ADVERTISEMENT

'வெள்ளைக்காரர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய இந்திய இளைஞன்...' பகத்சிங் | வென்றோர் சொல் #12

03:53 PM Aug 15, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

'அம்மா.. என்னுடைய சவ உடலை வாங்க நீ வராதே.. உன்னுடைய கண்ணீர் நாளை எழ இருக்கிற எழுச்சியை நீர்த்து போக செய்யலாம்..' இது தன்னுடைய அம்மாவிற்கு பகத்சிங் கடைசியாக எழுதிய கடிதம். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுப் பக்கத்தில் தன்னுடைய பங்கை அழுத்தமாக பதிவு செய்தவர்களுள் அதிமுக்கியமானவர் பகத்சிங். புரட்சிகர சிந்தனை கொண்ட இளைஞர்களின் ஆதர்சன நாயகன். வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கலகம் செய்தவர்கள் மத்தியில் பகத்சிங் சற்று வித்தியாசமானவர். இந்தியாவிற்கு விடுதலை வேண்டும்.. அந்த விடுதலை வெள்ளைக்கார காலனியாட்சியிடமிருந்து மட்டுமில்லாமல் உழைக்கும் வர்க்கத்தை சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளிடம் இருந்தும் பூரண விடுதலை பெற்று சுரண்டலற்ற, சமதர்ம சமூகம் உடைய இந்தியா அமைய வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது.

சுதந்திரப் போராட்ட வேட்கை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் பகத்சிங். அவர் பிறக்கும் போதே அவரது தந்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கலகம் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வளர்க்கப்பட்டதால் சுதந்திர வேட்கை அவருக்கு இயல்பிலேயே இருந்தது. அவருக்குள் கனன்று கொண்டிருந்த விடுதலை வேள்விக்கு எண்ணெய் ஊற்றும் விதமாக ஜாலியன் வாலாபாக் படுகொலை அமைந்தது. இச்செய்தியைக் கேள்விப்பட்டதும் அம்மைதானத்தை நேரில் பார்த்தே தீர வேண்டும் என அங்கு செல்கிறார். விடுதலைக் கனவு கண்ட அடிமை இந்தியர்களின் குருதிகள் சிதறிக்கிடந்தது. அந்தக் காட்சி அவர் மனதை ரணமாக்கியது. குருதி சிதறிக்கிடந்த அம்மண்ணை அள்ளி நெற்றிக்குத் திலகம் இட்டுக்கொண்டு மேலும் ஒரு பிடி மண்ணை அள்ளி கையில் இருந்த பாட்டிலில் நிரப்பிக் கொள்கிறார். பகத்சிங்கின் அப்போதைய வயது வெறும் பன்னிரண்டு.

ஆரம்பத்தில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த பகத்சிங் ஒரு கட்டத்தில் அகிம்சை வழிப் போராட்டம் விடுதலைக்கான சரியான வழியல்ல என்ற முடிவுக்கு வருகிறார். அரசுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டிய குற்றத்திற்காக தன்னுடைய பதினான்கு வயதில் முதல் முறையாக கைது செய்யப்படுகிறார். சைமன் கமிஷனுக்கு எதிராக நடைபெற்றப் போராட்டத்தில் மூத்த தலைவர் லாலா லஜபதிராய் மீது நடந்த கடுமையான தாக்குதல் அவரை மேலும் ஆத்திரத்துக்கு உள்ளாக்கியது. அவர் இறப்பதற்கு முன் "என் மீது விழுந்த ஒவ்வொரு அடியும் வெள்ளைக்கார ஏகாதிபத்திய சவப்பெட்டியின் மீது அடிக்கப்பட்ட ஆணி" என்று முழங்கினார். அந்த ஆணியை மேலும் அழுத்தமாக அடிக்க விரும்பினார் பகத்சிங். அவர் சாவிற்கு காரணமான துணை காவல் அதிகாரி சாண்டர்சன் படுகொலை செய்யப்படுகிறார். அதன் பின்பு தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்கிறார்.

தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் விதமான 'தொழில் தகராறு சட்ட வரைவு' மசோதா பாராளுமன்றத்தில் தாக்கலாக இருந்தது. அனைத்து முக்கியப் பிரமுகர்களும் பாராளுமன்றத்தில் கூடியிருந்தனர். திடீரென ஆட்கள் இல்லாதப் பகுதியில் குண்டுகள் வீசப்பட்டன. புகை மூட்டமானது. 'கேட்காத காதுகளுக்கு உரத்தக் குரலில் தான் பேச வேண்டும்' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த துண்டுப் பிரசுரத்தை வீசிவிட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கத்தோடு கைதாகினர். 'ஒவ்வொரு தாக்குதலுக்குப் பின்னும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்வது மக்களிடம் நம் லட்சியத்தைக் கொண்டு சேர்க்காது. கைதாக வேண்டும்... சிறைப்பட வேண்டும்.. தூக்கு மேடை ஏறவேண்டும்.. அது தான் நம் தியாகத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, இன்னும் பலரைக் கலகத்தில் ஈடுபடச் செய்யும்' என குண்டுகள் வீசுவதற்கு முன்னரே பகத்சிங் தீர்மானித்திருந்தார். அதன் படி சிறையில் அடைக்கப்பட்டார். தூக்கு மேடையும் உறுதியானது.

தூக்குத்தண்டனை நிறைவேற்ற வேண்டிய நாள் அது... சிறைக்கதவு தட்டப்பட்டது. "உங்களை தூக்கில் இடுவதற்கான நேரம் ஆகிவிட்டது.. எழுந்து வாருங்கள்" என்றார் சிறைக்காவலர். கொஞ்ச நேரம் பொறுங்கள்... இங்கே ஒரு புரட்சிக்காரன் மற்றொரு புரட்சிக்காரனோடு உரையாடிக்கொண்டு இருக்கிறான் என்றார் பகத்சிங். சிறைக்காவலர் சற்று உள்ளே எட்டிப்பார்த்தார். ரஷ்யப் புரட்சியாளர் லெனின் எழுதிய 'அரசும் புரட்சியும்' புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். புரட்சியில் அறிவாயுதத்தின் பங்கு என்ன??? என்பதையும் தெளிவாக உணர்ந்திருந்தார். தாய் நாட்டை நேசித்ததற்குச் சமமாக புத்தகங்களையும் நேசித்தவர். புரட்சி விதைகளை அயராது விதைத்த பகத்சிங் தூக்கு மேடையை முத்தமிட்ட போது அவர் வயது 23. பொதுவுடமைத் தத்துவங்களை தெளிவாகக் கற்றுணர்ந்த புரட்சிகர சித்தாந்தவாதியாகவே இன்றளவும் பகத்சிங் அறியப்படுகிறார்.

ஒரு தொழிலதிபரின் வெற்றி அவர் ஈட்டும் வருமானத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. ஒரு விளையாட்டு வீரரின் வெற்றி அவன் செய்யும் மகத்தான சாதனைகளை வைத்து கணக்கிடப்படுகின்றன. ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் வெற்றி என்பது தன் பின்னால் எத்தனை வீரர்களை புரட்சிப்பாதைக்கு அழைத்து வருகிறான் என்பதில் இருக்கிறது.

'விதைக்கப்படுகிற அத்தனை விதைகளும் இங்கு முளைப்பதில்லை.. ஆனால் அவைகள் நிச்சயம் மண்ணிற்கு உரமாகின்றன...'

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT