ADVERTISEMENT

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #7

06:04 PM Sep 27, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தனது சிறு வயது கனவை மகன் மூலம் நிறைவேற்றிக் கொண்டாள் விசாலம். டாக்டர். வாத்சல்யன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட பலகையை வாசல் கதவில் பொருத்தி அழகு பார்த்தாள். நாற்பது வயதில் கணவனை இழந்த போது 15 வயதில் மகனும் பத்து வயதில் மகளும் தானும் அனாதையாய் நிற்பது போல் கலங்கினாள். தன் ஒரே தம்பியான கங்காதரன் தன்னோடு வந்து இருக்கும்படி அழைத்த போது மறுத்து விட்டு, தன் படிப்பிற்கேற்றவாறு வேலையைத் தேடிக் கொண்டாள். கணவனின் கம்பெனியிலிருந்து வந்த மொத்தப் பணத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு வங்கிகளில் பத்தாண்டுகள் என்ற வகையில் வைப்பு நிதியாக பத்திரப்படுத்தினாள். அம்மா அப்பா இருவருமே இல்லாத நிலையில் தம்பியைச் சிரமப்படுத்த விரும்பவில்லை. தவிர தம்பியின் மனைவியோடு தனக்கு ஒட்டுதல் இல்லாததும் முதல் காரணம்! ஆனால்... தம்பியின் மகளை மருமகளாக்கிக் கொள்ளும் ஆசையை மட்டும் தம்பியின் மனதில் பதிய வைத்தாள்.

"ஆகட்டும் கா. இருவருக்கும் மனம் பொருந்தினால் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை" என்று தம்பியின் மனைவி கற்பகம் கூறிய பிறகு, கங்காதரன் சென்னைக்கு மாற்றலாகி வர, அடிக்கடி சந்திப்பதற்கான சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அப்போதெல்லாம் மாலாவின் மனதிலும் அவ்வெண்ணத்தை விதைத்தாள். ஆரம்ப நாட்களில் வாத்சல்யன் மாலாவை தீவிரமாய் மறுத்தாலும், நாளடைவில் மாலாவின் அமைதியும் அடக்கமும் வசீகரிக்கத் திருமணத்திற்குச் சம்மதித்தான்.

"அத்தை.... உன் பிள்ளையின் போக்கு சரியில்லை கண்டிக்க மாட்டியா...? அதட்டலோடு ஒரு கையை இடுப்பில் ஊன்றி, மறுகையில் கரண்டியுடன் நின்ற மாலாவைப் பார்த்து நினைவிலிருந்து மீண்ட விசாலம்....

" கரண்டியோடு வந்து மிரட்டாதேடி. பயந்து போய்ட்டேன்!"

" ஆ... ரொம்பதான்! ஒரு வாரமா காலை டிபன் சாப்பிடாமல் போகிறார். ராத்திரி நேரங்கெட்ட நேரத்தில் வருவது கமுக்கமா படுத்து தூங்கிட்டு காலையில் மறுபடி ஓடுறது. இதையெல்லாம் என்னால் பொறுத்துக்க முடியாது."

" இவளொருத்தி என் உசுரை வாங்கவே பிறந்திருக்கா... இதோ பார்... நான் இன்னிக்கே சங்கரி வீட்டுக்குப் போறேன். மாப்பிள்ளை வெளியூர் போய்ட்டாராம். துணைக்கு நான் போகனும்! நீயாச்சு அவனாச்சு! அடிச்சுப்பீங்களோ பிடிச்சுப்பீங்களோ... எனக்குத் தெரியாது."

" மகள்தான் உனக்கு முக்கியம்! மருமகள்னா எட்டிக்காய்தானே எப்பவும்!"

" ஆமா... வழியை விடு. குளிச்சுட்டு வரேன். வண்டி புக் பண்ணிடு" என்ற விசாலம் தன் போக்கில் போக... அலைபேசியில் ஆறுமணிக்கு மேல் வந்தால் கதவைத் திறக்க மாட்டேன் என்று வாத்சல்யனுக்கு செய்தி அனுப்பினாள். முதல் நாள் செய்த திரட்டுப்பாலில் பாதியை ஒரு சம்புடத்தில் நிரப்பினாள். இட்லி பொடி, பருப்புப் பொடி, கருவேப்பிலைப் பொடி என்ற பொடி வகைகளை தனித்தனி டப்பாக்களில் அடைத்து அனைத்தையும் ஒரு கட்டைப்பையில் வைத்தாள். கால் டாக்சிக்கு புக் செய்து விட்டு டைனிங் டேபிளில் அத்தைக்காகக் காத்திருந்தாள்.

குளித்து உடைமாற்றிக் கொண்டு வந்த விசாலம், சாப்பிடாமல் தனக்காகக் காத்திருந்த மாலாவிடம்... " என்ன வச்சிருக்க பையில்"...? என்று விசாரிக்க...

" பெரிசா ஒன்னுமில்லை. பொடி வகைகள்தான் வேறென்ன... அப்படியே திரட்டுப்பால் கொஞ்சம் வச்சிருக்கேன். வீட்டைப் பூட்டிட்டு சங்கரி இங்க வரலாம். நீங்கதான் ஓடனுமா... அப்புறம் கைவலி கால்வலினு முணங்க வேண்டியது. எங்காவது விழுந்து வச்சீங்கனா... அவள் பார்ப்பாளா... நான்தான் பார்க்கணும்! அதை நினைப்பில் வச்சுக்கங்க. "

"அச்சாணியமா பேசி பயமுறுத்துறதே உனக்கு வேலையாப் போச்சு"! என்ற விசாலம் இரண்டு இட்லிகள் மட்டும் சாப்பிட்டு விட்டு எழுந்தாள். அத்தையை அனுப்பிவிட்டு மற்ற வேலைகளில் கவனமாய் இருந்த மாலா, விட்டு விட்டு இரண்டு முறை அடித்த அழைப்பு மணியைத் தாமதமாக உணர்ந்தாள். விரைந்தோடி கதவைத் திறந்தவள் கணவனைப் பார்த்ததும் திகைத்தாள்.

" என்னாச்சு...யாருக்கும் ஒன்றுமில்லையே..."

" சட்டுனு புறப்படு பொன்ராஜ் தாத்தா முடியாமல் இருக்காராம். உன்னைப் பார்க்கணும்னு சொன்னாராம் ஃபோன் வந்தது."

" ஐயோ... எனக்கு ஏன் ஃபோன் செய்யலை."..?

" செய்திருக்காங்க நீதான் கவனிக்கலை. ஃபோனை பாரு தெரியும்! உன் நினைப்பு வீட்டில் இருந்தால்தானே... எப்ப யார் கூட சண்டை போடலாம்னு வம்புக்கு அலைந்தால் இப்படித்தான் புத்தி மழுங்கிப் போகும்!"

" உங்களால்தான்..! ரதியைப் பத்தி பேசி என்னை கடுப்பேத்திட்டு, நல்ல பிள்ளை மாதிரி பேசாதீங்க."

" காதலிச்சவளை விட்டுட்டு உன் கழுத்தில் முடிச்சுப் போட்டது என் தப்புதான்! எங்கம்மா சொன்னதைக் கேட்டது எவ்வளவு முட்டாள்தனம்னு இப்பதான் புரியுது!"

" அவ்வளவு வெறுப்பிருந்தா நான் விலகிக்கிறேன். நீங்க அவளோடு குப்பை கொட்டுங்க."

"ஷட்அப் யுவர் ட்ர்ட்டி மவுத்" என்றவன் அவசரமாய் கீழறங்கி காரைக் கிளப்ப மாலா பின் சீட்டில் அழுதபடியே பயணமானாள். தாத்தா நான் வரும் வரை நீங்க இருக்கணும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே வந்தாள். " சாப்பிட்டியா.... ஏதாவது வேணுமா என்ற வாத்சல்யன் குரலுக்கு பதிலளிக்க விரும்பாமல் கண்களை மூடிக் கொண்டாள்.

" உன் கோபத்தை மூட்டைக்கட்டி வை. தாத்தாவுக்கு ஏதாவது ஆச்சுனா... ஒரு நாள் முழுக்க சாப்பிட முடியாது என்று வாத்சல்யன் சொன்னதும்...

" ஒரு நாள் சாப்பிடலைனா உயிர் போய்டாது. " என்ற மனைவியைத் திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு காரின் வேகத்தைக் கூட்டினான். மாலை ஆறுமணிக்கு தாத்தாவின் வீட்டுத் தெருவில் கார் நுழைந்த பிறகுதான் வாத்சல்யனுக்கு சற்று தெம்பு வந்தது. வீட்டு வாசலில் மரணம் சம்பவித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. காரை நிறுத்தியதும் மாலா உள்ளே ஓடினாள்.

" வாடி... உனக்காகத்தான் தாத்தாவோட உசுரு ஒட்டிக்கிட்டு இருக்கு என்றாள் சின்ன அத்தை. தாத்தாவின் அருகே அமர்ந்த மாலா தாத்தாவின் வலது கையை தன் கையோடு கோர்த்து கன்னத்தில் பதித்துக் கொண்டாள். தாத்தா.... தாத்தா... என்று சத்தமாக அழைக்க, மெதுவாகக் கண்களைத் திறந்த பொன்ராஜின் வறண்ட இதழ்கள் புன்னகைத்தன.

"சொந்த பேரன் பேத்திகளை விட, அண்ணனின் பேத்தியின் மேல்தான் பாசம் அதிகம் என்றாள் சின்ன அத்தை. வாத்சல்யனிடம் நீ உட்காருடா. அம்மா வரலையா என்ற கேட்டாள்.

"இல்லை சித்தி. சங்கரி வீட்டுக்குப் போயிருக்காங்க. அங்க போனால் வர லேட்டாயிடும்னு நான் போகலை." என்றான்.

" மாலாவோட தனியா பேசனும் மிகவும் மிருதுவாகப் பேசிய பொன்ராஜ் மற்றவர்களை வெளியே போகுமாறு சைகை செய்தார். மாலாவிடம் கதவை மூடும்படி சொன்னதும் எழுந்து போய் மூடிவிட்டு வந்தமர்ந்தாள். தாத்தாவின் கைகளைப் பிடித்தபடி கண்ணீர் உகுத்தாள்.

" மாலா... அழக்கூடாது! வந்த வேலை முடிஞ்சுதுனா போக வேண்டியதுதான். ஒரு நொடி கூட இருக்க முடியாது. என் சினேகிதன் ஸ்டீபன் தெரியுமில்லையா.... அவனிடம் உனக்குச் சேர வேண்டியதைக் கொடுத்து வச்சிருக்கேன். கொடுப்பான் வாங்கிக்க. வீட்டிற்குப் போனதும் பிரிச்சுப் பார். உனக்குத் துணையா உன் கூடவே இருப்பேன்." என்று திணறித் திணறிப் பேசிய போது வெடித்து அழுத மாலாவின் கண்களைத் துடைத்த பொன்ராஜ், மாலாவின் தலையைத் தடவி ஆசீர்வதித்தார். கைகள் துவண்டு கீழே விழுந்தன. மாலா மயக்கமாகி தாத்தாவின் மேலேயே சரிந்து விழுந்தாள். சத்தம் கேட்டுக் கதவைத் தள்ளிய வாத்சல்யன் ஓடி வந்து மனைவியைத் தூக்கிக் கொண்டு ஹாலில் உட்கார வைத்து கன்னத்தைத் தட்டினான். சித்தி மாலாவின் முகத்தில் தண்ணீர் தெளித்தாள்.

" கண்களைத் திறந்த மாலா... தாத்தா... தாத்தா என்ற போது... "அவர் போய்ட்டார் மா" என்ற சித்தப்பாவை நிமிர்ந்து பார்த்த மாலா மீண்டும் அழத்துவங்க...

" சித்தி... நாங்க புறப்படுறோம்" என்றபடி மாலா கைதாங்கலாகப் பிடித்துக் கொண்டான். " என்னடா இது...? வந்த உடனே போகனும்ங்கிறே...? மாலாவை விட்டுட்டுப் போடா."

" இல்லையில்லை...! இங்கிருந்தால்... அழுதுகிட்டே இருப்பா. காரியத்துக்கு அம்மாவோடு அனுப்புறேன்." என்றபடி மாலாவுடன் காரில் ஏறிய போது, தாத்தாவின் நண்பர் ஸ்டீபன் வண்டியை நிறுத்தி ஏறிக் கொண்டார். தனது வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனவர், ஒரு பெரிய பார்சலுடன் வந்தார். "இதை டிக்கியில் வைக்கிறேன். மாலாவிற்கு தாத்தா கொடுக்கச் சொன்னார்." என்றபடி விடைப்பெற்றுக் கொள்ள, காரை விரைவாக ஓட்டிச் சென்றான் வாத்சல்யன்.

வீட்டிற்கு வந்து குளித்து விட்டு படுத்ததும் வாத்சல்யன் உறங்கி விட, மாலாவிற்கு உறக்கம் வரவில்லை. தாத்தாவை நினைத்தபடி சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தாள். அவளையும் மீறி உறங்கி எழுந்த போது... வாத்சல்யனின் அணைப்பில் இருந்தாள். மெதுவாக அவனது கையை விலக்கிய போது,

"அமைதியாகத் தூங்கு. இவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன செய்யப் போகிறாய்...? என்றவன் இறுக்கமாக அணைத்து ஐ லவ் யூ என்றதும், பூனைக்குட்டியாய் அவனோடு நெருக்கமாய் ஒட்டிக் கொண்டாள். " குட் கேர்ள்" என்ற வாத்சல்யன், எனக்கு ஏதேனும் வசிய மருந்து வைத்திருக்கிறாயா...? உன் மேல் காதல் கூடிக் கொண்டே போகிறதே.".. கணவனின் கிசுகிசுப்பானக் குரலும், மூச்சுக்காற்றின் வெப்பமும், இறுக்கமான அணைப்பும் போதையைத் தர, "ஐ லவ் யூ டா ராட்சசா".. என்றதும், . இருவரின் காதலும் முழுமையாக... ஜனனத்திற்காக அங்கே ஓர் உயிர் காத்திருந்தது!

( திகில் தொடரும்)

-இளமதி பத்மா

இளமதி பத்மா எழுதும் தூக்கத்தைத் துரத்தும் திகில் தொடர்...! சூட்சும உலகம் #6

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT