகம் பார்க்கும் கைபேசி வந்தபிறகு அந்த நெருக்கம் கொஞ்சம் அதிகரித்து கொண்டே வந்ததென்னவோ உண்மை. எங்கோ கிடந்து சம்பாதித்து பெற்றோருக்கோ மனைவிக்கோ தனது சம்பளத்தை அனுப்பிவிட்டு கிடைத்ததை சாப்பிட்டு வறுத்தப்படுவார்களே ஏதோ ஒரு நம்பிக்கை அதை உடைக்கும் போதுதான் வாழ்க்கை சூன்யமாகிறது.

அன்பு, காதல், என்றெல்லாம் இன்றி பணத்தையும், வசதியையும் எண்ணி நடந்த கல்யாணம் என்றாலும், கைலாசத்தின் குணம் அவளை அவன்பால் வெகு சீக்கிரமாகவே இழுத்துவிட்டது. தன் இளமையில் எதையெல்லாம் தவறவிட்டாளோ எல்லாவற்றையும் தன் பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமாகவே கொடுத்தாள். பணத்திற்காக பாராட்டவும் புகழவும் அவளுக்கென்று ஒரு கூட்டம் உண்டாகியது. ஒரு கட்டத்திற்கு மேல் செலவு கைமீறியது சேமிப்பைத் தாண்டி வெளியில் கடன் வாங்க ஆரம்பித்தாள். கடன் சுமை ஏறும் போது அது வெகுவான மன அழுத்தத்தைக் கொடுத்திட, கணவனிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை எல்லாரும் கைலாசம் இல்லையே சரி விடுப்பா முடியும் போது கொடுன்னு சொல்ல, சிலர் கடன் என்னும் கத்தியைக் கழுத்துக்கு நேரே நீட்டிட கசப்பான அனுபவத்தால் கைலாசம் வெளியூர் சென்றிருந்த நேரம் பிள்ளைகளுக்கு தூக்கமாத்திரையைக் கொடுத்துவிட்டு, தாலிக்கயிறு சுமந்த கழுத்திற்கு தூக்குகயிறை மனமுவந்து ஏற்றுக்கொண்டாள். இன்று அந்த உத்திரமும் அவளின் அழகான கூடும் தன் இணைப்பறவையும், தாய்பறவையும் இழந்து தவிக்கிறது.

தன் இணையின் மேல் பாசம், மரியாதை, அன்பு, அக்கறை,தோழமை எல்லாமே இருப்பதையெல்லாம் விட அவனின் மேலிருந்த பயமும், மனதில் உள்ளதை இயல்பாய் பேச முடியாததுமே மேரியின் மரணத்திற்கு காரணம். பயத்தை உதறி உண்மையைச் சொல்லியிருந்தால் அந்த அழகான குடும்பம் சிதைந்திருக்காது.

அடுத்த பகுதி - "நிர்வாணம் என்பது உடலின் உடைகளை நீக்கிப் பார்ப்பது இல்லை..." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #16

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT