ADVERTISEMENT

டிஜிட்டல் சதுரங்க வேட்டை: 20 வயது இளைஞர் திருடிய 10 கோடி ரூபாய்! பகுதி – 14

12:52 PM Mar 27, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பஞ்சாப் மாநில முதல்வராக அம்ரீந்தர் சிங் பதவியில் இருந்தார். அவரது மனைவி பிரனீத் கவுர் 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பட்டியாலா நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியாக பதவியேற்றிருந்தார். கணவர் மாநிலத்தின் முதலமைச்சர், மனைவி நாடாளுமன்ற உறுப்பினர்.

நாடாளுமன்ற உறுப்பினரான பஞ்சாப் முதல்வரின் மனைவி பிரனீத் கவுர், 2019 ஆகஸ்ட் மாதம் பட்டியாலா காவல்துறை எஸ்.பியிடம் ஒரு புகார் தந்தார். அதில், ‘வங்கி மேலாளர் என்று கூறி மொபைல் போன் மூலம் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டார். அவர், என்னுடைய எம்.பிக்கான சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். அதற்காக நீங்கள் தந்துள்ள விவரங்களை சரிப்பார்க்கிறேன். உங்கள் வங்கிக் கணக்கு எண் மற்றும் ஏ.டி.எம் கார்டு விவரங்களை சொல்லச் சொன்னார். நான் எம்.பியாக இருப்பதால் அதற்கான சம்பளத்தை செலுத்தப்போகிறார்கள் என நம்பி என்னுடைய வங்கி கணக்கு விவரத்தை அவரிடம் தெரிவித்தேன். கன்பர்மேஷனுக்கு ஒரு ஓ.டி.பி. வரும். அதைச் சொல்லச் சொன்னார். நானும் கூறினேன். சிறிது நேரத்தில் என்னுடைய மொபைல் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், என்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து 23 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் மனைவியிடமே ஆட்டயப் போட்டவன் எவன்டா என பஞ்சாப் போலிஸ் சிறப்பு கவனம் எடுத்தது. சைபர் க்ரைம் டீமின் மின்னல் வேக விசாரணையில், முதலமைச்சர் மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரே வங்கிக் கணக்குக்கே பணம் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டு இருப்பதை வங்கி அதிகாரிகள் தந்த ஸ்டேட்மெண்ட்டை வைத்து உறுதி செய்தனர். அந்த கணக்கு யாருடையது எனக் கேட்க; வங்கி, அந்த நபரின் முகவரியை தந்தது. அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அவன் ‘எனக்கு யார்னே தெரியாது, நான் புரோக்கர்’ என்றுள்ளான். அவனை மட்டும் பிடித்துச்சென்று விசாரித்தார்கள்.

விசாரணையில், அவன் பெயர் அல்தாப் அன்சாரி என்பது மட்டும் தெரிந்தது. அவன் பேசிய நம்பர் சுவிட்ச் ஆப். அது டூப்ளிக்கெட் முகவரி தந்து வாங்கப்பட்டிருந்தது. ஆள் எப்படி இருப்பான், கறுப்பா, சிவப்பா, ஒல்லியா, குண்டா என எதுவும் தெரியாது. வயதையும் குத்துமதிப்பாகத்தான் சொன்னான்.

முதலமைச்சரின் மனைவியிடமே ஆட்டயப் போட்டதோடு, போலிஸில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்த அல்தாப்பை ஜம்தாராவில் கொண்டாடத் துவங்கினார்கள். அவனுக்கு ராக்ஸ்டார் என பட்டப்பெயரும் தந்திருப்பதை உளவு போலிஸார் வழியாக கண்டுபிடித்த ஜம்தாரா போலிஸாருக்கு கடுப்போ கடுப்பு. அப்போதுதான் ஜம்தாராவில் சைபர் க்ரைம் பிரிவுக்கு என தனி ஸ்டேஷன் தொடங்கியிருந்தனர். சைபர் க்ரைம் போலிஸார் இவனை எப்படியாவது தூக்கியே ஆக வேண்டும் என அவன் பயன்படுத்தும் செல்போனை கண்காணிப்பில் வைத்தனர். ஒரு நாளைக்கு 5 சிம் கார்டுகளை மாற்றிக்கொண்டு இருந்தான். டெல்லி, மும்பை எனச் சுற்றிக்கொண்டே இருந்தான். ஊர்ப்பக்கம் வந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ரகசியமாக ஊருக்கு வந்துபோய்விடுவான். போலீஸும் தேடிக்கொண்டே இருந்தது.

2021 தொடக்கத்தில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர், தனியார் வங்கியின் இணையதளத்துக்கு சென்று தனது ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட்டை ஓபன் செய்ய முயன்றுள்ளார். அவரது வங்கிக் கணக்கு யூசர் நேம், பாஸ்வேர்ட் போட்டுள்ளார். அது உள்ளே போகவில்லை. அந்த இணையத்தில் இருந்த கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அங்கிருந்து பேசியவர், உங்கள் மொபைலில் எங்கள் வங்கியின் மொபைல் ஆப் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொண்டு பயன்படுத்துங்கள், லிங்க் அனுப்புகிறேன் எனச்சொல்ல அதன்படி லிங்க் அனுப்பியுள்ளார். பெண் மருத்துவரும் ஆப் டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்துள்ளார். அதில் வங்கி கணக்கு விவரம், பாஸ்வோர்ட் ஆகியவற்றைத் தந்துள்ளார். அப்போது நெட்ஓர்க் ப்ராப்ளம் வந்துள்ளது.

அவர் பின்பு பார்க்கலாம் என விட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 22 லட்ச ரூபாய் வேறு வங்கி கணக்குக்கு போய்விட்டது. இதுதொடர்பாக டெல்லி சைபர் க்ரைம் பிரிவில் புகார் தந்தார். வங்கி பெயரில் உருவாக்கப்பட்ட போலியான இணையதளம், போலியான கஸ்டமர் கேர் எண், போலியான ஆப் ஆகியவை என்பதை கண்டறிந்தனர். மருத்துவரின் வங்கி கணக்கில் இருந்து பணம் யாருடைய வங்கி கணக்குக்கு ட்ரான்ஸ்பர் ஆனது என்பதை வங்கி உதவியுடன் போலிஸார் ஆய்வு செய்தபோது, குலாம் அன்சாரி என்பவனின் வங்கி கணக்குக்கு போயிருந்ததை கண்டறிந்தனர். வங்கியில் அவன் தந்திருந்த மொபைல் எண் ஆக்டிவேட்டில் இருந்தது. வங்கியில் அவன் தந்திருந்த முகவரி, அவனின் செல்போன் நம்பரை வைத்து அவன் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் தங்கியிருந்ததை கண்டறிந்தனர். அவனை பிடிக்க டெல்லி க்ரைம் அன்ட் ஃசைபர் டீம் நெருங்கியபோது, போலிஸ் வருவதைப் பார்த்து மொட்டை மாடிகளைத் தாண்டித் தாண்டி ஓடி தப்பிக்க முயன்றவனை துரத்திச் சென்று சுற்றிவளைத்து பிடித்தது போலிஸ்.

விசாரணையின் போது அவன், ராக்ஸ்டார் என்கிற அல்தாப் அன்சாரி என்ற பெயரை சொன்னதும் டெல்லி போலிஸ் டீம் அலார்ட்டானது. அவன் பஞ்சாப் முன்னாள் முதல்வரின் மனைவியான பிரனீத் கவுர் எம்.பியிடம் ஏமாற்றியவன் என்பதை தெரிந்துகொண்டனர்.

பின் டெல்லி போலீஸ் ஜம்தாரா போலிஸின் உதவியை நாடினார்கள். ஜம்தாரா போலிஸ் இந்த வழக்கைப் பற்றி சொல்லும்போது, “குலாம் அன்சாரி மூலம் அல்தாப் அன்சாரி ஜம்தாராவில் உள்ளதை டெல்லி போலிஸார் உறுதி செய்துகிட்டாங்க. உடனே டெல்லியில் இருந்து இங்க வந்தாங்க. எங்க டீம்தான் அவுங்களுக்கு உதவி செய்தது. அவன் நண்பன் குலாம் கைது செய்யப்பட்டதையும், அவனைப் பிடிக்க டெல்லி போலிஸ் வந்து ஜம்தாராவில் முகாமிட்டிருக்கறதை தெரிஞ்சிக்கிட்டான். டெல்லி டீமோடு எங்கள் டீம் அவன் கிராமத்துக்குள் நுழைந்ததும் அவன் தன்னோட ஸ்கார்பியோ காரில் மின்னல் வேகத்தில் கொல்கத்தா நோக்கிப் போனான். தேசிய நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில் அவன் கார் பறந்தது. அவனை விடாமல் எங்கள் போலிஸ் பொலிரோ ஜீப்பில் துரத்தினோம். 50, 60 கி.மீ இருக்கும் விரட்டிபோய் அவன் காரை மடக்கி பிடிச்சோம். அல்தாப் ஒல்லியா இருந்தான். 20 வயசுதான். அவன்தான் ராக்ஸ்டார் அல்தாப்ன்னு சொன்னதும் அதிர்ச்சியாகிட்டோம். அவனை டெல்லி போலிஸ் கைது செய்து அழைச்சிட்டு போனாங்க. அவனை டெல்லி சைபர் செல் டிசிபி அன்யேஷ் ராய் ஏழு நாள் கஸ்டடி எடுத்து விசாரிச்சப்ப, அவனோட கூட்டாளிகள் லோனி, தியோகர் மற்றும் ஜமுய் ஆகிய பகுதிகளில் இருந்து 14 பேரை கைது செய்து கொண்டு போனாங்க. அவனுங்க எல்லோருமே 10வது கூட படிக்காதவனுங்க.

மேற்கு வங்கம், ஒரிசா, பீகார் மாநிலங்கள்ல இருக்கற கிராம செவிலியர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் பேசுவது போல் பேசி கிராமங்களில் உள்ள கர்ப்பிணி பெண்களின் பெயர், ஊர், செல் நம்பரை வாங்கி, பிரதம மந்திரி கர்ப்பிணி பெண்களுக்காக 5 ஆயிரம் ரூபாய் வாங்கித் தருகிறோம்னு அதற்கு இந்த ஆன்லைன் அப்ளிகேஷனை நிரப்பி அனுப்புங்கன்னு ஒரு லிங்க் அனுப்பியிருக்காங்க. கர்ப்பிணி பெண்கள் அவங்க தந்த லிங்க்கை தங்கள் மொபைலிலும், கம்யூட்டர் சேவை மையங்களுக்கும் சென்று ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண், ஏடிஎம் நம்பர்களை ஃபில் செய்து அனுப்பியிருக்காங்க. இப்படி ஆயிரக்கணக்கான பெண்கள் அனுப்பியிருக்காங்க. அந்த நம்பர்களை வச்சி வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிச்சதை சொல்லியிருக்கானுங்க.

போலியான இணையதளம், கஸ்டமர் கேர் வழியாக 4 ஆண்டுகளில் மட்டும் அவன் தலைமையிலான டீம் கொள்ளையடித்தது 10 கோடி ரூபாய்னு சொன்னது டெல்லி போலிஸ். அந்த பணத்தில் அல்தாப் தனது சொந்த ஊரான தியோகரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பங்களா, 3 சொகுசு கார்கள், சில லட்சம் பணம் இருந்ததை கைப்பற்றி வழக்கில் சேர்த்தனர். அவனை டெல்லி சிறையில் அடைச்சாங்க. அந்தளவுக்கு ஆன்லைன் வழியாக மக்களை ஏமாற்றுவதில் கில்லாடி. அவனின் திறமையைப் பார்த்தே அவனுக்கு ராக்ஸ்டார்னு பெயர் வச்சி இருக்காங்க.

ராக்ஸ்டார், சூப்பர் ஸ்டார்கள் டீம்களை கைது செய்த பிறகு சைபர் குற்றங்கள் குறைந்துவிட்டதா?

வேட்டை தொடரும்…

டிஜிட்டல் சதுரங்க வேட்டை; முதலமைச்சரின் மனைவியை ஏமாற்றிய நபர்! பகுதி 13

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT