Skip to main content

தமிழனென்பதால் பாத்திரம் கழுவ வைத்தார்கள்... ஆனால், இன்று? - 5 நிமிட எனர்ஜி கதை  

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

1990ஆம் வருடம்... மும்பை பாந்த்ரா ரயில் நிலையம்... 17 வயது சிறுவன் அல்லது இளைஞன்... சென்னையிலிருந்து தன்னை அழைத்து வந்தவரை காணவில்லை... சுற்றியிருப்பவர்கள் பேசும் மொழி புரியவில்லை... ஒரு ஆர்வத்திலும் அசட்டு தைரியத்திலும், யாரிடமும்  சொல்லாமல் ஊரை விட்டு வந்துவிட்டான். இப்பொழுது, இந்த சூழ்நிலையில், தனக்கு சற்றும் சம்மந்தமில்லாத இந்த மாநகரில் என்ன செய்வது? இன்னொரு தமிழரொருவர் இவனைப் பார்த்து பாவமாக உணர்ந்து அருகே இருந்த மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த இன்னும் சில தமிழர்களிடம் இவனது நிலையை சொல்கிறார். ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு, பையனை திருப்பி சென்னைக்கு ரயிலேற்றலாம் என்று முடிவு செய்து அவனிடம் சொல்கிறார்கள். அவனோ மறுக்கிறான். 'இங்கே தான் என் எதிர்காலம் என்று முடிவு செய்து வந்துவிட்டேன். நான் போகமாட்டேன். எனக்கு ஏதாவது வேலை வாங்கித் தாங்க' என்றான். 'ஊரிலிருந்து வந்தது என்னவோ அசட்டு தைரியத்தில் தான். ஆனால், அங்கேயே இருக்கவேண்டுமென்று முடிவு செய்தது அசல் தைரியத்தில்.
 

Prem Ganapathyதூத்துக்குடி அருகே நகலாபுரத்தில் பிறந்து பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்து, குடும்ப சூழ்நிலையால் சென்னைக்கு வந்து அங்கு ஓரிரு கடைகளில் வேலை பார்த்து, அது போதாது, இன்னும் பெரிய ஊருக்குச் செல்ல வேண்டும், முன்னேற வேண்டுமென்று மும்பைக்கு வந்த பிரேம் கணபதிக்கு முதலில் கிடைத்தது ஒரு பேக்கரியில் பாத்திரம் கழுவும் வேலை. ஆம், அப்போதைய பம்பாயில் மதராசிகளுக்கு அந்த நிலை தான். கடைகளில், உணவகங்களில் வாடிக்கையாளர்களை கையாளும் வேலைகளில் மராத்திக்காரர்களும் ஹிந்திக்காரர்களும் மங்களூர்காரர்களும்தான் முன்னுரிமை பெற்றார்கள். ஹிந்தி தெரிந்தாலும் கூட மதராசிகளுக்கு அந்த வேலைகளை எளிதில் தர மாட்டார்கள். பாத்திரம் கழுவும் வேலையை ஏற்றுக்கொண்டு செய்தார், கடை செயல்பாடுகளை கவனித்தார். ஆறு மாதங்களில் அடுத்த வேலை, அதற்கடுத்த வேலை என பாத்திரம் கழுவும் வேலைதான் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்ததுதான் அந்த வேலை, ஆனால் பிரேம் அதை மட்டும் கவனிக்கவில்லை, முழுதாய் கவனித்தார். பின்னொருநாள் ஒரு டீக்கடையில் கடைகள், அலுவலகங்களுக்குச் சென்று தேனீர் கொடுக்கும் 'சாய் வாலா' வேலை. இப்படி, பாத்திரம் கழுவுபவராய்  தொடங்கிய பிரேம் கணபதி, இன்று இந்தியாவில் 52, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என்று பல வெளிநாடுகளில் 10 கிளைகள் என தோசை சாம்ராஜ்யமாக திகழும் 'தோசா பிளாஸா' உணவகங்களின் அதிபர்.
 

Dosa plaza'எல்லா ரௌடிகளுக்கும் ஒரே ஃபிளாஷ்பேக் தான?' என்பது போல் 'எல்லா ஹோட்டல்களுக்கும் ஒரே  ஃபிளாஷ்பேக் தான?' என்று கேட்டால், பதில் கிட்டத்தட்ட 'ஆம்' தான். ஆனால், இவர் வித்தியாசமாக செய்தது என்ன? செய்த எல்லாவற்றையும் வித்தியாசமாக செய்ததுதான். 

'சாய் வாலா'வாக இருந்தபோதே, 'இதெல்லாம் ஒரு வேலையா என்று சலித்துக்கொள்ளாமல். 'இதுதான் நம்ம வேலை' என்று வாடிக்கையாளர்களிடம் அன்பாகப் பேசி, அவர்களுக்குத் தேவையான வகையில், நேரத்தில், ஒவ்வொருவருக்கும் பிடித்த சுவையில் டீ கொடுத்து ஒரு கட்டத்தில், பத்து சாய் வாலாக்கள் இருந்தாலும் வாடிக்கையாளர்களையே 'கணபதிகிட்ட சாய் கொடுத்து விடுங்கள்' என்று கேட்க வைத்தார்.   

காசு சேர்த்து தள்ளுவண்டியில் கடை ஆரம்பித்த போது, தள்ளுவண்டினா அழுக்கான இடத்தில, அழுக்கு கைலியோட, கழுவாத தட்டுல போட்டு தருவாங்க என்ற நம்பிக்கையை உடைக்கும் வண்ணம் கிளவுஸ், தொப்பி அணிந்து சுத்தமாக பரிமாறினார். தள்ளுவண்டிக்கு காரில் வந்து  சாப்பிடுவதெல்லாம் மும்பையில் இவர் கடையில் தான் முதலில் நடந்தது.
 

Prem with Abdul Kalamமுதல் கடை பிடித்த போது, சின்னதாக இருந்தாலும் தனக்கென ஒரு அடையாளம் வேண்டும் என்று கடைக்கு பெயர் வைக்க முடிவு செய்தார். 'கோகோ கோலா' என்ற பெயர் இவருக்குப் பிடித்தது. அது போல ரைமிங்காக வைக்க எண்ணினார். இவரது கடை ஸ்பெஷல் தோசா, இவர் இருந்தது மும்பை 'வஷி பிளாஸா', ரெண்டையும் சேர்த்து பேர் வச்சாரு மாசா... ஆம், பிரேம் சாகர் 'தோசா பிளாஸா' என்று முதல், சின்ன கடையையே பெயருடன் துவங்கினார். தள்ளுவண்டியில் கடை நடத்தியபோதே, 'மெக் டொனால்ட்' உணவகத்தை தன் ஆதர்சமாக வைத்து செயல்பட்டார்.  

படித்தது பத்தாம் வகுப்புதான், ஆனாலும் 90களிலேயே, முதல் கடை ஆரம்பித்த சமயத்திலேயே கணினி, இணையம் எல்லாம் இயக்கக்  கற்றுக்கொண்டார். உலகின் பிரபல உணவகங்களைப் பற்றி படித்து, அவர்களைப் போல ஒரு பிராண்டாக உருவாக்க நினைத்தார், உழைத்தார், உருவாக்கினார்.

இன்று சென்னையில் '60 வகை தோசைகள்', '80 வகை தோசைகள்' என்றெல்லாம் கடைகள் பார்க்கிறோம். அதற்கெல்லாம் தொடக்கம் இவர்தான். நூற்றுக்கும் மேற்பட்ட தோசை வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார் பிரேம் கணபதி.   

இன்றும், மெக்சிகன் சில்லியின் சுவை, ஆஸ்திரேலிய மக்களின் தேவை என புதுசு புதுசாக  கற்றுக்கொண்டே இருப்பதாகக் கூறுகிறார் பிரேம் கணபதி. செய்தது எந்த வேலையாக இருந்தாலும்  அதில் சிறந்து விளங்கியது, எந்த புள்ளியிலும் தேங்கி நிற்காமல் அடுத்தடுத்த தேடலுடன் இருந்தது, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்ததுதான் பிரேம் கணபதி நமக்கு சொல்லும் சக்ஸஸ் சீக்ரெட். 

 

 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

The website encountered an unexpected error. Please try again later.