/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mike-tyson-final.jpg)
கருத்த திடமான தேகம், வெண்கலக்குரல், ஆர்ப்பரிக்கும் நடை, மின்னல் வேகத்திலான அசைவுகள், மூர்க்கத்தனம்... இவைதான் மைக்டைசனுக்கான அடையாளங்கள். குத்துச்சண்டை உலகை 80களில் போட்டியின்றி ஆண்ட ஆளுமை. இதுவரை பங்கேற்ற 58 போட்டிகளில் 50 போட்டிகளில் வென்றவர். 'களத்தில் நான் இருக்கிறேன், எனக்கு எதிரே எதிராளி ஒருத்தர் இருக்கிறார், நாங்கள் இருவரும் மோதிக்கொள்கிறோம், முடிவைத் தீர்மானிப்பதற்கு மட்டும் நடுவர் என்று மூன்றாவது ஒரு நபர் எதற்கு???' என்பதுதான் மைக் டைசனின் தொழில்முறை மந்திரமாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். வெற்றிக்கனியை சுவைத்த ஐம்பது போட்டிகளில், 44 போட்டிகள் 'நாக்-அவுட்'முறையில் வென்று தன்னுடைய வெற்றியை தானே உறுதி செய்தவர். குத்துச்சண்டை உலகின் சாதனை மைல்கல்லாக கருதப்படும் WBC பட்டத்தை 20 வயதில் தன்வசப்படுத்தியவர்.
இரண்டு வயது இருக்கும் போதே தந்தை கைவிட்டு சென்றதால் தாயாரின் அரவணைப்பில் மட்டும் வாழவேண்டிய துயர்மிகு நிலைக்கு தள்ளப்படுகிறார். பொருளாதார நிலை காரணமாக குடும்பம் வேறு ஒரு இடத்திற்கு இடம் பெயருகிறது. அந்தப்பகுதி குற்றச்செயல்களுக்கு பெயர் பெற்ற இடமாக இருக்கிறது. பின்னாளில் எதிராளியின் காதை கடித்து குதறிய முரட்டுக்குணமும், மூர்க்கத்தனமும் அவருக்கு இங்குதான் அறிமுகமாகியது. 13 வயதிலேயே பல முறை சிறைச்சாலைக்கு சென்று வந்த அனுபவம் கூட மைக்டைசனுக்கு உண்டு. அங்கு தெருக்களில் நடக்கும் குத்துச்சண்டை போட்டிகளில் யாராலும் வெல்ல முடியாத இளைஞனாக தன்னுடைய டீன்ஏஜ் பருவத்தில் வலம் வருகிறார். அப்பகுதியில் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய 'டீ அமட்டோ' எனும் சிறந்த பயிற்சியாளர் அவர் திறமையை மெருகேற்ற முன்வருகிறார்.மைக்டைசன் டீ அமட்டோவின் பட்டறையில் 'சாம்பியன் மைக்டைசனாக' செதுக்கப்படுக்கிறார். WBC, IBF, WBA பட்டங்களைஅடுத்தடுத்து வென்று தன்னுடைய சாதனை வரலாற்றை எழுதினார்.
1986ல் நடப்பு சாம்பியனாக இருந்த 32 வயதான ட்ரெவர் பெர்பிக் உடன் 20 வயது மைக் டைசன் மோதிய போட்டியை உலகம் எளிதில் மறந்து விடாது. உலகம் முழுவதும் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், ஊடகங்கள் முன்னிலையில் நடந்த போட்டியில் மைக்டைசனின் ஒவ்வொரு குத்துக்களும் மரண அடியாக எதிராளிக்கு விழுந்தது. இந்த ஒரு போட்டி உலகின் கடைக்கோடி மூலை வரை மைக்டைசனின் பெயரை கொண்டு போய் சேர்த்தது. அதன் பிறகு பிரபல பாக்ஸர்களாக இருந்த ஒவ்வொருவரும் வரிசையாக வந்து மைக் டைசனிடம் தோற்றுவிட்டு சென்றனர். ஒரு கட்டத்தில் அவருடன் மோதுவதற்கே அனைவரும் பயப்படும் அளவிற்கு உருமாறி நின்றார். அவரதுகட்டுப்படுத்தமுடியாத கோபமும்எதிரில் மோதுபவர் மீதான ஆவேசமும்கடுமையாக விமர்சிக்கப்பட்டவை.
"என்னால் யாருடனும் மோத முடியும், ஏனென்றால் நான்தான் இந்த உலகின் சிறந்த பாக்ஸர் என்று உறுதியாக நம்புகிறேன். பாக்ஸிங் மட்டுமல்ல இதை எல்லாம் விட்டுவிட்டு நான் வேறு எந்த வேலை செய்தாலும் என்னால் வெற்றிகரமானவனாக இருக்க முடியும்.காரணம் நான் என்னை நம்புகிறேன்.எதிராளி நம்மை தோற்கடித்துவிடுவானோ, எதிராளியால் இழிவுபடுத்தப்பட்டு விடுவோமா என்ற பயம் எனக்குள் இருக்கும். ஆனால் களத்திற்குள் இறங்கிவிட்டால் நான்தான் ராஜா.. நான்தான் கடவுள்.. என்னுடைய பார்வையையும், கவனத்தையும் சிதறாமல் எதிராளி மேல் வைத்திருப்பேன், அவர் பார்வை நகர்ந்துவிட்டால் என்னுடைய அதிரடி ஆரம்பமாகிவிடும்"... இரும்பு மைக், இரும்பு மனிதன் என உலகம் இவருக்கு பட்டம் கொடுத்தாலும் மைக்டைசன் தனக்குத்தானே கொடுத்துக் கொண்ட பட்டம் 'பேட்பாய் ஃபார்லைஃப்' (bad boy for life). இந்த பேட் பாயிடம் கற்றுக்கொள்ள நல்ல விஷயங்கள் இருக்கிறது இல்லையா?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)