Skip to main content

"நிர்வாணம் என்பது உடலின் உடைகளை நீக்கிப் பார்ப்பது இல்லை..." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #16

சமூகம் புறக்கணிக்கப்பட்டால் நாங்கள் புதைந்து போய்விடப் போவதில்லை. சமகாலத்தில் அடிபட்டு ஆறாத ரணத்தோடு வாழும் நாங்கள் ராஜாக்கள் காலத்தில் அவர்களின் அந்தரங்க அறைக்குள் பாதுகாக்கும் பதவியோடு வாழ்ந்தவர்கள். அன்றைய அரசர்களின் நம்பிக்கைகளுக்கு பாத்திரமானவர்கள் திருநங்கைகள். ஆனால் அதன்பின்னர் எத்தனையோ பேர் அரசாண்டார்கள் தங்கள் வீடுகளிலோ அலுவலங்களிலோ திருநங்கைகளை வேலைக்குச் சேர்த்திருக்கவில்லை. அர்ஜூனன் கூட தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எடுத்துக் கொண்ட வேடம் எங்களின் அடையாளம்தான். புராணங்கள் போற்றியது, புணர்ச்சிக் கென்றே ஒதுக்கிவைக்கப்பட்டதைப் போல வர்ணம் பூசப்பட்டு விட்டது நவீனத்தில்! நான் தோற்றவள் தான் வாழ்க்கையின் அநேக ரணங்களையும் ருசித்துப் பார்த்தவள், தலைவர் படத்தில் ரிக்ஷாகாரன் என்று நினைக்கிறேன். பத்மினி ஒரு வசனம் பேசுவார் நான் ஆசைப்பட்டு சேர்த்து வைத்திருப்பது சொத்துக்கள் அல்ல, என் துன்பங்கள். அவையெல்லாம் என்னைவிட்டுப் போய்விட்டாள் அப்பறம் நான் உயிர் வாழ்வதெப்படியென்று? 
 

lஅப்படித்தான் நானும் என் சமூகமும், குடும்பம், உறவுகள், நண்பர்கள் எல்லாம் செல்லாக்காசிப் போனார்கள் என் பதின்வயதில் ஆணின் உடலிற்குள் ஒளிந்து கொண்டிருந்த பெண் வெளிவரத் தொடங்கியது எப்போது என்று நினைவிற்கு வரவில்லை ஆனால் என் நடவடிக்கைகள் எனக்கு உணர்த்தியது நான் அதிகம் விரும்புவது பெண்பிள்ளைகளின் அருகாமையென்று. பத்தொன்பது வயது வரையில் வேட்கையின் தீவிரத்தை அடக்கி வைத்திருந்த மனமும் உடலும் இனி அது தேவையில்லை என்று கரைபுரண்ட வெள்ளமாகத் தாவியது. அதற்கு காரணம் என் பெற்றோர் எனக்கு பெண் பார்க்கத் தொடங்க என் ஈர்ப்பும் ஆசையும் ஒரு ஆணின் மேல் பெண்ணின் மேல் இல்லை என்பதை சொல்ல பெற்ற தகப்பனிடமும் தாயிடமும் வெட்கமின்றி எப்படி சொல்ல முடியும்.விருப்பங்களை வெளியே சொல்லக்கூடிய அளவிற்கு அப்போதைய சூழ்நிலைகள் சுதந்திரத்தை அளிக்கவில்லை. அந்நாளைய நினைவுகள் அவரைத் தாலாட்டவில்லை, மாறாக கூர் வாள் கொண்டு கீறிப்பார்த்திருக்கும் போலும், 19 வயதில் நிர்வாணம் செய்து கொண்டு என் பெண்மையின் திமிரோடு நான் சாலைக்குள் நுழைந்தேன். அப்போது பட்ட அடியும் அவமானங்களும் இன்றுவரையில் நிலைத்திருக்கிறது. சிறுவர்களில் இருந்து பெரியவர்கள் வரை மார்கெட் முனையில் கல், மண், ஏன் அழுகிய காய்கறிகள் கூட என் உடலை ஆசையோடு பதம்பார்த்தன. நான் என்றால் நான் மட்டும் அல்ல என் போன்று அன்று வாழ்ந்த திருநங்கைகள். 

நிர்வாணம் என்பது உடலின் உடைகளை நீக்கிப் பார்ப்பது இல்லை அது எங்களின் உறுப்பினை நீக்கும் வலி மிகுந்த வாழ்க்கையைக் குறிப்பது என்பது மூத்த திருநங்கை நீலாம்மாவின் வாதம். ஆழ்ந்த அமைதி இனி சந்திப்பதற்கு எந்த வேதனையும் இல்லையென்பதை பிரதிபலிக்கும் அமைதியான தோற்றம். அதிர்ந்து போகாத வார்த்தைகள் தான் அவருடையது ஆனால் அவை பேசியபோது நமது செவிகள் அதிர்ந்தது உண்மையே. என் மெளனத்தின் பின்னர் தோற்றுப்போன நாட்களின் நகர்வுகள் இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லியது அவரின் தோற்றம். என்னை அரவணைத்தவர்களின் மரணத்தில் கூட என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அங்கும் அடியும் வசவுகளும்தான் ஆனால், பகலில் அடிக்க நீளும் கைகள், அசிங்கமான வசவுகளை அள்ளித்தெளிக்கும் நாக்குகள், இரவில் திருநங்கையின் மடி தேடி தவழ ஆரம்பித்தன. அடிக்கிற கைதான் அணைக்கும் பாடல் ஒன்று உண்டு பகலில் அடித்த கைகள் இரவில் அணைத்தன, சுகம் பெற்று சுவைத்து மீண்டும் மறத்துபோகும் வரையில் அடித்தன. 
 

 

l;ஒரு பெண் ஆணாவதும் ஆண் பெண்ணாவதும் இந்த காலத்தில் சுலபம் ஆனால் நாங்கள் வாழ்ந்த அந்த காலத்தில் அதெல்லாம் எட்டாத கனவு, இப்போதும் சிலர் கடவுள் படைத்த உறுப்பை எடுக்காமல் அதனோடேயே பயணிக்கிறார்கள் மனதளவில் வேறுபட்டு. ஒரு பிள்ளைக்குத் தாயாகவில்லையென்றாலும், நாங்கள் அனைவருக்கும் தாயாகவே இருக்க நினைக்கிறோம். நாங்கள் கடவுளின் பிள்ளைகள். ஒருமுறை பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது ஏதோ ஒரு சங்க கூட்டத்தைப் பார்த்தேன். எங்கெங்கோ நடிகர்களுக்கு சங்கம் இருக்கிறது நம் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் சங்கம் அமைத்தால் என்னவென்று தோன்றியது, அன்றைக்கெல்லாம் தாயம்மா கையின் பூஜைக்குப் பிறகு பிழைத்தெடுத்தால் பெண், இல்லையேல் பிணம். ஒரு வேளை சோற்றுக்குகூட கஷ்டப்படும் என்னால் எப்படி சங்கம் அமைக்க இயலும்.

இப்போது போல் அரசாங்கம் எந்தவித சலுகைகளையும் எங்களுக்குத் தரவில்லை. பயந்துபயந்து நடுங்கிய திருநங்கைகள் சமூகத்திற்காக ஆரம்பிக்கவேண்டும். செந்தில் என்பவர் கம்யூனிட்டி ஆப் நெட்வொர்க் என்று ஒரு வாய்ப்பு ஐந்து வருடங்களில் அங்கு என் பணியைச் செய்தேன் அப்போது தான் லெஸ்பியன்ஸ், செக்ஸ் ஒர்க்கஸ், திருநம்பிகள் என்றெல்லாம் கண்டுகொண்டேன். நடுவில் ஒரு படம் சகோதரர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். ஒரு பெண்ணுடன் வாழ்ந்து பின்னர் அவர் தன் வாழ்வை மாற்றிக்கொள்ள ஆபரேஷன் செய்துகொள்வதை காட்டியிருப்பார்கள். அப்படி ஒரு பெண்ணுடன் வாழ்ந்து அதன்பின் திருநங்கைக்குரிய ஆபரேஷனை செய்துகொள்வது என்பது தவறான செயல். நான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.  தமிழ்நாடு அசோசியன் அமைப்பை அதை தமிழ்நாட்டில் பதிவு செய்தது நான்தான். தா என்னும் அந்த அமைப்பில் பணிபுரிந்த அம்மாள் என் அத்தனை வசவுகளையும் பொறுத்துக்கொண்டு எனக்கான ஒரு களத்தை உருவாக்கி கொடுத்திருந்தார். தா என்ற நிறுவனம் எங்களின் துவங்கம் அதன் பிறகு நடந்துதான் பல்வேறு அமைப்புகள் முளைத்தன. இப்போது உள்ள பிள்ளைகள் எல்லாம் நன்கு படித்து ஒரு குழுக்கள் நடத்திவருகிறார்கள். குமாரி, ஜோதி, சங்கர், வசந்தி, கலைச்செல்வி என்று என்னோடு பயணித்த சிலபேர் இப்போது இறந்து விட்டாலும் பலர் இருக்கிறார்கள். 

தா - என்னும் அமைப்பை உருவாக்கி சில சூழ்நிலைகளால் அதை விட்டு விலகி விட்டேன். சமீபத்தில் நடந்த விழாவில் யாராவது ஒரு அலி வந்து அவார்ட் வாங்கிக்கொள் என்று கூப்பிட்டப்போது எந்த பெயரை மறைக்க வேண்டும் என்று நினைத்தோமோ அதே பெயர் சொல்லியே அழைக்கப்பட்டு அந்த விருதுதினை வாங்கிக்கொண்டேன். மனம் நிறைய வலியோடு அந்த விருதுனை அணைத்துக் கொண்டேன். நான் உருவாக்கிய சங்கம் அல்லவா அதனால்தான்.  மனம் கசந்து, தாய் தந்தையைப் பிரிந்து வந்த பிள்ளைகளை மேலும் வருத்தி அவர்களின் மூலம் வரும் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் சமுதாயமும் உண்டு. அதேபோல் தனக்கு வரும் வாய்ப்பினை அடுத்தவர்களுக்கு தராமல் பெயரையும், பலனையும் தனக்கே பெற்றுக் கொள்கிறார்கள். அரசாங்கத்தை விடவும் சோஷியல் ஒர்க்கர்கள் உதவுகிறார்கள். அதேபோல் இன்றைய திருநங்கைகளின் நிலையைப் பார்த்தால் மனம் மிகவும் கனக்கிறது.

அன்றைய நிலையில் சாதாரணமாக தெருவில் நடந்தால் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிவிடுவார்கள். புதிதாய் வரும் பிள்ளைகள் சிலர் தவறான முறையில் அடித்து பணம் பிடுங்கிவிடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். தாய் தந்தை இழந்து வரும் பிள்ளைகளை தனது பிள்ளைகளாக தாய் என்னும் உரிமையில் மூத்த திருநங்கை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் தேவைக்காக பண நெருக்கடியில் வேறு வழியின்றி தன்னை வன்மமாக மாறிக் கொள்கிறார்கள். சுமந்த சிலுவைகளில் ரத்தச் சுவடுகளின் ஆழம் இன்னும் ஆறாமல் தான் இருக்கிறது நீலாம்மாவிடம், தோற்றுப்போன வாழ்வு என்று அவர் வார்த்தைகளை பிரயோகித்தாலும், திருநங்கைகளுக்காக முதல் சங்கம் தொடங்கியவர் என்ற வெற்றியை சுமந்திருப்பதைப் போலத்தான் எனக்கும் உங்களுக்கும் தோன்றும். அவரின் கரைகண்ட அனுபவப் பாடமும், அரசியல் கண்ணோட்டமும் தன் சமூகத்திலும் சில தவறுகள் இருக்கிறது என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்ளுவதோடு தாயன்போடு அவர்களை திருத்தவும் முயல்கிறார். திருநங்கைகளின் எதிர்காலத்தை எண்ணி தவிக்கும் அவரின் மனம் பதைக்கிறது. அந்ததாயின் எண்ணங்கள் உண்மையாகட்டும் என்பதே எனது வேண்டுதலும்.

அடுத்த பகுதி - "தொடர்பு எல்லையைத் தாண்டிப் போன அந்த தொலைபேசிக் குரலை மீண்டும்.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #17

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்